எஸ்.ராவுடன் சந்திப்பு - 2
இவ்வாண்டு செப்டம்பரிலும் அக்டோபரிலும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மலேசியாவில் சில இடங்களில் உரை நிகழ்த்தினார். அதில் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றிருந்தேன். அதிலொரு நிகழ்ச்சியைக் குறித்து முன்னமே எனது வலைப்பூவில் எழுதியிருந்தேன். இரண்டாவது நிகழ்ச்சி குறித்த அனுபவத்தை இதில் எழுதுகிறேன்.
இந்த இரண்டாவது நிகழ்ச்சி மலாக்கா தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில்; மலாக்கா பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களின் சங்கத்தின் ஆதரவுடனும் மலாக்கா தம்ழர் சங்க கட்டிடத்தில் நடந்தது. ஆசிரியை மணிமேகலை மூலம் இந்நிகழ்ச்சி குறித்து அறிந்து கொண்டேன். அதோடு அந்நிகழ்ச்சியில் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில் இருந்து சில புத்தகங்களையும் விற்பனைக்கு கொண்டுவர அனுமதி கேட்டிருந்தேன். அவரும் அதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்தார். இவ்வேளையில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்கும் ‘இலக்கிய இரசனையும் அழகியல் கூறுகளும்’ என்ற தலைப்பில் எஸ்.ரா பேசினார். கூலிம் நிகழ்ச்சியில் பேசியதும் இந்த நிகழ்ச்சியில் பேசியதும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமலும் அதே சமயம் இரண்டும் இலக்கியத்தை நோக்கியதாகவும் இருந்தது.
இந்நிகழ்ச்ழியில் எஸ்.ராவின் உரை அதிகமே பசித்த மனிதர்களின் கதையையே சுற்றியிருந்தது.
புதுமைப்பித்தனின் இருந்து அவர் உரையைத் தொடங்கினார். குறிப்பாக புதுமைப்பித்தனுக்கு மலேசியாவில் சிறப்பு மலர் வெளியிட்டதையும் அதன் பின்னணியைல் குறித்தும் பேசியது எங்களை நிமிர்ந்து உட்கார வைத்தது. அந்த புதுமைப்பித்தன் மலர் இணையத்தில் இலவசமாக கிடைப்பதாகவும் சொன்னார். நான் தேடினேன் கிடைக்கவில்லை.
நண்பர்கள் யாருக்கும் அந்த இதழ் கிடைத்தால் பகிருங்கள். அன்று புதுமைப்பித்தனுக்கு முதன் முறையாக சிறப்பு மலர் வெளியிட்ட மலேசிய வாசகர்கள்/ எழுத்தாளர்களுக்கும் இன்று புதுமைப்பித்தன் என்கிற பெயரையே அறியாமல் தங்களை இலக்கியவாதிகளாக முன்னிலைப்படுத்துகின்றவர்களுக்குமான வித்தியாசங்களை இன்றைய வாசகர்களும் எழுத்தாளர்களும் தெரிந்து கொள்ளட்டும்.
புதுமைப்பித்தன் மகளிடமே இல்லாத புகைப்படத்தை இந்த மலரில் இருந்து எடுத்துதான் அவருக்கு நினைவுப்பரிசாக கொடுத்ததையும் எஸ்.ரா கூறினார். அன்று அந்த மலர் வெளிவர காரணமாக இருந்த அனைவரும் நம் நன்றிக்குரியவர்கள் என்பதை மனதில் நினைத்து கொண்டேன்.
அதோடு புதுமைப்பித்தனின் கடைசி காலத்தின் நோய்மையையும் அவர் எதிர்கொண்ட சிக்கல்களையும் பேசி அங்கிருந்து பொய்க்குதிரை என்னும் புதுமைப்பித்தனின் சிறுகதைக்குள் நுழைந்தார். அவ்வப்போது புதுமைப்பித்தனின் சிறுகதைகளை மீள்வாசிப்பு செய்துவருகிறேன். அந்த வகையில் சமீபத்தில் இச்சிறுகதையை நான் வாசித்திருந்தேன். நான் வாசித்தபோது இக்கதையில் இன்றைய மனிதனை வைத்தும் பார்த்தேன்; ரொம்பவும் பொருத்தமாகதான் இருந்தது.
பொய்க்குதிரை சிறுகதை எங்கள் எல்லோருக்கும் எஸ்.ரா சொல்லிக்கொண்டிருக்கும் போது நாங்கள் அந்தக் கதைக்குள் நுழைந்துவிட்டோம். கதையின் முடிவில் தன் கணவனுக்கு சோறு போடும் போது அதில் மனைவியின் கண்ணீர்த்துளியும் சிந்தியை, அவர் பேசும்போது அரங்கமே அமைதியாய் இருந்தது. அதனை வெறும் கண்ணீ ராக கடந்து செல்ல விடாமல் அதன் பின்னணியிலும் பலவற்றை பேசினார்.
பின்னர் அவரின் உரை பசியின் பக்கம் வந்தது. மணிமேகலை அட்சயப்பாத்திரம் குறித்து பேசி அங்கிருந்து பஷீரின் ‘பிறந்தநாள் சாப்பாடு’ வரை உரையைக் கொண்டு சென்றார்.
ஹிட்லரை வணங்காத மனிதனைப் பற்றி பேசினார். அது ரொம்பவும் சுவாரஷ்யமாக இருந்தது. ஹிட்லரை வணங்காத அந்த மனிதன் எதிர்க்கொண்ட சிக்கலையும் ஒருபோதும் உண்மைக்கு புறம்பாக இருக்க விரும்பாத அந்த மனிதனின் மன உறுதியையும் பேசி; சாமான்ய மனிதன் தான் பிடித்து கொண்டிருக்கும் உண்மையுன் மூலமாக உலகம் அறியும் இடத்திற்கு சென்றதைக் கூறி; இன்றும் அந்த மனிதனின் நினைவிடத்திற்கு மக்கள் வந்து போவதைச் சொன்னார்.
கேள்வி நேரம் வந்தது; வழக்கம் போல இலக்கியத்திற்கு அப்பாலிருந்து தமிழ்ப்படங்களுக்கு ஏன் தமிழில் பெயர் வைப்பதில்லை எனத்தொடங்கி தமிழர் யார் திராவிடர் யார் என நுழைந்து இலக்கிய கேள்விகள் வருவதற்கு முன்பாக நேரம் முடிந்துவிட்டது.
மலாக்கா தமிழர் சங்கத்தில் நூலகமும் வைத்திருந்தார்கள். அதற்கு இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது நூலகம் என்றும் பெயரிட்டிருந்தார்கள். வழக்கம் போல அந்த நூலகத்திற்கும் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை சார்பாக நான் எழுதிய புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்தேன்.
நிறைவாக; இன்றைய நிகழ்ச்சியில் எஸ்.ரா சொன்னதை ஒட்டுமொத்தமாக ஒரு வாக்கியமாக சுருக்கி நான் இவ்வாறு புரிந்து கொள்கிறேன். அது ‘சொற்களை நம்புங்கள்’.
நான் அதைத்தான் முழுமையாக நம்புகிறேன். அதன் பொருட்டுதான் வாசிக்கிறேன் எழுதுகிறேன்.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்
0 comments:
கருத்துரையிடுக