புத்தகவாசிப்பு_2021 ‘பெர்னுய்லியின் பேய்கள்’
புத்தகவாசிப்பு_2021 ‘பெர்னுய்லியின் பேய்கள்’
தலைப்பு –‘பெர்னுய்லியின் பேய்கள்’
வகை – நாவல்
எழுத்து – சித்துராஜ் பொன்ராஜ்
வெளியீடு – அகநாழிகை
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)
‘பெர்னுய்லியின் பேய்கள்’ நாவலை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் எழுதியுள்ளார். இந்நாவல் 2016-ம் ஆண்டு வெளிவந்தது. இது ஆசிரியரின் முதல் நாவல். சிங்கப்பூர் பாரம்பரிய பேய்க்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாவல். பேய் இருக்கிறதா இல்லையா என்கிற வழக்கமான கேள்வியை பின்புலமாகக் கொண்டு வழக்கத்திற்கு மாறாக நகரும் நாவல்.
பேய் ஓட்டுகின்றவரின் மகளான மேனன், ‘பாரம்பரிய சிங்கப்பூர் பேய்கக்கதைகள்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்யும் புஷ்பலதா, காலேஜ் படிக்கும் தாரா அவளது தோழி, பந்தினி என்னும் இறந்தவர்களுடன் பெசுகின்ற ஊடாடிகளின் குடும்பத்தில் பிறந்த ஆப்பரிக்க பெண், பீட்டர் யூ, ஹுசேன் ஆத்தா போன்ற குறைந்த கதாப்பாத்திரங்களச் சுற்றியே நாவல் நகர்கின்றது.
ஆவிகள் பேய்கள் போன்ற அமானுஷ்யங்களை மட்டுமல்ல அறிவியல் தகவல்களையும் இடத்திற்கு ஏற்றார் போல ஆசிரியர் கையாண்டுள்ளார். ஆனால் இரண்டையும் சம அளவில் பயன்படுத்திய பின்னணியில் ஒரு காரணத்தையும் வைத்திருக்கின்றார்.
நம்மில் பலருக்கு தெரிந்த ஒரு கதை இருக்கிறது. ஒரு குறும்புக்காரர் தான் சட்டைப்பையில் வைத்திருக்கும் குருவி உயிடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா என சொல்லச்சொல்லி ஒரு போதகரிடம் கேட்பார். அவர் அந்த குருவி உயிருடன் உள்ளது என்று சொன்னால் அந்த நபர் குருவியைக் கொன்றுவிடுவார். போதகர், அந்த குருவி இறந்துவிட்டது என சொன்னால், அந்நபர் அந்த குருவியை உயிருடன் எடுப்பார். மொத்தத்தில் அந்த போதகரை ஏமாற்றுவதுதான் அந்த நபரின் திட்டம்.
அதோ போல ஒரு விளையாட்டை இந்நாவலில் பார்க்க முடிகின்றது. பேய் என்பது இல்லை என நாம் நினைக்கும் போது ‘இதோ என்னமோ இருக்கிறது’ என பயம் காட்டுகிறார். பிறகு பேய்கள் பிசாசுகள் எல்லாம் இருக்கிறது என நாம் நினைக்கும் போது ‘அப்படியெதுவும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை’ யோசிக்க வைக்கின்றான். இந்த விளையாட்டு நாவலின் கடைசி வரி வரை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
பேய்க்கதைகளில் பயம் காட்டுவது மட்டும் முக்கியமல்ல வாசிக்கின்றவர்களை பயத்தில் வைத்திருப்பதுதான் முக்கியம். அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க வைத்து அதனை நகர்த்தி வைத்துவிட்டு அதற்கு ஈடாக இன்னொன்றை காட்டுவது வாசிப்பு சுவாரஸ்யத்தை கூட்டுகின்றது.
வழக்கமான பேய்க்கதைகளில் இருந்து இந்த நாவல் மாறுபட்ட வாசிப்பிற்கு ஏற்றது. முதலில் ஏமாற்றம் தரலாம். ஆனால் கதை நகர நகர நம்மையும் உள்ளுக்குள் இழுத்துவிடுகிறது. நம்மையும் தேட வைக்கின்றது. நாவலில் வரும் ஒவ்வொருவரின் மீதும் நம் கவனத்தை கொடுக்க வைக்கின்றார் ஆசிரியர்.
வித்தியாசமான கதைக்களம். மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் அதன் சிக்கல்களையும் எதார்த்தமாக காட்டியுள்ளார்.
நாவல் சில இடங்களில் சுஜாதாவின் ‘கொலையுதிர்காலம்’ நாவலை எனக்கு நினைவுப்படுத்தியது. ஆனால் ‘பெர்னுய்லியின் பேய்கள்’ முற்றிலும் வேறொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்ததை மறுப்பதற்கில்லை.
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக