பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 27, 2021

- உயர்திணையும் அஃறிணையும் -

   "நாய்ங்களுக்கு இடமில்ல......" என சொல்லிவிட்டார்கள். குமாருக்கும் அவனது அம்மாவிற்குமே இடம் போதுமானதாக இருப்பதாக சொன்னார்கள். அந்த நாயை தான் கையிலேயே பிடித்துக் கொள்வதாக குமார் கேட்டாலும்,  சொன்னாலும், கெஞ்சினாலும், கண்ணீர் மல்கினாலும் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.

    தன் வீட்டு நாயைத்தான் காப்பாற்ற முடியவில்லை. இந்த நாயையாவது காப்பாற்றலாம் என்கிற முயற்சியும் வீண். இந்த திடீர் வெள்ளம் பல எதிர்ப்பாராதவற்றை ஏற்படுத்திவிட்டது. எதை இழந்தோம் எதை மறந்தோம் என்கிற பிரக்ஞை இன்றியே உயிர் பயத்தில் பலரும் பலவாறு ஆகிப்போனார்கள். 


    வரலாறு காணாத வெள்ளம், வீட்டுக்கூரை வறை உயர்ந்து கொண்டுக்கிறது. அவசரகால உதவிகளை அரசாங்கத்தை எதிர்ப்பார்க்காமல் அரசியல்வாதிகள் தூங்கி விழிப்பதற்கு முன்னமே மக்கள் தாங்களாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 


       இரண்டாவது முறையாக வந்த படகில் சென்றுக்கொண்டிருக்கும் போதுதான் குமாருக்கு அந்த நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.  அது ஒரு பாவப்பட்ட குரலாக இனி என்னால் முடியவே முடியாது என்கிற ஒலியாக அது கேட்பதை குமார் மட்டுமே உணர்ந்தான்.


     உடல் முழுக்க வெள்ளத்தில் நனைந்த மனிதர்களின் வெறும் கைகளின் தங்களின் உயிரை பிடித்துக் கொண்ட இந்தப் பயணத்தில் அஃறிணைகளுக்கு இடமிருக்கவில்லை.


     தூரத்தில் அந்நாய் மெல்ல மெல்ல மூழ்கத்தொடங்குகிறது, அதன் அருகில் குழந்தையொன்று மெத்தையோடு மிதந்தவண்ணம் மெல்லியக்குரலில் கத்திக்கொண்டிருக்கிறது.


     எப்படியாவது அந்த உயர்திணையை  இந்த அஃறிணை காப்பாற்றியப் பிறகே  முழுவதுமாக மூழ்கும்; அதுவரை அது குரைத்துக்கொண்டுதானே இருக்கும். 

 

2 comments:

Nedunilam சொன்னது…

இங்கே யார் அஃறிணை? ஓர் உயர்திணையை காக்க நினைத்த நாயா? தம்மைக் காப்பாற்றிக்கொண்டால் போதுமென்று பாடகில் விரைந்து போகும் மக்களா? நல்ல சிந்தனை. பாராட்டுகள் தாயாஜி. 🤝

Kanthi Murugan சொன்னது…

இடைக்கால பிரச்சனையின் சாரல் இது.நடப்பு அரசாங்கத்தின் தாமதமான நிவாரண நடவடிக்கையைச் சுட்டிக் காட்டப்பட வேண்டும்.உயிர் என்பது ஒன்று.அதில் பாகுபாடு காட்டுவதில் மனிதநேயம் மடிகிறது.எதுவாகினும் மக்களின் சுய நடவடிக்கைகள் இந்நேரத்தில் பிரமிக்க வைத்தது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்