பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 26, 2024

மங்கள தீபாவளி - வானொலி நாடகம்


வணக்கம் நண்பர்களே, தீபாவளி வாரத்தை முன்னிட்டு 'மங்கள தீபாவளி' என்னும் வானொலி நாடகத்தை எழுதியுள்ளேன்.
காயத்ரி கண்ணம்மாவின் தயாரிப்பில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) இரவு மணி 7.30க்கு  மின்னல் பண்பலையில் நீங்கள் கேட்டு இரசிக்கலாம்.

தீபாவளிக்கு வீட்டுக்கு வரவேண்டிய நாயகனையும் நாயகியையும் காணவில்லை! என்ன ஆனார்கள் எங்கே போனார்கள்? அவர்கள் இருவருக்கும் என்ன சிக்கல்? பெற்றோர் ஒன்று நினைக்க வேறொன்று அங்கே நடக்கிறது... என்ன அது ? கேள்விகளுக்கு பதில்
தெரிந்து கொள்ள வானொலி நாடகத்தை கேளுங்கள்.

இந்நாடகத்தில் வி.ஜி.கிருஷ்ணன், அமீர் அப்பாஸ், புனிதகலா
மிஸ்.ராணி, ஈவராணி ஆகியோருடன் நானுமே நடித்துள்ளேன்.

சில ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் நான் எழுதிய வானொலி நாடகத்தில் நானும் ஒரு கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ளேன்.

வாய்ப்புள்ள நண்பர்கள் கேட்டு, இந்நாடகம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

அப்படியே என்னுடைய நடிப்பும் உங்களுக்கு பிடித்திருக்கிறதா என சொல்லுங்கள்.

உங்கள் அனைவருக்கும் என் அன்பு💙

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

அக்டோபர் 14, 2024

குழந்தைகளைக் கேட்கும் கதைகள்

 

இம்முறை மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றிருந்தோம். அங்குள்ள மாணவர்களுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகம் எற்பாடு செய்திருந்தது. சனிக்கிழமை காலை 9க்கு தொடங்கிய கதை சொல்லும் அங்கம் பிற்பகல் மணி 12க்கு நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் ம.நவீன், இளம் எழுத்தாளர் அரவின், எழுத்தாளர் விஸ்வநாதனுடன் நானும் சென்றிருந்தேன். வெள்ளிக்கிழமையே நாங்கள் புறப்பட்டோம். எங்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சனிக்கிழமை காலை பள்ளி தலைமையாசிரியர் திருமதி வாசுகியை சந்தித்தோம். அன்பாகவும் உற்சாகமாகவும் எங்களை வரவேற்றவர் பள்ளிக்கூடம்  குறித்தும் மாணவர்கள் குறித்தும் நேர்மறையானவற்றைப் பகிர்ந்து கொண்டார். அவரின் உற்சாகம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது.

எனக்கு தெரிந்து, மாணவர்களுக்கு எழுத்தாளர்களை அழைத்து வந்து கதை சொல்லும் நிகழ்ச்சியை ம.நவீன் தொடங்கினார். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்னமே அவர் இந்த (திட்டத்தை) நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதற்கும் நான் கதை சொல்லியாக சென்றிருந்தேன்.

இன்றைய நிகழ்ச்சியில் எங்கள் ஒவ்வொருவரையும் சிறப்பாகவே மாணவர்களுக்கு, ஆசிரியர்  ஒருவர் அறிமுகமும் அறிவிப்பும் செய்தார். தலைமையாசிரியரும் இன்றைய நிகழ்ச்சி குறித்து பேசினார். அவர்களை தொடந்து ம.நவீன் தான் இத்திட்டத்தை தொடங்கியதின் நோக்கத்தை தெளிவாகவே விளக்கினார்.

கதை சொல்லிகளாகச் சென்ற எங்கள் நால்வருக்கும் ஒருவருக்கு ஏறக்குறைய 15 முதல் 20 மாணவர்கள் என வழங்கப்பட்டார்கள். மாணவர்களுடன் எங்களுக்கான இடத்திற்கு நாங்கள் சென்றோம்.

எங்கள் நால்வருமே வெவ்வேறு விதமான கதை சொல்லிகள். நான்கு குழுவிலும் இருக்கும் மாணவர்கள் அவர்கள் எங்களிடம் கேட்ட கதைகளை இன்னொரு மாணவருக்கு சொல்லும்போது அது அவர்களுக்கு புலப்படும்.

தொடக்கமாக கதைகள் என்றால் என்ன? ஏன் கதைகள் சொல்லப்படுகின்றன? ஏன் எழுதப்படுகின்றன? யார் எழுதுகிறார்கள்? யாருக்காக எழுதுகிறார்கள்  என்ற அடிப்படையில் இருந்து என் பேச்சை தொடங்கினேன்.
என் முன் தயாரிப்பில் 25 கதைகளை எழுதி வைத்திருந்தேன். அதைத் தவிர்த்து மேற்கொண்டு ஐந்து கதைகளை பேசுவதற்கு மனதளவிலும் தயாராய் இருந்தேன்.

கதை கேட்க உற்சாகமாக இருக்கும் மாணவர்களிடம் 25 எண்களில் ஒரு எண்ணை தேர்தெடுக்க சொல்லி அந்தக் கதையை அவர்களுக்கு கூறினேன். அது மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தியது; மாணவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த எண்ணில் என்ன கதை இருக்கும் என தெரிந்து கொள்ள ஆர்வமானார்கள்.

ஒன்றின் பின் ஒன்றாக, நான் சிறுவயதில் வாசித்த கதைகள் முதல் இன்று எழுதப்படும் சிறுவர்களுக்கான கதைகளில் இருந்து ஒவ்வொரு கதைகளாக பேசினேன்.

ஒரு கதையை நான் சொல்ல ஆரம்பிக்க மாணவர்கள் அடுத்த என்ன நடக்கும் என யூகிக்கலானார்கள். அதில் அவர்களே நாயகனாகவும் நாயகியாவகும் இருக்க விரும்பினார்கள். இந்தக் கதைகள் எல்லாமே அவர்களின் நூல்நிலையத்தில் நிச்சயம் இருக்கும் என்றும் அந்தக் கதைகளை வாசிப்பதில் இருந்து நம்மால் எதை கற்றுக்கொள்ள முடியும் எனவும் விளக்கினேன்.


சினிமாவிலோ, ஓவியத்திலோ நாம் பார்க்கும் பெரிய கோட்டையும் அதன் வாசல் கதவும், நாம் வாசிக்கும் போது எவ்வாறு நம்மால் கட்ட முடிகிறது என்றும் அந்தக் கோட்டை சுவரையும் நம் நம் விருப்பத்திற்கு ஏற்ப எப்படி மாற்றலாம் என்று பேசி; மாணவ பருவத்தில் கற்பனை திறனை நமது கல்விக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் பேசினேன்.

மாணவர்களின் பங்கெடுப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்த இடத்திற்கு பின்னால் சில புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாணவி என்னையும் பார்த்து என்னால் பின்னால் அடுக்கியிருந்த புத்தகங்களையும் பார்த்து கொண்டிருந்தார்.  என்னவென்று விசாரித்தேன். அங்குள்ள ஒரு புத்தகத்தைக் காட்டி அந்தப் புத்தகத்தை எழுதியது நான் தானே என கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்பள்ளிக்கு இனிமேல்தான் என் புத்தகங்களைக் கொடுக்க வேண்டும் அதற்குள் என் புத்தகம் இங்கு எப்படி வந்திருக்கும் என திரும்பி பார்த்தேன். அங்கு பரமஹம் யோகானந்தரின் புத்தகம் இருந்தது. புத்தக முகப்பில் அவரின் முகம் பளிச்சிட்டு கொண்டிருந்தது. அந்த முகப்பிற்கும் என் முகத்திற்கும் ஒரே மாதிரியான சிகை அலங்காரம் ! இருந்தது. மாணவியின் சந்தேகத்திற்கான காரணம் புரிந்தது.

கதைகளின் இடையிடையில் கேள்வி கேட்டேன். பதில் சொன்ன அனைவருக்கும் சிறுசிறு பரிசுகளைக் கொடுத்தேன்.

வாசித்த கதைகள் மட்டுமல்லாது உண்மையில் நடந்த கதைகள், சிறைச்சாலையில் நான் பேட்டி கண்டவர்களின் என நான் சொன்ன கதைகள் மாணவர்களுக்கு பயனாக இருக்கும் என நம்பினேன். கதை சொல்லி முடித்ததும் மாணவர்கள் பிடிவாதமாய் என்னிடம் கையொப்பம் வாங்கினார்கள்.
மீண்டும் எங்கள் நால்வரையும் அழைத்து சான்றிதழ் வழங்கி நன்றியுரை ஆற்றினார்கள்.

வழக்கம் போல இந்தப் பள்ளிக்கூட நூல்நிலையத்திற்கும் நான் எழுதிய ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவது எப்படி?’ என்ற புத்தகங்களுடன் கவிஞர் பூங்குழலி வீரன் எழுதிய கவிதைத் தொகுப்பையும் அன்பளிப்பாக கொடுத்தேன்.

கதைகளை கேட்கும் மாணவர்களின் அடுத்த கட்டம் தாங்களும் அந்தக் கதைகளைத் தேடி வாசிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும் என்று நம்புகின்றேன். அதுவே அவர்கள் கதை எழுதுவதற்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும். இதற்கு ஆசிரியர்களுடன் பெற்றோருமே இணைந்து செயல்படவேண்டும்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

அக்டோபர் 10, 2024

எஸ்.ராவுடன் சந்திப்பு - 2

இவ்வாண்டு செப்டம்பரிலும் அக்டோபரிலும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மலேசியாவில் சில இடங்களில் உரை நிகழ்த்தினார். அதில் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றிருந்தேன். அதிலொரு நிகழ்ச்சியைக் குறித்து முன்னமே எனது வலைப்பூவில் எழுதியிருந்தேன். இரண்டாவது நிகழ்ச்சி குறித்த அனுபவத்தை இதில் எழுதுகிறேன்.

இந்த இரண்டாவது நிகழ்ச்சி மலாக்கா தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில்; மலாக்கா பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களின் சங்கத்தின் ஆதரவுடனும் மலாக்கா தம்ழர் சங்க கட்டிடத்தில் நடந்தது. ஆசிரியை மணிமேகலை மூலம் இந்நிகழ்ச்சி குறித்து அறிந்து கொண்டேன். அதோடு அந்நிகழ்ச்சியில் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில் இருந்து சில புத்தகங்களையும் விற்பனைக்கு கொண்டுவர அனுமதி கேட்டிருந்தேன். அவரும் அதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்தார். இவ்வேளையில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 இங்கும் ‘இலக்கிய இரசனையும் அழகியல் கூறுகளும்’ என்ற தலைப்பில் எஸ்.ரா  பேசினார். கூலிம் நிகழ்ச்சியில் பேசியதும் இந்த நிகழ்ச்சியில் பேசியதும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமலும் அதே சமயம் இரண்டும் இலக்கியத்தை நோக்கியதாகவும் இருந்தது.

இந்நிகழ்ச்ழியில் எஸ்.ராவின் உரை அதிகமே பசித்த மனிதர்களின் கதையையே சுற்றியிருந்தது.

புதுமைப்பித்தனின் இருந்து அவர் உரையைத் தொடங்கினார். குறிப்பாக புதுமைப்பித்தனுக்கு மலேசியாவில் சிறப்பு மலர் வெளியிட்டதையும் அதன் பின்னணியைல் குறித்தும் பேசியது எங்களை நிமிர்ந்து உட்கார வைத்தது. அந்த புதுமைப்பித்தன் மலர் இணையத்தில் இலவசமாக கிடைப்பதாகவும் சொன்னார். நான் தேடினேன் கிடைக்கவில்லை. 

நண்பர்கள் யாருக்கும் அந்த இதழ் கிடைத்தால் பகிருங்கள். அன்று புதுமைப்பித்தனுக்கு முதன் முறையாக சிறப்பு மலர் வெளியிட்ட மலேசிய வாசகர்கள்/ எழுத்தாளர்களுக்கும் இன்று புதுமைப்பித்தன் என்கிற பெயரையே அறியாமல் தங்களை இலக்கியவாதிகளாக முன்னிலைப்படுத்துகின்றவர்களுக்குமான வித்தியாசங்களை இன்றைய வாசகர்களும் எழுத்தாளர்களும் தெரிந்து கொள்ளட்டும்.

புதுமைப்பித்தன் மகளிடமே இல்லாத புகைப்படத்தை இந்த மலரில் இருந்து எடுத்துதான் அவருக்கு நினைவுப்பரிசாக கொடுத்ததையும் எஸ்.ரா கூறினார். அன்று அந்த மலர் வெளிவர காரணமாக இருந்த அனைவரும் நம் நன்றிக்குரியவர்கள் என்பதை மனதில் நினைத்து கொண்டேன்.

அதோடு புதுமைப்பித்தனின் கடைசி காலத்தின் நோய்மையையும் அவர் எதிர்கொண்ட சிக்கல்களையும் பேசி அங்கிருந்து பொய்க்குதிரை என்னும் புதுமைப்பித்தனின் சிறுகதைக்குள் நுழைந்தார். அவ்வப்போது புதுமைப்பித்தனின் சிறுகதைகளை மீள்வாசிப்பு செய்துவருகிறேன். அந்த வகையில் சமீபத்தில் இச்சிறுகதையை நான் வாசித்திருந்தேன். நான் வாசித்தபோது இக்கதையில் இன்றைய மனிதனை வைத்தும் பார்த்தேன்; ரொம்பவும் பொருத்தமாகதான் இருந்தது.

பொய்க்குதிரை சிறுகதை எங்கள் எல்லோருக்கும் எஸ்.ரா சொல்லிக்கொண்டிருக்கும் போது நாங்கள் அந்தக் கதைக்குள் நுழைந்துவிட்டோம். கதையின் முடிவில் தன் கணவனுக்கு சோறு போடும் போது அதில் மனைவியின் கண்ணீர்த்துளியும் சிந்தியை, அவர் பேசும்போது அரங்கமே அமைதியாய் இருந்தது. அதனை வெறும் கண்ணீ ராக கடந்து செல்ல விடாமல் அதன் பின்னணியிலும் பலவற்றை பேசினார்.


பின்னர் அவரின் உரை பசியின் பக்கம் வந்தது. மணிமேகலை அட்சயப்பாத்திரம் குறித்து பேசி அங்கிருந்து பஷீரின் ‘பிறந்தநாள் சாப்பாடு’ வரை  உரையைக் கொண்டு சென்றார்.

ஹிட்லரை வணங்காத மனிதனைப் பற்றி பேசினார். அது ரொம்பவும் சுவாரஷ்யமாக இருந்தது. ஹிட்லரை வணங்காத  அந்த மனிதன் எதிர்க்கொண்ட சிக்கலையும் ஒருபோதும் உண்மைக்கு புறம்பாக இருக்க விரும்பாத அந்த மனிதனின் மன உறுதியையும் பேசி; சாமான்ய மனிதன் தான் பிடித்து கொண்டிருக்கும் உண்மையுன் மூலமாக உலகம் அறியும் இடத்திற்கு சென்றதைக் கூறி; இன்றும் அந்த மனிதனின் நினைவிடத்திற்கு மக்கள் வந்து போவதைச் சொன்னார்.

கேள்வி நேரம் வந்தது; வழக்கம் போல இலக்கியத்திற்கு அப்பாலிருந்து தமிழ்ப்படங்களுக்கு ஏன் தமிழில் பெயர் வைப்பதில்லை எனத்தொடங்கி தமிழர் யார் திராவிடர் யார் என நுழைந்து இலக்கிய கேள்விகள் வருவதற்கு முன்பாக நேரம் முடிந்துவிட்டது.

 மலாக்கா தமிழர் சங்கத்தில் நூலகமும் வைத்திருந்தார்கள். அதற்கு இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது நூலகம் என்றும் பெயரிட்டிருந்தார்கள். வழக்கம் போல அந்த நூலகத்திற்கும் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை சார்பாக நான் எழுதிய புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்தேன். 

நிறைவாக; இன்றைய நிகழ்ச்சியில் எஸ்.ரா சொன்னதை ஒட்டுமொத்தமாக ஒரு வாக்கியமாக சுருக்கி நான் இவ்வாறு புரிந்து கொள்கிறேன். அது ‘சொற்களை நம்புங்கள்’.

நான் அதைத்தான் முழுமையாக நம்புகிறேன். அதன் பொருட்டுதான் வாசிக்கிறேன் எழுதுகிறேன்.


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்

அக்டோபர் 09, 2024

எஸ்.ராவுடன் சந்திப்பு 1 (2024)

என் தொடர் வாசிப்பிற்கு எழுத்தாளர் எஸ்.ராவின் பங்கு மிக முக்கியமானது. தொடக்க கால வாசிப்பில் ‘என்ன வாசிக்கலாம்?’ என்கிற அடிப்படை சிக்கலை எதிர்க்கொள்ள எஸ்.ராவின் எழுத்துகள் பெரிதும் உதவின. பல படைப்புகளை அறிமுகமும் செய்தன.

அவர் எழுதுகிறார் நான் வாசிக்கிறேன் என்பதைத்தாண்டி; எனக்காக அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று தேடும் அளவிற்கு அவரின் எழுத்துகள் என்னை வாசிக்க வைத்தன. ஈர்த்துவிட்டன. அவரின் அனுபவ கட்டுரைகள் பெரும்பாலும் என் நினைவை விட்டு நீங்காதவை.

இரண்டாவது முறையாக எஸ்.ராவை சுங்கை கோப், பிரம்மவித்யாரண்யத்தில் சந்தித்தேன். ‘இலக்கிய இரசனையும் அழகியல் கூறுகளும்’ என்ற தலைப்பில் பேசினார். அவரின் எழுத்தை போலவே அவரது குரலிலும் எனக்கான செய்தி இருப்பதாக உணர்கிறேன். அதிகம் அதிராத நிதானமான குரல். ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடைவெளியை புன்னகையாய் நிரப்புவார்.  

எஸ்.ராவை முதன் முறையாக 2011-ஆம் ஆண்டில் மலேசியாவிலேயே சந்தித்தேன். (அந்தச் சந்திப்பையும் பதிவாக எழுதியிருப்பேன்.) சிறுகதைப் பட்டறையை வழிநடத்த வந்திருந்தார். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அவரை அழைத்திருந்தார்கள். அதன் பிறகு தமிழகத்தில் நடக்கும் புத்தகக்கண்காட்சியில் சந்தித்தேன். மூன்றாவது முறையாக மீண்டும் மலேசியாவிலேயே சந்திக்கிறேன்.

நாம் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர் நம் பெயரை நினைவில் வைத்திருப்பது நமக்கு கிடைத்திருக்கும் அன்பு என நம்புகிறேன். நிகழ்ச்சிக்கு முன்பாக என்னைச் சந்தித்ததும் பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார்.

எஸ்.ராவின் ‘கர்னலின் நாற்காலி’ என்னும் குறுங்கதை புத்தகத்தில் பல பெயர்களுக்கு மத்தியில் என் பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருப்பார். நான் கொஞ்சமும் எதிர்ப்பாராத ஒன்று.

மனம் சஞ்சலமடையும் சமயங்களில் நான் எடுத்துப் புரட்டிப்பார்க்கும் புத்தகங்களில் எஸ்,ராவின் புத்தகங்களுக்கு முதலிடம் உண்டு. அவர் அறிமுகம் செய்த புத்தகங்களை குறித்து வைத்து எனது வாசிப்பு பட்டியலில் இணைத்தும் வாசித்தும் வருகின்றேன்.

எனது மூன்றாவது புத்தகமான ‘குறுங்கதை எழுதுவது எப்படி? – 108 குறுங்கதைகள் என்னும் குறுங்கதைத் தொகுப்பை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன்.

அவரைச் சந்தித்த இந்த நேரத்தில் நான் எழுதிய புத்தகங்களை அவருக்கு கொடுத்தேன். சமர்ப்பணம் செய்திருக்கும் பக்கத்தை அவரிடம் திறந்து காட்டினேன். வழக்கமான புன்னகையைப் பரிசளித்தார்.

இன்றைய சொற்பொழிவை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தொடங்கி வைத்தார். எனது பதின்ம வயதில் இருந்து நான்  பார்த்துக்கொண்டிருக்கும் அதே முகத்துடனே சுவாமி இப்போதும் இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் தனிப்பட்ட முறையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் முக்கியமான தருணமாக அந்த நேரம் அமைந்தது.

ஆசிரமத்தில் இருக்கும் நூல் நிலையத்திற்கு எனது புத்தகங்களில் சில பிரதிகளைக் கொடுத்து, அடுத்தடுத்த் திட்டங்களுக்கு சுவாமியிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன்.

இந்த நிகழ்ச்சியில் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தகங்களையும் விற்பனைக்கு வைக்கும் வாய்ப்பையும் சுவாமி கொடுத்து உதவினார். அவருக்கும் என் நன்றி.

அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் கோ.புண்ணியவான் எஸ்.ராவை அறிமுகம் செய்தார். அவரை வாசிக்காதவர்களுக்கும் அவரின் எழுத்துகளைத் தேட வைக்கும்படிக்கு அந்த அறிமுகம் இருந்தது. நிகழ்ச்சியை எழுத்தாளர் கே.பாலமுருகன் வழிநடத்தினார்.

‘ஆசை முகம் மறந்து போச்சே தோழி’, ‘எத்தனைக்கோடி இன்பங்கள்!’ போன்ற வார்த்தைகளின் பின்னணியை இன்றைய தலைப்பில் தன் பேச்சைத் தொடங்கினார். மகிழ்ச்சியின் உச்சமாகவும் , துயரத்தின் உச்சமாகவும் கண்ணிரே இருப்பதையும் உதாரணங்களோடு பேசினார். காந்தியின் வாழ்க்கையில் இருந்து காஃப்காவின் உருமாற்றம் நாவல்வரை வந்த அவரின் பேச்சு அரங்கில் இருந்தவர்களைப் பெரிதும் கவர்ந்தது.

கோலாலும்பூரில் இருந்து நானும், இளம் எழுத்தாளர் பிருத்விராஜூம் அவரைவிட இளம் எழுத்தாளரான! ஶ்ரீகாந்தனும் சென்றிருந்தோம். ஆசிரமத்திலேயே ஒருநாள் நாங்கள் தங்கினோம். எங்களோடு எழுத்தாளர் கோ.புண்ணியவானும் எழுத்தாளர் அ.பாண்டியனும் தங்கினார்கள். இந்த நிகழ்ச்சியின் வழி பல எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

என் பெயர் அச்சிடப்பட்ட புத்தகத்தை எஸ்.ரா அவர் கையில் இறுக்க பிடித்திருந்ததைப் பார்க்கையில் கொஞ்சம் சிலிர்க்கவும் செய்தது. ஒவ்வொரு தருணத்தையும் எழுத்தாளர் பிருத்விராஜு புகைப்படங்களாக ஆவணப்படுத்தினார், இச்சமயத்தில் அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



அக்டோபர் 07, 2024

வாசிப்பின் கொண்டாட்டம் 2


இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை வாசித்த புத்தகங்கள் பற்றி 'வாசிப்பின் கொண்டாட்டம்' என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.

ஜூலை முதல் செப்டம்பர் வரை வாசித்தவற்றை குறித்து இந்தப் பதிவை எழுதுகிறேன். இவ்வாண்டு முடிய இன்னும் மூன்று மாதங்களே இருக்க, அடுத்து வாசிக்க வேண்டியதின் மீது கூடுதல் கவனம் கொடுப்பதற்கு இந்தப் பதிவு உதவும்.

எண்ணிக்கை என்பதை தாண்டி பல சிக்கல்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் புத்தகங்களை வாசிப்பது என்பதே நாம் தொடர்ந்து செயல்படுகின்றோம் என்பதை நமக்கே நாம் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துதானே.


நாவல்

1. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

2. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா


கவிதைகள்

3. நீராலானது - மனுஷ்ய புத்திரன்

4. குஞ்ஞுண்ணி கவிதைகள் - பா.ஆனந்தகுமாரின் தமிழாக்கம்

5. நான்சென்ஸ் - நாச்சியாள் சுகந்தி

6. ஒரு இரவின் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது - முகுந்த நாகராஜன்


பிற

7. எப்போதும் வாழும் கோடை - மனுஷ்ய புத்திரன்

8. ஜென் கதைகள் - கி.அ.சச்சிதானந்தம்

9. கதை to திரைக்கதை - ஜா.தீபா

10. எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்

11. சின்னஞ்சிறு பழக்கங்கள் - Atomic Habits

12. The Art of Public Speaking - Dale Carnegie

இவ்வாண்டின் வாசிப்பு திட்டத்தில் மாதம் ஒரு நாவலை வாசித்தல் என்று முடிவெடுத்திருந்தேன். இஇதுவரை ஒன்பது நாவல்களை வாசித்து அதை சாத்தியப்படுத்தியும் வருகிறேன்.  ஒரு நாவலை வாசிக்கும் போது அதனை வாசித்து முடிக்கும் போதான மனநிலையை புரிந்து கொள்ளவே கொஞ்சம் நாளானது. இடையிடையில் இலகுவான வாசிப்பைக் கோரும் நாவல்களையும் இணைத்து வாசிப்பில் சிறு விளையாட்டையும் செய்ய வேண்டியிருந்தது. இதற்கிடையில் வாசிக்கும் உதிரி சிறுகதைகளைக்கு பெரிய பட்டியலே போடலாம்.

 பெரிய இலக்கை அடைவதற்கு முன் சிறுசிறு இலக்குகளைக் கடப்பதும்; கடப்பாற்காகவே சிறுசிறு இலக்குகளை உருவாக்குவதும் ஒரு வகையில் விளையாட்டுதானே.

மீதமுள்ள மூன்று மாதங்களில் இப்பட்டியலில் இணையவுள்ள புத்தகங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளவும் வாசித்து புரிந்து கொள்ளவும் நானும்கூட ஆவலாகத்தான் இருக்கிறேன்.


வாசகசாலையின் 100வது இதழ்

 வணக்கம் நண்பர்களே,

வாசகசாலை தனது 100வது இணைய இதழை வெளியிட்டுள்ளது. நீண்ட பயணமும் அர்த்தமுள்ள செயலூக்கமும் கொண்ட வாசகசாலை நண்பர்களுக்கு என் அன்பு.

இந்த 100வது இதழில் பலர்  எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். அதில் இளம் படைப்பாளிகளும் அடக்கம்.

இந்த இதழில் நான் உட்பட மலேசியாவில் இருந்து 6 பேரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. கொஞ்சம் நேரமெடுத்து இந்தப் படைப்புகளை வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால் நாங்கள் மகிழ்வோம்.

எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும்,

1. உமாதேவி வீராசாமி எழுதிய 'வேட்டை' 

2. ம.பிருத்விராஜூ எழுதிய 'சூப்பர் ஹீரோ'

3. இராஜலெட்சுமி எழுதிய 'உத்தரவு'

4. அகிப்ரியா எழுதிய 'வளர்பிறை'

5. இ.லீ.யுவேந்திரன் எழுதிய 'கரடியும் எருமையும்'

6. தயாஜியின்  குறுங்கதைகள்


மலேசிய படைப்புகள் அல்லது மலேசிய எழுத்தாளர்கள் என்றால் குறிப்பிட சிலரையே பலரும் பேசுகின்றீர்கள் வாசிக்கின்றீர்கள். அவர்களை தவிர்த்து எழுதுகின்றவர்களையும் நீங்கள் வாசிக்க வேண்டும். 

ஆனால் மிகச்சரியாக மோசமான ஒரு படைப்பையோ! எழுத்தாளராக தன்னைச் சொல்லிக் கொள்பவர்களையோ! படித்துவிட்டு நட்பும் பாராட்டி கொள்கிறீர்கள். 

வாசகசாலை இதழில் பங்குபெற்றிருக்கும் இந்த எழுத்தாளர்கள்  முற்றிலும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் என பொருள் கொள்ளலாம். 'மலேசியாவில் 20 ஆண்டுகளாக புதிய எழுத்தாளர்களே இல்லை...' எனக்கூறும் போலி கருத்துக்கணிப்புகளைக் கண்டிக்கும் அதே வேளையில் புதிதாக எழுதுகின்றவர்களுக்கும் நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும்.

இவர்கள் படைப்புகளை, நிற்க.....

இப்படி சொல்ல விரும்புகிறேன். எங்கள் படைப்புகளை வாசியுங்கள் வாசித்து உங்கள் பார்வையைப் பகிருங்கள். எங்கள் குறைநிறைகளைச் சொல்லுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

மலேசிய படைப்பாளிகள் என்று நீங்கள் நினைக்கையில் எங்கள் பெயர்களையும் உங்கள் நினைவில் வைத்துக்கொள்ளும்படிக்கு தொடர்ந்தும் சிறப்பாகவும் எழுத உழைக்கிறோம்.

இணைய இதழின் இணைப்பு...

https://vasagasalai.com/kurunkathaikal-taya-ji/


நன்றி #வாசகசாலை 

அன்புடன் #தயாஜி 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்