பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 16, 2020

புத்தகவாசிப்பு_2020_6 ‘வீடில்லாப் புத்தகங்கள்’




       புத்தகங்களை எங்கிருந்து வாங்குகின்றீர்கள். வழக்கம் போல புத்தகக்கடைகளில் தானே எங்கின்றீர்களா? ஆமாம். ஆனால் புத்தகக்கடைக்குச் சென்று வாங்குகின்றிர்களா அல்லது இணையம் வழி புத்தகங்களை வாங்குகின்றீர்களா?. தொழில்நுட்ப முன்னேற்றம், நேர மிச்சம் இணையம் வழிதான் வாங்குகின்றோம் என்கிறீர்கள்தானே. புத்தககமாக யார் வாங்குகிறார்கள், வீட்டில் அடுக்கி வைக்க இடமா இருக்கிறது. மின்நூல்களாக வாங்கிக்கொண்டு கணினியில் சேமித்து வைக்கின்றோம் என்கின்றீர்களா? குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. உலகோடு ஒட்டிதான் வாழ்ந்தாகவேண்டியுள்ளது.

        கோவிலுக்கு அருகில் ஒரு பூக்கடை இருக்கிறது. ஒரு பாட்டி இன்றும் தன் வயிற்றுக்கு தானே உழைத்து வாழ நினைக்கிறார். ஒரு விஷேஷ நாளில் வியாபாரமாகும் என நினைத்து, கைவசம் இருந்த பூக்கள அனைத்தையும் மாலைகளாகத் தொடுத்துவிட்டார். அவரின் துரதிஷ்டம் அன்று மழை.  வியாபாரம் ஆகவில்லை. அன்றை வியாபாரம் அவருக்கான நாளைய உணவு. இன்னும் கொஞ்ச நேரத்தில் கோவிலை மூடப்போகிறார்கள். அப்போது ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து ஒருவர் இறங்குகின்றார். நேராக பூக்கடைக்கு வருகிறார். கட்டி வைத்திருந்த பூ மாலைகளில் எதையோ தேடுகிறார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கிருந்த மொத்த பூ மாலைகளையும் அவரே வாங்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். இப்போது அந்த பாட்டியின் மனநிலையை நினைத்துப்பாருங்கள். அந்த கண்கள் இந்நேரம் கலங்கியிருக்கும் தானே. கோவிலுக்கு அருகில் கடை இருந்தாலும், இப்போது அந்த பாட்டிக்கு கடவுள் யாராக தெரிவார். இனி அந்த பாட்டியால் அந்த நபரை மறக்கத்தான் முடியுமா என்ன. அப்படியான மனிதர்களும் அவர்கள் கண்ட கடவுகளையும் உங்களுக்கு காட்டுவதுதான் இந்த புத்தகம் ; ‘வீடில்லாப் புத்தகங்கள்’.

        சக மனிதர்கள் மீதான அன்பையே தன் எழுத்தின் பிரதானமாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. இக்கட்டுரைகளை தமிழ் இந்துவில் அவர் எழுதியிருந்தார். தனது கதைகளில் மட்டுமல்ல தனது இதர படைப்புகளியும் அவர் முன்னிலைப்படுத்தி நம் கண் முன்னே காட்டிச்செல்வது நாம் கவனிக்க மறந்த அல்லது கவனிக்கத் தவறிய சக மனிதனின் வாழ்வைதான்.

       தனக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகக்கடைக்கும் தனக்குமான உறவையும் அங்கு இவருக்கு கிடைத்த புத்தகங்களின் அறிமுகங்களையும் இந்நூலில் கொடுத்திருக்கின்றார். அதோடு அங்கு அவர் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையில் நம்மிடம் பகிர்ந்து அதனையும் பதிவு செய்திருக்கின்றார்.

       பழைய புத்தகங்களை விற்பவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல. பணம் தான் பிரதானன் என்றால் செய்வதற்கு அவர்களுக்கு பல வேலைகள் கிடைக்கும். ஆனால், அவர்கள் மனம் லயிப்பது புத்தகங்களில்தான். அதனை வாங்கிச் செல்கின்றவர்களின் கண்களில்; நான் தொடக்கத்தில் சொன்ன பூக்காரப் பாட்டி பார்த்த அந்த முகம் தெரியாத நபர் போல பலர் தெரிந்துக்கொண்டே இருக்கிறார்கள்.
      ஒவ்வொரு பழைய புத்தகக்கடையில் தனக்கு கிடைத்த அரிய புத்தகங்களின் அறிமுகத்தினை வழக்கம் போலவே சொல்லி நம்மையும் அந்த புத்தகங்களைத் தேட வைக்கின்றார். புத்தகத்தில் மொத்தம் 56 தலைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு புத்தகத்தையோ அல்லது இரண்டு புத்தகத்தையோ நமக்கு அறிமுகம் செய்கின்றார்.

      மழை நாளில் , தன்னிடமிருந்த புத்தகங்களை மூட்டைக்கட்டி ஒருவர் எஸ்.ராவின் வீட்டுக்கதவைத் தட்டுகிறார். வேறு வழியில்லை புத்தகங்களை எடுத்துக்கோங்க, எவ்வளவு தோணுதோ அவ்வளவு கொடுத்தா போதும் வீட்டில் பிள்ளைகள் பசியுடன் இருப்பதாகச் சொல்கிறார்.

     புத்தகம் வாங்கிப்படிக்க பணமில்லாத ஒருவருக்கு ஒரு கடைக்காரர் கடையிலேயே ஒரு நாற்காலியை போட்டுக்கொடுத்து எவ்வளவு வேணுமோ அவ்வளவு படிச்சிக்கோங்க என்கிறார். சும்மா படிக்க முடியாத அவரும் அங்கு வருகின்றவர்களுக்கு தேவையான புத்தைகங்களை அறிமுகம் செய்கிறார்.

      தன் கணித ஆசிரியர் ஞானசுந்தரத்தை குறித்து சொல்கிறார். அவருக்கும் புத்தகங்களுக்குமான தொடர்பை ஒரு சம்பவந்ததின் மூலம் சொல்கிறார். தன்னிடம் கேட்காமல் புத்தகத்தை எடுத்துச்ச் என்றவரிடம் சண்டைப்போட்டு உறவையும் முறித்திருக்கிறார். ஒரு சமயம் எஸ்.ராவிற்கு அவரின் கணித ஆசிரியர் கையொப்பம் இட்ட பழைய புத்தகம் ஒன்று கிடைக்கிறது. விசாரிக்கையில், ஒரு பெரியவர் இறந்துவிட்டப்பிறகு அவரது புத்தகங்களை குடும்பத்தினர் எடைக்கு போட்டுவிட்டதை தெரிந்துக்கொள்கிறார். ஆசிரியர் இறந்தப்பிறகு அவரது புத்தகங்களை காப்பாற்றக்கூட வீட்டினர் தயாராய் இருக்கவில்லை. இதனை வாசித்து முடித்தததும் ஒரு முறை எழுந்துச் சென்று எனது புத்தக அலமாரியில் நிறைந்துக் கிடக்கும் புத்தகங்களைத் தொட்டுப்பார்த்துக் கொண்டேன். என் அடுத்த தலைமுறை உங்களை எப்படி பார்த்துக்கொள்ளப்போகிறார்கள் என தெரியவில்லை.

      தன்னை சந்திக்க வருகின்றவர்களுக்கு புத்தகங்களையே நினைவாக கொடுத்தனுப்பிகின்றார் ஒருவர். அதற்காகவே புத்தகங்களை வாங்குகின்றான். அவர் மருத்துவமனையில் இருக்கும் போதுகூட அவரை சந்திக்க வந்திருந்தவர்களுக்கு புத்தகங்களையே கொடுக்கின்றார். ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக அவரின் மகன் கடைக்கு வந்து அதிகமான புத்தகங்களை வாங்குகின்றார். காரணம் விசாரிக்கையில், அவரது தந்தை இறந்துவிட்டதாகவும், துக்கத்தில் கலந்துக் கொள்கின்றவர்களுக்கு அவரின் நினைவாக புத்தகங்களைத்  தரவுள்ளதாகச் சொல்கிறார்.

      இப்படி, இப்புத்தகம் முழுக்கவும் பலவிதமான புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களைக் கொடுக்கின்றார். பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிச் சொல்கிறார். பழைய புத்தகக்கடை கொடுத்த அனுபவத்தையும் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பேசி நம்மை கலங்க வைக்கிறார். கதைகளில் மட்டுமல்ல கட்டுரைகளிலும் கூட வாசகரை கலங்க வைக்க முடியும் என்பதை புரிந்துக்கொண்டேன். இன்னும் இந்த புத்தகம் காட்டிய மனிதர்களைப் பற்றி பேசலாம். ஆனால் அதனை நீங்களாக வாசிக்கையில் உங்களுக்கு ஏற்படும் கலங்களைத் தடுக்க நான் விரும்பவில்லை.

    நிறைவாக; எழுத்தாளர்கள், எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு. எங்கிருந்தெல்லாம் கதைகள் கிடைக்கின்றன. எதனை கதைகளாக்கலாம். எங்கிருந்து எங்கு அதன் இணைப்பைச் சேர்க்கலாம். என்ற நுணுக்கங்களை இக்கட்டுரைகளில் சொல்லப்பட்ட பகிர்வின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். வாசித்து முடித்ததும் இப்புத்தகத்தில் எங்கெல்லாம் கதைகளுக்கான ஆதர கருக்கள் உள்ளதென நான் குறித்துவைத்துக் கொண்டதை வாசிக்கின்றேன். புத்தகத்தை மூடி வைத்து, பால்கனியில் இருந்து பார்க்கிறேன் எத்தனை மனிதர்கள் எத்தனை கதைகளைச் சுமந்துக் கொண்டுச் செல்கிறார்கள்.


-      - தயாஜி

ஏப்ரல் 13, 2020

#கதைவாசிப்பு_2020_16 'கிருமி'




#கதைவாசிப்பு_2020_16
கதை – கிருமி
எழுத்து – உமையாழ்
வெளியீடு – ஏப்ரல் மாத யாவரும்.காம் 


  இன்று கிருமிகளால் உலகம் துன்பத்தை எதிர்நோக்குகிறது. நாம் அறிந்து இது நடக்கிறது. ஏனெனில் அதிகார வர்க்கம் முதல் அரசியல்வாதி வரை எல்லோரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை பாதிக்காதவரை எந்த துன்பமும் துயரமும் அத்தனை முக்கியமானதில்லை.  எத்தனையோ மரணங்கள் எத்தனையோ கொடுமைகள் நம்மைச் சுற்றி நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒன்றுமே நடக்காதது போலத்தான் அவர்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.பொதுவான துயரம் மட்டுமே துயரமாக கணக்கெடுக்கப்படுகிறது. 

 ஆனால் தற்காலச்சூழல் இன்னொருவரின் துன்பத்தை புரிந்துக்கொள்ளும் வழியைக் காட்டியுள்ளது. இக்கதையையும் அவ்வாறுதான் காண்கிறேன். எல்லா காலத்திலும் நடந்துக்கொண்டிருக்கும் கொடுமைதான், ஒதுக்கப்படுதல்தான், உதாசினம்தான். ஆனால் தற்கால சூழலில் இக்கதையை வாசிக்க மனதை கணக்கச் செய்கிறது.

      வாசிப்பவர்களே கதைசொல்லியாக கதையை நகர்த்திச் செல்கிறார்கள். இதைவிடவா கதையினுள் செல்வதற்கு வேறொரு உபாயம் தேவை.

     கதை ஒரு கட்டத்தில் வாசிக்க விடாமல் வருந்த வைக்கிறது. இந்த கிருமியால் ஆனா பாதிப்பு இன்று மட்டுமானது அல்ல, அதிகார வர்க்கத்தின் கையில் நசுங்கிக்கொண்டிருக்கும் சக மனிதன் தப்பித்துக்கொள்ளும் வரை தொடரத்தான் போகிறது. 

    கதையின் நம்பகத்தன்மைக்கு அதன் மொழியும் சொல்லும் முறையும் முக்கியம். இக்கதை அதற்கு நன்றாகவே பொறுந்தியுள்ளது.

    இன்னொரு முறை வாசிக்க வேண்டும். ஏனெனில் இக்கதை ஒற்றைக் காரணத்தை மட்டுமே கொண்டிருக்கவில்லை.

#தயாஜி

ஏப்ரல் 12, 2020

கேள்வி பிறந்தது அன்று…?


12.4.2020 - 'ஞாயிறு தமிழ்மலர்'

      ஆங்கிலத்தில் w-Questions என சொல்லப்படுவதை கேள்விப்படிருப்பீர்கள். பொதுவாக மாணவர்களுக்கு கட்டுரை கதை போன்றவற்றை எழுதுவதற்கு மிகவும் பயனாக இருக்கும். 
Who ? Where ? When ? Why ? போன்ற நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்வது மூலமாகவே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பையொட்டிய கேள்விகளுக்கு பதிலைக் கண்டுபிடிக்கலாம்.  இந்த w-Questions-ஐ பற்றி கொஞ்சம் பேசாவேண்டியுள்ளது. ஆக, இதனை கொஞ்சம் நமக்கு ஏற்றார் போல தமிழ்ப்படுத்திக்கொள்ளலாமா.?

எவர் ?எங்கே ?எப்போது ?ஏன் ?.

      கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் மட்டுமல்ல. நமது இயல்பு வாழ்க்கைக்கும் பெருந்துணையாக இக்கேள்விகள் அமையும். அமைத்துக்கொள்ளலாம். நம் வாழ்வில் நமக்காக நாம் செய்துக்கொண்டதைவிடவும் இன்னொருவருக்காக நாம் செய்துக் கொடுத்ததுதான் சிந்திக்கையில் சதவிதத்தில் அதிகமாக வந்துவிடுகிறது.

      தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேறுவேறுதான் என சொல்லி வைத்த நம் முன்னோர்கள் ஒன்றும்மூடகள் அல்ல..!

       ஆகச்சிறந்த இலக்கிய முன்னெடுப்பு முகநூலில் லைக் போடுவதும் அன்பிரண்ட செய்வதும் என ஆக்கிகொண்ட சூழலில் நமக்கு நாமே கேள்விகளைக் கேட்டுக்கொள்ளதான் வேண்டும்.  பதில் கிடைக்குமா என்கிற ஐயம் உங்களுக்கு. கேள்வியில் கொஞ்சமாவது நேர்மை இருக்குமா என்கிற ஐயம் எனக்கு.

      ‘கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று’ என்கிற பழையப்பாடலை கேட்டிருப்போம். என்றோ ஒரு நாள் கேட்கப்பட்ட கேள்வியாக இருந்தாலும் என்றாவது ஒரு நாள் அதற்கான பதில் கிடைத்துதான் செய்யும். நம் பங்கிற்கு கேள்விகளை முன்வைத்தோமா என்பதுதான் கேள்வி.
       
     இப்போது நமக்கான எ-வரிசைக் கேள்விகளுக்கு வரலாம். சமீபத்திய நம் செயல்களை நினைவுப்படுத்திக் கொள்வோம். மிகவும் சிரமப்பட்டு செய்திருக்கக்கூடிய காரியம் ஒன்றை நினையுங்கள். அந்த நினைவுகளுக்கு அருகில்  எவர் ? எங்கே ?எப்போது ? ஏன்?. என்ற கேள்வியை அடுக்கிக்கொள்ளுங்கள். நியாயமான முறையில் அதற்கான பதில்களைச் சொல்லுங்கள். யாருக்காக செய்தீர்கள், எங்கே செய்தீர்கள், எப்போது செய்தீர்கள், ஏன் செய்தீர்கள்?
    
     உதாரணமாக திரைப்படம் பார்ப்பதற்கு நண்பர் உங்களை அழைத்திருக்கிறார். நீங்களும் சென்று திரைப்படம் பார்-த்துவிட்டு இரவில் வீட்டீற்கு வந்துவிட்டீர்கள். இதிலென்ன இருக்கிறது என்று யோசிக்கிறீர்கள் தானே. இப்படி இதிலென்ன இருக்கிறது  என்ற ‘ஏனோதானோ’ எண்ணங்கள்தான் நம்மை ஏமாளியாக்கிவிடுகின்றன. யாருக்காக சென்றீர்கள் என்று கேளுங்கள். அழைத்த நண்பர் அத்தனை முக்கியமானவரா. அழைப்பை மறுத்துவிட்டால் நம் உறவை அன்றோடு முறித்துக் கொள்வாரா. எங்கே சென்றீர்கள். உங்களுக்கு அருகிலா அல்லது தூரமாகவா. அவர் அழைத்துக் கொண்டாரா இல்லை நீங்கள அவரை அழைத்துக் கொண்டீர்களா. எப்போது சென்றீர்கள். உங்களுக்கு அதைவிட செய்வதற்கு வேலை இருந்ததா. கடைசியாக ஏன் சென்றீர்கள். 
    
     இம்மாதிரி கேள்விகளை முதன் முதலில் சிந்திக்கியில் இதெல்லாம் ஒரு வேலையா என்றிருக்கும். ஆனால்; இவ்வாறு உங்களைக் கேட்டு பழகிக் கொண்டீர்கள் என்றால் உங்களின் பொன்னான நேரம் யாருக்கெல்லாம் பயனாகவும் பயனில்லாமலும் செலவாகிக் கொண்டிருப்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

      எல்லோருக்கும் இருப்பது ஒரே அளவிளான நேரம்தான், அதனை எதற்கு பயன்படுத்துகின்றோம் என்பதுதான் நாம் நம்மை நோக்கிக் கேட்டுக்கொள்ளக்கூடிய கேள்வி.


#தயாஜி

நினைவுகளை மீட்டெடுத்தல்...








கொஞ்சம் கொஞ்சமாக 
என் நினைவுகளை 
மீட்டெடுக்க
பயிற்சி  கொடுக்கிறார்கள்

அத்தனை எளிதான 
காரியமா என்ன
மருந்தும்
சிறு சிறு உடல் அசைவுகளும்
திரும்ப திரும்பக் கேட்கப்படும் 
கேள்விகளின் 
பதில்களை கவனிக்கிறார்கள்

எந்த பதிலும் ஒன்றுபோல் 
இன்னொன்று 
அமைந்திருக்கவில்லை
ஆச்சர்யம் 
என்னவெனில்

ஒவ்வொரு பதில்களிலும் 
என்னிடம் 
ஒவ்வோரு நினைவுகளாக 
வந்து நிற்கின்றன 

காதலி உண்டா ?

உண்டு
அவளுடனான சில கதைகள்
ரசிக்க வைக்கின்றன
பசுமை நினைவுகள்
என் இளமையின் ஆதாரம்  அவை

காதலி உண்டா ?

காதலிக்கும் அளவுக்கு வாய்ப்பும் 
நேரமும் கொடுத்து
வைக்கப்படவில்லை
பல முறை முன்றுள்ளேன் 
சில ஏமாற்ற கதைகள்
என்னை வருந்த வைக்கின்றன
ஆறக்கூடிய காயங்களா வை
வாழ்வின் முடிவின் 
கடைசி மூச்சிலும் அந்த 
வலியை உணர முடியுமே

காதலி உண்டா ?


இருக்கிறார்கள் பலர்
ஒவ்வொருத்தியின் பெயரும்
என்
மூளையில் எங்கெங்கோ ஒழிந்து
மறைந்து விளையாட்டு
காட்டுகின்றன
அத்தனை அயோக்கியன் நீ
என பழக்கமற்ற பெண்ணொருத்தியின்
குரல் என்னை குழப்பமடையவைக்கிறது
ஏதோ மங்கலான உருவம் 
என்னை துன்புருத்தி இன்பம் காண்கிறது

காதலி உண்டா ?

என்ன கேள்வி இது
எங்கள் திருமண நாள்
புகைப்படங்களுக்கு 
கொடுத்துவைத்த போஸ்கள்
எல்லாம் என் முன்னே
நிழலாடுகின்றன
எத்தனை நண்பர்கள்
எத்தனை உறவினர்கள்
அத்தனை ஆசீர்வாதங்களின் ஒளி
எங்கள் வாழ்வில் 
பிராகாசத்திற்கு சாட்சி

காதலி உண்டா ?

ம்…
கொஞ்சம் பொறுங்கள்
பள்ளி முடிந்து என் மகள் 
வரும் நேரம்தான்
அவள் வந்து சொல்லுவாள்
எத்தனை அறிவாளி அவளென
அவளம்மாவை கவனியுங்கள்
கண்டுகொள்வீர்கள்

காதலி உண்டா ?

யார் நீங்கள்
ஏன் கேட்கிறீர்கள்
நான் எங்கே இருக்கிறேன்….


#தயாஜி

ஏப்ரல் 11, 2020

துயர் போக்குபவள்


என் தேவதை நீ 
என்னால் துயர்படுகிறாய்
என் அதிசயம் நீ
எனனால் மனம் கணக்கிறாய்
என் இளவரசி நீ
என் பொருட்டு அடையாளம் 
மறைக்கிறாய்

என் வாழ்நாளுக்கான வரம் 
நீ
ஒரு தரமும் அப்படி ஆகிடாத
உன் வாழ்நாள் சாபம் 
நானா

புரியவில்லை அன்பே
நினைத்துப்பார்ப்பது எல்லாமே
எளியதொரு வாழ்வையைத்தானே

எளிதிலும் எளிய  வாழ்க்கை
மிக மிக எளிய வாழ்க்கை
நான்சுவர் மேலொரு கூரையும்
நாளுக்கு மூன்று முறை உணவும்
நாட்களுக்கான ஆடைகளும்தான்

அதுவும் கூடாதென்றால்
நான்சுரில் ஒன்றை இடித்துக் கொள்கிறேன்
மூன்சுவர் போதுமே
கூரையில் கூட ஓட்டைகளில் நட்சத்திரம் 
பார்த்துக்கொள்கிறேன்
மூவேளை உணவில் எனக்கு
ஒருவேளையே போதும்

ஆனால் ஒருவேளையும் 
நீ 
இதில் பங்கெடுக்கக்கூடாது 
அன்பே
மாளிகையில் வாழவேண்டியள் 
நீ
வான் தொடும் கூரைகளுக்கு 
சொந்தக்காரி 
நீ
ஆறுவேளையும் அறுசுவை 
உணவுகள் வாய்க்கப்படவேண்டியவள் 
நீ

சுமக்கும் சுமைகள் போதாதென்று
நினைவுகளை அழித்தவனின் 
சுமையையும்
இன்று உன்மீது சுமத்திவிட்ட
பாவி 
நான்

நீ நேசிக்கும் இவன் மீது
ஏன் இவர்கள் அச்சம் கொள்கிறார்கள்
என் வாழ்வின் ஏன் 
இப்படியொரு துயர் நாடகத்தை 
அரங்கேற்றிவிட்டார்கள்

இயல்பாய் இருப்பது என்ன 
அத்தனை குற்றமா
எதார்த்தமாய் இருப்பது என்ன 
அத்தனை குற்றமா

நீயாவது சொல் 
அன்பே

அப்படியென்ன இவர்களுக்கு 
பயம் காட்டிவிட்டேன்
நீ சொல்லிவிட்டதால்
எத்தனையோ ரகசியங்களை
உள்ளுக்குள் புதைத்துவிட்டவனை
மண்ணுக்குள் புதைக்க 
ஏன் நினைக்கிறார்கள்

உழைப்பையும் அன்பையும் தவிர
என்னால் ஏதும் கொடுக்க 
முடியாதபோது
அத்தனையையும் மொத்தமாக 
பெற்றுக்கொண்ட பின்
இந்த சக்கையை  ஏன் 
சாகடிக்கப் பார்க்கிறார்கள்

நீ சொல்வது எப்போதும் 
சரியாகவே இருக்கிறது 
அன்பே


நேரமெடுத்து யோசிக்கையில்

நான் பேசிவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
நான் பிரசுரித்துவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
நான் உண்மை முகத்தை ஊருக்குக் 
காட்டிவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
நான் புகாரளித்துவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்

மொத்தத்தில் 
நான் வளர்ந்துவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்

வளர்தல் அத்தனை ஆபத்தா சொல்

ஒருவேளை அவர்கள் கண்டுகொண்டிருக்கலாம்
இழப்புகளை சந்தித்தவனிடம் 
யார் குறித்தும் அச்சமிருக்காது

அன்பே
என் நம்பிக்கைப்போல
உனக்காகத் தொடங்கிய இந்த
வரிகள் கூட
எங்கெங்கோ சென்றுவிட்டன

எல்லாவற்றுக்கும் மேலாக 
நீயும் வருந்துகிறாய் என்பதில்
என் சாத்தானில் கொஞ்சம் 
கொம்புகள் முளைவிடும்
அடையாளக்குறி தென்படுகிறது

- தயாஜி

ஏப்ரல் 08, 2020

உலகின் அபாயகர ஆயுதம்




என் நினைவுகளை அழிப்பதில்
ஏன் அக்கறை காட்டுகிறீர்கள்
ஏன் பயப்படுகிறீர்கள்
உங்கள் நினைவுகள்
உங்களுக்குத் தரும்
கொண்டாட்டங்களை நானும்
அனுவிக்க வேண்டாமா

நினைவுகளைச் சேர்த்து வைப்பது
அத்தனை எளிதா சொல்லுங்கள்
வாழ்நாளை கடக்க
நினைவுகள் தானே
நிச்சயித்த கட்சா பொருள்கள்
எதனை நீங்கள் சாதிப்பீர்கள்
நான் கடக்கமறந்து வழி
தடுமாறி நின்றால்

என்னை  நான் தாங்கிப்பிடிக்க
பிரபஞ்சம் கொடுத்து
வைத்திருக்கும்
நினைவுகளை ஏன்
உதாசினம் செய்கிறீர்கள்
எல்லாமே என் நினைவில்
இருக்கும் என்பதாலா
எப்போதாவது நான்
சொல்லிவிடுவேன் என்பதாலா

என் நினைவின் சிறு வெளியில்
நீங்கள் சிக்கிக்கொள்வீர்கள்
என்ற அணுமானமா
பழகிப்போன முன்னெச்சரிக்கையா
அல்லது
திடீரென கர்மாவின் மீது
நம்பிக்கை மொட்டு துளிர்த்துவிட்டதா

எனக்கு என் நினைவுகள் வேண்டும்

நித்தம் நடந்துவிட்டதை என் சித்தம்
நினைவுகளாகத்தான் பித்து
பிடிக்க வைத்திருக்கிறது

ஒரு முறை
எப்போதோ ஒரு முறை
நான் ஓடிவந்த பந்தையத்தில்
இரண்டாவது  இடத்தை
முதலும் கடசியுமாக பெற்றுள்ளதற்கு
என் நினைவுகளே
ஒற்றை ஆதாரம்
அன்று கைத்தட்டியவர்கள் யாவர்க்கும்
இன்று என் ஞாபகமே
இல்லாத போது
என் நினைவுகளின் துகள்களையா
அவர்களின்
மூளையின் ஓர நினைவுகள்
அடியில்
சேமித்து வைத்திருக்கப் போகிறார்கள்

கடைசிவரை நான் தோற்றுக்கொண்டே
இருந்த எந்த பரிட்சை
முடிவுகளையும்
என் நினைவுகள் மிக
பத்திரமாகத்தான்
வைத்துள்ளதாக நினைத்தேன்
கடைசி முடிவை யோசிக்கும் வரை

ஆனால் ஏனோ
அந்த நரம்புகளின் ஏதோ
கோளாறு போலும்
தோல்வி கொடுத்த எந்த
மதிப்பெண்களும் என்னால்
யூகிக்கவும் முடியவில்லை
இருந்தும் சிக்கல் இல்லை

இன்றும் கூடா யார்யாரோ
அந்த மதிப்பெண்களை
மிகத்துல்லியமாக சொல்லிக்காட்டி
நகைச்சுவை செய்கிறார்கள்

உங்கள் துரோகங்களை
அழிப்பதற்கும்
மன்னிப்பு கேட்பதற்கு
பதில்
செலவு செய்து
நினைவுகளை அழிக்க
எண்ணிக்கைச் சேர்ந்திருப்பது
உங்கள் ஆள்பலத்தையும்
உங்கள் பண எலும்புத்துண்டுகளின்
வாலாட்டிகளையும் காட்டிவிட்டது

உலகின் அபாயாகர ஆயுதம்
மனிதனின் நினைவுகள்
என்பதை
மிச்சமீதியிருக்கும் என்
நினைவுகளின்
வழி எனக்கு கற்றுக்கொடுத்துவிட்டீர்கள்


- தயாஜி


ஏப்ரல் 07, 2020

புத்தகவாசிப்பு_2020_5 ‘கதைகள் செல்லும் பாதை’




     மிகுந்த மகிழ்ச்சியில் இதனை எழுதுகிறேன். புத்தக வாசிப்பு என்பது பொழுது போக்கிற்காக அல்ல. பொழுதும் போகும்தான் அதே சமயம் அதனை தாண்டியது அதன் பயணம். முதலில் கதை எதனால் சொல்லப்படுகிறது யாருக்காகச் சொல்லப்படுகிறது என்பது யோசிக்கையில் மனதில் பல பதில்கள் கிடைக்கும். என் வரையில் அது ஒரு வழிகாட்டியின் தகவல் பறிமாற்றம். வழிகாட்டுதல் என்பது பயணத்திற்கு எத்தனை உதவியாக அமையும். மிக நீண்ட பயணத்தின் சிக்கல்களை கலைவதற்கும், கேள்விகளை முன்வைக்கவும் வழிகாட்டி உதவும். அதெப்படி வழிகாட்டி கேள்விகளை முன்வைக்க உதவும். நம் கைக்கு கிடைத்த வழிகாட்டியில் செல்ல வேண்டிய இடம் இருக்கிறது. ஆனால் அவ்வழியில்தான் செல்லவேண்டும் என்பதில்லை, பயணம் செய்து பழகியவர்கள் காட்டில் கூட காற்றில் வழி திசை அறிந்து பயணிப்பார்கள்தானே. இதன் வழி நமக்கான வழியை நாம் கண்டுக்கொள்ளலாம்.

      நான் ஒரு ‘குறுங்கதை’ எழுதியிருந்தேன். தனது வேண்டுதலுக்காக திடீர் பக்தன் மலைமேல் ஏறுகிறான். அவ்வழி முழுவதும் ஒத்தையடிப்பாதை. உயிரை பணையம் வைத்து மூன்று நாட்கள் பல சிக்கல்களை கடந்து அவன் கோவிலை அடைகிறான். கோவில் வாசலில் ஒருவர் கேட்கிறார்; “ஏன்பா அதான் முன்பக்கமா நல்ல சாலை போட்டிருக்காங்களே, கார்லயே வந்திருக்கலாம்தான..?”. அப்போது அந்த பக்தனின் மனநிலை எப்படியிருந்திருக்கும். ஒரு முறை இருமுறை என்றால் அது அனுபவமாக இருந்திருக்கலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படி பயணிக்கும் மனிதனுக்கு விரக்தி வந்துவிடாதா? வாசிப்பும் அப்படித்தான். உங்களுக்கு புத்தகங்கள் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் சரியான புத்தகங்களை வாசிக்கவில்லை என்பது பொருள் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். சரியானதை வாசிக்காமல் அடுத்தவர் வாசிப்பை குறை சொல்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்தானே.

        பல ஆண்டுகள் பயணிக்க வேண்டிய பாதைக்கு உங்களிடம் ஒருவர் வழிகாட்டியைக் கொடுக்கிறார். அதிலும் அவர் கொடுத்திருப்பது பல ஆண்டுகளாக அவர் தேடி அழைந்த பயணத்தின் குறுக்குவழி என்றால் சொல்ல வேண்டுமா?. அதனைத்தான், ‘கதைகள் செல்லும் பாதை’ என்ற தலைப்பில் வாசகர்களுக்கு  கையில் கொடுத்திருக்கிறார் எஸ்.ரா. வாசகர்களுக்கு முக்கியமான எழுத்தாளர்களுக்கு  அத்தனை முக்கியமானது இந்த புத்தகம். இதனைக் கொடுத்த அவரின் கைகளுக்கு வாசகனாய் என் முத்தத்தைக் கொடுத்துவிடுகிறேன்.
     புத்தகத்திற்குச் செல்வோம்.

        ‘கதைகள் செல்லும் பாதை’ உலகப் புகழ்பெற்ற சிறுகதைகளையும் அதன் நுட்பங்களையும் அழகியலையும் நமக்கு கற்றுத்தருகின்றன. வடிவத்தில் சோதனை செய்த கதைகள், மிகைக்கற்பனையும் புனைவும் கொண்ட கதைகள் என பல மாறுபட்ட கதைகளை இப்புத்தகம் அறிமுகம் செய்கிறது.

     மொத்தம் 23 தலைப்புகளில் இக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அதிலிருந்து சில தலைப்புகளைப் பார்க்கலாம். அருண் ஜோஷி: பயமும் காமமும், போர்ஹே: இரண்டு குற்றங்கள், ரஷ்யாவிற்கு வெளியே, ஆண்டன் செகாவ்: எழுதப்படாத கதைகள், அம்ரிதா ஏயெம்: விலங்குகள் நடத்தை, எட்கர் கெரெட்: தலைகீழ் மாற்றம்.

           பல முக்கியமான எழுத்தாளர்கள்  இப்புத்தகத்தின் வழி அறிமுகமாகிறார்கள். முதல் கட்டுரையில் சாகித்ய அகாதமி பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர் அருண் ஜோஷியை குறித்தும் அவரின் ‘குழலூதும் பையன்’ சிறுகதை குறித்தும் பேசுகிறார். வணிகனின் மனம் எப்படி அவரது வாழ்வையும் கணக்கிட சொய்கிறது என்பது கதை. தனது பயத்தை காமத்தின் வழி கடக்க முயற்சிக்கிறார். பயத்தை கலைவதற்கே இன்னொரு பெண்ணின் துணை அவருக்கு தேவை. அவரின் கணக்கு சரியானதா இல்லையா என்பதுதான் கேள்வி. ஆனால் கதையின் முடிவில் விரக்தியில் நடக்கிறார். வழியில் சிலர் அவரிடம் கொள்ளையடிக்கிறார்கள். சண்டை செய்கிறார்கள். அடி வாங்கி மயங்கி விழுகிறார். அவருக்கு ஒரு சிறுவன் உதவுகிறான். பொழுது விடிகிறது. அச்சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பணம் கொடுப்பதற்கு தான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்று பணம் கொடுக்கப்பார்க்கிறார். அச்சிறுவனைக் காணவில்லை. அவன் யாராக இருக்கும் என்கிற கேள்வியே வாசகர் மனதில் பல பதில்களைக் கொடுக்கின்றன.

          ஜென் கவிதைகளைப் போலவே சிறுகதைகளையும் கவித்துவமான வரிகளைக் கொண்டு எழுதுகிற ஜப்பானிய  எழுத்தாளர்  ‘யாசுனாரி கவாப்ட்டாவைக்’ குறித்துச் சொல்கிறார். பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் வயதானவர் செல்கிறார். அந்த அறையில் கொசுவலை இல்லை. வாடிக்கையாளர்களின் தேவை முடிந்தப்பின் அவள்தான் இரவு முழுக்க அவர்களுக்கு கொசு கடிக்காமலிருக்க விசிறிக்கொண்டே இருக்கிறாள். அங்கு வரும் கிழவர் தூங்காத அவளின் கண்களை கவனிக்கிறார். கொசுவலை இல்லாததைத் தெரிந்துக்கொண்டு வெளியேறுகிறார். திரும்ப கொசு வலையோடு வருகிறார். கட்டிலை சுற்றி மாட்டிவிடுகிறார். அப்பெண் கட்டிலில் ஏறிப்படுக்கிறாள். கொஞ்ச நேரத்தில் அவள் கண்கள் சொக்குகின்றன. கொசுவலையில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்கிற அவள் கனவு பலிக்கிறது. ஆழ்ந்து உறங்கிவிடுகிறாள். விடிகிறது. கிழவரைக் காணவில்லை. எங்கே படுத்திருந்தார் எப்போதுப் புறப்பட்டார் என தெரியவில்லை. அவளது காதலன் வந்தே அவளை எழுப்புகிறான். அவர்களின் உரையாடல் அவளை மணப்பெண்ணாக உணர வைக்கிறது. பின்னர் நிதானமாக அவள் தன் கால் நகங்களை வெட்டத் துவங்குகின்றாள். நீண்ட நாட்களாக தன் கால்களைக்கூட அவள் கவனிக்காதது அவளுக்குத் தெரிகிறது. நல்ல கதைகளை நகங்களில் இருந்துக் கூட சொல்ல முடியும் என்பதனை சொல்கிறார்.

         அடுத்து ரஸ்கின் பாண்ட் எழுதிய ‘இல்லாத கண்கள்’ சிறுகதையை சொல்கிறார். அவர் சொல்லி முடித்ததும் அக்கதையை தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டிவிருகிறது. ரயிலில் செல்லவிருக்கும் நாயகிக்கு அவள் குடும்பத்தினர் பல அறிவுரைகளைச் சொல்லி அனுப்புகின்றார்கள். ரயிலில் பயணம் செய்கிறாள். அவளது எதிரில் பார்வை இழந்த இளைஞன் இருக்கிறான். அவள் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவன் பேச்சை தொடங்குகின்றான். தான் பார்வை அற்றவன் என்பதை அவள் கண்டுக்கொண்டாளா என அவனுக்குத் தெரியவில்லை. அவனது உரையாடல் அவளை வெட்க்கப்பட்டு சிரிக்க வைக்கிறது.  உரையாடல் அதிகம் இல்லையென்றாலும் அவளின் இருப்பு அவனுக்கு பரவசத்தைக் கொடுக்கிறது. அடுத்த நிலையத்தில் அவள் இறங்கவேண்டும். வருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகின்றாள். அவள் இடத்தில் இன்னொரு இளைஞன் வருகிறான். பார்வையற்ற இளைஞன் முன்பு இங்கு அமர்ந்திருந்த பெண் போல தன அவ்வளவு கவர்ச்சியாக இல்லை என்றுச் சொல்லி சிரிக்கிறான். அதோடு அந்த பெண்ணைப் பற்றியும் அவளது அழகு, சிகை அலங்காரம் பற்றி ஆர்வமாக விசாரிக்கின்றான்.  ஆனால் அந்த இளைஞனோ, அதையெல்லாம் தான் கவனிக்கவில்லை எனவும் அவள் அழகாக பெண் ஆனால் அவள் முழுமையாக பார்வையற்றவள் என சொல்லி அதனை அவன் கவனிக்கவில்லையா என கேட்கிறான்.  கதையை அங்கு முடிக்கின்றார் ‘ரஸ்கின் பாண்ட்’. பார்வையற்ற இருவரின் ரயில் பயணத்தில் இருவருக்கும் அது பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அந்த சந்திப்பும் அவர்களுக்குள் ஏற்படுத்தும் சலனமும் இக்கதையில் அழகாகச் சொல்லப்பட்டிருப்பதாக சொல்கிறார்.

    இப்புத்தக வாசிப்பு, இன்பத்தையும் கூடுதலாக இன்ப அதிர்ச்சியையும் எனக்குக் கொடுத்தது. சமீபத்தில் நான் வாசித்து சிலாகித்த சிறுகதைகளையும் அதன் எழுத்தாளரையும் பற்றி நாம் பெரிதும் வியந்து பார்க்கும் எழுத்தாளர் முன்மொழிவதுதான் அது.

       ‘அம்ரிதா ஏயம்: விலங்கு நடத்தைகள்’ என்கிற கட்டுரை. நான் வாசித்த கதைகள் குறித்து தொடர்ந்து எனது வைப்பூவில் #கதைவாசிப்பு என்ற தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் எழுத்தாளர் அம்ரிதா ஏயம் குறித்தும் அவரது ‘விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்’ என்ற புத்தகத்தில் வாசித்த சில கதைகளைக் குறித்து எழுதியிருந்தேன். அதில் எனக்கு விருப்பமான கதைகளையும் பற்றி எஸ்.ரா மேலும் இப்புத்தகத்தில் பேசுகின்றார்.. நிச்சயம் இந்த புத்தகமும் அவரது கதைகளும் பரவலாக அறியப்படும் என நம்புகிறேன்.

     நிறைவாக,

        அதிகம் சொல்லிவிட்டேனா என்ன? உண்மையில் இன்னும் இப்புத்தகத்தைப் பற்றி சொல்லத்தான் தோன்றுகிறது. சொல்லத்தான் வேண்டும் . “யான் பெற்ற இன்பம்….” தான் காரணம். வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்த புத்தகத்தை தாராளமாக முன்மொழியலாம். வாங்கிப் பரிசளிக்கலாம். வாசிக்க வேண்டிய பல எழுத்தாளர்களின் அறிமுகமும் கதைகள் நாவல்களையும் நாம் அறிந்துக் கொள்ளலாம். 

     இக்கதைகளைப் பற்றி எஸ்.ரா சொல்வதைக் கவனித்தால் , கதை வாசிப்பில் எப்படியெல்லாம் நாம் நமது சிந்தனையை ஓடவிடலாம் என பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். மேலும் நம் வாசிப்பு தளத்தை விரிவுப்படுத்த இப்புத்தகம் உதவும். இதே தலைப்பில் எஸ்.ரா தனது இணையப்பக்கத்திலும் மேலும் பல கதைகள் எழுத்தாளர்கள் குறித்து எழுதியுள்ளார் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

-       தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்