புத்தகவாசிப்பு_2021 ‘வேட்டுவம் நூறு’
புத்தகவாசிப்பு_2021 ‘வேட்டுவம் நூறு’
தலைப்பு –‘வேட்டுவம்
நூறு’
வகை – கவிதை
எழுத்து – மௌனன் யாத்ரிகா
வெளியீடு – லாடம் வெளியீடு
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள்
புத்தகக்கடை +60164734794 (மலேசியா)
கவிஞர் மௌனன் யாத்ரிகாவின் கவிதைகளை
அவ்வபோது முகநூலில் வாசித்துள்ளேன். அது கொடுத்த உணர்விற்கும் இப்போது புத்தகமாக வாசிக்கையில்
கிடைக்கும் உணர்விற்கும் பெரிய வித்தியாசத்தை உணர முடிந்தது. வேட்டுவம் (hunting) சொல்லும்
கவிதைகளின் நாமும் சேர்ந்து வேட்டைக்கு கிளம்பிவிடுகின்றோம். தேர்ந்த வேட்டைக்காரரின்
வழிகாட்டுதலில் நாமும் வேட்டையில் ஈடுபடுகின்றோம். வேட்டை வாழ்வியல் குறித்த முழு சித்திரத்தையும்
பார்த்துவிட்ட அசதியில் வாசித்து முடிக்கும்போது களைப்பும் திருப்தியும் வந்துவிடுகின்றது.
ஆனால், திருப்தி கொள்ள வைக்காதபடிக்கு குழம்படி சந்தங்கள் காதில் கேட்கின்றன. அதுதான்
இக்கவிதைகளின் தன்மையென நினைக்கிறேன்.
இந்த கவிதை தொகுப்பில் ஆழந்து
சிந்திக்க வைத்த கவிதைகள் போலவே அதிலுள்ள ஓவியங்களும் அதன் பங்கை செய்ததுள்ளது. கவிதையை
வாசிக்க நேரம் ஒதுக்குவது போல ஓவியங்களையும் கவனித்து அதில் பயணிக்க வேண்டியுள்ளது.
கவிதை கொடுக்கும் அனுபவமும் ஓவியங்கள் கொடுக்கும் அனுபவமும் வெவ்வேறாக தொடங்கி ஒரு
மையப்புள்ளியை அடைந்துவிடுகின்றது. கவிதை தொகுப்பிற்கு பயன்படுத்தப்படும் ஓவியங்களோ
புகைப்படங்களோ எத்தனை அவசியமானவை. இன்னமும் ஏதோ வைக்க வேண்டும் போலவே அவற்றை பயன்படுத்திக்
கொள்கிறார்கள். சொல்லப்போனால் பல கவிதை புத்தகங்களில் எழுதப்பட்ட கவிதைகளை விடவும்
அதிலுள்ள ஓவியங்களும் புகைப்படங்களும் கவிதைகள் செய்யவேண்டிய வேலையை செய்துவிடுகின்றன.
‘வேட்டுவம் நூறு’ முகப்பு அட்டையில்
நான்கு வேட்டைக்காரர்கள் பன்றியை வேட்டையாடுவதாக காட்டப்படும். புத்தத்தை வாசித்து
முடிக்கையில் அந்த நால்வருடன் நாமும் சேர்ந்து ஐந்து வேட்டைக்காரர்கள் ஆகிவிடுகின்றோம்.
‘ஏலே பங்காளி’ என ஒவ்வொரு முறையும் கவிதையில் கவிஞர் அழைக்கும் போதும் எழுந்து அவர்களுடன்
ஓடத்தோன்றுகின்றது.
இனி கவிதைகளுக்கு செல்வோமா…
வேட்டை என்பது உயிர்களைக் கொன்று
தின்பது மட்டுமே என இன்று மறுவி விட்டது. ஆனால் அது நம் மூதாதையரின் வாழ்வியல் என்பதை
இக்கவிதைகள் நினைவுப்படுத்துகின்றன. அந்த மனிதர்களிடம் இருக்கும் அன்புதான் பேரன்மாக
வடிகிறது என கண்களைக் கலங்கச் செய்கின்றன இக்கவிதைகள்.
கொல்வது பாவமெனில் உலகின் உணவு
சங்கிலியை உடைப்பது பெரிய பாவமில்லையா என கேட்க வைக்கிறது. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்
இருந்தவரை எல்லாமே நல்லபடியாக இருந்தது. ஆக்கி சமைக்க ஆரம்பித்த பின்னரே எல்லாம் உடையத்தொடங்கின.
பணம் உள்ளே நுழையும் போது எல்லாமே சிதைந்துப் போயின. ஆக முன்னேற்றமே தவறா என்றால்;
இல்லை. ஆனால் அதற்கு நாம் பலிகொடுத்தவைகளுக்கு கொஞ்சமேனும் நன்றி காட்ட வேண்டாமா?
இத்தொகுப்பில் உள்ள நூறு கவிதைகளுக்கும்
தலைப்புகள் இல்லை. வேட்டைக்குச் செல்பவன் இரையை முன் தீர்மானமா செய்கிறான். வேட்டைக்குத்தானே
செல்கிறான். அவனுக்கான இரையை பயணத்தின் போதுதானே காண்கிறான். அவ்வாறே தலைப்பற்ற கவிதைகளை
வாசிக்கையில் நமக்கான அனுபவம் அதன் வாசிப்பில் கிடைக்கின்றது. அதுவே தலைப்பாக மாறிவிடுகின்றது.
‘குருதி
வீச்சம் மூக்கில் ஏறக்
கறியைத்
தீயில் வாட்ட வேண்டும்…..’
‘வேட்டைக்
கருவியைத் தூக்குடா என் பங்காளி
காட்டில் கொட்டிக் கிடக்குது வாழ்க்கை…..’
அவ்வரிதான் நம்மை வேட்டைக்கு அழைக்கிறது. சொல்லப்போனால் அக்கவிதைதான் காட்டின் வாசலாக அமைந்திருக்கிறது.
காடு, நம் மூதாதையர்களோடு எத்தனை நெருக்கமானது. எந்த அளவிற்கு அதன் தாய்மையும் அன்பும் கருணையும் கண்டிப்பும் நிறைந்தது என பல கவிதைகளில் காட்டுகின்றார். அதில் காடென்னும் தாயின் இழப்பும் வலியுமே கூட இருக்கிறது.
‘இன்று
உனக்கு இவைதான் இரையென்று
காசு
சில நாற்றத்தை அனுப்பும்
அந்த
மனத்தைப் பின்தொடர வேண்டும்’ (பக்கம் 20)
‘தன்
ஆற்றாமையை நம்மிடம் மட்டுமே
காடு
இன்னும் காட்டவில்லை
தன்
கண்ணீரை நம்மிடம் மட்டுமே அழுது கொட்டவில்லை
களைப்பைப்
பார்க்காதே மேலும் தொடர்ந்து நடப்போம்
காட்டுக்கு
நம் வயிற்றின் சுருக்கம் தெரியும்…’ (பக்கம் 21)
‘புலி
தாண்டும் அளவுக்கு உயர்ந்த வேலிகள் இருந்த காடு
ஓர்
எலி தாண்டும் அளவுக்குக்கூட இல்லாதிருப்பது காண்
இது
சுருங்கிவிட்ட வேக்காடு…’ (பக்கம் 51)
‘ஒரு
புழுவைப்போல் ஞானம் கொள்
காசு
பசியாலும் தாகத்தாலும் ஒருபோது நம்மைச் சாகவிடாது..’ (பக்கம் 66)
‘கன்ணுக்குத்
தெரியாத ஒரு வேலியைக்
காட்டில்
கட்டத் தெரிந்தவனே வேட்டுவன்
காடு
சில நேரம் விலங்கின் பக்கமும்
சில
நேரம் நமது பக்கமும் நிற்கும்
விலங்கு
தப்பிக்கும் எனில் அதற்குக்
காடு
உதவுயிருக்கிறது என்று பொருள்
இரையாகி
விட்டதெனில்
காடு
நம் தலைமை வேட்டுவனாய்
மாறியிருக்கிறதென்று பொருள்..’ (பக்கம் 85)
மனித வளர்ச்சியையும் வனத்தில் அழிவையும் தன் கவிதையில் ஆவணம் செய்கிறார் கவிஞர். அது;
ஆலைக்
கழிவுகள் புதிய வேட்டைக் கருவிகளாகிவிட்டன
சுற்றி
வளைக்கப்படாமல், துரத்தப்படாமல்,
வீழ்த்தப்ப்படாமல் விலங்குகள் மடிகின்றன. (பக்கம் 77)
வளர்ச்சியடைந்த மனிதன் காடுகளில் நடமாடுவது எந்த இடத்தை அழிக்கலாம் எந்த மரத்தை பிடுங்கலாம் எத்தனை இலாபம் சம்பாதிக்கலாம் என்பதற்காகத்தான். நம் மூதாதையர்கள் காட்டில் எப்படி நடமாடினார்கள் என்பதனை;
‘இந்தக் காட்டின் மீது
நெஞ்சு நிறையக் காதல் உண்டு
வயிற்றுக்கு மீறிய ஆசையோடு
இதுவரை இங்கு வந்ததில்லை…’ (பக்கம் 91)
அதே கவிதையில் அவர்கள் உணவுச்சங்கிலிக்கு கொடுத்த மரியாதையையும் காட்டிற்கு காட்டும் நன்றியையும் இப்படிச் சொல்கிறார்.
‘இது
காடுபோல் விருந்து கிடக்கும் தெய்வத்தின் இதயம்
இதோ
தோள்மீது கிடக்கிறது அதன் பெருங்கருணை
பதுக்கி
வைத்துக் கொண்டு தின்னப் பழக்கம் இல்லாத நாம்
அந்தச்
சிறிய விலங்கு புல் கொரிப்பதைக்
கொஞ்ச நேரம் ரசிப்போம் வா.. (பக்கம் 91)
இப்படியாக பல கவிதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. வாசிக்க வாசிக்க வனத்தின் நடுவில் நிற்பது போலவும் நம்மைச் சுற்றி மிருகங்கள் உலாவுவதைப் போலவும், சுத்தமான காற்றை தாவரங்கள் தந்து கொண்டிருப்பதாகவும் தோன்றுகின்றது. ஒரு வேட்டை பயணம் போல இக்கவிதை வாசிப்பு அமைந்துவிட்டது. நமது வாழ்வையும் அதன் சரிவையும் நம் கையாலாத்தனைத்தையும் சொல்லும் கவிதைகளால் நம் மூதாதையர்களுக்கும் ஆரண்யத்திற்கும் மட்டியிட்டு வணக்கம் சொல்லவே தோன்றுகின்றது. வேட்டை என்பது உயிர் எடுப்பதல்ல ஒன்றுடன் ஒன்றாய் தொடர்பு பற்றி வாழ்வது. உண்மையில் அதுதான் வாழ்வது. இப்போதெல்லாம் நாம் வாழ்கிறோமா என்ன? சமைப்பதற்காகவே கருவாக்கி உருவாக்கி வளர்க்கும் கோழிகள் போன்றவற்றை தின்று தின்று தொப்பையில் தொலைந்துக் கொண்டிருக்கின்றோம்.
வாசிக்க வேண்டிய கவிதை புத்தகம் என சொல்லும் அளவிற்கு தொகுப்பினை வழங்கியுள்ள கவிஞர் மௌனன் யாதிரிகாவிற்கு அன்பும் நன்றியும். முன்னுரையில் அவர் சொல்லியுள்ளது போல நம்முள்ளும் நம் மூதாதையரின் ஆவி புகுந்து கவிதை வழி காட்டில் சஞ்சாரிக்க வைத்துவிட்டது.
மீண்டும் செல்ல முடியாத காலத்தின்
நினைவுகளுக்கு மரியாதை செய்யும் விதமாக வீட்டிலாவது பச்சையம் வளர்ப்போம். அதன் அருகில்
நின்று கண்கள் மூடி தியானித்திருப்போம்.
- தயாஜி
0 comments:
கருத்துரையிடுக