புத்தகவாசிப்பு_2021 தன் மீட்சி
புத்தகவாசிப்பு_2021 'தன் மீட்சி'
தலைப்பு – தன்மீட்சி
வகை – கட்டுரைகள்
எழுத்து – ஆசான் ஜெயமோகன்
வெளியீடு –தன்னறம் , குக்கூ காட்டுப்பள்ளி
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794
தன்மீட்சி. ஆசான் ஜெயமோகன் புத்தகம்.
தன்னறம் மற்றும் குக்கூ காட்டுப்பள்ளி வெளியிட்ட புத்தகம். 23 தலைப்புகள் உள்ளன. முன்பே
இணையத்தில் வந்து வாசித்தவை. தனித்தனியே வாசித்திருப்பினும், ஒரே நேர்கோட்டில் அமைந்த
ஒரே புத்தகமாக வாசிக்கையில் புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றது.
ஆசான் என அவர் அழைப்பதற்கான காரணத்தை
கண்டு கொள்ள வைக்கும் புத்தகம். அவரை மட்டுமின்றி நம்மையும் கண்டறியச் செய்யும் புத்தகம்.
தனது வாசகர்கள் தன்னை நோக்கி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கொடுத்திருக்கின்றார்.
துளியென வந்த கேள்விகளுக்கு கடலென பதில் கொடுத்து வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னக
தேடலுக்கு வழி செய்துள்ளார்.
எந்த ஐயத்தையும் தைரியமாக முன்வைக்கலாம் என்கிற நம்பிக்கையை
ஆசான் அளவிற்கு யாரும் கொடுத்திருக்கிறார்களாக என்பது தேடுதலுக்கானது. கேள்வியிலேயே
கேட்பவர்களின் அகத்தினை ஆசான் அறிந்துக்கொள்வதோடு அந்த பதிலை வாசிப்பவர்களின் மனதின்
கேள்விகளையும் உணர்ந்து பதில் கொடுத்துள்ளார்.
சமீப காலமாக என் மனம் நிலைகொள்ளாமல் போனது. சமீபத்திய சில நெருக்கமானவர்களின்
மரணம், மறந்துவிட்ட நினைவுகள் தன்னை மீள் செய்யத்
தொடங்கிவிட்டன. அதன் அடுத்தகட்டமாக உடல் நிலையும் மோசமாகத் தொடங்கியது. நண்பனின் துரோகம்
போலிகளுக்கு கிடைக்கும் கௌரவம், வேகமாக செயல்பட முடியாமை, மறதி, காரணமற்ற அழுகை என
அடுத்தடுத்து என மனதை பதட்டமடைய செய்தன. எத்தனை முறை மன்னிப்பை கொடுத்தாலும் அதன் முனை
கூரான ஆயுதமாக மாறி என்னையே காயப்படுத்த ஆரம்பித்தது.
அச்சமயம்தான் மீண்டும் தீவிரமாக
வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க மனநிலையை சரிகட்ட முடிந்தது. ஆனால் வாசித்து
முடித்த சில நாட்களில் மீண்டும் எண்ணங்கள் தடுமாற ஆரம்பித்துவிடுகின்றன. அதனை தவிர்க்கவே
இடைவெளி இன்றி வாசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ‘தன்மீட்சி’யை வாசிக்க நேர்ந்தது.
ஆசானின் வாசகர்களின் கேள்விகளின்
ஆங்காங்கே என்னையும் நான் பார்க்கலானேன். ஆனால் நான் ஏன் நேரடியாக ஆசானிடம் இக்கேள்விகளைக்
கேட்கவில்லை என தெரியவில்லை. வழிதவறிய குட்டி
ஆடை தன் மார்மீது அணைத்து அன்பாகவும் பயம்
காட்டியும் தொலையாமலிருக்க வழிகளை ஆசான் சொல்வதாகவே உணர்ந்தேன்.
எதை என் மனம் விரும்புகின்றது
எதை செய்யும் பொழுது நான் நானாக உணர்கிறேன், என்பதனை கண்டறிவதுதான் தன்னறம் என உணர்ந்தேன்.
இன்னொருவர் பார்வையில் தெரிவது நான் அல்ல. அது என்னில் இருந்து இன்னொருவர் உருவாக்க
விரும்பம் பிம்பமே. உண்மையில் என்னை நான் உணர்ந்து என கடமைகளை செய்யும் அதே வேலையில்
என் அறத்தினை கண்டறிந்து சமன்நிலை குலையாமல் வாழ்வதுதான் என் வாழ்வு.
முயற்சிகளும் முன்னெடுப்புகளும் தோல்வியடையும் பொழுதும்
அதனை தொடர தடைகள் ஏற்படும் போது நிலமையை நாம்தான் மேலும் சிக்கலாக்கிக்கொள்கிறோம்.
மாறாக, ‘ஒருவர் தனக்கு உண்மையிலேயே எது முக்கியம் என உணர்கிறாரோ அதை செய்ய முடியும்
என்றே நினைக்கிறேன்’ என்கிறார் ஆசான். இயலாமைக்கு ஆள்காட்டி விரலால் எதையோ காட்டினாலும்
மிச்ச மூன்று விரல்கள் நம்மை காட்டுவது போலல்லவா காட்டிவிட்டார்.
‘செயல்’ ஒன்றே எல்லாவற்றும் பதில்
கொடுக்கக்கூடியது. அதுவே நம்மை யாரென்றும் நாம் யாருக்கானவர்கள் என்றும் கண்டறிய உதவுகிறது.
அதையே ‘செயல் போல நிறைவளிக்கக்கூடிய ஏதுமில்லை’, ‘குதியுங்கள். குதிக்காமல் நீந்த முடியாது’ என்கிறார்.
மேம்போக்காக பார்த்தால், தன்முனைப்பு
புத்தகம் போல தெரியும் புத்தகம் இதுவென ஒரு முறை இந்த நூல் குறித்து அப்படியான ஒரு
பதிவை வாசிக்க முடிந்தது. ஆழ்ந்து வாசிக்கையில் தன்முனைப்பு பேச்சாளரின் எழுத்துகளில்
இருந்து தன்னறம் உணர்ந்த ஆசானின் எழுத்துகள் நம் மனதிற்கு நெருக்கமாகின்றன. பல இடங்களில்
தன் சொந்த அனுபவத்தை ஆசான் சொல்லிச் செல்கிறார்.
தன் அனுபவத்தை தத்துவார்த்தமாக
மாற்றி அதனை வாசகர்கள் மீது கடத்தும் சூட்சுமம் அறிந்தவன் ஆசான். அதில் நம் தேடலுக்கான
பதில் இருக்கவே செய்யும். இதற்கான நல்ல உதாரணம் ‘தன்னறம்’ என்னும் முதல் கட்டுரையைச்
சொல்வேன். ‘திருடனை துரத்த நாய் உள்ளே வந்தது.
திருடன் ஓடியும் நாய் உள்ளேயே சுற்றி வருகிறது’ என்பதில் ஆழம் இக்கட்டுரையை வாசிக்கையில்
பிடிபடும். இப்படியாக என் மனதிலும் சில காரணங்களுக்காக
நுழைந்துவிட்ட நாயோன்று, காரணமானவர்களை நான் மன்னித்தும் கூட உள்ளேயே சுற்றி வருவதை
மனக்கண்ணில் கண்டு பயந்துவிட்டேன். என் சிக்கல்களுக்கு ஆதாரக் காரணம் அதுவென புரிந்தது.
‘புத்தகத்தை வாசிப்பவர்கள்’ பற்றிய
கட்டுரையில் வாசகர்கள் தத்தம் நிலையை மேலும் உயர்த்திக் கொள்ளும்படி எழுதியுள்ளார்.
மேலும் இப்பெருவாழ்வில் நம்மை
வாழ வைக்கும் இடங்களையும் வீழ வைக்கும் இடங்களையும் கண்டறியும் படி இந்த நூல் உருவாகியுள்ளது.
‘யார் யாரோ, அவர் அதுவே’ என்பதாக நாம் யாராக இருக்கிறோமோ யாருக்காக இருக்கின்றோமோ அதுவே
நமக்கான தன்னறம். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு திறப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில்
சிலவற்றை அறிந்துக் கொண்டாலும் கூட வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள்
மீதான அன்பும் வந்துவிடும்.
‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம்
நடக்கிறது?’ என்கிற கேள்வியை எதிர்க்கொள்கின்றவர்கள் அனைவரும் ‘தன்மீட்சி’ புத்தகத்தை
வாசிக்கும் படி கேட்கிறேன். நாம் தேடியலையும் காரணத்தை எளிமைப்படுத்திக் கொடுத்திருக்கிறார்
ஆசான். அதில் கேள்விகளையும் விதைக்கின்றார். அதனால்தான் அவர் ஆசான்.
- தயாஜி
0 comments:
கருத்துரையிடுக