பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 02, 2023

- அவ என் ஆளு -


                    - அவ என் ஆளு - 


"நீங்களும் அம்மாவும் சம்மதிக்க மாட்டீங்கன்னு நினைச்சி பயந்துட்டேன் பா.." என்று கண்கலங்கி நின்றான் அன்பழகன்.

பெயருக்கு ஏற்றார் போலவே அழகன்தான். அதனால்தான் என்னவோ அவனை சுற்றி எப்போதும்  பல பெண்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அன்பழகனுக்கோ எந்தப் பெண்ணும் அவன் கண்களுக்கு அழகியாகத் தெரியவில்லை.

இன்னும் சொல்லப்போனால், அன்பழகனுக்கு அழகியாகத் தெரிந்த பெண்; பெண்ணே அல்ல. 

அவள் ஒரு திருநங்கை. பார்த்த மாத்திரத்தில் கொஞ்சமும் பழகிப்பார்த்ததில் நஞ்சமும் பிடித்துவிட்டது. அவள்தான் தயங்கினாள். அவள் தோழிகள், காதல் வலையில் சிக்கி ஏமாந்த கதைகள் அவள் போன்றவர்களுக்கு பாடம் அல்லவா.

எப்படியோ இருவரும் இணையராக இணைந்திட முடிவெடுத்துவிட்டனர்.  அவளுக்கு யாருமில்லை. அவள் தன்னை பெண்ணாக அடையாளம் கண்டதும் பெற்றோரும் மற்றோரும் இவளை அவமானம் என அடையாளம் கண்டு விலக்கிவிட்டார்கள்.

ஆனால் அன்பழகனுக்கு எல்லோரும் உண்டு. படித்த குடும்ப பின்னணி. பார்ப்பதற்கே கையெடுத்து கூம்பிடும் குடும்ப தோரணை. கோவிலுக்கு போனால் கூட எப்போதும் சிறப்பு தரிசனம்தான். சில சமயங்களில் இவர்கள் குடும்பம் கோவிலுக்கு வந்தால்தான் சாமிக்கே கலை கட்டும் அந்தப் பூசாரிக்கும் கல்லா கட்டும். 

தன் அப்பா இப்படி ஒரே பேச்சில் ஒப்புக்கொண்டது அன்பழகனுக்கு ஆச்சர்யம். அப்பா மட்டுமல்ல வீட்டில் அனைவருக்குமே சம்மதம்தான். "அவளும் மனுஷிதானே. அவளுக்கும் மனசு இருக்கிறதுதானே. அதுமில்லாம நாம எந்தக் காலத்துல இருக்கோம்.. இது சயிண்ஸ் யுகம்.....கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.. குழந்தைதானே பெத்துக்க முடியாது ... டெஸ்டியூப் பேபிக்கு போய்க்கலாம்....." என அன்பழகன் பேச வேண்டியதையெல்லாம் வீட்டில் பேசிவிட்டார்கள்.

அப்பாவும் சரி குடும்பத்தில் உள்ள அனைவரும் சரி. அன்பழகனிடம் கேட்ட ஒரே கேள்வி, "சரி சரி...... அந்தப் பொண்ணு என்ன ஜாதி".

அதற்கு அன்பழகன் சொன்ன பதில்தான் அல்டிமெட்;
"எல்லாம் நம்மாளுங்கதான். விசாரிச்சிட்டுதான் லவ் பண்ணவே ஆரம்பிச்சேன் பா...."


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்