பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

சிறகுகளின்_கதை_நேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறகுகளின்_கதை_நேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிசம்பர் 26, 2024

50வது கலந்துரையாடல்

இந்த வார திங்கட்கிழமையுடன் (23/12/24) இதுவரை நாம் நடத்திவந்த ‘சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடல்’ நிறைவடைகிறது.

இது நமது ஐம்பதாவது கலந்துரையாடல் கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் பரிட்ச்சார்த்த முயற்சியில் தொடங்கி இவ்வாண்டு வரை  (2024) ஐம்பது கலந்துரையாடல்கள் வரை கடந்துவிட்டோம். உண்மையில் இந்த ஐம்பதாவது கலந்துரையாடலை ‘கோ.புண்ணியவான் படைப்புலகம்’ என்ற தலைப்பில் அவரின் படைப்புகளைப் பற்றி ஒரு முழுமையான கலந்துரையாடலை வைக்கலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தோம். 

அதற்கென வகுத்த செயல் திட்டங்களில் எனக்கு போதிய அனுபவம் இல்லாததாலும் நாங்கள் தேடிய புத்தகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காததாலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. ஆனால் நிச்சயம் மீண்டும் முயல்வோம்.

இருந்தாலும் சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடலுக்கு திட்டமிட்டதில் இருந்து தொடர்ந்து உடன் பயணிக்கும் இளம் எழுத்தாளர் பிருத்விராஜூவின் சிறுகதையை ஐம்பதாவது கலந்துரையாடலில் பயன்படுத்தியது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி சிறப்பான முறையில் விளம்பரத்திற்கான பதாகைகளை செய்து கொடுப்பவரும் அவர்தான்.

இணையம் வழி எந்தவித செலவும் இன்றி (நேரத்தைத் தவிர) இந்தக் கலந்துரையாடலை நடத்தியிருந்தாலும் சில சிக்கல்களையும் நாங்கள் எதிர்கொண்டோம்.

குறிப்பாக இந்தக் கலந்துரையாடலுக்கு வந்தால் சிலர் தாங்கள் நட்பாக இருப்பவர்களிடம் இருந்து விலக நேரிடும் என்று கூட நேரடியாகவே சொல்லியுள்ளார்கள். 

போதாக்குறைக்கு நமது நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்னொரு புலனக்குழுவில் நண்பர் ஒருவர் பகிர்ந்த போது, இதையெல்லாம் இங்கே பகிர அவசியம் என்ன இருக்கிறது என்றும் இதனால் மலேசிய இலக்கியம் அடையப்போவது ஒன்றுமில்லையென்ற விவாதத்தை அறிவிலியொன்று புலம்பியும் குழம்பியும் திரிந்தது.

அந்த அறிவிலி சொல்வதும் உண்மைதான். நாங்கள் மேடைகளை நம்பவில்லை. மாலை மரியாதையைக் காட்டி யாரையும் கவரவில்லை. இலக்கியம் என்ற பெயரின் தனிமனித விளம்பரத்தையோ தனிப்பட்ட வருவாய்க்கான ஏற்பாடுகளையோ செய்யவில்லை. அடிப்படையில் வாசிக்க சொல்லுகிறோம். “எதையாவது எழுதுங்கள், பிறகு யாரை வைத்தாவது எடிட் செய்து… புத்தகம் போட்டு எல்லோர் முகத்திலும் அடிப்போம்…” என்ற  வெட்கமற்ற வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை. 

ஒரு கதையை வாசித்து அதற்கான நம் மனவோட்டத்தை சக நண்பர்களோடு பகிர்வதற்கு ஒரு களத்தை உருவாக்கியிருக்கிறோம்.

எழுத்தாளருக்கும் வாசகருக்குமான நேரடியான உரையாடல் களமாக இந்தக் கலந்துரையாடல் அமைந்திருக்கிறது.

தன் சுய இலாபத்துக்காகவும், தனக்கு கிடைக்கும் போலி பாராட்டுகளுக்காகவும் மயங்கி யார் பின்னாலும் நடப்பவர்கள் ஒருபோதும் படைப்பாளிகளாக ஆக முடியாது என்கிற அடிப்படை தெரியாதவர்களைப் பற்றி நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. தனக்கு நடக்கும் ஏமாற்றத்தையே கண்டறிய முடியாவதவர்கள் வாசகர்களுக்கு எதை எழுதிவிட உத்தேசிக்கிறார்கள் எனவும் புரியவில்லை.

இந்த ஐம்பதாவது கலடந்துரையாடல்வரை பல சிறுகதைகளைப் பற்றி பேசியுள்ளோம். மூத்த படைப்பாளிகள் முதல் இளம் படைப்பாளிகளின் முதல் சிறுகதைகள் என பல கதைகளை கலந்துரையாடல் செய்துள்ளோம். மலேசியா மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர்களோடும் உரையாடல்களை நடத்தியுள்ளோம்.


எங்கள் நோக்கத்தை புரிந்து எங்களுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு சிறகுகள் நண்பர்கள் சார்பாக எங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

எழுத்தாளர்கள் மட்டுமல்லாது, பல வாசகர்களும் கலந்துரையாடலுக்கு வந்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து உங்கள் சந்தேகங்களை எழுத்தாளர்களிடம் கேட்டு உரையாடலை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தினீர்கள். நீங்கள் எங்கள் நன்றிக்குரியவர்கள்.

இலக்கியம் குறித்து நீங்கள் சண்டையிடுங்கள் சேர்ந்து கொள்ளுங்கள் முரண்படுங்கள் உடன்படுங்கள் ஆனால் உங்களின் சுயதேவைக்கு இலக்கியத்தைப் பயன்படுத்தி மேலே வர சதி செய்யாதீர்கள். நீங்கள் மேலே வருவீர்கள் ஆனால் அங்கேயே அதிக நேரம் உங்கள் உங்களை நிறுத்தி வைக்க முடியாது. 

நிறைவாக;

இந்த ஐம்பதாவது கலந்துரையாடலுடன் நமது சிறகுகளின் கதை நேரம் – சிறுகதை கலந்துரையாடல் நிறைவடைகிறது. சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் நாம் வாரந்திர கலந்துரையாடலில் இணைவோம். வாசிப்பை நம்புகின்றோம் வாசிக்கின்றோம். உரையாடலை நம்புகின்றோம் பேசுகின்றோம். இலக்கியத்தை நம்புகின்றோம் வாழ்கிறோம் வாழ்வோம்.

பிப்ரவரி 09, 2024

சிறகுகளின் கதை நேரம்; சிறுகதைக் கலந்துரையாடல் – ஓர் அறிமுகம்

 



 

நண்பர்களுக்கு வணக்கம். எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான உரையாடல் களத்தை இக்கலந்துரையாடல் வழி ஏற்படுத்துகின்றோம். இது முழுக்க முழுக்க வாசிப்பை அடிப்படையாக வைத்து வாசகர்களுடன் கைக்கோர்க்கும் நண்பர்கள் குழு. யார் இந்த நண்பர்கள் என்று கேட்டால் வாசிப்பை நேசிக்கும் நீங்கள் எல்லோரும் எங்கள் நண்பர்கள்தான். அதோடு; மலேசிய படைப்பிலக்கியத்தை முன்னிருத்தி மலேசிய படைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதே எங்கள் நோக்கம்.

கடந்த டிசம்பரில் இக்கலந்துரையாடலைத் தொடங்கினோம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு மணி எட்டு முதல் ஒன்பது வரை இணையம் வழி இக்கலந்துரையாடல் நடக்கின்றது. தொடக்கத்தில் எனக்கு தெரிந்த எல்லோரிடமும் இத்தகவலைச் சொன்னேன். சிலர் கலந்து கொண்டார்கள் சிலர் காரணம் சொன்னார்கள். கலந்து கொண்டவர்களிடம் நிகழ்ச்சி குறித்தும் கலந்து கொள்ளாதவர்களிடம் அவர்கள் சொன்ன காரணம் குறித்தும் பேசினேன்.

நேரமில்லை, கலந்து கொள்வதில் சிக்கல், இணைய சிக்கல் போன்ற வழக்கமான காரணங்களுக்கு மத்தியில் புதிதான ஒரு காரணத்தைச் சொன்னார்கள். அதாவது இதுபோன்ற இன்னொருவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் இப்போது தாங்கள் இணைந்திருக்கும்  குழுவில் இருந்து விலக்கப்படுவோம் என்கிற பயம் இருப்பதாக சொன்னார்கள். இதுபற்றி இனிமேலும் நான் பேச விரும்பவில்லை. யாருக்கு எங்கிருக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்கள் அங்கேயே இருந்து கொள்ளலாம்.

டிசம்பர் மாத கலந்துரையாடலில்;

4/12/23 தி.ஜானகிராமனின் ‘முள்முடி’

11/12/23 மா.அரங்கநாதனின் ‘சித்தி’

18/12/23 ஆதி.இராஜகுமாரனின் ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’

25/12/23 அரு.சு.ஜீவானந்தனின் ‘புள்ளிகள்’

ஆகியோரின் சிறுகதைகளைக் குறித்து பேசி கலந்துரையாடினோம். முதல் இரு நிகழ்ச்சிகளுக்கு பின் மலேசிய எழுத்தாளர்களின் சிறுகதைக்குச் சென்றோம். அதில் மறைந்த ஆதி.இராஜகுமாரனின் சிறுகதை முத்தாய்ப்பாய் அமைந்தது அனலாம். அதே போல எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன்தான் முதன்முதலாக இக்கலந்துரையாடலில் வாசகர்களுடன் பேசினார். அது எங்களுக்கு மேலும் உற்சாகம் கொடுத்தது.

ஜனவரி மாத கலந்துரையாடலில்

8/1/24 கோ.புண்ணியவானின் ‘சான்ஸ்’

15/1/24 காந்தனின் ‘ஐ லவ் யு’

22/1/24 வே.ராஜேஸ்வரியின் ‘குழந்தை இன்பம்’

29/1/24 இராஜேஸ் இராமசாமியின் ‘தொடுகை’

ஜனவரி மாதம் முழுவதும் கலந்துரையாடல் சிறப்பாகவே நடந்தது. கதைகளை வாசித்த வாசகர்களும் கதையை எழுதிய எழுத்தாளரிடம் நேரடியாக தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

பிப்ரவரி மாதம் முழுவதும் சிங்கப்பூர் எழுத்தாளகளின் சிறுகதைகளைக் குறித்து பேசவுள்ளோம். அதில் தொடக்கமாக எழுத்தாளர் அழகுநிலாவின் ‘விலக்கு’ சிறுகதை அமைந்தது. இம்மாதத்திற்கான மற்ற மூன்று சிறுகதைகளையும் அதனை எழுதிய எழுத்தாளர்கள் பற்றிய அறிவிப்பும் இந்த வாரம் அறிவிக்கப்படும். தொடர்ந்து சிங்கை எழுத்தாளர்களின் படைப்புகளையும் இந்த உரையாடல் களத்தில் பயன்படுத்தவுள்ளோம். அந்த முன்னெடுப்பிற்கு எழுத்தாளர் அழகுநிலா உதவுவதாகச் சொல்லியுள்ளார். அவருக்கு எங்கள் நன்றி.

இவ்வருடத்திற்கான அடுத்த கட்ட திட்டங்களாக

1.    அறிவியல் சிறுகதைகள் ஓர் அறிமுகம்

2.    நவீனச்சிறுகதைகள் என்றால் என்ன, எப்படி புரிந்து கொள்வது?

3.    சிறுவர் இலக்கியம்

4.    நான் ஏன் கவிதை எழுதுகின்றேன்?

5.    நாவலாசிரியரின் அனுபவம்

6.    எதை வாசிப்பது எப்படி வாசிப்பது?

போன்ற  தலைப்புகளுக்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருகின்றோம். வாசிப்பின் வழி நாம் தொடர்ந்து இணைந்திருப்போம். எப்போதும் உடனிருக்கும் உங்கள் அனைவருக்கும்  எப்போதும் என் அன்பு.

 

 

 

ஜனவரி 01, 2024

சிறகுகளின் கதை நேரம் 4 - அரு.சு.ஜீவானந்தனின் 'புள்ளிகள்' பதிவு 1




 நாம் விரும்பி செய்யும் செயலில் தொடர்ந்து நடக்கும் அதிசயங்களும் ஆச்சர்யங்களும் நமக்கு மேலும் உற்சாகமளிக்கும் அதுவே நமக்கு செயலூக்கமாகவும் அமையும்.

அப்படியொரு ஆச்சர்யம் இன்று நடந்தது.

 இன்று, 'சிறகுகளின் கதை நேரம்' நான்காவது வாராந்திர சிறுகதைக் கலந்துரையாடல் நடைபெற்றது. இணையம் வழி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றோம்.

 வருடத்தின் முதல் நாள் நிகழ்ச்சியை எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தனின் 'புள்ளிகள்' சிறுகதை கலந்துரையடலில் தொடங்கினோம்.

 எதிர்ப்பாராத விதமாக இன்றைய கலந்துரையாடலில் எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன் கலந்து கொண்டார்.  ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அவரின் சிறுகதையைக் குறித்து நாங்கள் பேசுவதை அவர் ஆர்வமாக கேட்டார். 

  நிறைவாக சிலவற்றை பேசவும் செய்தார். விரைவில் அவரின் படைப்புகள் குறித்த ஒரு சந்திப்பு கூட்டத்தை அல்லது இன்னொரு முழுமையான உரையாடல் நிகழ்ச்சியை செய்ய திட்டமுள்ளதை பேசினேன். அவரும் சம்பதித்தார்.

 இவ்வாண்டின் முதல் கலந்துரையாடலுக்கு சம்பந்தப்பட்ட எழுத்தாளரே எதிர்ப்பாராதவிதமாக கலந்து கொண்டு எங்கள் செயல்பாடுகளை வாழ்த்தியது எங்களுக்கான ஆசீர்வாதமாக பார்க்கிறோம்.

 இன்றைய நிகழ்ச்சியில் பேசும் போது அரு.சு.ஜீவானந்தனின் பழைய புகைப்படங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த புகைப்படம் குறித்து பேசினேன். அவர் சிரிக்கலானார். அவரிடமே இதனை பலமுறை சொல்லியுள்ளேன். இதனுடன் அந்தப் புகைப்படத்தையும் இணைக்கிறென்.



 இன்று நடந்த சிறகுகளின் கதை நேரம் நிகழ்ச்சி குறித்த பதிவை வழக்கம் போல முழுமையாக எழுதி இந்த வாரத்தில் பகிர்கிறேன். 

 அதற்கு முன்பாக எங்கள் செயல்பாட்டுக்கு கிடைத்த செயலூக்கத்தைச் சொல்வதற்காக இதனை எழுதியுள்ளேன்.


டிசம்பர் 23, 2023

சிறகுகளின் கதை நேரம் 3 – ஆதி.இராஜகுமாரனின் ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’

     



    சிறகுகளின் கதை நேரம்சிறுகதைக் கலந்துரையாடல் சந்திப்பில் மூன்றாவது சந்திப்பு சிறப்பாய் நடைபெற்றது. இம்முறை மலேசிய எழுத்து ஆளுமைகளில் முக்கியமானவரும் எங்களின் முன்னோடிகளில் ஒருவருமான ஆதி.இராஜகுமாரனின் இரவுகள் வெளிச்சமானவை அல்லஎன்னும் சிறுகதையைக் குறித்து கலந்துரையாடினோம்.

முதல் இரண்டு நிகழ்ச்சிகளைக் காட்டிலும் கூடுதலான வாசகர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். குறிப்பாக மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவானை சொல்லலாம். அதோடு எழுத்தாளரும் மருத்துவருமான இனிய நண்பன் ராஜேஸ், தொடர்ந்து பலருக்கு வழிகாட்டியாக இருந்துவரும் எழுத்தாளர்களான வாணிஜெயம், உமாதேவி வீராசாமி, சாந்தா காளியப்பன் ஆகியோரையும் சொல்ல வேண்டும்.

நம் நாட்டைப் பொறுத்தவரை நமது மூத்த எழுத்தாள்களை வாசிக்காதது ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் யார் என்றே தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனை குறையாக சொல்லவில்லை கலைய வேண்டிய குறைபாடாகவே இங்கு சொல்ல வேணடியிருக்கிறது.  அதே போல வெறுமனே வார மாத இதழ்களுக்காகவும் ஞாயிறு பதிப்பிற்காகவும் எழுதி குவித்தவர்களையும் குவிப்பவர்களையும் இந்த மூத்த எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்க்கலாமா என தெரியவில்லை. ஏனெனில் அவர்களின் எழுத்தில் அந்தந்த இதழ்களுக்கான தேவைகள் இருக்கின்றதே அன்றி வாசகர்களுக்கான எந்தத் திறப்புகளும் இருப்பதில்லை. இதில் ஒன்றிரண்டு மாறுபடலாம் மறுப்பதற்கில்லை. இதழ்களுக்கு எழுதாமல் நேரடியாக இணையத்தில் எழுதுகின்றவர்களும் தத்தம் சமூக ஊடங்களில் குறிப்பாக தனது வலைப்பூவில் (ப்ளாக்கில்) எழுதின்றவர்களும் புத்தகமாக தங்களின் படைப்புகளை வெளியிட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஆதி,இராஜகுமாரனின் சிறுகதைகள் தொகுப்பை வாசித்தேன். அதையொட்டிய என் வாசிப்பனுபவத்தை என் வலைப்பூவில் எழுதியிருந்தேன். அதிகமானவர்களின் பார்வைக்கு அது சென்றது. அதில் 16 சிறுகதைகள் இருந்ததன. ‘மழைச்சாரல்’ குழுவினர் அதனை சிரத்தையெடுத்து தொகுத்து வெளியீடு செய்திருந்தார்கள். இவ்வேளையில் அவர்களுக்கும் அக்குழுவின் நிறுவனர் கவிஞர் வாணிஜெயம் (மீராவாணி)க்கு இவ்வேளையில் என் நன்றி.

அத்தொகுப்பை வாசித்ததும் அதிலுள்ள பல கதைகள் வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டிருந்தன. சில புது முயற்சிகளும் அதில் இருந்தன. இன்னும் சொல்லப்போனால் 1984ஆம் ஆண்டு முதல் பிரசுரம் வெளிவந்தது. இத்துனை ஆண்டுகள் கழித்தும் வாசிப்பில் அவை புதுமையாக இருந்தன. அந்தத் தொகுப்பு குறித்து விரிவாகவே என் வலைப்பூவில் எழுதியிருந்தேன். அதன் லிங்க் https://tayagvellairoja.blogspot.com/2020/04/20209.html

அதில் ஒரு சிறுகதை; ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’. அதனை வாசித்து நான் எழுதியக் குறிப்பை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். ‘சில கதைகளை  மட்டுமே வாசித்த உடன் அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றும். இக்கதை அந்த வகையைச் சேர்ந்தது………’

மீண்டும் இக்கதையை எங்களில் ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதைக் கலந்துரையாடலில்  பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.

பங்கெடுக்கின்றவர்கள் ஒவ்வொருவரும் சிறுகதையை வாசித்துவிட்டு வரவேண்டும்; சிறுகதைக் குறித்து சில வார்த்தைகளாகவு பகிரவேண்டும் என்பதைத் தவிர வெறேந்த நிபந்தனைகளும் இல்லை.

இன்று அதிகமானவர்கள் கலந்து கொண்டது ஆதி.இராசகுமாரன் மீதான மரியாதை என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.

சங்கர் ஆரம்பித்தார். அவர் இக்கதையை உளவியல் ரீதியில் அனுகலாம் என்றார். இரு கதாப்பாத்திரங்களிலும் எது அதிக இரக்கத்தை காட்டுகிறது என மறைமுக போட்டி இருக்கிறது என்றார். அடுத்தவர்களுக்கு தங்களை நல்லவர்களாகக் காட்டுவதில்தான் மனிதர்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்று கூறினார். இளம் தலைமுறையினரிடம் இப்படியா பார்வை வந்திருப்பது பாராட்டத்தக்கது.

அவரைத் தொடர்ந்து டரிஷன் பேசலானார். தலைப்பு அவருக்கு குழப்பத்தையும் அது ஏதோ ஒன்றை தனக்குள் மறைத்திருப்பதை சுட்டிக்காட்டினார். தாழ்வு மனப்பான்மை ஒரு மனிதனின் இயல்பு வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும் என கதையில் இருந்து எடுத்துச்சொன்னார்.

தொடர்ந்து; மூத்த படைப்பாளியான கோ.புண்ணியவான் பேசலானார். அவர் இக்கதையில் முழு குற்றத்தையும் ஆணில் மீதே உள்ளது என்றார். ஆணில் மனம் எப்படியெல்லாம் சந்தேகத்துக்கு ஆளாகும் என்றால் அவரின் பேச்சு பங்கேற்பாளர்களை கொஞ்சம் குழப்பமடையச் செய்தது.

ஏறக்குறைய அவரின் கருத்தோடு மருத்துவர் ராஜேஸும் ஒத்துப்போனார். இக்கதையின் ஏற்பட்ட திருப்பத்திற்கு இந்தச் சமூகம் முக்கிய காரணம் என்றார். இச்சிறுகதையின் மொழி தன்னைக் கவர்ந்ததாகவும் சொன்னார்.

இடையில் கோ.புண்ணியாவன்; ஆதி.இராஜகுமாரன் குறித்த சில சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

அடுத்தவர் பிருத்வி. தலைப்பில் ஏதோ ஒன்று மறைந்திருப்பதை அவரும் சுட்டிக்காட்டினார். இக்கதையின் முடிவில் ஏற்படும் மரணத்தை கணக்கை யார் மீது எழுத வேண்டும்; நிச்சயம் அதற்கு குற்றவாளி இக்கதையில் வரும் இதர கதாப்பாத்திரங்கள்தான் என்றார். சூர்யா நடித்த பேரழகன் படத்திற்கும் இந்தக் கதைக்குமான ஒற்றுமை வேற்றுமைகளையும் விளக்கினார்.

அடுத்ததாக, உமாதேவி வீராசாமி பேசலானார். அவர் இக்கதை குறித்து பேசியவர்களின் கருத்தோடு ஒத்துப்போவதாகச் சொன்னார். ஆனால் கோ.புண்ணியவான் மற்றும் ராஜேஸ் ஆகியோருடனான கருத்தில் உடன்படவில்லை எனறும் எதைவைத்து நாயகன் மீது இவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என வினவினார்.

அது ஒரு விவாதத்தைத் தொடங்கியது. அவரவர் அவர்களின் பார்வையில் இருந்து சிலவற்றை பகிர்ந்து கொண்டார்கள்.

ஒரு சிறுகதை; அதனை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையைக் கொடுப்பது அதன் பலம். அதிலிருந்து ஒற்றைப்புள்ளியில் அச்சிறுகதையை வாசகர்கள் இணைக்க வேண்டியது வாசிப்பின் அவசியம் என்பதை வழியுறுத்தினேன்.

கவிஞர் வாணி ஜெயம், இக்கதை எழுதப்பட்ட பின் அன்றைய காலக்கட்டத்தில் ஆதி.இராஜகுமாரனுடன் நிகழ்ந்த உரையாடல் குறித்து பகிர்ந்து கொண்டார். ஓர் எழுத்தாளரின் கதையும் அவருடனான உரையாடலும் அவ்வளவு சீக்கிரத்தில் வாசகர்களால் மறக்க முடியாதுதான்.

   என் பார்வையில், இரவுகள் வெளிச்சமானவை அல்ல’. சில கதைகளை மட்டுமே வாசித்த உடன் அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளத்தோன்றும். இக்கதை அந்த வகையைச் சார்ந்ததுதான். நாம் பிறரின் நன்மைக்காக செய்யும் செயல் அவர்களுக்கு பெரும் தீமையைக் கொடுத்துவிடவும் கூடும் என்பதுதான் கதை. அவளுக்கு தன் உருவ அமைப்பால் திருமணம் தடுங்களாகிப் போகிறது. ஆனால் அவளுக்கு பார்வையற்ற ஒருவரை திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. முதலில் மனம் வலித்தாலும்  பின்னர் தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொண்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறாள். தனக்கு பார்த்திருக்கும் பெண் மிகவும் அழகானவள் என்பது போன்ற விபரங்கள் மாப்பிள்ளைக்குக் கிடைக்கிறது. பார்வையற்ற ஒருவனை திருமணம் செய்து அந்த பெண் அவள் வாழ்வை வீணாக்க வேண்டாம். அவளாவது நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என திருமணத்தை வேண்டாம் என்கிறார். ஒரு பார்வையற்றவருக்குக் கூட தனக்கு வாழ்க்கைத் தர முன்வரவில்லையே என அப்பெண் தற்கொலைச் செய்துக் கொள்கிறாள். சமயங்களில் பிறருக்கு நாம் செய்யும் நன்மைகள் நமக்கே பெருந்துயரத்தைக் கொடுத்துவிடுகின்றன.

நிச்சயம் வாசிக்கப்படவேண்டிய எழுத்தாளர்களின் பட்டியலில் ஆதி.இராஜகுமாரனின் பெயர் இருக்கிறது. இன்று நம்மிடையே அவர் இல்லாவிட்டாலும் அவரின் எழுத்துகள் வழி நாம் அவர்களோடு உரையாடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.

‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதைக் கலந்துரையாடலில் மலேசிய படைப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கின்றோம். உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் இணையம் வழி எங்களின் கலந்துரையாடலில் பங்கு கொண்டு உரையாடலாம்.

இவ்வாண்டின் நிறைவு நிகழ்ச்சி இதுதான்.

ஜனவரியில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு மணி எட்டுக்கு சிறகுகளின் கதை நேரம் இடம்பெறும். முறையே நம் இலக்கிய முன்னோடிகளின் சிறுகதை, மலேசிய எழுத்தாளர்களின் கதை, புதிய எழுத்தாளர்களின் கதை என திட்டமிட்டுள்ளோம். நாம் தொடர்ந்து உரையாடுவோம். ஏனெனின் சிறகுகளின் கதை நேரம் முழுக்க முழுக்க உரையாடுவதற்கான புதிய களம்.

அன்புடன் தயாஜி 

டிசம்பர் 13, 2023

சிறகுகளின் கதை நேரம் 2 – மா.அரங்கநாதனின் ‘சித்தி’


எங்களின் சிறகுகளின் கதை நேரம்’, சிறுகதைக் கலந்துரையாடலில் இம்முறை எழுத்த்தாளர் மா.அரங்கநாதன் எழுதிய சித்தி என்னும் சிறுகதையைக் குறித்து உரையாடினோம் .இம்முறை எங்களின் இணைய சந்திப்பில்; என்னுடன் சேர்த்து பத்துப்பேர் பங்கெடுத்தார்கள்.

    இரண்டாம் கலந்துரையாடலில் பங்கெடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ‘சித்தி’ சிறுகதைகளைக் குறித்த தத்தம் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில்ம் இச்சிறுகதையை அணுகினோம். ஆமாம்; அவரவர் அனுபவங்களுக்கும் அறிதலுக்கும் உட்பட்டுதானே சிறுகதைக் குறித்த பார்வை விரிவடைகின்றது.

    ஆச்சர்யம் என்னவெனில்; பல கோணங்களில் இச்சிறுகதை அணுகப்பட்டாலும் முடிவாக அதன் மையத்தை ஒவ்வொருவரும் தொட்டார்கள். அவ்விடத்தை அடைந்து அங்கிருந்து இச்சிறுகதையை இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றார்கள்.

    தொடக்கமாக நான் எனது பார்வையைப் பகிர்ந்து கொண்டேன். தொடர்ந்து நண்பர் அருள் அவருடைய பார்வையை முன் வைத்தார். இதுவரை அருள் பேசி நான் கேட்டதில்லை. என்னதான் முகநூல் பழக்கம் என்றாலும்’ ஒரு சிறுகதைக் குறித்த கலந்துரையாடலில் அவர் பேசி நான் கேட்பது இதுதான் முதல் முறை.

    இச்சிறுகதை எழுதப்பட்ட விதமேகூட கவனிக்கத்தக்கதாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். திரைப்படக் காட்சியை அதனுடன் அவர் ஒப்பிட்டார். எதன் மீது கவனம் வைக்க வேண்டுமோ அதன் மீதே திரைப்பட காட்சி அமைக்கப்பட்டிருக்கும் அல்லவா? அதே போல இச்சிறுகதையும் வாசகன் எங்கே கவனம் வைக்க வேண்டுமோ அங்கேயே அதிக கவனத்தை எழுத்தாளரும் கொண்டுள்ளார் என்றார். இருவேறு மனிதர்களின் அணுகுமுறைகளை அவர் விளக்கினார். தான் விரும்பி செய்யும் செயலில் தனக்கு இருக்கும் மனத்திருப்தியும் அதன் மீது இன்னொருவருக்கு இருக்கு எதிர்ப்பார்ப்பையும் பேசினார்.

    அவரைத் தொடர்ந்து இளம் எழுத்தாளர் அகிபிரியா பேசினார். சிறுகதையை வாசித்தவுடன் அதனை எழுதிய எழுத்தாளர் மா.அரங்கநாதன் குறித்தும் அவர் தேடி வாசித்திருக்கின்றார்.  உண்மையில் இது பாராட்டத்தக்கது. ஒரு எழுத்தாளரின் ஒரு கதையோடு நின்றுவிடாமல், அவரின் அடுத்தடுத்த கதைகளையும் வாசிப்பது; குறைந்தபட்சம் அந்த எழுத்தாளர் குறித்து தெரிந்து கொள்வது அவசியமனா ஒன்று. நாயகன் வில்லனாக இருவேறு நிலைகளில் அவர் இச்சிறுகதையை அணுகியிருந்ததைப் பகிர்ந்தார்.

    அடுத்ததாக ஷங்கர் பேசினார். மா.அரங்கநாதனின் சிறுகதைகளில் ‘அட்டிகை’ சிறுகதையை முன்னமே அவர் வாசித்திருந்தார். ‘சித்தி’ சிறுகதையைப் பொருத்தவரை கதையில் தெளிவான பெயரோ, கதை நடக்கும் ஊர் பற்றிய தகவல்களோ இல்லாமல் இருப்பதைச் சொன்னவர் அதுவே பலமாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். ‘நீ ஜெயிச்சது நானே ஜெயிச்ச மாதிரி இருக்கு..’ என சொல்லி கேள்விப்பட்டிருக்கின்றோம். அந்த நிராசையின் பின்னால் இருக்கும் வலி இங்கு பலருக்கு தெரிவதில்லை என்றார்.

    எழுத்தாளர் உமாதேவி வீராசமியும் அவ்வாறே தன் பார்வையைப் பகிர்ந்து கொண்டார். பிடித்ததை பிரதிபலன் பாராமல் செய்வதற்கும் ஒரு செயலை பிரதிபலன் பார்த்து செய்வதற்கும் இடைபட்ட வித்தியாசங்களையும் ஏமாற்றங்களையும் விளக்கினார். கதையின் முடிவில் இருந்த வசனம் மீது அவருக்கு கேள்விகள் இருந்தன.

    அடுத்ததாய் ஆசிரியை இராஜலெட்சுமி பேசினார். சில முறை இணைய சிக்கலால் இணைய முடியாவிட்டாலும்’ ஒருவழியாக இணைந்து பேசிவிட்டார். கதையின் நாயகன்; அவன் எதில் முழு கவனம் வைத்திருக்கிறான் என்பதைப் பேசினார். குறிப்பாக வீட்டில் குத்துச்சண்டையைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகன் அங்கும் கூட வேறு எதையோ கவனித்து பயந்ததைப் பேசினார்.




   அவர்களை அடுத்து இச்சந்திப்பில் புதியவராக இணைந்திருந்த டரிஷ்ன் பேசினார். வெற்றி தோல்விகளுக்காக ஏற்படும் சிக்கல்களைக் கூறினார். வெற்றியை மட்டும் நோக்கமாக வைத்து பயிற்சிகள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளையும் வெற்றி லாபகரமாக மாற்றப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

    அவர்களைத் தொடர்ந்து கவிஞர் செல்வம் பேசலானார். குழுவில் உள்ளவர்களின் மாறுபட்ட பார்வையை அவர் சிலாகித்தார். அவருக்கு இக்கதையின் மூலமே கூட வேறொன்றாக தெரிந்திருக்கிறது. நாங்கள் நாயகனாக நினைத்தவ கதாப்பாத்திரத்தை அவர் பெண்ணாகவும் பார்க்கலாமே என்றார். அதோடு இந்த சிறுகதைக்கு வைத்த தலைப்பில் இருந்தும் சில உதரணங்களைக் கூறி மா.அரங்கநாதன் வேறு ஏதோ ஒன்றை சொல்ல வருவதாகவும் யூகித்தார்.

    ஒவ்வொருவரின் கருத்தும் பார்வையும் அவரவர் வரையில் சரிதான். ஆனால் அதனையொட்டிய உரையாடல் மட்டும் நம் பார்வையை விசாலமாக்கும். அதற்காகவே நாம் உரையாடவுள்ளது.

    மா.அரங்கநாதனின் சிறுகதை எனக்கு பிடித்ததற்கு காரணம்; அது நான் உள்ளுக்குள் தேடிக்கொண்டிருந்ததற்கு பதிலாக அமைந்துவிட்டதுதான். இப்படியும் இருக்கலாம்தான் சிக்கல் இல்லை என என்னை நம்ப வைத்ததுதான்.

    இதனை வெறும் சிறுகதைதானே என என்னால் கடந்துவிட முடியவில்லை. யோசிக்கையில் இங்கு எது வெற்றி எது தோல்வி என குழப்பம் வருகின்றது. நாம் விரும்பி செய்யும் செயல் நமக்கு பேரும் புகழும் கொடுக்கத்தான் வேண்டுமா? எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமலேயே நம்மா நம் திருப்திக்காக ஒன்றை செய்ய முடியாதா என்ன?

    நான் ஒரு செயலைச் செய்கிறேன். காரணம் நான் அந்தச் செயலைச் செய்யவேண்டும் என ஆசைப்படுவதுதான் என இருப்பதில் என்ன தவறு இருந்துவிட முடியும். இந்த உலகம் அப்படியா யாரையும் செய்ய விடுவதில்லை. எல்லாவற்றுக்கு பின்னும் வெற்றி தோல்விகளை சுமத்துகின்றது. போதாக்குறைக்கு “இதனால எவ்வளோ சம்பாதிச்ச..?” என்கிற பொருளாதார தேவைகளையும் காட்டி நம்மை பயமுறுத்துகின்றது.

    செய்வதற்கு ஒரு வேலை இருக்கிறது.செய்கிறோம். பார்த்துக்கொள்ள ஒரு குடும்பம் இருக்கின்றது. பார்த்துக்கொள்கிறோம். பொருளாதார தேவைகள் இருக்கின்றன. அதனைச் சமாளிக்கின்றோம். இதற்கிடையில் நமக்கு பிடித்த ஒன்றை நாம் நேசிக்கும் ஒன்றை நம் திருப்திக்காக அதனை செய்ய வேண்டும் என்கிற பிரியத்தின் பொருட்டு அதனை செய்தால் என்ன அவ்வளவு குற்றமா?

இப்படி இருப்பவர்களை; வேண்டுமானால் பிழைக்கத்தெரியாதவர்கள் என சொல்லிக்கொள்ளுங்கள்; ஆனால் எங்களை வாழவே வக்கில்லாதவன் என சொல்லாதீர்கள்.

 

(ஒவ்வொரு திங்களும் இரவு மணி 8முதல் 9 வரை ‘சிறகுகளில் கதை  நேரம்’ சிறுகதைக் கலந்துரையாடல் இடம்பெறும். இஃது இணைய கலந்துரையாடலாக இடம்பெறுகின்றது விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம். வாசிப்போம்… நேசிப்போம்… வளர்வோம்…)

 

 

டிசம்பர் 07, 2023

சிறகுகளின் கதை நேரம் 1 - தி.ஜானகிராமனின் முள்முடி

 




டிசம்பரில் (2023) மீண்டும் சிறுகதைக் கலந்துரையாடலை தொடங்கினோம் . இம்முறை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு மணி 8 முதல் 9 வரை என திட்டமிட்டோம் . இணைய சந்திப்பு என்பதால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளலாம் என்பது எல்லோருக்கும் வசதி . அவ்வப்போது நேரடியாக சந்தித்து சிறுகதைகளைப் பற்றி உரையாடவும் செய்வோம் .

முதல் கலந்துரையாடலுக்கு தி.ஜானகிராமனின் முள்முடி சிறுகதையைத் தேர்வு செய்தோம். சில நாட்களுக்கு முன்னமே சிறுகதையினை ஆர்வம் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். நிச்சயம் வாசித்துவிட்டு கலந்துரையாடலுக்கு வரவேண்டும் என விண்ணப்பமும் கொடுத்தோம்.

சில காரணங்களால் இம்முறை வர இயலாது என சிலர் கூறினார்கள். இன்னும் சிலர் அடுத்த வாரத்தில் இருந்து வருகின்றோம் என்றார்கள். சிலர் உங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இன்னொருவரின் நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுக்கப்பட்டுவிடுவோம் எனவும் பயந்தார்கள். அவர்கள் நன்றியோடு இருக்க விரும்புபவர்கள்; இருக்கட்டும் ஆனால் அவர்களால் யார் பயனடைகிறார்கள் என அவர்கள்தான் யோசிக்க வேண்டும். சிலர் கதையை வாசிக்க நேரமில்லை ஆனால் கலந்துரையாடலுக்கு வருவோம் என்றார்கள்; நான் வேண்டாம் என்றுவிட்டேன். முடிந்தவரை கதையை வாசித்துவிட்டு சிறு கருத்தையாவது பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றேன்.

    தொடக்க கலந்துரையாடலுக்கு நான்கு பேர் கலந்து கொண்டு முள்முடியைக் குறித்து பேசினார்கள்.




    வழக்கமாய் ஒவ்வொரு இலக்கிய நிகழ்ச்சிக்கும் ஆர்வமாய் கலந்து கொள்ளும் எழுத்தாளர் காந்தி முருகன், நாங்கள் வழிநடத்தும் குறுங்கதை எழுதும் வகுப்பிலிருந்து புதிய எழுத்தாளர் அகிபிரியா, எனக்கே கூட புதிய அறிமுகமாய் தி.ஜாவின் பெயரைக் கேட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதியவர் சங்கர். நான்காவதாக ஒரு சிலிப்பிங்க் பாட்னர் வந்திருந்தார். அவர் யார் என்பது இப்போதைக்கு வேண்டாம்.

    முள்முடி தனக்கு ஏற்படுத்திய குழப்பத்தை எந்த ஒரு கூச்சமும் இன்றி பகிர்ந்து கொண்டார் அகிபிரியா. இப்படியானவர்களின் ஆரவம் எனக்கு எப்பவும் பிடிக்கும். தனக்கு எல்லாம் புரிந்த மாதிரி வெளியில் காட்டிக்கொள்ளாமல். எனக்கு இவ்வளவுதான் புரிந்தது; ஆனால் சில குழப்பங்கள் உள்ளன என தன் குழப்பத்தை பகிர்ந்தார்.

எழுத்தாளர் காந்தி முருகன் அவருக்கே உரிய பாணியில் முள்முடியைக் குறித்து பேசினார். தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வரும் காந்தி முருகனின் பார்வையும் பங்கேற்பாளர்களுக்கு பயனாக அமைந்தது.

    இக்கலந்துரையாடலில் எனக்கு மகிழ்ச்சியளித்த ஒன்று, சங்கர் என்னும் மாணவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தற்போது தி.ஜாவின் கதைகளை வாசித்து வருவதாகக் கூறினார். முள்முடியுடன் வன்முறை குறித்த பார்வையையும் பகிர்ந்து கொண்டார். 'அம்மா வந்தாள்' நாவலைக் குறித்து ஒருசில வார்த்தைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். வாசிப்பதில் ஆர்வம் உள்ளதோடு தொடர்ந்து வாசித்துவரும் இளம் தலைமுறையினரிடம் உரையாடுவதும் இரு தரப்பிற்கும் பயனாக அமையும் என நம்புகின்றவன் நான்.

    முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் பாலமா இலக்கியம் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். அவ்வழியே நாம் ஓர் உரையாடலை நடத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எங்களின் இந்த 'சிறகுகளின் கதை நேரம்' சிறுகதைக் கலந்துரையாடல் அதற்கு உதவும்.

    தனிப்பட்ட முறையில் முள்முடி எனக்கு ரொம்பவும் நெருக்கமான சிறுகதை. அச்சிறுகதையை வாசித்த பின் சில நாட்களாக பல சம்பவங்கள் என் மனதில் நிழலாடின. அந்தச் சிறுகதையின் வடிவம் கதாப்பாத்திரங்கள் கதைக்கரு என எல்லாமே எனக்கு முக்கியமாகப்பட்டது. எப்போதும் பேசவேண்டிய ஒரு கதைக்கருவாக அச்சிறுகதை அமைந்திருந்தது. என்னதான் நாம் நல்லவர்களாக இருந்து வந்தாலும் இருக்க பழகினாலும் ஏதோ ஒரு வகையில் நம்மால்; நம்மை அறியாமலேயே ஒருவர் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாதோ என்னவோ. ஆனால் அதற்கான குற்றவுணர்ச்சியை நாம் சுமக்க வேண்டுமா வேண்டாமா என்பதுதான் அவரவர் தெளிவு.

முள்முடி சிறுகதையை வாசித்தப்பின் எனக்கு தெரிந்த சிலரிடம் கதையை அனுப்பி வாசிக்க சொல்லியிருந்தேன். ஒவ்வொருவரும் அவர்கள் வாசித்த கதை குறித்து பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் ஒரு நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுகதை குறித்து உரையாட ஆரம்பித்தோம்.

தி.ஜாவின் முள்முடி முக்கியமான கதை எனதான் அவருக்கு சொல்லியிருந்தேன். அதில் அவருக்கு மாற்று கருத்து இருந்தது. அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது எனறார். நான் என் கருத்திற்கு வலு சேர்க்க மேலும் சிலவற்றை பகிர்ந்து கொண்டேன். நண்பரும் விடுவதாகச் சொன்னார். சரி, இந்தக் கதை திஜாவின் முக்கியமான கதையாக இல்லையென்றால் எது அவரின் முக்கியமான கதை என கேட்டேன். அப்போது அவர் சொன்னதுதான் சுவாரஷ்யம். அவர் இதுவரை தி.ஜானகிராமனின் எந்தப் படைப்பையும் வாசிக்கவில்லை. ஒருவேளை தி.ஜாவின் மற்ற கதைகளை வாசித்து அதிலிருந்து இது முக்கியமான கதை; இதைவிட அது முக்கியமான கதை என சொல்லியிருந்தால் கூட எங்கள் உரையாடல் தொடர்ந்திருக்கும். ஆனால் வாசித்த ஒரே கதையை எதை வைத்து ஒப்பிடுகின்றார் என தெரியவில்லை. அதோடு எங்கள் உரையாடலை வேறு பக்கம் திருப்பி கொண்டேன்.

இப்படியாக பலரை சந்திக்க முடிகின்றது. வாசிக்காமலேயே தன்னை சிறந்த வாசகர்களாய் நினைத்து கொண்டு மேடைகளில் பேசுகிறார்கள். இளம் படைப்பாளிகளுக்கு அறிவுரைகள் சொல்கிறார்கள். அதையெல்லாம் மாற்ற அவர்களும் முன்வர வேண்டும். அவ்வளவே.

நிறைவாக;

‘சிறுகுகளின்  கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் எங்களுக்கு திருப்தியைக் கொடுத்தது. அடுத்த திங்கள் கலந்துரையாடலில் மா.அரங்கநாதனின் ‘சித்தி’ சிறுகதையைக் குறித்து பேசவுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு கதையினை அனுப்பி வைக்கின்றோம். நிகழ்ச்சியன்று உங்களுக்கு கூகுள் இணைப்பையும் அனுப்பி வைக்கின்றோம்.

வாசிப்போம்… நேசிப்போம்… வளர்வோம்…\

அன்புடன் தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்