பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பத்தி2024 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்தி2024 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிசம்பர் 31, 2024

2025 புத்தாண்டு

 


ஒவ்வொரு ஆண்டும் நமக்கான படிப்பினையையும் அனுபவங்களையும் கொடுப்பதில் குறை வைப்பதில்லை. ஜனவரி எடுத்து வைக்கும் செல்ஃபிக்கும் டிசம்பரில் எடுத்தும் வைக்கும் செல்ஃபிக்குமே பல வித்தியாசங்கள் இருக்கும் பொழுது வேறென்ன சொல்ல முடியும்.

நான் எப்போதும் என்னை ஓர் எழுத்தாளனாகவே முன்னிறுத்த விரும்புகிறேன். விரும்புவதோடு அதற்கான உழைப்பையும் விலையையும் கொடுத்துகொண்டும் இருக்கிறேன்.

ஒவ்வொருவருக்குள்ளும் அவர்களின் அனுபவம் ஓர் கதைக்கான கருவைக்  கொடுத்திருப்பதாக நம்புகிறேன். உரையாடல்வழி அந்தக் கருவிற்கு கதை கொடுக்கவே பலவற்றை முன்னெடுக்கின்றேன்.

சிறகுகளின் கதைநேரம்; சிறுகதைக் கலந்துரையாடலை கடந்த ஆண்டில் தொடங்கி இந்த ஆண்டு இறுதிவரை 50 கலந்துரையாடல்களை நடத்திவிட்டோம். புத்தாண்டு முதல் மேலும் சில திட்டங்களுடன் கதைநேர சந்திப்பை தொடரவுள்ளோம்.

குறுங்கதை எழுதும் வகுப்பின் மூலம், பல புதியவர்களை அவர்களின் முதல் குறுங்கதையை சிறுகதையை எழுத் வைத்தோம். அவை இணைய இதழ்களிலும் வெளிவந்தன. தொடர்ந்து எழுத வேண்டியது இனி அவர்கள்தான்.

இலக்கியம் சார்ந்த பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். பலருடன் உரையாடியுள்ளேன். 

பல பள்ளிகளுக்கு சிறுகதை எழுதுவது குறித்து பேச சென்றிருந்தேன். அதே சமயம்  மாணவர்களுக்கு கதைசொல்லும் கதைசொல்லியாகவும் சென்றிருந்தேன். பல மாணவர்களுடனும் ஆசிரியர்களிடனும் கதைகள் குறித்து கலந்துரையாடினோம்.

நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் வழி வழக்கம் போல  தள்ளுபடியில் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்தோம். புத்தகங்களை வாங்குவதற்கு எந்த வாசகரும் சிரமப்படக்கூடாது, அவர்கள் விரும்பிய புத்தகங்களை விரும்பியபடியே அவர்களை வாங்கி வாசிக்க வைக்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து உடன் பயணிக்கும் புத்தக விரும்பிகளுக்கு எங்கள் அன்பு.

நமது வெள்ளைரோஜா பதிப்பகத்தில் இந்த ஆண்டு எழுத்தாள உமாதேவி வீராசாமியின் 'கலவரக்கோடுகள்' சிறுகதைத் தொகுப்பை வெளியிட திட்டமிட்டிருந்தோம். எல்லா வேலையும் முடிந்தது. எழுத்தாளரின் நிறைவான சரிபார்த்தலுக்கு பின்னர் வரும் ஆண்டில் இந்தப் புத்தகம் வெளிவரும்.

அதே போல நமது பதிப்பகத்தில் மேலும் சில புத்தகங்கள் வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடக்கின்றது. 

இந்த ஆண்டில் மொத்தமே 41 புத்தகங்கள் மட்டுமே வாசிக்க முடிந்தது. அடுத்த ஆண்டில் இதைவிட ஒரு புத்தகத்தையாவது கூடுதலாக வாசிக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில், தொடர்ந்து எழுதவேண்டும். அதான் என்னை வழிநடத்தும் இறையாகப் பார்க்கிறேன். அதன் வழியே நான் அறியப்படவேண்டும் எனவும் விரும்புகிறேன்.

பிறக்கவுள்ள இந்தப் புத்தாண்டு, என் வாசிப்பிற்கும் எழுத்திற்கும் என் வாழ்க்கைக்குமே துணையாக இருக்க என் இறையிடம் பிரார்த்திக்கிறேன்.

என்னோடு எப்போதும் பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் புத்தாண்டு வாழ்த்துகளும்...

அன்புடன் தயாஜி


ஜனவரி முதல் நாளும் முதல் புத்தகமும்

 

இங்கு வாழ்க்கை யாருக்கும் அவ்வளவு சுமூகமாக இருப்பதில்லை. அவரவர் தகுதிக்கு ஏற்றபடி அவரவர்க்கு ஏதோ ஒரு சிக்கலோ தொல்லையோ இருக்கத்தான் செய்கிறது. பாருங்களேன், அது கூட தகுதி பார்த்துதான் வருகிறது.

வாசிப்பதும் அப்படித்தான். ஒரு சமயத்தில் கையில் பணமிருக்காது. ஆனால் எப்படியோ சில புத்தகங்களையாவது வாங்கி வாசித்துவிடுவோம். பல தடவை மீள்வாசிப்பும் கூட இதனால்தான் நடந்திருக்கலாம்.

இன்று புத்தகங்கள் வாங்க பணமிருக்கிறது. (புத்தக விலைகளை நினைத்தால் இப்போதும் பயமாகத்தான் இருக்கிறது) ஆனால் புத்தகத்தை வாங்குவதற்கு மனம் இல்லை, அடுக்கி வைக்க வீட்டில் இடமில்லை, பராமரிக்க வசதி இல்லை, மொத்தத்தில் நேரமே இல்லை !

ஆனாலும் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்தபடியே இந்தப் புத்தாண்டை வரவேற்றுதான் பாருங்களேன்.

அதற்கான சில டிப்ஸ்கள் கொடுக்கவா,

- ரொம்பவும் தடித்த புத்தகத்தை எடுக்காதீர்கள். கை வலிக்குதே என புத்தகத்தை எடுக்கவே மாட்டீர்கள்

- குழப்பமான சிக்கலான ஆராய்ச்சி புத்தகங்கள் வேண்டாம். பிறகு நாம்தான் அதற்கு பரிசோதனை எலி.

- பிடிக்காத எழுத்தாளரின் புத்தகத்தை படிக்க எடுக்காதீர்கள். வருச ஆரம்பமே எதுக்கு மன உளைச்சல்.

- உங்களுக்கு எது படிக்கப்பிடிக்கும் ? கதைகள், கவிதைகள், நாவல்கள், ஜோக்குகள் அட சமையல் குறிப்புகள் இப்படி ஏதோ ஒன்று பிடிக்கும்தானே?

- பிடித்ததுடன் புத்தாண்டை தொடங்குங்கள்.

- தொடங்கியதை வாசித்து முடியுங்கள்

- எடுத்ததை முடிப்பதை விட ஒரு தன்முனைப்பு வேறென்ன வேண்டியிருக்கு

- அதன் பிறகு ஒன்றின் பின் ஒன்றென ஒரு புத்தகத்தை வாசியுங்கள்

- வாசித்ததை பற்றிய உங்கள் அபிப்பராயங்களை எழுதுங்கள்; குறித்து கொள்ளுங்கள்

- ஓராண்டு முடிவில் வாசித்த புத்தகங்கள் எனென்னெ என பாருங்கள் அசந்து போவீர்கள்.

எச்சரிக்கை,

முதல் புத்தகத்தை தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். தவறான அல்லது உங்களுக்கு ஒத்துவராத புத்தகத்தை எடுத்துவிட்டு பிறகு குத்துதே குடைதுதேன்னா நாங்க ஒன்னும் செய்ய முடியாது.

சில நாட்களாக புத்தக அலமாரியை அலசி ஆராய்ந்து புத்தாண்டு தொடங்கி, வாசிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துவிட்டேன். ஒரு பெட்டியில் வருசையாய் அடுக்கியுள்ளேன்.

நிச்சயம் இந்தப் பட்டியல் முழுமையானது இல்லை. பல புத்தகங்கள் குறுக்குவழியில் உள்நுழையத்தான் போகிறது. 

நீண்ட யோசனைக்கு பின் ஜனவரி முதல் நாள் நான் வாசிக்க வேண்டிய புத்தகத்தை எடுத்துவிட்டேன். நிச்சயம் ஓராண்டு வாசிப்பிற்கு இந்தப் புத்தகம் என்னை தயார் செய்யும்  என நம்புகிறேன்.

அப்படியென்ன புத்தகம் என்பதை ஜனவரை முதல் நாள் பகிர்கிறேன்.

நண்பர்களே நீங்களும் ஜனவரி முதல் நாளில் வாசிக்க உள்ள புத்தகத்துடன் தயாராய் இருங்கள். 

புத்தக விபரங்களையும் புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்வோம்....

நாம் இருவருக்கும் இடையில் ஓர் உறவாக துணையாக புத்தகங்கள் இருக்கட்டும்....

அன்புடன்

#தயாஜி

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 

#வெள்ளைரோஜா_பதிப்பகம்

டிசம்பர் 26, 2024

50வது கலந்துரையாடல்

இந்த வார திங்கட்கிழமையுடன் (23/12/24) இதுவரை நாம் நடத்திவந்த ‘சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடல்’ நிறைவடைகிறது.

இது நமது ஐம்பதாவது கலந்துரையாடல் கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் பரிட்ச்சார்த்த முயற்சியில் தொடங்கி இவ்வாண்டு வரை  (2024) ஐம்பது கலந்துரையாடல்கள் வரை கடந்துவிட்டோம். உண்மையில் இந்த ஐம்பதாவது கலந்துரையாடலை ‘கோ.புண்ணியவான் படைப்புலகம்’ என்ற தலைப்பில் அவரின் படைப்புகளைப் பற்றி ஒரு முழுமையான கலந்துரையாடலை வைக்கலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தோம். 

அதற்கென வகுத்த செயல் திட்டங்களில் எனக்கு போதிய அனுபவம் இல்லாததாலும் நாங்கள் தேடிய புத்தகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காததாலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. ஆனால் நிச்சயம் மீண்டும் முயல்வோம்.

இருந்தாலும் சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடலுக்கு திட்டமிட்டதில் இருந்து தொடர்ந்து உடன் பயணிக்கும் இளம் எழுத்தாளர் பிருத்விராஜூவின் சிறுகதையை ஐம்பதாவது கலந்துரையாடலில் பயன்படுத்தியது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி சிறப்பான முறையில் விளம்பரத்திற்கான பதாகைகளை செய்து கொடுப்பவரும் அவர்தான்.

இணையம் வழி எந்தவித செலவும் இன்றி (நேரத்தைத் தவிர) இந்தக் கலந்துரையாடலை நடத்தியிருந்தாலும் சில சிக்கல்களையும் நாங்கள் எதிர்கொண்டோம்.

குறிப்பாக இந்தக் கலந்துரையாடலுக்கு வந்தால் சிலர் தாங்கள் நட்பாக இருப்பவர்களிடம் இருந்து விலக நேரிடும் என்று கூட நேரடியாகவே சொல்லியுள்ளார்கள். 

போதாக்குறைக்கு நமது நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்னொரு புலனக்குழுவில் நண்பர் ஒருவர் பகிர்ந்த போது, இதையெல்லாம் இங்கே பகிர அவசியம் என்ன இருக்கிறது என்றும் இதனால் மலேசிய இலக்கியம் அடையப்போவது ஒன்றுமில்லையென்ற விவாதத்தை அறிவிலியொன்று புலம்பியும் குழம்பியும் திரிந்தது.

அந்த அறிவிலி சொல்வதும் உண்மைதான். நாங்கள் மேடைகளை நம்பவில்லை. மாலை மரியாதையைக் காட்டி யாரையும் கவரவில்லை. இலக்கியம் என்ற பெயரின் தனிமனித விளம்பரத்தையோ தனிப்பட்ட வருவாய்க்கான ஏற்பாடுகளையோ செய்யவில்லை. அடிப்படையில் வாசிக்க சொல்லுகிறோம். “எதையாவது எழுதுங்கள், பிறகு யாரை வைத்தாவது எடிட் செய்து… புத்தகம் போட்டு எல்லோர் முகத்திலும் அடிப்போம்…” என்ற  வெட்கமற்ற வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை. 

ஒரு கதையை வாசித்து அதற்கான நம் மனவோட்டத்தை சக நண்பர்களோடு பகிர்வதற்கு ஒரு களத்தை உருவாக்கியிருக்கிறோம்.

எழுத்தாளருக்கும் வாசகருக்குமான நேரடியான உரையாடல் களமாக இந்தக் கலந்துரையாடல் அமைந்திருக்கிறது.

தன் சுய இலாபத்துக்காகவும், தனக்கு கிடைக்கும் போலி பாராட்டுகளுக்காகவும் மயங்கி யார் பின்னாலும் நடப்பவர்கள் ஒருபோதும் படைப்பாளிகளாக ஆக முடியாது என்கிற அடிப்படை தெரியாதவர்களைப் பற்றி நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. தனக்கு நடக்கும் ஏமாற்றத்தையே கண்டறிய முடியாவதவர்கள் வாசகர்களுக்கு எதை எழுதிவிட உத்தேசிக்கிறார்கள் எனவும் புரியவில்லை.

இந்த ஐம்பதாவது கலடந்துரையாடல்வரை பல சிறுகதைகளைப் பற்றி பேசியுள்ளோம். மூத்த படைப்பாளிகள் முதல் இளம் படைப்பாளிகளின் முதல் சிறுகதைகள் என பல கதைகளை கலந்துரையாடல் செய்துள்ளோம். மலேசியா மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர்களோடும் உரையாடல்களை நடத்தியுள்ளோம்.


எங்கள் நோக்கத்தை புரிந்து எங்களுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு சிறகுகள் நண்பர்கள் சார்பாக எங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

எழுத்தாளர்கள் மட்டுமல்லாது, பல வாசகர்களும் கலந்துரையாடலுக்கு வந்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து உங்கள் சந்தேகங்களை எழுத்தாளர்களிடம் கேட்டு உரையாடலை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தினீர்கள். நீங்கள் எங்கள் நன்றிக்குரியவர்கள்.

இலக்கியம் குறித்து நீங்கள் சண்டையிடுங்கள் சேர்ந்து கொள்ளுங்கள் முரண்படுங்கள் உடன்படுங்கள் ஆனால் உங்களின் சுயதேவைக்கு இலக்கியத்தைப் பயன்படுத்தி மேலே வர சதி செய்யாதீர்கள். நீங்கள் மேலே வருவீர்கள் ஆனால் அங்கேயே அதிக நேரம் உங்கள் உங்களை நிறுத்தி வைக்க முடியாது. 

நிறைவாக;

இந்த ஐம்பதாவது கலந்துரையாடலுடன் நமது சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடல் நிறைவடைகிறது. சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் நாம் வாரந்திர கலந்துரையாடலில் இணைவோம். வாசிப்பை நம்புகின்றோம் வாசிக்கின்றோம். உரையாடலை நம்புகின்றோம் பேசுகின்றோம். இலக்கியத்தை நம்புகின்றோம் வாழ்கிறோம் வாழ்வோம்.

டிசம்பர் 22, 2024

பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு


   சமீபத்தில் நடந்த பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கிற்கு சென்றிருந்தேன். நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை சார்பாக புத்தகங்களை விற்பனை செய்யும் வாய்ப்பினைக் கொடுத்திருந்தார்கள். என்னுடன் மேலும் சில மலேசிய எழுத்தாளர்களும் அவர்களின் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.




  பலரை சந்திக்கவும் பேசவும் வாய்ப்பு கிடைத்தது.

  நிகழ்ச்சி முடிந்து புறப்படும் போது வழக்கம் போல,  PSM கட்சி அலுவலக நூல்நிலையத்திற்கு எனது புத்தகங்களைக் கொடுத்தேன்.

 எங்கெல்லாம் நூல்நிலையங்களும் வாசிக்கும் மனங்களும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் என் புத்தகங்களும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். நான் எழுதுவதும் அதற்காகத்தான்.



     இவ்வாய்ப்பை எனக்கு எற்படுத்தி கொடுத்த தோழர்கள் அனைவருக்கும் குறிப்பாக தோழர் நாகேந்திரன் அவர்களுக்கும் என் அன்பும் நன்றியும்...

நவம்பர் 14, 2024

சிறுகதை ஒரு பார்வை - பள்ளிக்கூட நிகழ்ச்சி

 

ஹோப்புள் தோட்டத்தமிழ்ப்பள்ளியில் கோலாசிலாங்கூர் மாவட்ட தமிழ்மொழி பாடாட் குழுவின் ஏற்பாட்டில் ‘சிறுகதை ஒரு பார்வை’ என்னும் சிறுகதை பட்டறையை (கலந்துரையாடலை) ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் பட்டறையை  வழி நடத்தினேன்.

ஆசிரியர்  ரூபன் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்தார். ஹோப்புள் தோட்டத்தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை திருமதி மகேஸ்வரி இந்நிகழ்ச்சி குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் தான் என்ன எதிர்ப்பார்க்கிறேன் என்பதையும் கூறி என்னை அறிமுகம் செய்துவைத்தார். 

ஒருசில ஆசிரியர்களுக்கு எனது பெயர் முன்னமே பரிட்ச்சயம் ஆகியிருந்தது. அதோடு ஏற்கனவே எனக்கு அறிமுகமான இளம் எழுத்தாளர்களும் நண்பர்களுமான டர்வின், கலைமதி, உகனேஸ்வரி ஆகியோரை சந்தித்தேன்.

இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய மாவட்டம், மாநிலம் மற்றும் மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர் திரு பாண்டியன் அவர்களும் சிறப்பான முறையில் அவரது உரையை வழங்கினார். அவரது உரையில் எழுத்தாளர் சிவசங்கரியின் புத்தகத்தில் இருந்த கதையொன்றின்  ஒரு பகுதியை எடுத்துக்கூறி நாம் இருக்கும் இடம் நம்மை எப்படியெல்லாம் மோசமான நிலைக்கு தள்ளும் என விளக்கி நாம் நம்மை புரிந்து கொள்வதற்கும் வாழ்வின் வெல்வதற்கும் நம் சுற்றம் எப்படி காரணமாக அமைகிறது என்றும் கூறினார்.

‘சிறுகதை ஒரு பார்வை’ என்ற இந்தக் கலந்துரையாடலுக்கு கம்போங் பாரு தோட்டத்தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர் ரிவர் தோட்டத்தமிழ்ப்பள்ளி, இராஜாமூசா தோட்டத்தமிழ்ப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் வந்திருந்தார்கள்.




எனது இன்றைய உரையாடலில் மாணவர்களை கதைகள் வாசிக்க வைப்பதிலும் கதைகளை எழுத வைப்பதிலும் ஆசிரியர்களின் பங்கு என்னவாக அமைந்துள்ளது என்பதற்கு கூடுதல் கவனம் கொடுத்தேன். ஏனெனில் எங்களைப் போன்ற எழுத்தாளர்களை வாசகர்கள்தான் வாசிக்கின்றார்கள். ஆனால், அடுத்த தலைமுறை எழுத்தாளர்களும் வாசகர்களும் பள்ளிகளில் இருந்து வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. பள்ளிக்கூடத்திலேயே வாசிப்பை நேசிக்க வைப்பது மிகவும் முக்கியம். 



சிறுகதைகளை வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் நாம் நம்மை எப்படி தயார் செய்வது என்பதைச் சொல்லும் போது நான் வாசித்த சிறுகதைகளைச் சொல்லி அதையொட்டி பேசினேன். கதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் முதற்கொண்டு, திருப்பம் என்பதின் அவசியத்தையும் அது எப்படி கதையை மாற்றிவிடுகிறது என்பதையும் பேசினேன்.

எதிர்ப்பாத்தது போல அதிக கேள்விகள் எழாவிட்டாலும், எழுந்த சில கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்து மேலும் சில உதாரணங்களைக் கொடுத்தேன்.


வழக்கம் போல, ஹோப்புள் தோட்டத்தமிழ்ப்பள்ளி நூல்நிலையத்திற்கு எனது 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல' , 'குறுங்கதை எழுதுவது எப்படி' என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளையும் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை சார்பாக கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய பொம்மைகள்கூட பேசிக்கொண்டிருக்கலாம் என்ற கவிதை தொகுப்பினையும் கொடுத்தேன்.



 இன்றைய கலந்துரையாடலில் பங்கெடுத்த ஆசிரியர்களுக்கும் அவர்கள் வழி அவர்களில் மாணவர்களுக்கும் பயனாக அமையும் என நம்புகிறேன். அதையே எதிர்ப்பார்க்கிறேன்.

அக்டோபர் 26, 2024

மங்கள தீபாவளி - வானொலி நாடகம்


வணக்கம் நண்பர்களே, தீபாவளி வாரத்தை முன்னிட்டு 'மங்கள தீபாவளி' என்னும் வானொலி நாடகத்தை எழுதியுள்ளேன்.
காயத்ரி கண்ணம்மாவின் தயாரிப்பில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) இரவு மணி 7.30க்கு  மின்னல் பண்பலையில் நீங்கள் கேட்டு இரசிக்கலாம்.

தீபாவளிக்கு வீட்டுக்கு வரவேண்டிய நாயகனையும் நாயகியையும் காணவில்லை! என்ன ஆனார்கள் எங்கே போனார்கள்? அவர்கள் இருவருக்கும் என்ன சிக்கல்? பெற்றோர் ஒன்று நினைக்க வேறொன்று அங்கே நடக்கிறது... என்ன அது ? கேள்விகளுக்கு பதில்
தெரிந்து கொள்ள வானொலி நாடகத்தை கேளுங்கள்.

இந்நாடகத்தில் வி.ஜி.கிருஷ்ணன், அமீர் அப்பாஸ், புனிதகலா
மிஸ்.ராணி, ஈவராணி ஆகியோருடன் நானுமே நடித்துள்ளேன்.

சில ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் நான் எழுதிய வானொலி நாடகத்தில் நானும் ஒரு கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ளேன்.

வாய்ப்புள்ள நண்பர்கள் கேட்டு, இந்நாடகம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

அப்படியே என்னுடைய நடிப்பும் உங்களுக்கு பிடித்திருக்கிறதா என சொல்லுங்கள்.

உங்கள் அனைவருக்கும் என் அன்பு💙

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

அக்டோபர் 14, 2024

குழந்தைகளைக் கேட்கும் கதைகள்

 

இம்முறை மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றிருந்தோம். அங்குள்ள மாணவர்களுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகம் எற்பாடு செய்திருந்தது. சனிக்கிழமை காலை 9க்கு தொடங்கிய கதை சொல்லும் அங்கம் பிற்பகல் மணி 12க்கு நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் ம.நவீன், இளம் எழுத்தாளர் அரவின், எழுத்தாளர் விஸ்வநாதனுடன் நானும் சென்றிருந்தேன். வெள்ளிக்கிழமையே நாங்கள் புறப்பட்டோம். எங்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சனிக்கிழமை காலை பள்ளி தலைமையாசிரியர் திருமதி வாசுகியை சந்தித்தோம். அன்பாகவும் உற்சாகமாகவும் எங்களை வரவேற்றவர் பள்ளிக்கூடம்  குறித்தும் மாணவர்கள் குறித்தும் நேர்மறையானவற்றைப் பகிர்ந்து கொண்டார். அவரின் உற்சாகம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது.

எனக்கு தெரிந்து, மாணவர்களுக்கு எழுத்தாளர்களை அழைத்து வந்து கதை சொல்லும் நிகழ்ச்சியை ம.நவீன் தொடங்கினார். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னமே அவர் இந்த (திட்டத்தை) நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதற்கும் நான் கதை சொல்லியாக சென்றிருந்தேன்.

இன்றைய நிகழ்ச்சியில் எங்கள் ஒவ்வொருவரையும் சிறப்பாகவே மாணவர்களுக்கு, ஆசிரியர்  ஒருவர் அறிமுகமும் அறிவிப்பும் செய்தார். தலைமையாசிரியரும் இன்றைய நிகழ்ச்சி குறித்து பேசினார். அவர்களை தொடந்து ம.நவீன் தான் இத்திட்டத்தை தொடங்கியதின் நோக்கத்தை தெளிவாகவே விளக்கினார்.

கதை சொல்லிகளாகச் சென்ற எங்கள் நால்வருக்கும் ஒருவருக்கு ஏறக்குறைய 15 முதல் 20 மாணவர்கள் என வழங்கப்பட்டார்கள். மாணவர்களுடன் எங்களுக்கான இடத்திற்கு நாங்கள் சென்றோம்.

எங்கள் நால்வருமே வெவ்வேறு விதமான கதை சொல்லிகள். நான்கு குழுவிலும் இருக்கும் மாணவர்கள் அவர்கள் எங்களிடம் கேட்ட கதைகளை இன்னொரு மாணவருக்கு சொல்லும்போது அது அவர்களுக்கு புலப்படும்.

தொடக்கமாக கதைகள் என்றால் என்ன? ஏன் கதைகள் சொல்லப்படுகின்றன? ஏன் எழுதப்படுகின்றன? யார் எழுதுகிறார்கள்? யாருக்காக எழுதுகிறார்கள்  என்ற அடிப்படையில் இருந்து என் பேச்சை தொடங்கினேன்.
என் முன் தயாரிப்பில் 25 கதைகளை எழுதி வைத்திருந்தேன். அதைத் தவிர்த்து மேற்கொண்டு ஐந்து கதைகளை பேசுவதற்கு மனதளவிலும் தயாராய் இருந்தேன்.

கதை கேட்க உற்சாகமாக இருக்கும் மாணவர்களிடம் 25 எண்களில் ஒரு எண்ணை தேர்தெடுக்க சொல்லி அந்தக் கதையை அவர்களுக்கு கூறினேன். அது மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தியது; மாணவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த எண்ணில் என்ன கதை இருக்கும் என தெரிந்து கொள்ள ஆர்வமானார்கள்.

ஒன்றின் பின் ஒன்றாக, நான் சிறுவயதில் வாசித்த கதைகள் முதல் இன்று எழுதப்படும் சிறுவர்களுக்கான கதைகளில் இருந்து ஒவ்வொரு கதைகளாக பேசினேன்.

ஒரு கதையை நான் சொல்ல ஆரம்பிக்க மாணவர்கள் அடுத்த என்ன நடக்கும் என யூகிக்கலானார்கள். அதில் அவர்களே நாயகனாகவும் நாயகியாவகும் இருக்க விரும்பினார்கள். இந்தக் கதைகள் எல்லாமே அவர்களின் நூல்நிலையத்தில் நிச்சயம் இருக்கும் என்றும் அந்தக் கதைகளை வாசிப்பதில் இருந்து நம்மால் எதை கற்றுக்கொள்ள முடியும் எனவும் விளக்கினேன்.


சினிமாவிலோ, ஓவியத்திலோ நாம் பார்க்கும் பெரிய கோட்டையும் அதன் வாசல் கதவும், நாம் வாசிக்கும் போது எவ்வாறு நம்மால் கட்ட முடிகிறது என்றும் அந்தக் கோட்டை சுவரையும் நம் நம் விருப்பத்திற்கு ஏற்ப எப்படி மாற்றலாம் என்று பேசி; மாணவ பருவத்தில் கற்பனை திறனை நமது கல்விக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் பேசினேன்.

மாணவர்களின் பங்கெடுப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்த இடத்திற்கு பின்னால் சில புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாணவி என்னையும் பார்த்து என்னால் பின்னால் அடுக்கியிருந்த புத்தகங்களையும் பார்த்து கொண்டிருந்தார்.  என்னவென்று விசாரித்தேன். அங்குள்ள ஒரு புத்தகத்தைக் காட்டி அந்தப் புத்தகத்தை எழுதியது நான் தானே என கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்பள்ளிக்கு இனிமேல்தான் என் புத்தகங்களைக் கொடுக்க வேண்டும் அதற்குள் என் புத்தகம் இங்கு எப்படி வந்திருக்கும் என திரும்பி பார்த்தேன். அங்கு பரமஹம் யோகானந்தரின் புத்தகம் இருந்தது. புத்தக முகப்பில் அவரின் முகம் பளிச்சிட்டு கொண்டிருந்தது. அந்த முகப்பிற்கும் என் முகத்திற்கும் ஒரே மாதிரியான சிகை அலங்காரம் ! இருந்தது. மாணவியின் சந்தேகத்திற்கான காரணம் புரிந்தது.

கதைகளின் இடையிடையில் கேள்வி கேட்டேன். பதில் சொன்ன அனைவருக்கும் சிறுசிறு பரிசுகளைக் கொடுத்தேன்.

வாசித்த கதைகள் மட்டுமல்லாது உண்மையில் நடந்த கதைகள், சிறைச்சாலையில் நான் பேட்டி கண்டவர்களின் என நான் சொன்ன கதைகள் மாணவர்களுக்கு பயனாக இருக்கும் என நம்பினேன். கதை சொல்லி முடித்ததும் மாணவர்கள் பிடிவாதமாய் என்னிடம் கையொப்பம் வாங்கினார்கள்.
மீண்டும் எங்கள் நால்வரையும் அழைத்து சான்றிதழ் வழங்கி நன்றியுரை ஆற்றினார்கள்.

வழக்கம் போல இந்தப் பள்ளிக்கூட நூல்நிலையத்திற்கும் நான் எழுதிய ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ என்ற புத்தகங்களுடன் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய கவிதைத் தொகுப்பையும் அன்பளிப்பாக கொடுத்தேன்.

கதைகளை கேட்கும் மாணவர்களின் அடுத்த கட்டம் தாங்களும் அந்தக் கதைகளைத் தேடி வாசிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும் என்று நம்புகின்றேன். அதுவே அவர்கள் கதை எழுதுவதற்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும். இதற்கு ஆசிரியர்களுடன் பெற்றோருமே இணைந்து செயல்படவேண்டும்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

அக்டோபர் 10, 2024

எஸ்.ராவுடன் சந்திப்பு - 2

இவ்வாண்டு செப்டம்பரிலும் அக்டோபரிலும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மலேசியாவில் சில இடங்களில் உரை நிகழ்த்தினார். அதில் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றிருந்தேன். அதிலொரு நிகழ்ச்சியைக் குறித்து முன்னமே எனது வலைப்பூவில் எழுதியிருந்தேன். இரண்டாவது நிகழ்ச்சி குறித்த அனுபவத்தை இதில் எழுதுகிறேன்.

இந்த இரண்டாவது நிகழ்ச்சி மலாக்கா தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில்; மலாக்கா பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களின் சங்கத்தின் ஆதரவுடனும் மலாக்கா தம்ழர் சங்க கட்டிடத்தில் நடந்தது. ஆசிரியை மணிமேகலை மூலம் இந்நிகழ்ச்சி குறித்து அறிந்து கொண்டேன். அதோடு அந்நிகழ்ச்சியில் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில் இருந்து சில புத்தகங்களையும் விற்பனைக்கு கொண்டுவர அனுமதி கேட்டிருந்தேன். அவரும் அதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்தார். இவ்வேளையில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 இங்கும் ‘இலக்கிய இரசனையும் அழகியல் கூறுகளும்’ என்ற தலைப்பில் எஸ்.ரா  பேசினார். கூலிம் நிகழ்ச்சியில் பேசியதும் இந்த நிகழ்ச்சியில் பேசியதும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமலும் அதே சமயம் இரண்டும் இலக்கியத்தை நோக்கியதாகவும் இருந்தது.

இந்நிகழ்ச்ழியில் எஸ்.ராவின் உரை அதிகமே பசித்த மனிதர்களின் கதையையே சுற்றியிருந்தது.

புதுமைப்பித்தனின் இருந்து அவர் உரையைத் தொடங்கினார். குறிப்பாக புதுமைப்பித்தனுக்கு மலேசியாவில் சிறப்பு மலர் வெளியிட்டதையும் அதன் பின்னணியைல் குறித்தும் பேசியது எங்களை நிமிர்ந்து உட்கார வைத்தது. அந்த புதுமைப்பித்தன் மலர் இணையத்தில் இலவசமாக கிடைப்பதாகவும் சொன்னார். நான் தேடினேன் கிடைக்கவில்லை. 

நண்பர்கள் யாருக்கும் அந்த இதழ் கிடைத்தால் பகிருங்கள். அன்று புதுமைப்பித்தனுக்கு முதன் முறையாக சிறப்பு மலர் வெளியிட்ட மலேசிய வாசகர்கள்/ எழுத்தாளர்களுக்கும் இன்று புதுமைப்பித்தன் என்கிற பெயரையே அறியாமல் தங்களை இலக்கியவாதிகளாக முன்னிலைப்படுத்துகின்றவர்களுக்குமான வித்தியாசங்களை இன்றைய வாசகர்களும் எழுத்தாளர்களும் தெரிந்து கொள்ளட்டும்.

புதுமைப்பித்தன் மகளிடமே இல்லாத புகைப்படத்தை இந்த மலரில் இருந்து எடுத்துதான் அவருக்கு நினைவுப்பரிசாக கொடுத்ததையும் எஸ்.ரா கூறினார். அன்று அந்த மலர் வெளிவர காரணமாக இருந்த அனைவரும் நம் நன்றிக்குரியவர்கள் என்பதை மனதில் நினைத்து கொண்டேன்.

அதோடு புதுமைப்பித்தனின் கடைசி காலத்தின் நோய்மையையும் அவர் எதிர்கொண்ட சிக்கல்களையும் பேசி அங்கிருந்து பொய்க்குதிரை என்னும் புதுமைப்பித்தனின் சிறுகதைக்குள் நுழைந்தார். அவ்வப்போது புதுமைப்பித்தனின் சிறுகதைகளை மீள்வாசிப்பு செய்துவருகிறேன். அந்த வகையில் சமீபத்தில் இச்சிறுகதையை நான் வாசித்திருந்தேன். நான் வாசித்தபோது இக்கதையில் இன்றைய மனிதனை வைத்தும் பார்த்தேன்; ரொம்பவும் பொருத்தமாகதான் இருந்தது.

பொய்க்குதிரை சிறுகதை எங்கள் எல்லோருக்கும் எஸ்.ரா சொல்லிக்கொண்டிருக்கும் போது நாங்கள் அந்தக் கதைக்குள் நுழைந்துவிட்டோம். கதையின் முடிவில் தன் கணவனுக்கு சோறு போடும் போது அதில் மனைவியின் கண்ணீர்த்துளியும் சிந்தியை, அவர் பேசும்போது அரங்கமே அமைதியாய் இருந்தது. அதனை வெறும் கண்ணீ ராக கடந்து செல்ல விடாமல் அதன் பின்னணியிலும் பலவற்றை பேசினார்.


பின்னர் அவரின் உரை பசியின் பக்கம் வந்தது. மணிமேகலை அட்சயப்பாத்திரம் குறித்து பேசி அங்கிருந்து பஷீரின் ‘பிறந்தநாள் சாப்பாடு’ வரை  உரையைக் கொண்டு சென்றார்.

ஹிட்லரை வணங்காத மனிதனைப் பற்றி பேசினார். அது ரொம்பவும் சுவாரஷ்யமாக இருந்தது. ஹிட்லரை வணங்காத  அந்த மனிதன் எதிர்க்கொண்ட சிக்கலையும் ஒருபோதும் உண்மைக்கு புறம்பாக இருக்க விரும்பாத அந்த மனிதனின் மன உறுதியையும் பேசி; சாமான்ய மனிதன் தான் பிடித்து கொண்டிருக்கும் உண்மையுன் மூலமாக உலகம் அறியும் இடத்திற்கு சென்றதைக் கூறி; இன்றும் அந்த மனிதனின் நினைவிடத்திற்கு மக்கள் வந்து போவதைச் சொன்னார்.

கேள்வி நேரம் வந்தது; வழக்கம் போல இலக்கியத்திற்கு அப்பாலிருந்து தமிழ்ப்படங்களுக்கு ஏன் தமிழில் பெயர் வைப்பதில்லை எனத்தொடங்கி தமிழர் யார் திராவிடர் யார் என நுழைந்து இலக்கிய கேள்விகள் வருவதற்கு முன்பாக நேரம் முடிந்துவிட்டது.

 மலாக்கா தமிழர் சங்கத்தில் நூலகமும் வைத்திருந்தார்கள். அதற்கு இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது நூலகம் என்றும் பெயரிட்டிருந்தார்கள். வழக்கம் போல அந்த நூலகத்திற்கும் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை சார்பாக நான் எழுதிய புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்தேன். 

நிறைவாக; இன்றைய நிகழ்ச்சியில் எஸ்.ரா சொன்னதை ஒட்டுமொத்தமாக ஒரு வாக்கியமாக சுருக்கி நான் இவ்வாறு புரிந்து கொள்கிறேன். அது ‘சொற்களை நம்புங்கள்’.

நான் அதைத்தான் முழுமையாக நம்புகிறேன். அதன் பொருட்டுதான் வாசிக்கிறேன் எழுதுகிறேன்.


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்

அக்டோபர் 09, 2024

எஸ்.ராவுடன் சந்திப்பு 1 (2024)

என் தொடர் வாசிப்பிற்கு எழுத்தாளர் எஸ்.ராவின் பங்கு மிக முக்கியமானது. தொடக்க கால வாசிப்பில் ‘என்ன வாசிக்கலாம்?’ என்கிற அடிப்படை சிக்கலை எதிர்க்கொள்ள எஸ்.ராவின் எழுத்துகள் பெரிதும் உதவின. பல படைப்புகளை அறிமுகமும் செய்தன.

அவர் எழுதுகிறார் நான் வாசிக்கிறேன் என்பதைத்தாண்டி; எனக்காக அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று தேடும் அளவிற்கு அவரின் எழுத்துகள் என்னை வாசிக்க வைத்தன. ஈர்த்துவிட்டன. அவரின் அனுபவ கட்டுரைகள் பெரும்பாலும் என் நினைவை விட்டு நீங்காதவை.

இரண்டாவது முறையாக எஸ்.ராவை சுங்கை கோப், பிரம்மவித்யாரண்யத்தில் சந்தித்தேன். ‘இலக்கிய இரசனையும் அழகியல் கூறுகளும்’ என்ற தலைப்பில் பேசினார். அவரின் எழுத்தை போலவே அவரது குரலிலும் எனக்கான செய்தி இருப்பதாக உணர்கிறேன். அதிகம் அதிராத நிதானமான குரல். ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடைவெளியை புன்னகையாய் நிரப்புவார்.  

எஸ்.ராவை முதன் முறையாக 2011-ஆம் ஆண்டில் மலேசியாவிலேயே சந்தித்தேன். (அந்தச் சந்திப்பையும் பதிவாக எழுதியிருப்பேன்.) சிறுகதைப் பட்டறையை வழிநடத்த வந்திருந்தார். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அவரை அழைத்திருந்தார்கள். அதன் பிறகு தமிழகத்தில் நடக்கும் புத்தகக்கண்காட்சியில் சந்தித்தேன். மூன்றாவது முறையாக மீண்டும் மலேசியாவிலேயே சந்திக்கிறேன்.

நாம் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர் நம் பெயரை நினைவில் வைத்திருப்பது நமக்கு கிடைத்திருக்கும் அன்பு என நம்புகிறேன். நிகழ்ச்சிக்கு முன்பாக என்னைச் சந்தித்ததும் பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார்.

எஸ்.ராவின் ‘கர்னலின் நாற்காலி’ என்னும் குறுங்கதை புத்தகத்தில் பல பெயர்களுக்கு மத்தியில் என் பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருப்பார். நான் கொஞ்சமும் எதிர்ப்பாராத ஒன்று.

மனம் சஞ்சலமடையும் சமயங்களில் நான் எடுத்துப் புரட்டிப்பார்க்கும் புத்தகங்களில் எஸ்,ராவின் புத்தகங்களுக்கு முதலிடம் உண்டு. அவர் அறிமுகம் செய்த புத்தகங்களை குறித்து வைத்து எனது வாசிப்பு பட்டியலில் இணைத்தும் வாசித்தும் வருகின்றேன்.

எனது மூன்றாவது புத்தகமான ‘குறுங்கதை எழுதுவது எப்படி? – 108 குறுங்கதைகள் என்னும் குறுங்கதைத் தொகுப்பை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன்.

அவரைச் சந்தித்த இந்த நேரத்தில் நான் எழுதிய புத்தகங்களை அவருக்கு கொடுத்தேன். சமர்ப்பணம் செய்திருக்கும் பக்கத்தை அவரிடம் திறந்து காட்டினேன். வழக்கமான புன்னகையைப் பரிசளித்தார்.

இன்றைய சொற்பொழிவை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தொடங்கி வைத்தார். எனது பதின்ம வயதில் இருந்து நான்  பார்த்துக்கொண்டிருக்கும் அதே முகத்துடனே சுவாமி இப்போதும் இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் தனிப்பட்ட முறையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் முக்கியமான தருணமாக அந்த நேரம் அமைந்தது.

ஆசிரமத்தில் இருக்கும் நூல் நிலையத்திற்கு எனது புத்தகங்களில் சில பிரதிகளைக் கொடுத்து, அடுத்தடுத்த் திட்டங்களுக்கு சுவாமியிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன்.

இந்த நிகழ்ச்சியில் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தகங்களையும் விற்பனைக்கு வைக்கும் வாய்ப்பையும் சுவாமி கொடுத்து உதவினார். அவருக்கும் என் நன்றி.

அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் கோ.புண்ணியவான் எஸ்.ராவை அறிமுகம் செய்தார். அவரை வாசிக்காதவர்களுக்கும் அவரின் எழுத்துகளைத் தேட வைக்கும்படிக்கு அந்த அறிமுகம் இருந்தது. நிகழ்ச்சியை எழுத்தாளர் கே.பாலமுருகன் வழிநடத்தினார்.

‘ஆசை முகம் மறந்து போச்சே தோழி’, ‘எத்தனைக்கோடி இன்பங்கள்!’ போன்ற வார்த்தைகளின் பின்னணியை இன்றைய தலைப்பில் தன் பேச்சைத் தொடங்கினார். மகிழ்ச்சியின் உச்சமாகவும் , துயரத்தின் உச்சமாகவும் கண்ணிரே இருப்பதையும் உதாரணங்களோடு பேசினார். காந்தியின் வாழ்க்கையில் இருந்து காஃப்காவின் உருமாற்றம் நாவல்வரை வந்த அவரின் பேச்சு அரங்கில் இருந்தவர்களைப் பெரிதும் கவர்ந்தது.

கோலாலும்பூரில் இருந்து நானும், இளம் எழுத்தாளர் பிருத்விராஜூம் அவரைவிட இளம் எழுத்தாளரான! ஶ்ரீகாந்தனும் சென்றிருந்தோம். ஆசிரமத்திலேயே ஒருநாள் நாங்கள் தங்கினோம். எங்களோடு எழுத்தாளர் கோ.புண்ணியவானும் எழுத்தாளர் அ.பாண்டியனும் தங்கினார்கள். இந்த நிகழ்ச்சியின் வழி பல எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

என் பெயர் அச்சிடப்பட்ட புத்தகத்தை எஸ்.ரா அவர் கையில் இறுக்க பிடித்திருந்ததைப் பார்க்கையில் கொஞ்சம் சிலிர்க்கவும் செய்தது. ஒவ்வொரு தருணத்தையும் எழுத்தாளர் பிருத்விராஜு புகைப்படங்களாக ஆவணப்படுத்தினார், இச்சமயத்தில் அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



அக்டோபர் 07, 2024

வாசிப்பின் கொண்டாட்டம் 2


இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை வாசித்த புத்தகங்கள் பற்றி 'வாசிப்பின் கொண்டாட்டம்' என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.

ஜூலை முதல் செப்டம்பர் வரை வாசித்தவற்றை குறித்து இந்தப் பதிவை எழுதுகிறேன். இவ்வாண்டு முடிய இன்னும் மூன்று மாதங்களே இருக்க, அடுத்து வாசிக்க வேண்டியதின் மீது கூடுதல் கவனம் கொடுப்பதற்கு இந்தப் பதிவு உதவும்.

எண்ணிக்கை என்பதை தாண்டி பல சிக்கல்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் புத்தகங்களை வாசிப்பது என்பதே நாம் தொடர்ந்து செயல்படுகின்றோம் என்பதை நமக்கே நாம் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துதானே.


நாவல்

1. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

2. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா


கவிதைகள்

3. நீராலானது - மனுஷ்ய புத்திரன்

4. குஞ்ஞுண்ணி கவிதைகள் - பா.ஆனந்தகுமாரின் தமிழாக்கம்

5. நான்சென்ஸ் - நாச்சியாள் சுகந்தி

6. ஒரு இரவின் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது - முகுந்த நாகராஜன்


பிற

7. எப்போதும் வாழும் கோடை - மனுஷ்ய புத்திரன்

8. ஜென் கதைகள் - கி.அ.சச்சிதானந்தம்

9. கதை to திரைக்கதை - ஜா.தீபா

10. எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்

11. சின்னஞ்சிறு பழக்கங்கள் - Atomic Habits

12. The Art of Public Speaking - Dale Carnegie

இவ்வாண்டின் வாசிப்பு திட்டத்தில் மாதம் ஒரு நாவலை வாசித்தல் என்று முடிவெடுத்திருந்தேன். இஇதுவரை ஒன்பது நாவல்களை வாசித்து அதை சாத்தியப்படுத்தியும் வருகிறேன்.  ஒரு நாவலை வாசிக்கும் போது அதனை வாசித்து முடிக்கும் போதான மனநிலையை புரிந்து கொள்ளவே கொஞ்சம் நாளானது. இடையிடையில் இலகுவான வாசிப்பைக் கோரும் நாவல்களையும் இணைத்து வாசிப்பில் சிறு விளையாட்டையும் செய்ய வேண்டியிருந்தது. இதற்கிடையில் வாசிக்கும் உதிரி சிறுகதைகளைக்கு பெரிய பட்டியலே போடலாம்.

 பெரிய இலக்கை அடைவதற்கு முன் சிறுசிறு இலக்குகளைக் கடப்பதும்; கடப்பாற்காகவே சிறுசிறு இலக்குகளை உருவாக்குவதும் ஒரு வகையில் விளையாட்டுதானே.

மீதமுள்ள மூன்று மாதங்களில் இப்பட்டியலில் இணையவுள்ள புத்தகங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளவும் வாசித்து புரிந்து கொள்ளவும் நானும்கூட ஆவலாகத்தான் இருக்கிறேன்.


வாசகசாலையின் 100வது இதழ்

 வணக்கம் நண்பர்களே,

வாசகசாலை தனது 100வது இணைய இதழை வெளியிட்டுள்ளது. நீண்ட பயணமும் அர்த்தமுள்ள செயலூக்கமும் கொண்ட வாசகசாலை நண்பர்களுக்கு என் அன்பு.

இந்த 100வது இதழில் பலர்  எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். அதில் இளம் படைப்பாளிகளும் அடக்கம்.

இந்த இதழில் நான் உட்பட மலேசியாவில் இருந்து 6 பேரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. கொஞ்சம் நேரமெடுத்து இந்தப் படைப்புகளை வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால் நாங்கள் மகிழ்வோம்.

எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும்,

1. உமாதேவி வீராசாமி எழுதிய 'வேட்டை' 

2. ம.பிருத்விராஜூ எழுதிய 'சூப்பர் ஹீரோ'

3. இராஜலெட்சுமி எழுதிய 'உத்தரவு'

4. அகிப்ரியா எழுதிய 'வளர்பிறை'

5. இ.லீ.யுவேந்திரன் எழுதிய 'கரடியும் எருமையும்'

6. தயாஜியின்  குறுங்கதைகள்


மலேசிய படைப்புகள் அல்லது மலேசிய எழுத்தாளர்கள் என்றால் குறிப்பிட சிலரையே பலரும் பேசுகின்றீர்கள் வாசிக்கின்றீர்கள். அவர்களை தவிர்த்து எழுதுகின்றவர்களையும் நீங்கள் வாசிக்க வேண்டும். 

ஆனால் மிகச்சரியாக மோசமான ஒரு படைப்பையோ! எழுத்தாளராக தன்னைச் சொல்லிக் கொள்பவர்களையோ! படித்துவிட்டு நட்பும் பாராட்டி கொள்கிறீர்கள். 

வாசகசாலை இதழில் பங்குபெற்றிருக்கும் இந்த எழுத்தாளர்கள்  முற்றிலும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் என பொருள் கொள்ளலாம். 'மலேசியாவில் 20 ஆண்டுகளாக புதிய எழுத்தாளர்களே இல்லை...' எனக்கூறும் போலி கருத்துக்கணிப்புகளைக் கண்டிக்கும் அதே வேளையில் புதிதாக எழுதுகின்றவர்களுக்கும் நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும்.

இவர்கள் படைப்புகளை, நிற்க.....

இப்படி சொல்ல விரும்புகிறேன். எங்கள் படைப்புகளை வாசியுங்கள் வாசித்து உங்கள் பார்வையைப் பகிருங்கள். எங்கள் குறைநிறைகளைச் சொல்லுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

மலேசிய படைப்பாளிகள் என்று நீங்கள் நினைக்கையில் எங்கள் பெயர்களையும் உங்கள் நினைவில் வைத்துக்கொள்ளும்படிக்கு தொடர்ந்தும் சிறப்பாகவும் எழுத உழைக்கிறோம்.

இணைய இதழின் இணைப்பு...

https://vasagasalai.com/kurunkathaikal-taya-ji/


நன்றி #வாசகசாலை 

அன்புடன் #தயாஜி 

செப்டம்பர் 24, 2024

- நம்பிக்கையைச் சுமக்கும் கால்கள் -

 

நான் ஓர் எழுத்தாளன்,  புத்தக விற்பனையாளன். இன்றைய சூழலில் அது மட்டுமே ஒரு குடும்பத்தைச் சுமக்க போதுமானதாக இல்லை.  ஆகவே வேலை தேடியும் சில இடங்களுக்கு சென்று வருகிறேன்.

தெரிந்தவர்களுக்கு 'ரெசிமிகளை' அனுப்பி வருகிறேன். சிலர் காரணம் சொன்னார்கள். சிலர் இரண்டாம் முறையில் இருந்து என் அழைப்பை எடுக்கவில்லை. அவர்களுக்கு அதிகம் வேலையாகிவிட்டது போல.

சமீபத்தில் இணைய தமிழ் வானொலிக்கும் விண்ணப்பித்திருந்தேன். விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கலாம் என முயன்றேன். அவர்கள் புதிய முகங்களை தேடுவதாக சொல்லிவிட்டார்கள். 'என் முகம் அவ்வளவு பழசாகிவிட்டதோ' என நினைத்திருந்தேன். இன்னொரு இடத்திற்கும் விண்ணப்பித்திருந்தேன்.
'நீங்க புதுசா இருக்கீங்க' என நிராகரித்தார்கள். ஒரே நாளில் நான் பழைய முகத்தில் இருந்து புதிய முகத்திற்கு மாறிவிட்டேன்.

மெல்ல மெல்ல சேமிப்புகள் ஒவ்வொன்றும் இப்படியே கரைந்துவிட்டன. கிடைக்கும் 'டைப்பிங்'  வேலைகள் முதற்கொண்டு செய்து கொடுத்து சமாளிக்கிறேன்.

ரொம்பவும் சோர்வடைந்த போதுதான் எதேச்சையாக இந்தத் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 'As far as my feet will carry me' என் கால்கள் என்னை சுமக்கும் (கொண்டும் செல்லும்) தூரம் வரை என புரிந்து கொள்ளலாம்.

ஒரு கட்டத்தில், இந்தப் படத்தையா பார்க்கவேண்டும் என தோன்றிவிட்டது. ஏற்கனவே சோகத்தில் சோர்ந்திருக்கிறோமே.

ஆனால் மெல்ல மெல்ல அந்த நாயகனின் பயணமும் அவன் சந்திக்கும் தடைகளும், அவனூடே என்னையும் அலைக்கழித்தது.
நானும் அவன் பின்னே நடப்பது போல் உணர்ந்தேன்.

அத்துணை மோசமான அபாயகரமான சூழலில் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு அந்த மனிதன் தன் குடும்பத்தைப் பார்க்கவே செல்கிறான். அவனைக் காட்டிலும் என் நிலமை மோசமில்லை. குடும்பமெனும் நம்பிக்கையை சுமந்து கொண்டு நாமும் எந்தத் தடையையும் தாண்டலாம், எந்தச் சூழலையும் எதிர்க்கொள்ளலாம் என எனக்கு நானே ஊக்கம் கொடுத்து கொண்டேன்.

நீங்கள் அந்த மனிதனின் பயணத்தில் ஒரு முறையாவது பார்வையாளனாக பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

முடிவில் நான் என் இலக்கை அடைவேனா அல்லது வெற்றி பெறுவேனா என தெரியாது. ஆனால் 'இப்படி ஒருத்தன் இருந்தான் அவன் கடைசி வரைக்கும் முயற்சி செய்துகிட்டேதான் இருந்தான், ஒருபோதும் அவன் தோல்விகளை ஒத்துக்கொள்ளவில்லை....'  என உங்கள் யாருக்கும் ஒரு நாள் உற்சாகம் கொடுக்கும் மனிதனாக நானும் நிச்சயம் இருப்பேன்..

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

ஆகஸ்ட் 07, 2024

எழுதுவதற்கு முந்தைய ஏற்பாடுகள்




ஜூலை இறுதி வாரத்தில், 38-ஆவது பேரவை கதைகளுக்கு அல்லது  அப்போட்டிக்கு சிறுகதைகளை எழுத விரும்புகின்றவர்களுக்கு ‘சிறுகதை பட்டறையை’ ஏற்பாடு செய்திருந்தார்கள். இணையம் வழி சந்திப்பு.

அதில் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் எழுத்தாளர் விஜலெட்சுமியும் பயிற்றுநர்களாக இருந்தார்கள். இந்த இருவரும், இருவரின் எழுத்துகளும் எனக்கு பரிட்சயம் என்பதால் நானும் ஒரு பார்வையாளனாக பங்கெடுக்க விரும்பி திகதியைக் குறித்துக்கொண்டேன்.

பின் மிகச்சரியாக அந்த நாளை மறந்திருந்தேன். சரியான நேரத்தில்  இளம் எழுத்தாளர் பிருத்விராஜு நினைவுப்படுத்தி சந்திப்பிற்கான இணைப்பையும் அனுப்பினார். உடனே இணைந்துவிட்டேன்.

தொடக்கமாக எழுத்தாளர் கோ.புண்ணியவான் சிறுகதைகள் குறித்து பேசத்தொடங்கினார். எனக்கு தெரிந்து தேர்ந்த வாசிப்பின் வழி இலக்கியம்  பேசுகின்றவர்கள் புதுமைப்பித்தனைப் பற்றி பேசாமல் இருக்கமாட்டார்கள். சில கதைகளைச் சொல்லும் போது இந்தப் பெயரை நினைவுக்கூராமல் இருக்கவும் முடியாது. 

இதனை குறிப்பாக சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு:

இன்னமும் புதுமைப்பித்தனின் எழுத்துகளை வாசிக்காமலும்; சிறுகதைகளில் அந்த மனிதன் செய்த முயற்சிகளையும் சாதனைகளையும் அறிந்து கொள்ளாமலும் இங்கு இலக்கிய அந்தஸ்த்தை சுமந்து கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு பொன்னகரம் கதையின் முடிவு கூட புத்திக்கு புரியாமல்; என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு அப்படியா போவா? ச்சேச்சே அருவருப்பு என சொல்லிக்கொண்டே இளம் தலைமுறைகளுக்கு இலக்கிய உலகில் தாங்களே வழிகாட்டி என்பது மாதிரியான போஸ்டர்களை அடித்துக்கொள்கிறார்கள். 

எழுத்தாளர் கோ.புண்ணியவான், தனது உரையில் அதே பொன்னகரம் சிறுகதையைக் குறித்து பேசினார். ஒரு சிறுகதையை எப்படி அணுக வேண்டும் என்பதையும் அந்தக் கதை, அதில் தோன்றிய மனிதர்களுக்கு நியாயம் செய்திருக்கிறதா எனவும் குறிப்பிட்டார். அதனையடுத்து சங்குத்தேவனின் தர்மம் என்னும் சிறுகதையைக் குறித்து பேசினார். புதுமைப்பித்தனின் இந்த இரண்டு சிறுகதைகளும் பங்கேற்பாளர்களுக்கு எழுத்தாளர் மீது ஒரு தேடலைக் கொடுக்கும் என்றால் மகிழ்ச்சி. 

சிறுகதைகளில் கையாளப்படும் யுக்திகளான, நனவோடை, அங்கதம், மாய எதார்த்தம் போன்றவற்றையும் கோடிகாட்டினார். அதோடு எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் சிறுகதை யுக்திகளையும் குறித்து பேசினார்.

காட்சியை எழுதுதல் என்பதற்கும் காட்சிப்படுத்துதல் என்பதற்குமான வித்தியாசங்களைப் பேசியவர், ‘காட்சி மொழி’ சிறுகதைகளுக்கு ஏன் முக்கியம் எனவும் விளக்கம் கொடுத்தார்.

வழக்கமாக சிறுகதைகள் குறித்து பேசுகிறேன் என்பவர்கள் உள்ளூர் படைப்பாளிகளைப் பேசுவது குறைவு. தமிழகத்து அல்லது வெளிநாட்டு எழுத்தாளர்களை பெயரளவிலாவது தெரிந்து கொண்டு இவர் பேசுவதை கேட்கவே நமக்கு சமயங்களில் சிரிப்பு வந்துவிடும். அந்தவகையில் கோ.புண்ணியவான் போன்ற ஒரு சிலர் தனது உரையாடலில் மலேசிய எழுத்தாளர்களைக் குறித்து பேசியதற்கு நன்றி.

எழுத்தாளர் சி.முத்துசாமியின் ‘இரைகள்’ சிறுகதையைக் குறித்தும் ரெ.கார்த்திகேசு எழுதிய மல்லியும் மழையும்  சிறுகதைக் குறித்தும் பேசி, வாசக இடைவெளி எப்படி வெளிப்படுகின்றது என சுட்டிக்காட்டினார்.

படைப்பில் வெளிப்படும் ‘கலையமைதி’ குறித்து பேசும் போது, கல்லிற்கும் சிற்பத்திற்கும் உள்ள வேறுபாடு, வெறும் சுவருக்கும் ஓவியம் வரையப்பட்ட சுவருக்கும் இருக்கும் வேறுபாடுகளைக் கூறியது  ரொம்பவே கவர்ந்தது.

அதனையடுத்து, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘புத்தனாவது சுலபம்’, ஜெயமோகன் எழுதிய ‘தேவகி சித்தியின் டைரி’ போன்ற கதைகளைக் குறித்தும் பேசினார்.

கோ.புண்ணியவான் அவரின் உரையில் நிறைவாக தேய்வழக்கு குறித்தும் பேசி முடித்தார்.

அவரையடுத்து எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூலகருமான விஜயலெட்சுமியும் பேசினார்.

இப்போட்டிக்கு இதற்குமுன் வந்திருந்த சிறுகதைளிலிருந்த சிக்கலையும் எழுத்தாளர்களின் கவனக்குறைவையும் பேசி, எப்படியான சிறுகதைகள் கவனம் பெறும் என்பதையும் விளக்கினார். சில மலேசிய சிறுகதைகள் குறித்து பேசினார். தங்களுக்கு கிடைக்கும் சிறுகதைகளில் பெரும்பாலானவை கதைச்சுருக்கமாக இருப்பதையும், நாவல் சுருக்கம் போல இருப்பதாகவும் சுட்டிக்காட்டியவர், சிறுகதையென்பது ஒரு தருணத்தையோ ஓர் சம்பவத்தையோ ஓர் உணர்வையோ மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்றார்.

பின் கேள்வி நேரத்தில், பங்கேற்பாளர்கள் தங்களின் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றார்கள்.

வெறுமனே கதை எழுதும் போட்டிகளை அறிவித்துவிட்டு கடந்துவிடாமல், போட்டிக்கு எழுத விரும்புகிறவர்களுக்கு இம்மாதிரி பட்டறைகளையோ விளக்க கூட்டங்களையோன் நடத்துவது வரவேற்கத்தக்கது. போட்டிக்கு எழுதுபவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் அது பயனான இருக்கும். 

எதையும் எழுதுவதற்கு முன்பாக என்ன எழுதுகிறோம் எதற்கு எழுதுகிறோம் எப்படி எழுதுகிறோம் என்பது மிகவும் முக்கியம். அதோடு போட்டிக்கு எழுதும்போது அவர்களின் விதிமுறைகளைப் புரிந்து கொள்வதும் முக்கியம். 

ஏனெனில் குலைந்த அமைதியை எழுதுவதும் அமைதியை குலைக்காமல் எழுதுவது இருவேறு இடங்களுக்கு போகவேண்டிய எழுத்து. இரண்டையுமேதான் நாம் எழுத வேண்டும்.

இந்த பட்டறையில் பங்குபெற்று இரு எழுத்தாளர்கள் மூலம் விளக்கம் பெற்றவர்கள் யாரேனும் சிறுகதை எழுதி வென்றால் எது எல்லோருக்குமே மகிழ்ச்சிதான்.

ஆகஸ்ட் 03, 2024

விழிகளின் வழியில்…

 



“எங்களுக்கு குறையும் உண்டு; அதனை நான் அழுது சொல்லலாமா?

என் தாயும் நீயிருக்க; உந்தன் செல்ல மகன் வாடலாமா?”

ஆடிமாதமென்பதால், வீரமணிதாசன் என் வீட்டில் பாடிக்கொண்டிருந்தார். இல்லாள் பூஜையில் தியானித்திருந்தார்.  நான் கணினியில் என்  தியானத்தை எழுதிக்கொண்டிருந்தேன். 

நான் இசைக்கு ரசிகன் அல்ல, என்னால் அதன் ரம்மியத்தை ரசிக்க இயலாது. எனக்கு  எந்த இசைக்கருவியில் பெயரும் சரியாகச் சொல்லத்தெரியாது. ஆமாம் அது வயலின்னா? பியானோவா? என்ற வகையறா!

ஆனால் எனக்கு ஒலிகள் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதன் சத்தம் என்னை சட்டென என்நிலை மறக்க செய்துவிடும். அந்தச் சத்தம் மழையில் இருந்து வரலாம், தட்டச்சு செய்யும் போது வரும் “டக் டக்” சத்தமாக இருக்கலாம், பழுதடைந்த காத்தாடியில் வரும் “கிரீச் கிரீச்” சத்தமாக இருக்கலாம். அல்லது திரும்பத்திரும்ப ஒலிக்கும் மந்திர வார்த்தைகளாக இருக்கலாம்.

வார்த்தைகள். ஆமாம் வார்த்தைகள்தான். 

ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருள் கொண்டிருப்பதுபோல; நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அது தன்னில் மறைத்து வைத்திருக்கும் தொணியும் அது வெளிப்படும் ஒலியும் உங்கள் மனதின் நீங்கள் சொல்ல நினைத்து பூசி மொழுகி வார்த்தையை செதுக்கி  சொன்னதின் உண்மை உருவத்தை சட்டென நிராயுதபாணியாக்கி விடுகின்றன. அப்படி பலரின் நிராயுதபாணிச் சொற்களை எனக்கு தெரியும். அதனைச் சொன்ன மாவீரர்களையும் உங்களுக்குத் தெரியும்.

என் இரவு நேரங்கள் பெரும்பாலும் புத்தகங்கள் வாசிப்பதும் பின்னணியில் ஏதாவது இசைக்கோர்வை ஒலிப்பதுவாகவும் இருக்கும். அது என்னை என் மேஜையைத் தாண்டி எந்தச் சத்தமும் எனக்கு கேட்டுவிடாமல் உலாவிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் அது கடல் அலையின் சந்தமாகவோ, மெல்லியக் காற்றின் சத்தமாகவோ இருக்கும். அதே சமயத்தில் பிரார்த்தனைப் பாடல்களாகவோ இருக்கும். என் மனநிலைக்கு ஏற்றார்போல பழைய சினிமா பாடல்களும் அவ்வபோது வந்து காதுகளை உரசிவிட்டுப்போகும். புதியப்பாடல்களிலும் சிலரின் குரல் எனக்கு ஏற்றதாய் அந்நேரத்தில் ஒலிக்கும்.

இன்று கணினியில் மும்முரமாய்த் தட்டச்சு செய்துக்கொண்டிருந்தேன். சட்டென அந்தப் பாடல் என்னை ஸ்தம்பிக்கச் செய்தது. தட்டிக்கொண்டிருந்த விரல்கள்  நடுங்க ஆரம்பித்தன. கண்முன்னே இருந்த கணினிக்குள் நுழைந்து என் பழைய நினைவுகளில் மிதக்கலானேன்.

“எங்களுக்கு குறையும் உண்டு; அதனை நான் அழுது சொல்லலாமா?

என் தாயும் நீயிருக்க; உந்தன் செல்ல மகன் வாடலாமா?”

இந்தப் பாடல்தான் இதற்கெல்லாம் காரணம். சிறு வயதில் அடிக்கடி கேட்டப் பாடல்தான். அப்போது மாரியம்மாவிற்கான பாடலாகத்தான் இதனை கடந்து வந்திருந்தேன். இந்தப் பாடலை மட்டுமல்ல, பெரும்பாலான பக்திப்பாடல்களை அப்படித்தானே கடந்து வந்திருக்கிறோம். ஏதோ ஒரு நாளில் இம்மாதிரி பக்திப்பாடல்களை மாரியம்மனுக்காக அல்லாமல் நம் மனதிற்காக நாம் கேட்கலாம். பெரும்பாலான பாடல்கள் தன்நிலையைச் சொல்லி, குரல் ஒடிந்து, என்னைக் காப்பாற்று தாயே என கேட்கும் குரலாகவேதான் ஒலிக்கிறது. 

இன்று இந்தப்பாடலை, நான் என் குரலிலேயே கேட்கும்படி மாயம் நடந்தது. எல்லோரும் உடைந்தழ தாயாராய்த்தான் இருக்கிறோம். ஏனோ அதனை நம் கௌரவ குறைச்சலாக பாவித்து தப்பித்துக்கொள்கிறோம். உண்மையில் தப்பிக்கின்றோமா என்பது கேள்விக்குறிதான்.

இந்த வரிகள் கொடுக்கும் ஆறுதலுக்கு யாருக்கு நன்றி சொல்லலாம். பாடியவருக்கா எழுதியவருக்கா இசையமைத்தவருக்கா (சமயங்களில் இந்த மூவருமே ஒருவராகத்தான் இருப்பார்கள்.). இதனைத் தாண்டி இன்னொன்றும் இருக்கின்றது. அதுதான் நம் சூழல். அதுதானே நம்மை வழி நடத்துகின்றது.

திரும்பத்திரும்ப இந்த வரிகளையே கேட்டுக்கொண்டிருக்கின்றேன். யாரை நோக்கி என் குரல் செல்கிறது என தெரியவில்லை. ஆனால் நம்முள்ளிருந்து இப்படி நம் குரல் வெளிவருவதே நமக்கு ஆறுதல் தருவதாக அமைந்துவிடுகிறது, 

‘ஆடு ஜீவிதத்தில்’ ஒலித்த ‘பெரியோனே ரஹுமானே’ பாடலும் சரி காலையில் ஒலித்த ‘எங்களுக்கும் குறையுமுண்டு’ பாடலும் சரி திக்கற்று நிற்கும் எவருக்கும் வார்த்தைகள் வழி கரம் பிடித்து வாழ்வின் மீதான நம்பிக்கைகளைக் கொடுப்பதை நிறுத்துவதில்லை. நாம்தான் எல்லாவற்றுக்கும் ‘கடவுள்’ என்கிற சாயத்தையும் ‘கடவுள் இல்லை’ என்கிற சாயத்தை பூசிப்பூசி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

இந்த வரிசையில் ‘எங்கும் நிறைந்தோனே…. இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்’ என்ற நாகூர் ஹனிபா பாடியப் பாடலையும், ‘யேசு… ராஜா உன் மாளிகையில் ராப்பகலாய் அமர்ந்திருப்பேன்’ என்ற ஃபாதர் பெர்க்மன் பாடியப் பாடலையும் நான் இணைத்துக்கொள்கிறேன்.

நேரம் இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள். அதன் வரிகளுக்காகவும் நாம் வாழும் இந்த வாழ்க்கைக்காகவும். 

நம் அழுகை யாரை நோக்கி பாய்கிறது என்பதைவிட; அது நம்  கண்களை விட்டு வழிந்து செல்கிறது என்பதுதான் முக்கியம். அழுது அழுது மடிந்தவர்களைவிடவும் அழாமலேயே உள்ளுக்குள் மடிந்தவர்களின் கதைகள் இங்கு ஏராளமல்லா !

- தயாஜி


https://youtu.be/W31NM5XJRZ4?si=0aMqR0etWQXuKvHV

https://youtu.be/FZWef5x06z4?si=0X4hdpPTjuCpXV0B

https://youtu.be/EZCxtFRlQEQ?si=NRPPiMXFkVmIAaTA





ஜூலை 31, 2024

மாணவர்கள் சிறுகதைப் பட்டறை


ஜூலை மாத தொடக்கத்தில் (SMK PUTERI, SEREMBAN) சிரம்பான், புத்ரி பெண்கள் இடைநிலைப்பள்ளிக்கு சென்றிருந்தேன். மாணவிகளுக்கு சிறுகதைப் பட்டறையை வழிநடத்த அழைத்திருந்தார்கள்.

குறைந்தது 70 மாணவர்கள் வரை பங்கெடுத்தார்கள். அரங்கம் நிறைந்திருந்தது.

ஒவ்வொரு முறையும் பள்ளிக்கூடங்களுக்கு சிறுகதைப் பட்டறை வழிநடத்த செல்லும் போது, ஒரே மாதிரி பேசுவதையும் ஒரே கதைகளை மாணவர்களுக்கு சொல்வதையும் தவிர்த்துவிடுவேன்.

பள்ளிக்குச் செல்வதற்கு முன்னமே, மாணவர்களுடன்  என்னென்ன புதிதாகச் சொல்லலாம், எந்தக் கதைகளை உதாரணங்களாகக் கொடுக்கலாம் போன்றவற்றை வாசிக்கவும் குறிப்பெடுக்கவும் செய்வேன். இது நமக்கும் கூட பயிற்சியாக அமையும் என்பதால் 'முன் தயாரிப்பு' எப்போதும் இரு தரப்பிற்கும் லாபம்தான்.

பட்டறையில், அவர்கள் பரிட்சைக்கு எழுத வேண்டிய சிறுகதைக்கு செல்வதற்கு முன்பாக ஏன் சிறுகதைகள் நம் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றன என்று மாணவிகளுடன் பேசினேன்.

அந்தக் கதைகள் எப்படியெல்லாம் நம் வாழ்க்கைக்கு பயன்படுகின்றன, என்ன படிப்பினையை என்னென்ன எதார்த்தங்களைக் கொடுக்கின்றன என மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

பிற்பகல் மணி 2.30க்கு பட்டறை தொடங்கியது. அது இயல்பாகவே நம்மை தூங்க வைக்கும் நேரம் என்பதால் என் பேச்சினை மாணவிகளிடுனான உரையாடலாக மாற்றினேன்.

மாணவிகள் உற்சாகமாகவே பங்கெடுத்தார்கள். ஆசிரியை குமுதா சிறப்பாகவே இப்பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு நன்றி.

வழக்கம் போல எனது 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல', 'குறுங்கதை எழுதுவது எப்படி' புத்தகங்களையும் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம் கவிதைத் தொகுப்புகளையும் பள்ளி நூல் நிலையத்திற்கு கொடுத்தேன் 

சில மாணவர்கள் இயல்பாகவே கதைகள் எழுத ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். தமிழ்கூறு நல்லுலகம் அவர்களின் எழுத்துகளையும் வாசித்து சேமிக்க காத்திருப்பதைச் சொல்லி பட்டறையை நிறைவு செய்தேன்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்