- இளையராஜாக்களும் அனிருத்களும் -
காலையிலேயே அழைத்திருந்தார். “என்ன ப்ரோ…”
என்றுதான் தொடங்குவார். சமீபத்தில் ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக சந்தித்தோம். அங்கிருந்து திரும்ப வந்து, பிறகு மீண்டும் தமிழகப்பயணமும்
சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார். ஆனால் அந்த சிறகுள்ள மனிதரை பார்ப்பதற்கு என்னால்
முடியாமல் போனதைச் சொல்லி கொஞ்சம் திட்டவும் செய்தார் போதாக்குறைக்கு கொஞ்சமாக சலித்தும்
கொண்டார்.
எனக்கு சட்டென சிரிப்பு வந்துவிட்டது.
நம்முடன் பள்ளியில் படித்த நண்பனொருவர் கையாலும் பாணியை அப்படியே கையாண்டார். கண்களைப்
மூடிக்கொண்டு கேட்டால் எனது பள்ளி நண்பானின் ஒருவனாகத் தெரிந்தார். இதன் பிறகும் சந்திப்பை
தாமதப்படுத்தினால் வீட்டிற்கே வந்து கழுத்தைப் பிடித்து “ஏன் ப்ரோ என்னைய பார்க்க வரல..?”
என கேட்டுவிடுவார் என பயந்துவிட்டேன். “இன்னும் மூணு மணிநேரத்தில் பார்க்கலாம் ப்ரோ…”
எனறவாறு உடனடியாக வீட்டில் செய்ய வேண்டிய சில வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்தேன்.
திடீரேன்ற பொறுப்பை இல்லாள் யூகித்துவிட்டார்.
அவராகவே என்னிடம் “சரி எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவீங்க..?” என கேட்டதிலிருந்து
அதனை தெரிந்துகொண்டேன். வாழ்க்கை இப்படித்தான். ரொம்ப கடினமான காரியங்கள் அரைநொடியில்
நடந்து முடிந்துவிடும். ரொம்பவும் சாதாரணமான காரியங்களுக்கு மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருப்போம்.
நமது புத்தகக்கடையில் ப்ரோ ஆடர் செய்திருந்த
புத்தகங்களுடன் அவரைப் பார்க்கச் சென்றேன்.
எனக்கு முன்னமே எங்களின் வழக்கமான உணவக
கடைசி நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து உணவகம்
முழுவதும் ஒரு சுற்று பார்க்க முடியும். அவரின் எதிரில் அமர்ந்தேன். என்னால் அவர் முகத்தையும்
அவருக்கு பின்னால் இருக்கும் மரம் செடி கொடிகளைத்தான் பார்க்க முடிந்தது. எவ்வளவு ப்ளான்
பார்த்தீங்களா!
நான் அவருக்கு புத்தகங்களைக் கொடுக்க,
அவர் எனக்கு சிங்கப்பூர் மிட்டாய்களையும் ரவாங்கில் பிரபாலமான பால்கோவாவையும் கொடுத்தார்.
என்ன சாப்டறீங்க என்று ஆரம்பித்து மட்டன்
குழம்பு கண்ணைக் கவர்ந்ததாகச் சொன்னார். உடனே ‘ரொட்டி சானாய்க்கும்’ மட்டன் குழம்புக்கும்
ஆடர் கொடுத்தோம். அந்த ஒரு வட்ட மங்கின் மட்டன் குழம்பிற்கு பதிமூன்று வெள்ளி வருமென
எங்கள் இருவருக்கும் அப்போது தெரியாது.
‘என்ன படிக்கறோம் என்ன எழுதறோம்’ என எங்கள்
பேச்சு, பழக்க வழக்கத்திற்கு வந்தது. அப்போதுதான் வாசித்து முடித்த ஜெயமோகன் அவர்களின்
ஏழாம் உலகம் நாவல் குறித்து பேசினேன். சமீபத்தில் உள்ளூர் சினிமாவிற்கு சில எழுத்து
வேலைகளைச் செய்துவருவதையும் நண்பர்களின் கதைகளை வாசித்து செறிவாக்கம் செய்து வருவதையும்
சொன்னேன்.
அவரும் சமீபத்தில் வெளிவந்த அவரது சிறுகதைகள்
குறித்தும் இனி தான் எழுதவிருக்கும் சிறுகதைகள் குறித்தும் பேசினார். மலேசியாவில் எழுதிக்கொண்டிருக்கும்
எழுத்தாளர்களில் சிலர் மட்டுமே தனித்தன்மையை எழுத்தில் காட்டக்கூடியவர்கள். அந்த வகையில்
இவரையும் சொல்லலாம். ரொம்பவும் தாமதமாக எழுத
வந்துவிட்டதாக சொல்லியவரிடம் சொன்னேன்; “இப்போது அதற்கு எந்த ஒரு குறையும் இல்லை..
வழக்கம் போல தொடர்ந்து எழுதுங்கள். சீக்கிரமே உங்கள் சிறுகதைகளை புத்தகமாக்குங்கள்.
தனித்தனியாக வாசிக்கும் சிறுகதைக்கும் ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளைத் தொகுப்பாக வாசிப்பதற்கும்
வித்தியாசம் இருக்கு. உங்கள் புத்தகம்தான் உங்களை இன்னும் பரவலாக அடையாளப்படும்..”
என்றேன்.
அப்படி சொல்லும் போதெல்லாம், தவறாது ஒரு
பதிலை அவர் கொடுப்பார். “நல்ல கதைகளை எழுதி அறியப்படும் எழுத்தாளராக மாறிவிட்டு அப்பறமா
புத்தகம் போடலாம்னு இருக்கேன்..” நான் சிரித்துக்கொண்டே அவரின் கதைகளை இப்போதைக்கு
தேர்வு செய்து வைக்கச்சொன்னேன்.
பிறகு எங்கள் பேச்சு இளமை ததும்பும் பக்கம்
போனது. அது எப்பவும் போகும். ஒவ்வொரு முறையும் “ஆமா உங்களுக்கு என்ன வயசு…? ” என கேட்டுக்கொள்வார். நானும் வயதைச் சொல்லி நானும் பெரிய
பையன் தான் ப்ரோ என்றதும் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வார். இம்முறை அவரின் இளமை
காலத்தில் அவருக்கு கிடைத்த கிளுகிளுப்பான புத்தகங்களைச் சொல்லி சில அனுபவங்களைப் பகிர்ந்து
கொண்டார். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றேன். மாறாக எங்களுக்கு வீடியோ பிறகு
வீசீடி அதன் பிறகு கம்பியூட்டர் கடை என வரிசைப்படுத்தினேன். ஆனால் இன்றையப் பிள்ளைகளுக்கு
அப்படியல்ல, கையிலேயே நவீன கைப்பேசி இருக்கிறது. நம்மைக் காட்டிலும் சீக்கிரமாக ‘எல்லாவற்றையும்’
அறிந்து கொள்ளும் வாய்ப்பு அபாயமும் ஒருங்கே அமைந்துவிட்டதைப் பேசினோம்.
கடந்த வாரம் இங்குள்ள ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளி
மாணவர்களுக்கு உரை நிகழ்த்த சென்றிருந்தேன். ‘அகிலம் நீ’ என்னும் யுவதிகள் அமைப்பின்
வழி அழைக்கப்பட்டிருந்தேன். ஆண் மாணவர்களுக்கு நானும் பெண் மாணவர்களுக்கு ‘அகிலம் நீ’
யுவதிகள் அமைப்பின் நிறுவனர் தோழர் பொன் கோகிலமும் பேசினார்.
அங்கு நான் சந்தித்த மாணவர்கள் குறித்தும்
அவர்களின் நடவடிக்கை குறித்தும் பேசினேன். மாணவர்களுக்கு பணம் குறித்த விழிப்புணர்வையும்
கொடுக்க வேண்டிய அவசியம் பற்றி எங்கள் உரையாடல் சென்றது. உண்மைதான், ஒழுக்கும் கல்வி
என பலவற்றில் நாம் அக்கரை காட்டினாலும் மாணவர்களின் பார்வையில் பொருளாதார விழிப்புணர்வின்
அவசியம் குறித்து நாம் பெரிதாக பேசுவதில்லை. அவர்கள் என்ன வேலையா செய்கிறார்கள் பணத்தைப்
பற்றி பேசுவதற்கு என யாரும் கேட்கலாம். ஆனால் எந்த ஒருவனின் கையில் பணம் இருக்கிறதோ
அதன் மூலம் பொருளோ (மிட்டாயோ) வாங்கலாம் என நம்புகின்றானோ அவனுக்கு பொருளாதார விழிப்புணர்வு
அவசியம். இன்னும் சொல்லப்போனால் பணத்தின் அருமை தெரிவது கட்டாயம்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு
வயதானவர் தூரமான நாற்காலியில் அமர்ந்தார். நம்ம ப்ரோ கொஞ்சம் நேரம் அவரைப் பார்த்துவிட்டு,
“கொஞ்ச நேரம்..” என சொல்லிவிட்டு அந்த வயதானவரைப் பார்க்க சென்றார். ஒருவேலை இவருக்கு
படித்துக் கொடுத்த ஆசிரியராக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். திரும்பி வந்ததும் ப்ரோ
சொன்னார் அவரது பள்ளி நண்பராம். ப்ரோவின் இளமையின் ரகசியத்தை என்றாவது கண்டுபிடிக்க
வேண்டும்.
இப்போது கூட இளையராஜாவைப் பற்றிய முகநூல்
பதிவில் ப்ரோ கமெண்ட் போட நானும் அவரது கமெண்டுக்கு கீழ இவரை அனிருத் ரசிகர் என்று
நினைத்ததாகக் கூறினேன். அந்த இளமையும் துடிப்பும் அதற்கான காரணம் என்று நினைத்தேன்.
ஆனால் நம்ம ப்ரோ இளையராஜாவின் ‘அந்திமழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம்
தெரிகிறது..’ என்ற பாடலை விடவா இளமை துள்ள முடியும் என்றார். அவரின் இளமையின் ரகசியம்
ஓரளவு பிடிபட்டது.
தொடர்ந்து சில இணைய இதழ்களுக்கு சிறுகதைகளை
அனுப்புவதை சொல்லி அதன் மூலம் அவரின் மன ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். உண்மையில்
இது பலரின் மன ஆதங்களில் ஒன்றுதான்.
இணைய இதழுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு
அவர்கள் தரும் பதிலுக்கு காத்திருப்பது குறித்த மாற்று கருத்து இல்லை. ஆனால் நாம் அனுப்பிய
படைப்புகள் எற்றுக்கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்று கூடவா சொல்வதற்கு
அவர்கள் சிரமப்படுவார்கள். சில இணைய இதழ்கள் தங்களுக்கு படைப்புகள் கிடைத்துவிட்டன
என்பதைக் கூட எழுத்தாளர்களுக்கு சொல்லுவதில்லை. இங்கு காத்திருப்பது சிக்கல் இல்லை,
ஆனால் இதில் மறைந்திருக்கும் அலட்சியம்தான் சில சமயங்களில் நமக்கு மன வருத்தத்தைக்
கொடுக்கிறது.
எங்கள் உரையாடலுக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி
வைத்தோம். அடுத்து இன்னும் நிறைய பேசுவோம் என்ற நம்பிக்கையுடன் விடைபெற்றோம். என்னைவிடவும்
வேகமாய் நடந்து அவரது வாகனத்தை நெருங்கிகொண்டிருந்தார். சொல்ல மறந்துவிட்டேன் நம்ம
ப்ரோவின் பெயர் ஶ்ரீ ராமுலு, ஶ்ரீகாந்தன் என்ற பெயரின் எழுதிக்கொண்டிருக்கிறார்.
0 comments:
கருத்துரையிடுக