பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 06, 2020

உங்களிடம் 1000 வெள்ளி இருக்கிறதா?



      எனக்கு நடந்த விபத்தைக் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும். விபத்தா? ஆமாம் அப்படித்தான் என்னிடம் நானே சொல்லிக்கொள்கிறேன். இல்லையென்றால் அந்த ‘கடத்தல் சம்பவம்’ என்னை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. மனதின் ஒரு பயத்தை ஏற்றி வைத்துவிட்டது. சம்பந்தப்பட்ட முக சாயலில் யாரைப் பார்த்தாலும் உள்ளுக்குள் என்னமோ செய்கிறது. முன்பு போல் சுதந்திரமாக எங்கும் வெளியாக முடிவதில்லை. எங்குச் சென்றாலும் சிலருக்கு எல்லா விபரங்களையும் முன் கூட்டியே சொல்லிவிடுகிறேன். குறிப்பிட்ட நேரத்தில் என்னிடமிருந்து அழைப்போ புலனச்செய்தியோ கிடைக்காவிட்டால் நான் எங்கு இருந்தாலும் சிலர் எனக்காக அங்கு வந்துவிடும் அளவிற்கு விஞ்ஞானம் எனக்கு உதவியுள்ளது.

    ஒரு மாத காலம் மருத்துவமனையில் இருந்தேன். பல வாரங்கள் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். விபத்து,  உடலில் ஏற்படுத்திய சில கோளாறினால் ஆறேழு மதங்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும். மருந்தின் வீரியம் அதிகம் என்பதால் என் பகலை விட இரவே அதிகமாக இருக்கிறது.  நாளின் பாதி நேரத்தை உறங்கியும் மீதி நேரத்தை ஏன் உறங்குகிறேன் என குழம்பியும் கழித்துக் கொண்டிருக்கிறேன்.

    நினைவில் ஏற்பட்ட பிறழ்வால் கூடுதல் இன்பம்! – மறதி என்பதே வரம்தானே?

   கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளை மீட்பதற்கு பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். மனதிற்கு பிடித்ததை செய்வதற்கு சுதந்திரம் இருப்பதால், பயிற்சி இலகுவாக இருக்கிறது.

      நான் சொல்ல வந்தது என் கதையை அல்ல. உங்களுக்கான கதையை. விபத்தில் சுயநினைவு இழந்துவிட்ட நிலையில் முதலில் என்னை அங்கிருக்கும் காவல் நிலையத்திற்கு கொண்டுச்சென்று புகார் கொடுத்தார்கள். நான் அமர்ந்திருந்த இருக்கையில் எல்லாம் என் இரத்தம். இடது பக்க முதுகில் அதிக காயம் பட்டிருந்தது. என்னை தாங்கிப் பிடித்திருந்தவருக்கு விபரம் தெரியாததால் இடது பக்க முதுகையே அழுத்திப் பிடித்து எனக்கு உதவிக்கொண்டிருந்தார். பின் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள். சக்கர நாற்காலியில் என்னை அமரவைத்து ஒரு நண்பர் அரக்கப்பறக்க தள்ளிக்கொண்டு உள்ளே போனார் கொஞ்ச நேரத்தில் சிறிய கூச்சலுடன் உள்ளே என்னை அழைத்துச் சென்றவர்கள் அப்படியே அதே அரக்கப்பறக்கவுடன் வெளியே வந்தார்கள். நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை ஒருவர் எடுக்க சென்றார்.

   நேரே அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். முன் வாசலிலேயே வாகனத்தை நிறுத்தினார்கள். உள்ளிருந்து வந்த சக்கர படுக்கையில் குப்புற படுக்க வைத்து உள்ளே தள்ளிக்கொண்டுப் போனார்கள்.

   உண்மையில் அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவம் என் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துவிட்டது. மருத்துவமனை, மருத்துவர்கள், தாதிகள், சக நோயாளிகள், உள்ளே வந்து என்னிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர், சில நண்பர்கள் என அந்த நொடிகளை அத்தனை அர்த்தம் உள்ளதாக மாற்றினார்கள். அந்த அனுபம் குறித்து  பிரிதொரு நாள் எழுதுகிறேன்.

   இப்போது சொல்ல நினைப்பது உங்களுக்கான ஒரு செய்தி. உங்களிடம் ஆயிரம் வெள்ளி இருக்கிறதா?

    சற்கர நாற்காலியில் என்னை முதலாவதாக அருகில் இருந்த  தனியார் மருத்துவமனைக்குத்தான் அழைத்துச் சென்றுள்ளார்கள். கையில் காவல்துறை புகார் கடிதமும் வைத்திருந்தோம். இது சாதாரண விபத்து இல்லை என்பதால் என்னவோ, என்னை உள்ளே இருந்த இரண்டாம் வாசலிலேயே நிற்க வைத்துவிட்டார்கள்.

       முன் பணம் 1000 வெள்ளியைக் கட்டச்சொன்னார்கள். உதவிக்கு வந்தவர்களுக்கு அது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கவேண்டும். யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. உடன் வந்திருந்த நன்கு ஐந்து பேர்களின் மொத்த கையிருப்பையும் கூட்டிப்பார்த்தாலும் இருநூறைத் தாண்டுமா என தெரியவில்லை. முதலில் சிகிச்சையை தொடங்கும்படியும் கொஞ்ச நேரத்தில் பணத்திற்கு ஏற்பாடு செய்யும் படியும் நண்பர் கேட்டிருக்கிறார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. சற்கர நாற்காலியில் என் நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மோசம் ஆகிக்கொண்டே போனது. கடைசியில் நண்பர்களின் கூச்சலுக்கு மத்தியில் எனது சற்கர நாற்காலி வெளியேறியது. ஏற்கனவே முதுகில் காயம். இடது காலை நகர்த்த முடியவில்லை. மயக்கம். இப்போது இறங்கிய வாகனத்தில் மீண்டும் ஏற வேண்டும்.

    ஒரு வழியாக அரசாங்க மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். நிற்க…

     மயக்கம் தெளிந்தப்பின் நண்பர்கள் இச்சம்பவத்தைச் சொல்லி வருத்தப்பட்டார்கள். இத்தனை அபாயகர சூழலில் உயிரின் விலை ஆயிரம் வெள்ளியா என கோவப்பட்டார்கள். முகநூலில் இதனை போடப்போவதாகவும் கூறினார்கள். மண்டையில் அடிபட்டுவிட்டதால் என்னவோ முன்பு போல சட்டென உணர்ச்சிவசப்பட்டு எதனையும் பேசுவது இல்லாமல் போனது. என் நீண்ட மௌனம் நண்பர்களை குழப்பியிருக்க வேண்டும்.

      ஓர் உயிரின் விலை ஆயிரம் வெள்ளியா ? என கேட்டவர்களுக்கு ; ஓர் உயிரைக் காப்பாற்றக்கூட நம்மிடம் ஆயிரம் வெள்ளி இல்லையே என்றேன். இப்போது நண்பர்கள் மௌனமானார்கள்.

    மருத்துவமனையையோ, பணம் கட்டத்தான் வேண்டும் என சொல்லியவர்களையோ திட்டித்தீர்த்து முகநூலில் போட்டுக் கிழிப்பதற்கு முன்; யோசிக்க வேண்டியவை பல உள்ளன.

     நம்மிடம் இப்போது எவ்வளவு பணம் இருக்கிறது? பணப்பையைத் திறந்துப் பாருங்கள், எவ்வளவு இருக்கிறது? பணப்பையில் யாருக்கும் தெரியாமல் ஏதாவது ஓரிடத்தில் அவசரத்துக்கு  உதவும் என பணத்தை மடித்து வைத்திருக்கிறீர்களா? கண் இமைக்கும் நேரத்தில் ஏதேதோ நடந்துக் கொண்டிருக்கும் சூழலில் நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றும் திறனும் அதற்கு ஏற்ற வருமானமும் நம்மிடம் இருக்கிறதா?

    இந்த யோசனைகள் மிக முக்கியமானவை. சுயநலமோ பொதுநலமோ, நம்மையும் நம் சுற்றத்தையும் முதலில் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. கடமையாக்கப்பட்டதை முதலில் கவனிக்க வேண்டும். நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம்மிடம் கொள்கை, லட்சியம், இலக்கியம் என மூளைச்சலவை செய்யும் பலரை கூர்ந்து கவனியுங்கள் அவர்கள் நிற்கும் இடத்தில் எத்தனை பாதுகாப்புடனும் எத்தனை முன்னேற்பாடுகளுடம் இருக்கிறார்கள். கொள்கையை கற்றுக்கொடுத்தவர்கள் அவர்களின் இந்த குணத்தைக் கற்றுக்கொடுக்க மாட்டார்கள்.

   அதனை கற்றுக்கொள்ள உங்களுக்கும் குறைந்தது ஆயிரம் வெள்ளியாவது தேவைப்படலாம். அதனால்தான் கேட்கிறேன் உங்களிடம் ஆயிரம் வெள்ளி இருக்கிறதா?

 -  தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்