‘மலேசிய நாவல்கள்’ – தொடக்கமாக ….
‘மலேசிய நாவல்கள்’ – தொடக்கமாக ….
தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை
வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள்
குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார்.
116 பக்கங்களில் அவ்வாறு இருபத்து நான்கு நாவல்கள் பற்றி எழுதியிருப்பது ஆச்சர்யம்தான். அதைக்காட்டிலும்
அத்தனை நாவல்களை வாசித்திருப்பது அதைவிடவும் ஆச்சர்யம்.
தொடக்கமாக
‘மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்’ என்கிற கட்டுரையை எழுதியுள்ளார். இந்த தொகுப்பிற்கான
காரணத்தையும் அதன் தேவையையும் இதன் வழி தெளிவுபடுத்த முயன்றுள்ளார். முக்கியமான கட்டுரையாகவும்
இது அமைந்துள்ளது. பொதுவாக ரசனை விமர்சனம் மீதான பார்வையை பலரும் பலவாறாக புரிந்துக்
கொள்கிறார்கள். அதனை குறைத்தும் மதிப்பிடுகின்றார்கள். இக்கட்டுரை ரசனை விமர்சனம் மீதான
பார்வை பலப்படுத்தியுள்ளது.
‘…. அதன் நோக்கம்
உரையாடல்களையும் விவாதங்களையும் உருவாக்குவதுதான். ரசனை இலக்கிய விமர்சனம் என்பது ஒரு
வாசகன், ஒரு புனைவின் மேல் சிறந்த வாசிப்பை வழங்கும் முயற்சி. அவன் அதில் உள்ள காட்சிகளைக்
கற்பனையால் நிகழ்த்திப் பார்க்கின்றார். மேம்பட்ட ஒரு பார்வையை வைக்கிறார். அது விவாதமாகின்றது.
பின்னர் அங்கிருந்து புதிய வாசிப்பு முறை உருவாகிறது.’ என்று கட்டுரையாசியர்
கூறுவதில் இருந்து ரசனை விமர்சனத்தின் அவசியத்தை நாம் புரிந்துக் கொள்ளலாம்.
ரசனை விமர்சனம் எப்போதும் நிலையான முடிவை சொல்வது
அல்ல. அது வாசகர்களுக்கு பல புதிய திறப்புகளைக் கொடுக்கின்றது. அதன் மூலம் ஏற்படும்
உரையாடல் மிக அவசியமான ஒன்று.
அவ்வாறான ரசனை விமர்சனத்தை புறக்கணிப்பதின் வழி யாருக்கும்
ஆவப்போது ஒன்றுமில்லை. ஆனால் அதனை நம் பார்வையில் இருந்து சொல்வதற்கு உழைக்க வேண்டியுள்ளது
, அப்படைப்பை வாசிக்க வேண்டியுள்ளது.
இப்புத்தகத்தை
வாசித்து, எழவிருக்கும் கேள்விகளை ஒரு வாசகனாக இருந்து நான் கவனிக்க வேண்டியுள்ளது.
ஏனெனின் சொல்லப்பட்டிருக்கும் நாவலை வாசிக்காமல் நாவல் பற்றிய விமர்சனத்தை வாசிப்பது
சமயங்களில் அந்நாவல் வாசிப்பில் இருந்து என்னை அந்நியப்படுத்திவிடும் வாய்ப்புகள் உள்ளன.
அதே சமயம் இக்கட்டுரைகளையொட்டிய என் கேள்விகளுக்கு ‘முதலில் நாவலை வாசிங்க அப்பறமா
பேசலாம்..’ என யாரும் சொல்லிவிட்டால் பிறகு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் அக்கேள்விகள்
என் சுய வாசிப்பிற்கு மிக அவசியமானது.
இனி ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்க வாசிக்க, அது
குறித்து நாம் பேசலாம்….
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக