பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 20, 2012

பயணிப்பவனின் பக்கம் 6

சாரு நிவேதிதா எனும் பெண்...





அந்தப் புத்தகக்கடை முழுவதும் கண்ணாடிகளால் ஆனது. வெளியிலிருந்து பார்க்கும் போதே கண்ணைக் கவரும் வகையில் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. காலணியினைக் கழற்றி வைக்க வேண்டும். உள் நுழையும் போதே வாசனையுடன் இருவர் வரவேற்றார்கள். புத்தகங்கள் எழுத்தாளர்களின் அகர வரிசைபடி அடுக்கப்பட்டிருந்தன. அதோடு அந்தந்த எழுத்தாளர்கள் குறித்த சின்னச்சின்னத் தகவல்கள் அங்கே ஒட்டப்பட்டிருந்தன. இதுவரை படித்திராத எந்த ஒரு புது படைப்பாளி குறித்தும் அந்த விபரங்கள் வழி ஓரளவிற்கு தெரிந்து கொள்ளலாம். பின் அவர் எழுதிய புத்தகத்தை வாங்கலாம். அதோடு நீங்கள் எந்த புத்தகம் குறித்து விசாரித்தாலும் சிரித்த முகமாய் சொல்வதற்கு அங்கே தயாராக சிலர் இருந்தனர். புதிய வரவாக இருந்தாலும் சரி பழைய புத்தகமாக இருந்தாலும் சரி அதற்கேற்ற விபரங்கள் சொல்லும் ஆட்கள் இருப்பது அந்த புத்தக்கடையின் சிறப்பு. போதுமான வெளிச்சம். அரிய பெரிய புத்தகங்கள். அதோடு புதிதாகச் சந்தையில் வந்திருக்கும் புத்தகங்கள் குறித்த விபரங்களைத் தனியே வைத்திருக்கின்றார்கள். மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்ற புத்தகங்கள் அங்கே வரிசையாய் இருக்கும்.

இந்தப் புத்தகக்கடை எங்கே இருக்கிறது...?

- ஒவ்வொரு புத்தக விரும்பி மனதிலும் (மட்டும்) இருக்கின்றது!

இப்படி ஒரு புத்தகக்கடை சாத்தியமா...?

- சாத்தியம்தான் புத்தகம் என்பது வெறும் வியாபாரப்பொருளாகப் பார்க்காவிட்டால்.!

புத்தகங்களை வாசிக்கின்றவர்கள் குறைவு.... குறைவு.... என கோஷம் போடுகின்றவர்கள் மத்தியில் புத்தகக்கடைகளின் தரத்தைப் பற்றி யார் பேசுகின்றார்கள். புத்தகங்களை விற்கின்றவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாக இருக்கின்றார்களே தவிர புத்தகங்களை நேசிப்பவர்களாகவோ வாசிப்பவர்களாகவோ இருப்பது கிடையாது.

புத்தகக்கடைகளில் வேலை செய்கின்றவர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். எந்தப் புத்தகம் குறித்து கேட்டாலும் அமர்ந்தவாரே; “அங்கதான் இருக்கும்... ஒருவேளை யாராவது வாங்கியிருப்பாங்க, வேணும்னா வேற புத்தகம் பாருங்களேன்.” என்ற பதில்தான் தருவார்கள். சமீபத்தில் ஒரு புத்தகக்கடையில் இது போன்ற உரையாடலுக்குப் பிறகு நானே தேடிப்பார்த்து அவர்கள் இல்லை என சொன்ன புத்தகத்தைக் கண்டுபிடித்து வாங்கினேன். (அப்போதும் அதே விலைதான் - என்ன கொடுமை இதெல்லாம்...!) மாதம் ஒரு முறையோ அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறையோ புத்தக்கடைக்கு செல்கின்ற என் கண்ணுக்குத் தெரிந்த புத்தகம் ஏன் அங்கேயே காலை முதல் மாலை வரை வேலை செய்யும் அவர்களுக்குத் தெரியவில்லை?

அவர்கள் அங்கேதான் வேலை செய்கின்றார்கள். அவர்களைச் சுற்றிலும் புத்தகங்கள்தான் இருக்கின்றன. ஆனாலும் இந்த அளவுக்கா பிரக்ஞை இல்லாமல் இருப்பது. அதிலும் சிலரைப் பொருத்தவரை பத்திலிருந்து இருபது நிமிடத்திற்குள் புத்தகங்களை நாம் வாங்கிவிட வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்களில் முகத்தை கொஞ்சம் கவனித்தால் போதும் நாம் வாங்க வந்திருக்கும் புத்த்கங்களையே மறந்துவிடுவோம். அந்த அளவுக்கு ‘ஜொலிக்கும்..!’

சில கடைகளில் வாடிக்கையாளர்கள் சொன்ன பிறகுதான் அங்குள்ள புத்தகங்களைக் கரையான் தின்றதே தெரியும். புத்தகங்களில் பூச்சி ஏறாமல் இருக்கவும் கரையான் திண்ணாமல் இருக்கவும், புத்தக அலமாரி ஓரத்தில் காய்ந்த வேப்பிலை இலையைப் போடலாம். அப்படிப் போட்டுதான், பல புத்தகங்களை காப்பாற்றி வைத்திருக்கின்றேன்.

புத்தகக்கடைகளில் வேலை செய்கின்றவர்கள் வாரம் ஒரு முறையேனும் புத்தகங்களை அடுக்கிலிருந்து எடுத்து தூசிதட்டி வைத்தாலே பெரிய விசயம். இன்னும் கூட பல புத்தகக்கடைகளில் புதிய வரவு குறித்து அறிந்திருக்கவில்லை. பல ஆண்டுகளாக அதே புத்தகம் அதே இடம் அவ்வளவுதான். சில புத்தகங்கள் வெயில் பட்டு நிஜ நிறம் மாறி புது நிறம் ஏற்றிருக்கும். இவர்களுக்கு மட்டும் தலைக்குமேல் காத்தாடி சுற்றிக் கொண்டிருக்கும்.

இன்று இலக்கியம் பேசும் மிக முக்கிய சிலர் தொடக்கத்தில் புத்தகக்கடைகளில் வேலை செய்தவர்கள்தான். அவர்களில் இலக்கியத் தாகத்துக்கு அந்தப் புத்தகக்கடைகள் பெரும் பங்கு வகித்தது. இன்றும் பலர் புத்தகக்கடைகளில் வேலை செய்கின்றார்கள். ஆமாம்; அவர்கள் வேலை மட்டும்தான் செய்கின்றார்கள். இவர்களுக்கும் பழமை பேசும் சிலருக்கும் ஓர் ஒற்றுமை; அவர்களுக்குப் புதியதை ஏற்க மனமில்லை இவர்களுக்கு பழையதைத் தவிர வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை.

ஒரு புத்தக்கடையில் “சாரு நிவேதிதா எழுதிய புத்தகம் ஏதும் இருக்கா” என கேட்ட பாவம்தான்; பதில் வந்தது, “அந்தப் பெண் எழுதிய புத்தகம் இப்பதான் முடிஞ்சது. வேணும்னா ஆர்டர் பண்ணவா...?”

இப்படித்தான் இருக்கின்றது இன்றைய நிலை.

புத்தகக்கடைகள் இலக்கியத்திற்கு செய்யும் நல்ல காரியம் என்ன தெரியுமா..? புத்தக அலமாரியில் முதல் வரிசையிலேயே பலவித செக்ஸ் புத்தகங்களை வைத்திருப்பதுதான். இதை கடைசியில் வைத்திருந்தாலும் பராவாயில்லை கொஞ்ச தூரமாவது புத்தகங்களைப் பார்த்தவாறு நடப்பார்கள். அதற்கும் வழியில்லை. முதல் வரிசையைத் தாண்டி செல்லும் வாய்ப்பும் சிலருக்கு இல்லாமல் போகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது வருங்காலத்தில் நாம்தான் புத்தகக்கடைகளை திறக்கவேண்டும் போல் எண்ணம் எழுகின்றது.

அது நடக்கும் என ஆழ்மனம் நம்புகின்றது.


நன்றி
இதழ் 30
ஜூன் 2011

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்