ஜூலை இறுதி வாரத்தில், 38-ஆவது பேரவை கதைகளுக்கு அல்லது அப்போட்டிக்கு சிறுகதைகளை எழுத விரும்புகின்றவர்களுக்கு ‘சிறுகதை பட்டறையை’ ஏற்பாடு செய்திருந்தார்கள். இணையம் வழி சந்திப்பு.
அதில் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் எழுத்தாளர் விஜலெட்சுமியும் பயிற்றுநர்களாக இருந்தார்கள். இந்த இருவரும், இருவரின் எழுத்துகளும் எனக்கு பரிட்சயம் என்பதால் நானும் ஒரு பார்வையாளனாக பங்கெடுக்க விரும்பி திகதியைக் குறித்துக்கொண்டேன்.
பின் மிகச்சரியாக அந்த நாளை மறந்திருந்தேன். சரியான நேரத்தில் இளம் எழுத்தாளர் பிருத்விராஜு நினைவுப்படுத்தி சந்திப்பிற்கான இணைப்பையும் அனுப்பினார். உடனே இணைந்துவிட்டேன்.
தொடக்கமாக எழுத்தாளர் கோ.புண்ணியவான் சிறுகதைகள் குறித்து பேசத்தொடங்கினார். எனக்கு தெரிந்து தேர்ந்த வாசிப்பின் வழி இலக்கியம் பேசுகின்றவர்கள் புதுமைப்பித்தனைப் பற்றி பேசாமல் இருக்கமாட்டார்கள். சில கதைகளைச் சொல்லும் போது இந்தப் பெயரை நினைவுக்கூராமல் இருக்கவும் முடியாது.
இதனை குறிப்பாக சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு:
இன்னமும் புதுமைப்பித்தனின் எழுத்துகளை வாசிக்காமலும்; சிறுகதைகளில் அந்த மனிதன் செய்த முயற்சிகளையும் சாதனைகளையும் அறிந்து கொள்ளாமலும் இங்கு இலக்கிய அந்தஸ்த்தை சுமந்து கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு பொன்னகரம் கதையின் முடிவு கூட புத்திக்கு புரியாமல்; என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு அப்படியா போவா? ச்சேச்சே அருவருப்பு என சொல்லிக்கொண்டே இளம் தலைமுறைகளுக்கு இலக்கிய உலகில் தாங்களே வழிகாட்டி என்பது மாதிரியான போஸ்டர்களை அடித்துக்கொள்கிறார்கள்.
எழுத்தாளர் கோ.புண்ணியவான், தனது உரையில் அதே பொன்னகரம் சிறுகதையைக் குறித்து பேசினார். ஒரு சிறுகதையை எப்படி அணுக வேண்டும் என்பதையும் அந்தக் கதை, அதில் தோன்றிய மனிதர்களுக்கு நியாயம் செய்திருக்கிறதா எனவும் குறிப்பிட்டார். அதனையடுத்து சங்குத்தேவனின் தர்மம் என்னும் சிறுகதையைக் குறித்து பேசினார். புதுமைப்பித்தனின் இந்த இரண்டு சிறுகதைகளும் பங்கேற்பாளர்களுக்கு எழுத்தாளர் மீது ஒரு தேடலைக் கொடுக்கும் என்றால் மகிழ்ச்சி.
சிறுகதைகளில் கையாளப்படும் யுக்திகளான, நனவோடை, அங்கதம், மாய எதார்த்தம் போன்றவற்றையும் கோடிகாட்டினார். அதோடு எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் சிறுகதை யுக்திகளையும் குறித்து பேசினார்.
காட்சியை எழுதுதல் என்பதற்கும் காட்சிப்படுத்துதல் என்பதற்குமான வித்தியாசங்களைப் பேசியவர், ‘காட்சி மொழி’ சிறுகதைகளுக்கு ஏன் முக்கியம் எனவும் விளக்கம் கொடுத்தார்.
வழக்கமாக சிறுகதைகள் குறித்து பேசுகிறேன் என்பவர்கள் உள்ளூர் படைப்பாளிகளைப் பேசுவது குறைவு. தமிழகத்து அல்லது வெளிநாட்டு எழுத்தாளர்களை பெயரளவிலாவது தெரிந்து கொண்டு இவர் பேசுவதை கேட்கவே நமக்கு சமயங்களில் சிரிப்பு வந்துவிடும். அந்தவகையில் கோ.புண்ணியவான் போன்ற ஒரு சிலர் தனது உரையாடலில் மலேசிய எழுத்தாளர்களைக் குறித்து பேசியதற்கு நன்றி.
எழுத்தாளர் சி.முத்துசாமியின் ‘இரைகள்’ சிறுகதையைக் குறித்தும் ரெ.கார்த்திகேசு எழுதிய மல்லியும் மழையும் சிறுகதைக் குறித்தும் பேசி, வாசக இடைவெளி எப்படி வெளிப்படுகின்றது என சுட்டிக்காட்டினார்.
படைப்பில் வெளிப்படும் ‘கலையமைதி’ குறித்து பேசும் போது, கல்லிற்கும் சிற்பத்திற்கும் உள்ள வேறுபாடு, வெறும் சுவருக்கும் ஓவியம் வரையப்பட்ட சுவருக்கும் இருக்கும் வேறுபாடுகளைக் கூறியது ரொம்பவே கவர்ந்தது.
அதனையடுத்து, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘புத்தனாவது சுலபம்’, ஜெயமோகன் எழுதிய ‘தேவகி சித்தியின் டைரி’ போன்ற கதைகளைக் குறித்தும் பேசினார்.
கோ.புண்ணியவான் அவரின் உரையில் நிறைவாக தேய்வழக்கு குறித்தும் பேசி முடித்தார்.
அவரையடுத்து எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூலகருமான விஜயலெட்சுமியும் பேசினார்.
இப்போட்டிக்கு இதற்குமுன் வந்திருந்த சிறுகதைளிலிருந்த சிக்கலையும் எழுத்தாளர்களின் கவனக்குறைவையும் பேசி, எப்படியான சிறுகதைகள் கவனம் பெறும் என்பதையும் விளக்கினார். சில மலேசிய சிறுகதைகள் குறித்து பேசினார். தங்களுக்கு கிடைக்கும் சிறுகதைகளில் பெரும்பாலானவை கதைச்சுருக்கமாக இருப்பதையும், நாவல் சுருக்கம் போல இருப்பதாகவும் சுட்டிக்காட்டியவர், சிறுகதையென்பது ஒரு தருணத்தையோ ஓர் சம்பவத்தையோ ஓர் உணர்வையோ மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்றார்.
பின் கேள்வி நேரத்தில், பங்கேற்பாளர்கள் தங்களின் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றார்கள்.
வெறுமனே கதை எழுதும் போட்டிகளை அறிவித்துவிட்டு கடந்துவிடாமல், போட்டிக்கு எழுத விரும்புகிறவர்களுக்கு இம்மாதிரி பட்டறைகளையோ விளக்க கூட்டங்களையோன் நடத்துவது வரவேற்கத்தக்கது. போட்டிக்கு எழுதுபவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் அது பயனான இருக்கும்.
எதையும் எழுதுவதற்கு முன்பாக என்ன எழுதுகிறோம் எதற்கு எழுதுகிறோம் எப்படி எழுதுகிறோம் என்பது மிகவும் முக்கியம். அதோடு போட்டிக்கு எழுதும்போது அவர்களின் விதிமுறைகளைப் புரிந்து கொள்வதும் முக்கியம்.
ஏனெனில் குலைந்த அமைதியை எழுதுவதும் அமைதியை குலைக்காமல் எழுதுவது இருவேறு இடங்களுக்கு போகவேண்டிய எழுத்து. இரண்டையுமேதான் நாம் எழுத வேண்டும்.
இந்த பட்டறையில் பங்குபெற்று இரு எழுத்தாளர்கள் மூலம் விளக்கம் பெற்றவர்கள் யாரேனும் சிறுகதை எழுதி வென்றால் எது எல்லோருக்குமே மகிழ்ச்சிதான்.