- குற்றம் சூழ் உலகு -
- குற்றம் சூழ் உலகு -
காயத்ரியை எனக்கு சில மாதங்களாகத் தெரியும். ஏதோ நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்ததாய் நினைவு. எப்போதாவது வணக்கம் என வட்சப் செய்தி வரும். பெரிதாக பழகிக்கொள்ளவில்லை.
நேற்று காலை , 'வணக்கம் வட்சப்' செய்திக்கு பதிலாக நீண்ட செய்தியை அனுப்பியிருந்தாள். அவளின் அம்மாவிற்கு உடல் நலமில்லை என்றாள். மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் சொன்னாள். சிகிச்சைக்கு பணம் அவசரமாகத் தேவைப்படுவதையும் சொன்னாள். நிச்சயம் அவள் கேட்கும் முழு தொகையையும் என்னால் கொடுக்க முடியாது. முடிந்தவரை உதவலாம் என்று பதில் செய்தியை அனுப்பினேன்.
சட்டென நினைவிற்கு வந்தது. கடந்த மாதமும் இதே செய்தியைச் சொல்லிதான் பண உதவி கேட்டிருந்தாள். கொடுத்து உதவினேன். திரும்ப கொடுக்கவில்லை. இப்போது இந்த மாதமும் அதே செய்தியைக் கொஞ்சமும் மாற்றாமல் அனுப்பியிருந்தாள்.
அப்போதுதான் நண்பன் அழைத்தான். அவனுக்கும் பண உதவி கேட்டு வட்சப் செய்தி வந்துள்ளதையும், காயத்ரி அடிக்கடி புதிய நண்பர்களிடம் அம்மாவின் பெயரைச் சொல்லி பணம் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் சொன்னான்.
மீண்டும் ஏமாறக்கூடாது. மேற்கொண்டு நட்பை வளர்க்க விரும்பவில்லை. உடனே அவளின் எண்ணை ப்ளாக் செய்துவிட்டேன்.
இன்று காலை, குமார் அழைத்தான். காயத்ரியின் அம்மா மருத்துவமனையிலேயே இறந்துவிட்டதாகவும் அங்குதான் கிளம்பிக் கொண்டிருப்பதாகவும் என்னையும் தயாராகச்சொன்னான். என்னால் காயத்ரியின் எண்ணை அன்ப்ளாக் செய்ய முடியுமா என்றே தெரியவில்லை.
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக