- இயந்திர மனிதர்கள் -
இன்று யுத்தம் முடிந்ததாக அறிவித்தார்கள். யார் அறிவித்தார்கள், யாரிடம் அறிவித்தார்கள் என தெரியவில்லை. அன்று யுத்தகம் தொடங்கியது என அறிவித்தப்போதும் யார் அறிவித்தார்கள். யாரிடம் அறிவித்தார்கள் என தெரியவில்லைதான்.
அவ்வப்போது இப்படி புரளிகள் வந்து கொண்டிருக்கவே செய்கின்றன. ஆட்களைக் கொல்பவர்களுக்கு எது புரளி என நன்றாகவே தெரிந்திருக்கும். துப்பாக்கியின் தோட்டாக்கள் தீரும் அந்த நேரமும், அவர்கள் துப்பாக்கியில் புதியத் தோட்டாக்களை இணைக்கும் நேரமுமே வீணாகக்கூடாதென அதிவேகமாய் புதியத் தோட்டாக்களை இணைக்கும் பயற்சிகள் கொடுக்கப்பட்டவர்கள்.
தவறியும் கூட வெண்ணிறத்தில் எதுவும் தெரியக்கூடாது என கவனமாய் இருப்பவர்கள். உடனுக்குடன் யாரின் குருதியைக் கொண்டும், வெண்ணிறத்தை செந்நிறமாய் மாற்றிவிடுபவர்கள்.
இவர்கள் இயந்திரமாக இருப்பார்களோ என நாங்கள் சந்தேகிப்போம். அவர்கள் உண்டு, உறங்கி, சிரித்து , கண்கள் கலங்கி நாங்கள் பார்த்ததே இல்லை. யாரோ அழுத்திய விசையில் அவர்கள் சுட்டுக்கொண்டும் வருவதும் குண்டுகளை வீசிக்கொண்டும் வருவதையும்தான் நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அவர்களுக்கு தாகம் கூடவா எடுக்காது. உண்மையில் அவர்கள் எல்லாம் இயந்திரங்கள்தான் போல.
நாங்களும் அப்படி இயந்திரமாக வேண்டும். எங்களையும் யாராவது விசை கொண்டு இயக்குங்கள். எங்களுக்கு பசிக்கிறது. தூக்கம் வருகிறது. கண்கள் அழுது வடிகிறது. குருதி கொட்டுகிறது. முடியவில்லை. குறைந்தபட்சம் குடிக்கக் கொஞ்சமாவது தண்ணீர் கொடுங்கள்.
கண்ணீர் குடித்து பசி போக்கு என்ற சாபத்தையாவது கொடுங்களேன்....
0 comments:
கருத்துரையிடுக