பைத்தியம் பலவிதம்
இதை எப்படிப் பார்ப்பது தெரியவில்லை. இப்போதுதான் மழை மெல்ல நிற்கிறது. அதுவும் அடைமழை. இந்நேரம் பார்த்து என் பக்கத்துவீட்டுப் பைத்தியம் செய்யும் காரியத்தை பாருங்களேன்.
வாலி நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து செடிகளுக்கு ஊற்றிக்கொண்டிருக்கிறார். செடிகளுக்கு வாயிருந்தால் அழுது வடிந்திருக்கும் போல. போதாக்குறைக்கு, குழாயில் குழாயைப் பூட்டியும் செடிகளுக்கு தண்ணீர் அடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த அடைமழையில் நனையாத மண்ணா இந்த வாலி தண்ணீரில் நனைந்து விடப்போகிறது. உண்மையில் பைத்தியங்கள் பல விதத்தில்தான் இருக்கிறார்கள் போல.
அதிலும் எங்கள் பக்கத்துவீடு. இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போகிறேனோ என்கிற பயமே வந்துவிட்டது.
நான் பார்ப்பதைக் கவனித்துவிட்டார் போல. சிரித்துக் கொண்டே என்னையும் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சொல்லிப் பரிந்துரை வேறு செய்கிறார். பைத்தியக்கார வேலையில் பங்கெடுக்கக் கூப்பிடுகிறார். சமாளித்து வீட்டிற்குள் வந்துவிட்டேன்.
மறுநாள். புலனச்செய்திகள் பறந்தன. வீட்டு வாசலில் வந்து பார்க்கிறேன். நேற்றுவரை இருந்த செடிகள் எதுவும் இப்போது இருக்கவில்லை. எல்லாம் வாடி வதங்கி மண்ணோடு மண்ணாகியிருந்தன.
பக்கத்துவீட்டு பூச்செடிகளைப் பார்த்தேன். எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தன. இதெப்படி சாத்தியம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த செடிகொடிகளும் தெரியவில்லை. மரங்கள் கூட பொலிவிழந்து இலைகள் உதிர்ந்துவிட்டன.
நேற்று பெய்ந்த ஆசிட் மழை பற்றி ஆளுக்கு ஆள் கருத்துகளைப் புலனத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். பக்கத்துவீட்டுப் பைத்தியத்திற்கு முன்னமே எப்படித் தெரிந்தது.
அது சரி இப்போது யார் பைத்தியம்?
0 comments:
கருத்துரையிடுக