பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

குறுங்கதை2022 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுங்கதை2022 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நவம்பர் 15, 2022

- கடமை கண்ணியம் சோறுபோடு -

"சார் உங்க பத்திரிகைலதாங்க... எல்லாத்தையும் புரட்சிகரமா போடறீங்க..."

"எல்லாம் உங்களுக்காகதானே..."

"எங்க பிரச்சனை நடந்தாலும் உங்க பத்திரிகைக்காரங்கதான் முதல்ல போய் நிக்கறாங்க....!"

"அதான் எங்களோட கடமை கண்ணியம் கட்டுப்பாடு..."

"சந்தோஷம் சார்.. அப்படியே உங்க பத்திரிகைல வேலை செய்றவங்களுக்கும் மாதம் தவறாம சம்பளத்தை கொடுத்திட்டா... இன்னும் சந்தோஷம் சார்..."

"என்ன சொல்றிங்க நீங்க.... தமிழுக்காக; தமிழர்களுக்காகதானே செய்றாங்க சம்பளமெல்லாம் முக்கியமா என்ன..?"

"சரியா சொன்னிங்க சார்... ஆனா... தமிழுக்காக செய்தாலும்; தமிழர்களுக்காக செய்தாலும்.... அவங்களும் சாப்பிட சோறு வேணுமே.... அதுக்கு காசு வேணுமே.... உங்க சொத்தையா கேட்கறாங்க... அவங்களோட சம்பளத்தைத்தானே கேட்கறாங்க..."

"என்னதான் இருந்தாலும் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகதானே........."

அக்டோபர் 23, 2022

பூட்டப்படாதக் கதவுகள்

"இவருக்கு கொஞ்சம் கூட பயமே இல்ல.. காலம் எப்படி கெட்டுக்கிடக்கு வாசல் கதவை லாக் பண்ணாமலேயே வச்சிருக்காரு...." என புலம்பிக்கொண்டே நுழைந்தான். 

"அப்பா... அப்பா... எங்க இருக்கீங்க...?" என அதிகம் தேடாமல், வரவேற்பறை நாற்காலியில் அமர்கிறான். வாங்கி வந்திருந்த சமையல் பொருட்களை கீழே வைக்கிறான். 

எப்படியும் ஒரு மாதத்திற்கான சமையல் பொருட்கள் அதில் இருக்கும். அதற்குள் அவை முடிந்துவிட்டால் ஓரிரு நாட்கள் அப்பா எப்படியும் சமாளித்துக்கொள்வார். ஒத்தையாளுக்கு ஒரு டம்ளர் டீயும் ஒரு ரொட்டிபன்னும் போதாதா என தன்னைத் தானே கேட்டுக்கொள்வான். 

அதுவுமில்லாமல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இப்படி வருவதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

"குளிச்சிகிட்டு இருக்கேன் பா.. தோ வந்துடறேன்...." குளியல் அறையில் இருந்து சத்தம் வந்தது. குளித்துவிட்டார்.

"வா.. மாதவா.. வா எப்படி இருக்க பொண்டாட்டி புள்ளைங்க எப்படி இருக்காங்க..."

"நாங்க இருக்கிறது இருக்கட்டும் நீங்க ஏன் பா இப்படி இருக்கீங்க..?" என கோவப்பட்டான்.

"எப்படி இருக்கேன். நானும் நல்லாத்தான மாதவா இருக்கேன்..."

"நான் அதைக் கேட்கல.. ஏன் எப்பவும் வாசல் கதவை உள்ள லாக் பண்ணாமலேயே இருக்கீங்க... எத்தனை தடவை சொல்லிருக்கேன்..."

"ஓ அதுவா... நான் குளிக்கும் போது கூடதான் பாத்ரூம் கதவை உள்பக்கம் லாக் பண்ண மாட்டேன்.." என்றவாறு சிரிக்கலானார். வாய்விட்டு சிரித்ததில் வாயில் பல்லில்லாதது அப்படியே தெரிந்தது.

"செய்யறது எல்லாம் கிறுக்குத்தனமான வேல... இதுல சிரிப்பு வேற..."

அப்பா நிதானமானார், "என்னப்பா செய்றது. நானோ ஒண்டிகட்ட, நீயோ மாசத்துக்கு ஒரு தடவைதான் வந்து பாக்கற..... ஒருவேளை நான் வீட்டுலயோ பாத்ரூம்பலயோ விழுந்து செத்துட்டா.... யார் உனக்கு கதவை திறந்துவிடுவா... அதும் இந்த வாசல் கதவை அவ்வளவு சீக்கிரத்தில் ஒடைக்க முடியாதுன்னு நீதான சொன்ன. என்னைய பார்த்துக்கவே நீ ரொம்ப கஷ்டப்படற அதுல நான் செத்தும் உனக்கு சிரமத்தைக் கொடுக்கனுமா சொல்லு...."

"இல்லப்பா அது வந்து...." அவன் மனம் ஏதோ செய்தது.

"அதான் வந்துட்டயே... இதோட அடுத்த மாசம்தான வருவ...." அப்பா இப்போதும் நிதானமாகவே இருக்கிறார்.

அக்டோபர் 22, 2022

சொல்லுதற்சுலபம்

" ஏன் சார் கோவிலுக்கு வரமாட்டறீங்க...?"

"சாமியே இல்லைன்றவனைப் போய் கோவிலுக்கு கூப்டற...?"

"சாமி இல்ல... அதனால கோவிலுக்கு வர மாட்டேன்னு சொல்லத் தெரிஞ்ச உங்களுக்கு..."

"சொல்லத் தெரிஞ்ச எங்களுக்கு...?"

"சாதி இல்லைன்னு சொல்லி, எந்தச் சாதி நிகழ்ச்சிக்கும் போகாம இருக்க முடியலையே... போதாக்குறைக்கு சாதி சங்க தலைவர்களுக்கு உங்க சார்பா மாலையெல்லாம் போடறீங்க.."

"அது வந்து......"

"அது அப்பறம் வரட்டும்.. இதுவாச்சும் பரவால... தாழ்ந்த சாதியெல்லாம் இல்லைன்னு கோஷம் போடுற நீங்க... உயர்ந்த சாதிகளும் இல்லைன்னு கோஷம் போடலாம் தான....."

"சொல்றதுக்கு எல்லாம் ரொம்ப சுலபமாதான் இருக்கும்....."

"அதான் சார், சொல்றதுக்கு எல்லாமே சுலபமாதான் இருக்கும்...."

அக்டோபர் 21, 2022

- God No Where vs God Now Here -

"கடவுள் இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும் பார்க்கறியா?"

"அப்படியா...?"

"நிரூபிக்க முடியும்ன்றேன்... அப்படியான்னு கேட்கற..."

"சரி நிரூபி. பாக்கலாம்..."

அதற்காகவே காத்திருந்தவர், தன் முகநூலில் 'கடவுள் இல்லை' என எழுதி பகிர்ந்தார். பார்த்தவருக்கு ஒரே குழப்பம். இதில் கடவுள் இல்லையென்று எங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது. கேட்டேவிட்டார்.

"இதில் கடவுள் இல்லைன்னு எப்படி நிரூபிச்சிருக்க...?"

"ஹஹஹ... அதான் நிரூபனம். இப்ப கடவுள் இல்லைன்னு எழுதி போட்டிருக்கேனா...?"

"ஆமா... போட்டிருக்க.. நீ அதை மட்டும்தான போட்டிருக்க...."

"கடவுள் இல்லைன்னு நான் போட்டதை, கடவுள்னு ஒருத்தர் இருந்தார்னா வந்து நான் இருக்கேன்னு எழுதிருக்கனும் தான..... அப்ப எதுவும் வரல.. ஆக கடவுள்னு ஒருத்தர் இல்ல.. எப்படி நிரூபிச்சேன் பார்த்தியா...?? "

"அதைவிடு காலம்காலமா இந்த குழப்பம் இருந்துகிட்டுதான் இருக்கு... ஆனா லஞ்சம் ஊழல்  இல்லாத இந்த நாட்டுல நாம் இருக்கறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு..."

"என்னது லஞ்சம் ஊழல் இல்லையா.. என்ன கனவு காண்றயா....?"

"கனவா... நானும் நிரூபிக்கிறேன் பாக்கறியா...?"

"எப்படி..?"

"தோ... இப்படி..."
என்றவர் தன் முகநூலில்  ஊழலும் லஞ்சமும் இல்லை. இல்லவேயில்லைன்னு எழுதி பகிர்ந்தார். பார்த்தவரின் கண்கள் சுருங்கின,

"என்னதிது..?"

"ஆமா பின்ன... லஞ்சம் ஊழன்னு ஒன்னு இருந்திருந்தா நான் சொன்னதுக்கு வந்து 'உள்ளேன் ஐயா'னு எழுதிருக்கனும் தான...."

"இதுக்கு இது பதில் இல்லையே...?"

"அதுக்கும் அது பதிலில்லையே...?"

செப்டம்பர் 28, 2022

TikTok பேய்கள்

"அதான இப்ப டிரெண்டு...." என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் கோமதி. டிக்டாக்கில் வந்திருந்த சமீபத்திய விளையாட்டுதான் அது. 

கைப்பேசியில் வீடியோவைத் திறந்து வைக்க வேண்டும். அதனை தனி அறையில் வைத்து நடப்பதை பதிவு செய்ய வேண்டும். அந்த அறையில் நம் வீட்டு சின்ன பையனை வைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு கதவையும் சாத்திவிட்டு ஓடிவிட வேண்டும். அப்போது கைப்பேசி பின்னணியில் மெல்லிய இசையும் அதையடுத்து பயங்கரமான சிரிப்பு சத்தமும் தோன்றும். 

அப்பொழுது தனியாக அறையில் இருக்கும் பையன் பயந்துபோய் கைப்பேசியின் முகப்பில் வீடியோவைப் பார்க்க அதன் தானும் தனக்கு பின்னால் அந்தரத்தில் ஒரு பேய் பறப்பது போலவும் இருக்கும். பயந்து அலறும் பையனின் வீடியோவைப் பிறகு பார்க்கும் போதும் பொதுவில் பகிரும் போதும் பார்ப்பவர்களுக்கு ஒரே ஜாலியாக இருக்கும். 

எல்லாவற்றையும் நேர்த்தியாகத் தயார் செய்துவிட்டாள் கோமதி. தன் பையனை நாசுக்காக அறையில் இருக்க வைக்கிறார். அதற்கு முன்னமே கைப்பேசி தயார் நிலையில் இருக்கிறது. சரியான நேரம் பார்த்து விளக்கை அணைத்துவிட்டு கதவைச் சாத்திவிட்டார்.

உள்ளே பையன் அலறத்தொடங்கிவிட்டான். தனக்கு பின்னால் அந்தரத்தில் பேய் மிதந்துகொண்டிருந்தால் யார்தான் சும்மா இருப்பார்கள். சட்டென பையனின் சத்தம் கேட்கவில்லை. ஒரே அமைதி. பையனுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று பயந்துவிட்டாள் கோமதி. விளையாட்டு வினையாகிவிட்டதோ என்னவோ?

அவசரமாகக் கதவை திறக்கிறாள். உள்ளே பையனைக் காணவில்லை. அறைமுழுக்கத் தேடிவிட்டாள். என்ன செய்வது என தெரியவில்லை. ஏதோ நினைவுக்கு வந்தவர் ஓடிச்சென்று கைப்பேசியைப் பார்க்கலானார்.

கைப்பேசி ஸ்கீரினுக்குள்ளே , பையன் இருந்து செய்வதறியாது துடித்துக் கொண்டுக்கிறான்.

கைப்பேசிக்குள்ளே பையனும் கைப்பெசிக்கு வெளியே கோமதியும் அதிர்ச்சியில் நிற்கிறார்கள். இருவருக்கும் ஒன்றும் பிடிபடவில்லை....

செப்டம்பர் 26, 2022

- டுரியான் -

குமாருக்கு டுரியான் என்றாலே பயம். அதன் வாசத்தைக் கூட அவனால் அனுபவிக்க முடியாது. ஓடி ஒளிந்துக்கொள்வான். இந்த முப்பத்தைந்து வயதில் இப்படியா ஒருவன் இருப்பான் என தோன்றும். தோன்ற வேண்டும்தானே.

அவனது பயத்தைப் போக்குவதற்காக அவனுக்கே தெரியாமல் ஒரு ஏற்பாடு செய்தேன். வீட்டிற்கு அழைத்தேன். அறைக்குள் வசமே தெரியாத அளவிற்கு மறைத்து வைத்த டுரியானை அவன் முன் கொண்டு வந்தேன்

அவனால் எழுந்து ஓட முடியவில்லை. அந்தத் தனிமையில் டுரியானைக் கண்டதும் அழத்தொடங்கிவிட்டான். அது பயத்தினால் வந்த அழுகை அல்ல. இயலாமையால் வந்துகொண்டிருக்கும் அழுகை. கதறி அழ ஆரம்பித்துவிட்டான்.

மெல்ல மெல்ல அவனை ஆசுவாசப்படுத்தினேன். ஒரு நாள் அவனது அம்மா ஆசையாய் கேட்ட டுரியானை நாளைக்கு வாங்கித்தருவதாக சொல்லியிருக்கிறான். அந்த மறுநாள் அவனது அம்மாவிற்கு வரவேயில்லை.

அந்தக் குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடே டுரியான் மீது பயமாக மாறிவிட்டது. அதனை போக்குவதற்கு வழி தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தான். உடைந்து அழுதப்பின்னே மனபாரம் குறைந்து இயல்பை அவன் மனம் மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்கிறது.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

செப்டம்பர் 25, 2022

- புரட்சியாளர்களின் பரிசு -


அந்தப் பேரணியை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஏற்பாட்டாளர்களே எதிர்ப்பார்க்கவில்லை. வேறு யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார்கள். எப்போதோ யாரோ முயற்சித்தப் புரட்சியின் தீப்பொறி இன்று கொழுந்துவிட்டு எரிகிறது.

அதிபரின் அரசமாளிகை முழுக்க மக்கள் சூழ்ந்துவிட்டார்கள். தன் வாழ்நாளில் என்னவென்றே தெரியாத; தெரிந்து கொள்ள முடியாத ஏதேதோ பெயர் தெரியாதப் பொருட்களைப் பார்த்த மக்கள் கொஞ்ச நேரம் பதட்டமானார்கள். அடுத்த கணமே புரட்சியின் பக்கம் திரும்பிவிட்டார்கள். மக்களின் பின்னணியில் குறிப்பிட்ட சில புரட்சியாளர்கள் ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டே வந்தார்கள்.

அரசாங்கமே அலறிவிட்டது. அதிபரையும் அதிகாரிகளைக் காணவில்லை. இனி நாடு தாங்காது என புரட்சியாளர்கள் ஒரு சேர முடிவெடுத்தார்கள். பல ஆண்டுகளாக மக்களின் நலனை முன்னிருத்தி ஆளும் அரசாங்கத்திடம் சண்டையிட்ட எதிர்க்கட்சிக்கு நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தது. இனி அவர்கள் எதிர்ப்பார்த்த பல திட்டங்களை செயல்படுத்தி மக்களையும் நாட்டையும் முன்னேறறாலாம்.

புதிய அரசாங்கம். புதிய அதிகாரிகள். புதிய அதிபரின் நன்றியுரை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் இன்றைய எதிர்ப்பாராத ஆட்சி மாற்றத்திற்கும் மக்களின் எழுச்சிக்கும் காரணமாக இருந்த புரட்சியாளர்களை அடையாளம் கண்டு  நன்றியும் பாராட்டையும் சொன்னார்.

மறுநாள் அடையாளம் கண்ட எந்த புரட்சியாளர்களையும் காணவில்லை. புதிய அரசாங்கம் அவர்களைத் தேடவுமில்லை.....

செப்டம்பர் 24, 2022

- நிம்மதியா ஒரு பேய்ப்படம் -

எது நமக்கு பயத்தைக் கொடுக்கிறதோ அதுதான் நமக்கு பலத்தையும் கொடுக்கிறது. புரிகிறதா?. எனக்கு புரிய முப்பது வயது வரை வரவேண்டியதாய் இருந்தது. சின்ன வயசுலயே அங்க போகாத பேய் இருக்கு.. இங்க போகாத நாய் இருக்குன்னு பயங்காட்டி பயங்காட்டியே வளர்த்துட்டாங்க.

இந்த வயசுல நாய்க்கு கூட பயப்படலாம். ஆனா பேய்க்கு பயப்பட்டா ஊரே சிரிக்கும். ஊர் சிரிக்கிறது இருக்கட்டும் உள்ளுக்குள்ளே நானே சிரிச்சிக்குவேன். இந்த பயத்தை போக்கியே ஆகனும். எது பயமோ அதுவே பலம். தெளிவாக புரிந்தது.  பேய் பயம்தான் என்னோட பலம்.

எடுத்ததும் சுடுகாட்டுக்கு போய்ட்டு வந்தெல்லாம் பரிட்சை எழுத முடியாது. சின்னச்சின்னதாய்த் தான் பயத்தைப் போக்க முடியும். சின்ன வயசுல எத்தனைப் பேய்ப்படங்களைப் பார்த்து பயந்திருப்பேன். அது எல்லாத்தையும் ஒன்னொன்னா தனியா வீட்டுல உட்கார்ந்து பாக்கனும். இன்னிக்குத்தான் வீட்டில் யாருமில்ல. நான் மட்டும்தான் ரெண்டு நாளா தனியா இருக்கப்போறேன். அஞ்சாறு பேய்ப்பட விசிடிகளைக் கொண்டு வந்திருக்கேன். இன்னிக்கு விடிய விடிய கொஞ்சமும் பயமில்லாம எல்லா பேய்ப்படங்களையும் பாக்கனும்.

முதல் படம். காட்டுக்குள்ள இருக்கற வீட்டுக்கு எதுக்குத்தான் குரூப்பா போய்ட்டு பேய்ங்க கிட்ட சாகறாங்களோ. எனக்கு பயம் இலலையே.

இரண்டாவது படம். சர்ச் பாதரையே மிரட்டினாலும் கடைசியா எல்லா பேய்ங்களும் மன்னிப்பு கேட்டுட்டு ஓடித்தான் போகுதுங்க. எனக்கு பயம் இல்லையே.

மூணாவது படம். ஆத்தீ கிணத்துல இருந்த பேய், டீவிக்கு உள்ள இருந்துள்ள வருது. யார்தான் அந்த வீடியோவை பார்க்க சொல்றா. அதைப் பார்த்தாதான் பேய் வந்து கொல்லுதுல்ல...!

ஐயோ என்ன இது கரண்டு போச்சி. கடைசில என்ன ஆச்சினு தெரியலயே. விசிடி உள்ளயே மாட்டிக்குமே...

"ச்சே... ஒரு நல்லப் பேய்ப்படத்தை நிம்மதியாப் பார்க்க முடியிதா...!!!?"

ஆமா.. யாரோட குரலு இது?!?!!

செப்டம்பர் 22, 2022

யாருக்குத்தான் சபலமில்லை...?


அம்மா அப்படித்தான் சொன்னார். எனக்கு கோவம் வந்துவிட்டது. இதுவெல்லாம் ஒரு பேச்சா. காதலித்துதான் கல்யாணம் செய்துக்கொண்டோம். அதற்காக இப்படியா பேசுவது. யாருக்குத்தான் சபலமில்லையாம்!! புருஷன் போக்கு சரியில்லைன்னு சொன்னா பெத்த அம்மா புள்ளை கிட்டயே இப்படியா பேசுவாங்க?

ஆனாலும் என்னால் அம்மா மீது முழு கோவத்தையும் காட்ட முடியாது. அம்மா பாவம். உண்மையிலே அம்மா பாவம்தான். ஒரு கால் இல்லாத அப்பாவை வைத்துக் கொண்டு ரொம்பவும் சிரமப்பட்டுத்தான் எங்களை வளர்த்தார். அப்பா கம்பீரமாக நடந்து பார்த்த நினைவுகள் எனக்கு மங்கலாகத்தான் இருக்கிறது. எனக்குக்கூட அப்பாவை இப்படி பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. எத்துணை வருடங்களாக அம்மா பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஒருவேளை அப்பா அப்படி இருப்பதால்தான் அம்மாவிற்கு என் வலி புரியவில்லை என நினைக்கிறேன். நினைத்ததோடு சும்மா இருந்திருக்கலாம். முடியவில்லை. வார்த்தையை விட்டுவிட்டேன்.

யாருக்குத்தான் சபலமில்லையேன்னு கேட்கறியே மா...  எங்க அப்பா அப்படி இருந்திருந்தாதான் உனக்கு என்னோட வலி தெரியும்னு சொல்லிட்டேன்.

ஆச்சரியம். அம்மா கோவப்படவில்லை. எழுந்தார்.  நேராக என்னருகில் வந்தார். "யாருக்குத்தான் சபலமில்ல... ஆமா உங்க அப்பா  காலை யாரு உடைச்சான்னு என்னிக்காவது அவர்கிட்ட கேட்டுறிக்கியா நீ...." என்று கேட்டுவிட்டு பழையபடி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

மார்ச் 24, 2022

- விலை -

"ஒரு பத்து வருஷம் இருக்குமா?" எனதான் அந்த உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருவரின் காபியும் முடிந்துவிட்டது. சாப்பிட்டத் தட்டில் மட்டும் சிதறிய தின்பண்டங்கள் கிடந்தன. இனி அதை இவர்கள் சாப்பிடப்போவதில்லை.

"ஆமா இருக்கும்...." என்று ஆமோதித்தான் சுகுமாறன். அடுத்ததாக நண்பன் என்ன கேட்கப் போகிறான் என்று சுகுமாறனுக்கு தெரிந்தது. அதற்குள் கிளம்பிவிட வேண்டும். முயன்றான். முடியவில்லை.

"சரி என்ன சம்பளம் எடுக்கற எங்கதான் வேலை செய்யற... என்ன சட்டை இது... கைகடிகாரம் என்ன ப்ராண்டுன்னே தெரியல...."

"அது....."

"என்னோட வாட்ச் மட்டும் எட்டாயிரம் வெள்ளி.... மத்த விலையெல்லாம் சொன்னேனு வாசிக்கோ.. மயக்கமே போட்டுடுவ..." சொல்லிய நண்பன் மற்றதின் விலைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.
இனியும் முடியாது என்றபடியால் சுகுமாறன்,
"நல்லாருக்கு.... சரி பா.. உன்னை பார்த்ததில் சந்தோஷம்... நான் கிளம்பறேன்.."

"என்ன அவசரம்.. இரு.. டைம் இருக்கு... மெதுவா போகலாம்... " என்று அடுத்தச் சுற்றுக்கு என்ன சாப்பிடலாம் என மெனு புத்தகத்தைப் பார்க்கலானான்.

"ஏன் பா... எவ்வளவோ சம்பதிக்கற.. எவ்வளவோ விலைக்கு கடிகாரம் சட்டை சப்பாத்து எல்லாம் வாங்கியிருக்கயே... வீட்டுல உனக்காக சமைச்சி காத்திருக்க ஒருத்தர் கூட இல்லையா....?

நண்பனுக்கு பகீரென்றது,

"அது...."

"சரிப்பா நீ இங்கயே டின்னரையும் முடிச்சிட்டு கிளம்பு.. நான் இப்ப கிளம்பறேன்... வீட்டுக்கு போய் ஒன்னா உட்கார்ந்து சாப்டாதான் மனசுக்கு திருப்தி....."

சுகுமாறன் கிளம்பினான். நண்பனுக்கு பசி மறந்து போனது. பல விடயங்கள் நினைவிற்கு வரத்தொடங்கின....


மார்ச் 16, 2022

- துரோகி -

"யாராவது என்னைக் கொல்லத்தான் போகிறார்கள்...."

"அதற்காக...."

"நீயே என்னைக் கொன்றுவிடு...."

"முட்டாளா நீ...... வாயை மூடு..."

"முட்டாள் அல்ல... வீரன்..."

"அதிகம் பேசாதே... சுட்டுவிடுவேன்..."

" அதற்குத்தான் பேசுகிறேன்.. சுடு.. சுடு... என்னைச் சுட்டு கொன்றுவிடு...."

"நீ என் நண்பன்..... "

"யார் இல்லையென்றது...  அதனால்தான் உன் கையால் சாக விரும்புகிறேன்..."

"அது என்னால் முடியாது.... இந்த யுத்தம் முடியும் வரை நான் உன்னைப் பாதுகாத்துக் கொள்கிறேன்..."

" இப்போது நீதான் முட்டாளாகிவிட்டாய். யுத்தம் எப்போதும் முடியாது..."

"யுத்தத்தில் உன் நாடோ.. என் நாடோ இரண்டில் ஒன்று வென்றுதானே ஆக வேண்டும்.. அப்போது கூடவா யுத்தம் முடியாது...."

" டேய் நண்பா... யுத்தத்தில் இருதரப்பும் வெற்றி பெறாது... மூன்றாம் தரப்பு அதையப்படி விட்டுவிடாது...."

" மூன்றாம் தரப்பா...?"

" அது நமக்கு பிடிபடாது.... என்னை கொன்றுவிடு தயவு செய்து...."

" நீ என் நண்பன்.... "

"ச்சீ... நீயெல்லாம் ஒரு நண்பனா... உன் இடத்தில் நானிருந்தால் இன்னேரம் உன்னை என் துப்பாக்கியால் சுட்டிருப்பேன். என் கத்தியால் குத்தி கிழித்திருப்பேன். பூட்ஸ் காலால் உன் இடுப்பை உடைத்திருப்பேன். உன் கைகளைப் பின் பக்கமாக மடைக்கியிருப்பேன். உன் காலில் நரம்புகளை அறுத்திருப்பேன்..... இன்னும் இன்னும் எத்தனையோ செய்திருப்பேன்... ஆனால் நீ....."

" வேண்டாம் அப்படி பேசாதே..."

" யாரோ முகம் தெரியாத ஒருத்தன் என்னைக் கொல்வதைத்தான் நீ விரும்புகிறாயா... துரோகி........"

மார்ச் 14, 2022

- வந்த வேலை -

நான் முதலில் பயந்துவிட்டேன். எப்படி பயப்படாமல் இருக்க முடியும். இந்த இடத்தில் யார்தான் நிற்பார்கள். அதுவும் உச்சி நேர வெயிலில். "ஹையோ ரொம்ப பாவம்ங்க...' என மனைவிதான் சொன்னாள். புருஷனைத் தவிர மற்ற எல்லாமும் அவளுக்கு பாவம்தான்.

காரை அந்த வயதான அம்மாவின் அருகில் நிறுத்தினேன். கையில் துணிப்பையுடன் ஒரு குடை கூட இல்லாமல் போகும் வரும் வாகனங்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். விசாரித்ததில் உண்மையிலேயே பாவமாக இருந்தது. அதிகாலையில் மகன் இங்கு இறக்கிவிட்டிருக்கிறான். கொஞ்ச நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு போனவன் தான். வரவேயில்லை. அம்மாவிடம் கைப்பேசியோ அடையாள அட்டையோ எதும் இல்லை. எல்லாவற்றையும் மருமகள் வாங்கி பத்திரமாக வைத்துவிட்டாளாம்.

எனக்கும் மனைவிக்கும் புரிந்துவிட்டது. மகன் மனைவியின் பேச்சைக் கேட்டு அம்மாவை இங்கு இறக்கிவிட்டிருக்க வேண்டும். கொலை செய்வதற்கு ஈடான காரியம் என மனம் கலங்கியது. அம்மாவிடம் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. எங்கள் வீட்டிற்கு அழைத்தோம். மகிழ்ந்தார். ஆனால் ஒரு முறையாவது மகனையும் மருமகளையும் பார்க்க வேண்டுமே என்றார். ஆயிரம் இருந்தாலும் அம்மா இல்லையா.

வீட்டை விசாரித்தேன். ஏதேதோ இடம் சொல்லி ஒரு கடையைச் சொன்னார். அது முகநூல் பிரபலம் பெற்ற கடை என்பதால் தெரிந்தது. அங்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்து அம்மா வீட்டிற்கு வழி காட்டினார்.

வீட்டு வாசலில் கார் நின்றது. அம்மா ஏனோ கீழிறங்க தயங்கினார். அவரின் மனம் எங்களுக்கு புரிந்தது. நானும் மனைவியும் இறங்கினோம். மகனிடம் கொஞ்சம் பேசி அம்மாவை ஏதாவது ஆசிரமத்திலோ அல்லது எங்கள் வீட்டிலோ அழைத்துப்போக நினைத்தோம். அதற்கு அவரிடம் சம்மதம் வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத சட்டச்சிக்கலுக்கு ஆளாகிவிடுவோம்.

வீட்டுக்கதவைத் தட்டினேன். மகன்தான் வந்தார். விபரத்தைச் சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. முகம் பீதியடைந்தது. மூச்சு வாங்கியது. அவர் அம்மாவை அங்கு இறக்கிவிட்டது உண்மைதான் ஆனால், அது நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டனவாம். இப்போதுவரை அம்மா அங்கு எப்படி இருக்க முடிந்தது என குழம்பினார்.

அவர் ஏதோ உளறுவதாகப்பட்டது. அவரை அழைத்துக் கொண்டு நாங்கள் காருக்கு வந்தோம். அம்மா அங்கில்லை. காணவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம்.

திடீரென அவர் வீட்டில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீட்டில் இருந்து அவரது மனைவி ஏனோ அலறினாள்.  மகன் உள்ளே ஓடுகிறார்.

என் கையைப் பிடித்த என் மனைவி "அந்தம்மா வந்த வேலையை ஆரம்பிச்சிட்டாங்க வாங்க நாம கிளம்புவோம்" என்று இயல்பாகச் சொல்கிறாள்.


மார்ச் 09, 2022

- குழந்தையா அது...? -

குழந்தை ஒன்று வந்திருந்தது. குழந்தையா அது; அது ஒரு குரங்கு அப்படித்தான் நடந்து கொண்டது. ஐந்து வயதுதான். எனக்கு அவன் பையன். வீட்டிற்கு அவன் குழந்தை.

சரி குழந்தையாகவே வைத்துக்கொள்ளட்டும். இப்படியா வளர்ப்பார்கள். அது எதையாவது செய்துக்கொண்டே இருக்கிறது. ஓரிடத்தில் உட்கார மாட்டேன் என்கிறது. சாப்பிடும் போது கூட அதன் தொல்லை தாங்க முடியவில்லை.

நான் புத்தகம் வாசிக்கும் போது யாரும் இடைஞ்சல் செய்தால் எனக்கு ஒவ்வாது. என் புத்தகங்களில் யாரும் கைவைத்தால் எனக்கு ஆகாது. என் வாசிப்பு மேஜை நாற்காலியில் யாரும் உட்காரக் கூடாது. அனைத்தும் அது செய்தது. புத்தகத்துடன் அமரும் போதுதான் பக்கத்தில் அமர்ந்து ஏதேதோ கதைப்பேசியது. புத்தகங்களை எடுத்து மாற்றி மாற்றி அடுக்கி வைத்தது. நாற்காலியில் அமர்ந்து சுழன்று சுழன்று விளையாடியது. 

வீட்டின் அமைதியே போய்விட்டது. என்ன பிள்ளையை வளர்க்கிறார்கள். எப்படித்தான் சமாளிக்கிறார்கள். ஒன்றுமே புரியவில்லை. ஒரு வாரம் கூட என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நல்லவேளையாக ஆறாவது நாளே கிளம்புகிறது. 

போகும் போது கூட அதற்கு சேட்டைகள் குறைந்தபாடில்லை. சென்றுவிட்டது. இனி தொல்லை இல்லை. நிம்மதியாக இருக்கலாம். வீடு அமைதியாக இருக்கும்.

ஆனால், ஏதோ ஒன்றை அக்குழந்தை என்னிடம் விட்டு சென்றது. அது என்னவென்று புரியவில்லை. மீண்டும் அக்குழந்தை எப்போது வருமெனவும் தெரியவில்லை.

மார்ச் 08, 2022

- இயந்திர மனிதர்கள் -

இன்று யுத்தம் முடிந்ததாக அறிவித்தார்கள். யார் அறிவித்தார்கள், யாரிடம் அறிவித்தார்கள் என தெரியவில்லை. அன்று யுத்தகம் தொடங்கியது என அறிவித்தப்போதும் யார் அறிவித்தார்கள். யாரிடம் அறிவித்தார்கள் என தெரியவில்லைதான்.

அவ்வப்போது இப்படி புரளிகள் வந்து கொண்டிருக்கவே செய்கின்றன. ஆட்களைக் கொல்பவர்களுக்கு எது புரளி என நன்றாகவே தெரிந்திருக்கும். துப்பாக்கியின் தோட்டாக்கள் தீரும் அந்த நேரமும், அவர்கள் துப்பாக்கியில் புதியத் தோட்டாக்களை இணைக்கும் நேரமுமே வீணாகக்கூடாதென அதிவேகமாய் புதியத் தோட்டாக்களை இணைக்கும் பயற்சிகள் கொடுக்கப்பட்டவர்கள்.

தவறியும் கூட வெண்ணிறத்தில் எதுவும் தெரியக்கூடாது என கவனமாய் இருப்பவர்கள். உடனுக்குடன் யாரின் குருதியைக் கொண்டும், வெண்ணிறத்தை செந்நிறமாய் மாற்றிவிடுபவர்கள். 

இவர்கள் இயந்திரமாக இருப்பார்களோ என நாங்கள் சந்தேகிப்போம். அவர்கள் உண்டு, உறங்கி, சிரித்து , கண்கள் கலங்கி நாங்கள் பார்த்ததே இல்லை. யாரோ அழுத்திய விசையில் அவர்கள் சுட்டுக்கொண்டும் வருவதும் குண்டுகளை வீசிக்கொண்டும் வருவதையும்தான் நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அவர்களுக்கு தாகம் கூடவா எடுக்காது. உண்மையில் அவர்கள் எல்லாம் இயந்திரங்கள்தான் போல.

நாங்களும் அப்படி இயந்திரமாக வேண்டும். எங்களையும் யாராவது விசை கொண்டு இயக்குங்கள். எங்களுக்கு பசிக்கிறது. தூக்கம் வருகிறது. கண்கள் அழுது வடிகிறது. குருதி கொட்டுகிறது. முடியவில்லை.  குறைந்தபட்சம் குடிக்கக் கொஞ்சமாவது தண்ணீர் கொடுங்கள். 

கண்ணீர் குடித்து பசி போக்கு என்ற சாபத்தையாவது கொடுங்களேன்....

மார்ச் 07, 2022

- இரத்தக்கறை -

பல தடவைகள். பல முயற்சிகள். ஒன்றும் சரிவரவில்லை. பலரின் ஆலோசனைகள். அறிவியல் விளக்கங்கள். எதுவும் உதவவில்லை. நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. தயார்தான். ஆனால் திருப்தி இருக்கவில்லை.

கையில் கிடைத்த எத்தனையோ வாசனைத் திரவியங்களைக் கையில் ஊற்றினாலும் வேலைக்கு ஆகவில்லை. அடுத்த ஐந்து நிமிடத்தில் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடுகிறது.

உயிர் காக்கும் பாதுகாவலர்களுடன் நறுமணம் காக்கும் சிலரும் வாசனையைத் தெளித்துக்கொண்டே வருகிறார்கள். சரியாக ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவேளையில் அவர்கள் வாசனையை அவருடலில் எதார்த்தமாகவும் யாருக்கும் தெரியாத கவனத்துடன் தெளிக்கிறார்கள்.

இன்று இந்நாட்டின் முக்கியத்தினம். அதனை அவர் மாற்ற விரும்பவில்லை. கொடியேற்றினார். அனைவரும் வாழ்த்துப்பாடல்களைப் பாடுகிறார்கள். ஆள் உயர கூண்டு கொண்டுவரப்பட்டது.

கூண்டின் உள்ளே நூறு புறாக்கள் இருக்கலாம். அனைத்தும் வெண் புறாக்கள். இன்றொருநாள் மட்டும் அவை சமாதானப்புறாக்கள். அவர் அந்தக் கூண்டை திறக்கவும், சமாதானப்புறாக்கள் சுதந்திரமாய் பறக்கலாயின.

கூண்டிலிருந்த கடைசி புறா பறக்கவும், அவர் கைகளில் மீண்டும் துற்நாற்றம் வீச ஆரம்பித்தது. ஐந்து நிமிட இடைவெளி இன்றி தொடர்ந்து வீசத்தொடங்கியது.

இம்முறை அவரது கைகளில் மட்டுமின்றி அவரது பிள்ளைகள், மனைவிகள், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் என ஒவ்வொருவரின் கைகளிலும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது.

போர்க்குற்றக்கரங்களை எதைக் கொண்டும் கழுவ முடியாது. அது யாரையும் தப்பிக்கவும் விடாது......


மார்ச் 06, 2022

- பாப்பா -

ஒரு வாரமாக வெளியே செல்ல முடியாதச் சூழல். யார் தலை தெரிந்தாலும் துப்பாக்கி சூட்டுக்கு இரையாகிடுவார்கள். பல கட்டிடங்களின் சுவர்கள் துப்பாக்கி சூட்டில்  உடைந்தும் சிதைந்தும் போயிருக்கிறது. வலுவற்றச் சுவர்களைத் தாண்டியும் மறைந்திருந்தவர்களை குண்டுகள் துளைத்துள்ளன.

வீட்டில் இருந்த அவசரகால உணவுகள் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஏதாவது கிடைத்தால் அதை சாப்பிடுவதற்கு ஏற்றதாய் அம்மாவால் மட்டுமே செய்ய முடியும். இத்தனை நாட்களாய் அப்பா இல்லாமல் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டவர்தானே அவர். ஏழு வயது மகன் இரண்டு வயது மகள். காணாமல் போன கணவன். சிறிய வட்டத்தையும் யுத்தம் சிதறடித்துவிடுகிறது.

நேற்றையத் துப்பாக்கி சூட்டில் பயந்து பதுங்கி உறங்கிப்போனவர்கள்தான். கண்களைத் திறக்கிறார்கள். பசி திறக்க வைக்கிறது.

"அம்மா பசிக்குது.... ஏதாச்சும் இருந்தா கொடுங்கம்மா... நேத்தும் ஒன்னும் சாப்டல.. தங்கச்சி பாப்பா இன்னும் தூங்குதுமா... அம்மா.. தங்கச்சி பாப்பா அசைய மாட்டுது... மா... பாப்பா அசையல.. பாப்பா....பாப்பா....பாப்பா.. அம்மா...இங்க வாங்க மா... பாப்பா...."

நேற்றையத் துப்பாக்கி சூட்டில், ஜன்னலைத் தாண்டி வந்த தோட்டா அம்மாவின் இதயத்தில் தஞ்சம் புகுந்துவிட்டதை யாராவது அந்தப் பையனிடம் சொல்லுங்கள். என்னால் சொல்ல முடியாது. சொல்லவே முடியாது.....

மார்ச் 05, 2022

- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -

"யுத்தம் முடிந்தது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.. பயப்படவேண்டாம்.... நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக வந்துள்ளோம்"

ஒலிபெருக்கியில் சத்தமிட்டபடி இராணுவ வாகனங்கள் குடியிருப்பில் நுழைந்தன. எஞ்சி இருக்கும் கட்டிட இடிபாடுகளில் ஒழிந்திருக்கும் சிலருக்கு இன்னமும் பயம் இருக்கவே செய்கிறது. யாரை நம்புவோம். யாரால் சாவோம் என்பதே மிகப்பெரியக் கேள்விக்குறியானது.

தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டிலும் கையெறி குண்டு வெடிப்பிலும் சிலர் மட்டுமே உயிர் தப்பினர். அனைவரும் பொதுமக்கள். கையில் துப்பாக்கியை ஒரு முறை கூட தொட்டுப்பார்க்காதவர்கள்.

யாருக்கு யாருடன் யுத்தம். எங்கள் நாட்டிற்கு அவர்கள் ஏன் வருகிறார்கள். நாங்கள் நன்றாகத்தானே வாழ்கிறோம். ஏன் எங்களைக் காப்பாற்றுவதாக  சொல்கிறார்கள் என இப்போதுவரை ஒருவருக்கும் புரியவில்லை.

இனியும் மறைந்திருக்க வேண்டாம். நமக்காக அவர்கள் வந்துவிட்டார்கள். பயமின்றி ஒவ்வொருவரும் வெளியேறினார்கள். ஆனாலும் அவர்கள் தத்தம் கைகளைத் தலைக்கு மேல் தூக்கியபடியேதான் வெளியில் வந்துகொண்டிருக்கிறார்கள்.

இராணுவத்தினர் அவர்களைப் பெரியவர் முதல் சிறுவர்கள் என  வரிசையில் நிறுத்தினார்கள். கைகளைக் கீழிறக்கச் சொல்லிவிட்டார்கள். பெருமூச்சு விட்டபடி அனைவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.

உணவுக்கு தயாரானவர்களாய் ஒவ்வொருவரும் காத்திருக்க, அவர்களை நோக்கி அது திரும்பியது. அதன் மீது அமர்ந்திருந்தவனின் பிடி இறுகியது. இரு கட்டை விரல்களும் விசையை அழுத்த அதிநவீன துப்பாக்கியின் தோட்டாக்கள் ஒவ்வொருவரையும் பல முறை துளைத்து மறுபக்கம் வெளியேறி சுவரையும் துளைத்தன.

வரிசையில் நின்றிருந்த சிறுவர்களும் விதிவிலக்கல்ல. உலகின் எந்த யுத்தத்திலும் சிறுவர்களும் குழந்தைகளும்  எதிரிகளாகவேதானே பார்க்கப்படுகிறார்கள்....


மார்ச் 04, 2022

- தப்பித்தலும் காப்பாற்றுதலும் -

இப்போதுதான் சத்தம் அடங்கியது. காலையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள், குண்டு வெடிப்பு சத்தங்கள், விமானங்களின் சத்தமென எங்களை பீதியாக்கிக் கொண்டிருந்தன. இது யுத்தகால ஓய்வு நேரம் போல, பெரியதொரு வெடி சத்தத்தைத் தொடர்ந்து மயான அமைதி நிலவிக்கொண்டிருக்கிறது.

யுத்தத்தின் சத்தத்தைவிட, அது தரும் திடீர் அமைதி அபாயமானது. உயிர் பயத்தை முழுமையாகக் காட்டக்கூடியது. ஓடும் திசை தெரியாமல் திக்கு முக்காட செய்வது. யாரெல்லாம் செத்துவிட்டார்கள் என காட்டிக்கொடுப்பது.

வெடிக்கும் சத்தத்தைவிடவும் அடுத்து எங்கே வெடிக்கும் என்கிற முன்னமைதி நிச்சயம் அபாயமானதுதான்.

என்னால் காப்பாற்ற முடிந்த மனைவியையும் பிள்ளையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டேன்.  வெளியில் எங்கும் செல்ல முடியாது. வாசலில் குவிந்து கிடக்கும் உறவினர்களின் சடலங்களை நாங்கள் மீண்டும் பார்க்க முடியாது.

பக்கத்துவிட்டு பையன் ஒருவன். அடைக்கலம் தேடி வந்தான். அவனைக் காணவில்லை. அவன் வீட்டார் வந்து கேட்டால் என்ன பதில் சொல்லட்டும். சொல்ல முடியும்.

என் மகளைக் காப்பாற்ற முடிந்த என்னால் ஏன் அந்தப் பையனைக் காப்பாற்ற முடியவில்லை. என் மனைவியைப் பாதுகாத்த என்னால் ஏன் உறவினர்களை பத்திரமாக இடம் மாற்ற முடியவில்லை. நான் முயலவில்லையா. இயலாமையா. சுயநலமா. நானும் மனிதன் தானா.....

அதோ மீண்டும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. யுத்தம் தொடங்கிவிட்டது.
இனி மனசாட்சியின் குரலுக்கு மதிப்பில்லை. அதற்கான பதிலும் தேவையில்லை. எப்படியாவது என்  மனைவியையும் என் மகளையும் காப்பாற்ற வேண்டும். அதற்கு நான் ஏதும் செய்ய வேண்டும்...


மார்ச் 03, 2022

- குழந்தையின் சிரிப்பில்... -

குழந்தையின் அழுகையை யார்தான் தாங்குவார். என்னதான் திடமான மனம் கொண்டவராக இருந்தாலும், அதிகாரம் முழுக்க தன் கைவிரல் அசைவில் இருந்தாலும் அவருக்குள்ளும் ஈரம் இருக்கத்தான் செய்கிறது.

இன்று அவருக்கு முக்கியமான கடமையொன்று காத்திருக்கிறது. கடமை மட்டுமல்ல உலகின் பல மூலைகளில் இருக்கும் மக்களும்தான் காத்திருக்கிறார்கள். சிலருக்கு அது கொண்டாட்டம். சிலருக்கு அதுதான் கடைசி திண்டாட்டம்.

அவசரமாகச் சென்றவர், அழும் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டார். சுற்றியுள்ளவர்கள் இந்த உன்னதக் கணத்தை புகைப்படங்களில் பதிவு செய்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் உடனுக்குடன் சமூக ஊடகங்களில் நிழற்படங்களைப் பகிர்ந்து நிழலாகவே சிலவற்றை எழுதத்தொடங்கினர்.

கையில் உள்ள குழந்தையைச் சமாதானம் செய்துக்கொண்டே நடக்கலானார்.

அறைக்கதவு திறந்தது. உள்ளே சென்றார். பிரம்மாண்டத் திரையைக் கண்டதும் குழந்தை சற்று அதிர்ந்து மீண்டும் அழுதது. அவர் மிகவும் நிதானமாக குழந்தையின் கண்ணீரைத் துடைத்தார். லேசாக, வலிக்காதவாறு குழந்தையின் கன்னத்தைக் கிள்ளினார்.

நாற்காலியில் அமர்ந்தார். பிரம்மாண்ட திரையில் சிறு சிறு புள்ளிகளாக மனிதர்கள் நடமாட ஆரம்பித்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்துவதாக இல்லை.

தன் முன்னிருந்த, சில பட்டன்களின் அருகில் குழந்தையைக் கொண்டு சென்றார். குழந்தை விளையாடத் தொடங்கியது.

ஒவ்வொரு முறையும் ஒரு பட்டனை அழுத்தவும் , திரையில் பிரகாசமான ஒளியும் வெடி சத்தமும் கேட்கத் தொடங்கியது.

குழந்தைக்கு அவ்விளையாட்டு பிடித்துவிட்டது. அழுவதை நிறுத்திவிட்டது. ஒவ்வொரு பட்டணையும் அழுத்தி அதன் பின் வரும் சத்தத்திற்கு கைத்தட்டத் தொடங்கியது குழந்தை.

குழந்தையில் குதூகலத்தில் அவரும் பங்கேற்றார். யார் அழுத்தினாலும் குண்டு மழை பெய்யும், இராணுவம் முன் செல்லும், துப்பாக்கிகள் வெடிக்கும். சாவது என்னமோ அப்பாவிகள்தான்.

குழந்தை தொடர்ந்து கைத்தட்டிக்கொண்டே பட்டண்களை அழுத்தி விளையாடியது. திடீர் வெளிச்சமும் வெடிச்சத்தமும் திரையில் தோன்றியவண்ணம் இருக்கின்றன....


மார்ச் 02, 2022

- வெற்றுத்துப்பாக்கி -

சிதைந்து போன கட்டிடங்கள். கடைசி நம்பிக்கையாய்ச் சில செங்கல் சுவர்களைப் பிடித்திருந்தன. நல்லவேளையாக சில வீடுகளுக்கு மட்டும் கீழ்த்தளம் இருந்தது. வீட்டின் ஒரு பகுதியாக இருந்தவை இப்போது பதுங்கு குழியாகிப் போனது.

ஆயுதம் ஏந்திடாத அப்பாவி மக்கள் அவ்வப்போது வெளியேறுவார்கள். சாப்பிட முடிந்தபடி பார்க்கக் கிடைக்கும் ஒவ்வொன்றும் அவர்களுக்கு அன்றைய உணவு. 

சில நாட்களுக்கு முன்பதாக இதே சாலையில் சுற்றுலா பயணியாக வந்திருந்தவன். இன்று கையில் துப்பாக்கியுடன் இதே சாலையில் கண்ணில் படுபவர்கள் எல்லோரையும் சுட்டு வீழ்த்தும் குழுவினருடன்   முன்னேறிக்கொண்டிருந்தான். அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. 'எதிரியைக் கொல் இல்லையேல் சொந்த இராணுவத்திடமே செத்துப்போ' என்கிற நிலைமை.

அவன் மெல்ல மெல்ல தன்னைக் கடைசி ஆளாக ஆக்கிக்கொண்டான். இராணுவ உடையை விடவும் அவன் உள்ளம் பலம் பெற்றுக்கொண்டு வந்தது.  அப்போதுதான்  அவன், அந்தச் சிறுவனை கவனித்தான். அன்று அவன்தான் இவ்வீரனுக்கு வழிகாட்டியாக இருந்தவன். சிறுவனும் இவனை அடையாளம் கண்டுகொண்டான்.

யாருமற்ற இடத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். வழக்கம் போல தன் வாடிக்கையாளர்களுக்கு ரோஜா மலரைக் கொடுத்து வரவேற்பவன். இன்று தரையில் கிடைத்த காய்ந்த இலையைக் கொடுத்து வரவேற்று அழுதான்.

இராணுவ வீரனின் கண்களும் கலங்கிவிட்டன. சிறுவனுக்கு கொடுக்க இப்போது அவனிடம் ஒன்றுமில்லை. ஆனால் ஒன்று இருக்கிறது. துப்பாக்கி.
தன்னிடம் இருந்த இன்னொரு துப்பாக்கியில் இருந்து தோட்டாக்களைப் பிரித்தான். வெற்றுத்துப்பாக்கியை அந்தச் சிறுவனிடம் கொடுத்து அவனைச் சிரிக்க வைக்க முயன்றான்.

வெற்றுத்துப்பாக்கியை கையில் ஏந்தியச் சிறுவன், அதனை மெல்லத் தடவிப்பார்த்தான். அவன் கைகள் அப்போதுதான் துப்பாக்கியைத் தொடுகிறது. 

தூரத்தில்,
போராளி ஒருவனிடம் துப்பாக்கியும் எதிரில் தங்கள் இராணுவ வீரனும் நிற்பதைப் பார்த்தக் கண்கள், தனது 'ஸ்னைப்பரால்' அப்போராளியை குறிவைத்து.

அது வெற்றுத்துப்பாக்கி என்பதைத் தெரிந்தவர்கள் நான்கு பேர். அங்கு அவர்கள் இருவரும், இங்கு நாம் இருவரும் மட்டுமே. ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடிவதில்லை...


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்