பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

#புத்தகவாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#புத்தகவாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்ச் 19, 2022

புத்தகவாசிப்பு_2022_9_வாசிப்பின் வழிகள்


வாசிப்பின் வழிகள்

தலைப்பு – வாசிப்பின் வழிகள்

எழுத்து – ஜெயமோகன்

வகை – கட்டுரைகள்

வெளியீடு – விஷ்ணுபுரம் பதிப்பகம்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

 

‘வாசிப்பின் வழிகள்’ கட்டுரைத் தொகுப்பு மொத்தம் 21 கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் முன்னமே ஜெயமோகன் வலைத்தளத்தில் வெளிவந்தவை. வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் கொடுத்த முழுமையான பதில்கள் அவை. அவற்றை வாசிப்பு என்ற மையக்கருவைக் கொண்டு ‘வாசிப்பின் வழிகள்’ என்று புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்.

வாசிப்பு என்பது மிகவும் அகவயமானது. நாம் ஏன் வாசிக்கின்றோம். எதற்கு வாசிக்கின்றோம் என்பதற்கான பதில்கள் ஆளுக்கு ஆள் மாறுபடும். உண்மையில் நாம் சொல்லும் பதில்கூட சில ஆண்டுகள் அல்லது சில புத்தக வாசிப்புகளில் இன்னொரு பதிலாக பரிணாமம் அடைந்துவிடுவதைக் காணலாம்.

முகம் தெரியாத எழுத்தாளர்களிடம் வாசிப்பின் வழியே வாசகம் நெருக்கமாகிறான். அதே போலத்தான் வாசிப்பின் வழியே அந்த எழுத்தாளரை விரோதியாகவும் கற்பித்துக் கொள்கிறான்.

இலக்கிய உலகிற்கு நுழைய வாசிப்பைத் தவிர வேறோர் வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சரியான வாசிப்பு இல்லையெனில் கடைசி வரை இலக்கிய உலகில் கண்களற்றவர்களாக நாம் அலைந்து கொண்டிருப்படி ஆகிவிடுகிறது. இந்தச் சரியான வாசிப்பு எப்படி அமைகிறது எவ்வாறு அமைத்துக்கொள்ளப்படுகிறது என்பது வாசகனின் தேடலைப் பொறுத்தது. இன்னும் சொல்லப்போனால் வாசிப்பவர்கள் எழுத்தாளர்களாக ஆகத்தான் வேண்டுமா? என்றால் இல்லை. எழுத விரும்பாது வாசிப்பது மட்டுமே போதுமென இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தான் வாசித்தக் கதையில் அந்த எழுத்தாளர் என்ன சொல்கிறார் என்ன கவனிக்கவில்லை என அவர்களால் பேச முடியும் ஆனால் அவர்கள் எழுதுவதை விரும்புவதில்லை. வாசிக்கிறார்கள், வாசிப்பதில் மட்டுமே இன்பம் காண்கிறார்கள்.

இயல்பாகவே ஆரம்பகால வாசகனுக்கு வாசிப்பில் சில சிக்கல்கள் எழுவது இயல்பு. தொடர் வாசகனுக்கும் கூட ஒருவித சலிப்பு வருவதும் உண்டு. அவர்கள் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் பதில் ஒருவருக்கான பதிலாக அல்லாமல் அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரு பதிலை ஜெயமோகன் முன் வைக்கிறார். அது வாசிப்பவர்களுக்கு பல திறப்புகளைக் கொடுக்கிறது. இவர்கள் தங்கள் கேள்விகளை ஏன் ஜெயமோகனிடம் வைக்கிறார்கள்.  அவர் தரும் பதிலுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது அவரவர்க்கு மாறுபடலாம் அதே போல ஜெயமோகனின் பதில்களின் வழி ஏன் சிலர் அவரை புறக்கணிக்கின்றார்கள் என்பதும் அவரவர்க்கு மாறுபடும். ஆனால் முற்றாக அவரை புறக்கணிக்க முடியாது என்பது அவரை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.

‘வாசிப்பின் வழிகள்’ தொகுப்பில் எனக்கானக் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. ‘எழுத்தும் உடலும்’ என்ற கட்டுரையில் தூக்கம், உணவு, நேரம் இவை மூன்றும் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் எவ்வளவு முக்கியம் என சொல்கிறார்.

எது நவீன இலக்கியம் எது வணிக இலக்கியம் என உதாரணங்களுடன் விளக்குகிறார். ரஷ்ய இலக்கியங்களை வாசிப்பதற்கு வாசகன் எப்படி தன்னைத் தயார் செய்ய வேண்டும் என்கிறார். இலக்கிய விவாதங்கள் தற்சமயம் அதன் எல்லையைக் கடந்துவிடுவதாகத் தோன்றிலானும், ‘இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்’ என்ற கட்டுரையில் இராமலிங்க வள்ளலார் காலக்கட்டத்தில் இருந்து மேற்கோள் காட்டி நீண்ட கட்டுரையை எழுதியுள்ளார். இப்படி மேலும் பல தலைப்புகளில் எழுதியுள்ளார். அது ஒவ்வொன்றும் அடிப்படையில் வாசிப்பையே மையமாகக் கொண்டுள்ளது.

வாய்ப்பிருப்பின் என சொல்ல விரும்பாது; வாய்ப்பை ஏற்படுதுக்கொண்டு இந்நூலை வாசிக்க வேண்டும் என முன்மொழிகிறேன்

- தயாஜி

 

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

ஆகஸ்ட் 02, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘சிறு கதை – சிறுகதைகள் குறித்த கட்டுரை’

புத்தகவாசிப்பு_2021 ‘சிறு கதை – சிறுகதைகள் குறித்த கட்டுரை’

தலைப்பு – ‘சிறு கதை – சிறுகதைகள் குறித்த கட்டுரை’

வகை – கட்டுரை தொகுப்பு

தொகுப்பு – எஸ்.செந்தில்குமார்

வெளியீடு – எழுத்து பிரசுரம்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற முழுமுதல் முடிவாக சிறுகதையை அணுகுவது இப்போது சாத்தியமில்லை. தொடர்ந்து புது முயற்சிகளை பலர் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒன்று மாதிரி இன்னொன்று இருப்பதில்லை. ஆனால் அதனுள் கதைக்கான தேவை என்பது இருக்கவே செய்கிறது. அத்தேவைதான் இன்னமும் சிறுகதைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

சிறுகதைகளை ஒட்டிய பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் புத்தகம். ஒரே கேள்விக்கு பலர் பதில் கொடுக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் சிறுகதைகளைப் பற்றிய தலைப்பு கொடுக்கப்பட்டு கட்டுரையாக வந்துள்ளது. பதினெட்டு படைப்பாளர்களின் கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளது. சில பக்கங்களில் முடியும் சிறுகதையின் தாக்கம் எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைகின்றது என்பதை இக்கட்டுரைகள் எடுத்துரைத்திருக்கிறார்கள். 

ஒவ்வொருவரும் சிறப்பாகவே எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து எனக்கு நெருக்கமான சில கட்டுரைகளை சுருங்கக் கூற நினைக்கின்றேன். 

‘தொடக்கக்கால தமிழ்ச்சிறுகதை’ என்ற தலைப்பில் சு.வேணுகோபால் நீண்ட கட்டுரையைக் கொடுத்துள்ளார். கட்டுரை எழுதுவதற்கு அதற்கான தரவுகள் எத்தணை அவசியம் என்பதனை இக்கட்டுரை வழி அறிய முடிகின்றது. இவற்றையெல்லாம் நினைவில் இருந்து சொல்கிறாரா? குறிப்புகளை வைத்திருக்கிறாரா என தெரியவில்லை. பிரமிப்பைக் கொடுக்கவே செய்கின்றது. சாமுவேல் பவுல் ஐயர் எனும் தமிழ்க் கிறித்துவப் பாதரியார் 1877-ம் ஆண்டு ‘நாற்போரம்’ என்ற  கிறித்தவ மத இதழில் ‘சரிகைக் தலைப்பாகை’ என்ற சிறுகதையை எழுதியிருப்பதைச் சொல்கிறார். அதோ அச்சிறுகதையின் கதைச்சுருக்கத்தையும் சொல்கிறார்.

அம்மணிஅம்மாள் ‘சங்கல்பமும் சம்பவமும்’ என்கிற சிறுகதையை  1913-ம் ஆண்டு எழுதியதாகச் சொல்லி அக்கதையின் சாதனையையும் சொல்கிறார். இதுவரை இந்த அம்மையாரின் பெயரை எங்கும் வாசித்ததாக நினைவில் இல்லை. இப்படி பல புதிய காலத்திற்கு ஏற்ற  தகவல்களை  இக்கட்டுரை  முழுக்கவும்  சொல்லிக்கொண்டே  செல்கிறார்.

‘நதிமூலம்’ என்ற தலைப்பில் ஜீ.முருகன் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். தனக்கும் தன் கதைகளுக்குமான அகவயமான புறவயமான காரணங்களைச் சொல்லியுள்ளார்.
எழுத்தாளன் என்பவன்; 'எவற்றை எழுதுகிறான்', 'எதற்காக எழுதுகிறான்', 'எப்படியெல்லாம் எழுதுகிறான்' என்று மூன்று அம்சங்களாக பிரித்து எழுதியுள்ளார்.   ஒரு கதையின் நதிமூலத்தை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கொஞ்ச நேரத்தில் அவரின் அக்கதை எனக்கு பொறி தட்டியது. அச்சிறுகதையை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்விற்கு கொஞ்சமும் குறைவில்லாத ஒன்றாக அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது உணர்ந்தேன்.
கட்டுரையின் கடைசியில்தான் அச்சிறுகதையின் தலைப்பை அவர் சொல்கிறார். ஆனால் அதற்கு முன்னமே அதனை நான் கண்டுபிடித்துவிட்டத் எழுத்தாளரின் வெற்றியா வாசகரின் வெற்றியா எனத் தெரியவில்லை. யோசிக்கையில் வென்றது 'ஆப்பிள்' என்ற அச்சிறுகதைதான் என புரிகிறது.

        இதுவரையில் ஜீ.முருகனின் இரு சிறுகதை தொகுப்புகளை வாசித்துள்ளேன். சிலரிடம் பேசியும் உள்ளேன். ஆனால் வாசிப்பு அனுபவம் குறித்த அனுபவத்தை இன்னும் எழுதவில்லை. நிச்சயம் எழுதவேண்டும்.

‘வலசை வெளியிடையில்’  என்ற தலைப்பில் யூமா வாசுகி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரைக்கு 20 புத்தகங்களில் இருந்து பல குறிப்புகளை எடுத்தாண்டுள்ளார் ஆசிரியர். (கட்டுரையில் முடிவில் அப்புத்தகங்களின் தலைப்பு குறிப்பிடப்பட்டிருக்கும்). பண்நாட்டு நாடோடிக் கதைகளையும் அது எவ்வாறு இன்னொரு பிரதேசத்தில் சொல்லப்படிகின்றது என்பதை சுவாரஷ்யம் குறையாமல் சொல்லிச்செல்கிறார். குறிப்பாக ஜப்பான் நாடோடிக் கதைகளின் பின்னணி , துருக்கிக் கதைகளின் பின்னணி, லத்தீன் அமெரிக்க கதைகளின் தன்மை என வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தையும் தேடலையும் ஏற்படுத்துகின்றார்.

‘செவிமொழியும் மனமொழியும்’ என்ற தலைப்பில் யுவன் சந்திரசேகர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். வாய்மொழிக்கதைகளுக்கும் எழுத்து வடிவ கதைகளுக்குமான வித்தியாசங்களைப் பேசும் கட்டுரை. தன் சொந்த அனுபவத்தின் ஊடே கட்டுரையைக் கொண்டு செல்கிறார்.

‘மொழிபெயர்ப்புகளை ஏன் வாசிக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் எம்.கோபாலகிருஷ்ணன் ஒரு கட்டுரையைக் கொடுத்துள்ளார். மொழிபெயர்ப்புகள் மூலம் நமக்கு கிடைக்ககூடியவற்றை நேர்த்தியாக சொல்கிறார். மொழிபெயர்ப்புகள் மொழிக்கும் படைப்பாளர்களுக்கு புதிய சொற்களையும் புதிய வாசிப்பு அனுபவத்தையும் தருகின்றன. மொழிபெயர்ப்பின் மூலம் அறிந்த படைப்பாளர்களின் பட்டியலைக் கொடுக்கின்றார். தவறவிடக்கூடாத மொழியாக்கங்களை இக்கட்டுரையின் வழி கவனத்தில் கொள்ள முடிகிறது.

‘தமிழகத்திற்கு அப்பால் தமிழ் புனைவு வெளி’ என்ற தலைப்பில் சுனில் கிருஷ்ணன் ஒரு கட்டுரையைக் கொடுத்துள்ளார். தமிழகத்தைத் தாண்டியும் பிற நாடுகளின் படைப்பாளிகள் எவ்வளவு தங்கள் படைப்புகளை வெளியுலகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள் என பார்க்க முடிகின்றது. எது அப்படைப்பின் தனித்தன்மையாக அடையாளம் காட்டப்படுகின்றது என்பது முக்கியமான கேள்வி. குறிப்பாக இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளையும் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி எழுதியிருப்பது கவனிக்க வேண்டியது.

‘தமிழில் அறிவியல் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் கார்த்திக் பாலசுப்ரமணியம் ஒரு கட்டுரையைக் கொடுத்துள்ளார். என்னளவில் இப்போதைக்கு அதிகம் தேவைப்படும் ஒன்றாக இதனைப் பார்க்கிறேன். அறிவியல் சிறுகதைகள் எழுதுவதற்கு முன்பாக எது அறிவியல் எது தொழில்நுட்பம் என்கிற தெளிவு அவசியம். அதோடு வாசிக்க வேண்ட சில அறிவியல் சிறுகதைகளையும் கொடுத்துள்ளார். கொடுத்ததோடு நில்லாமல் அச்சிறுகதைகளின் குறைநிறைகளையும் கொடுக்கின்றார்.

நிச்சயம் வாசிக்க வேண்டிய தொகுப்பாக இத்தொகுப்பைச் சொல்லலாம். பல ஆளுமைகளின் பார்வையில் அவர்கள் எழுதியிருக்கும் இக்கட்டுரைகள் சிறுகதைகள் மீதான ஈர்ப்பையும் வாசிக்கும் நுட்பத்தையும் ஏற்படுத்தும். வாசிக்க வேண்டிய, தவறவிடக்கூடாத சிறுகதைகளை இங்கிருந்தும் நாம் வாசிக்க ஆரம்பிக்களாம்.

 

- தயாஜி

 


ஜூலை 08, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி’

 

புத்தகவாசிப்பு_2021 ‘வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி’

தலைப்பு –‘வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி’
வகை – குறுநாவல்
எழுத்து – நக்கீரன்
வெளியீடு – காடோடி பதிப்பகம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)



- வண்ணத்துப்பூச்சிகளில் விடுதி – விடுபட்ட அறைகள் -

 


        வாசிப்பில் ஏற்படும் சிக்கல்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் மிக முக்கியக் காரணங்களில் ஒன்று; அதிக எதிர்ப்பார்ப்புடன் ஒரு படைப்பை அணுகுவது. சமயங்களில் அப்புத்தகத்தை எழுதியவருக்காக, புத்தகத் தலைப்பிற்காக, புத்தகத்தின் உள்ளடக்கத்திற்காக இன்னொருவரின் பரிந்துரைக்காக என பல காரணங்கள் உள்ளன. ஏதோ எண்ணத்தில் நாம் வாசிக்க எடுத்த புத்தகம் நாம் நினைத்ததைத் தாண்டியும் நமக்கொரு அனுபவத்தைக் கொடுக்கும். பிரிதொரு சமயத்தில் அவ்வாசிப்பு நம் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்காது. எது எப்படி இருப்பினும் ஒரு வாசகனாய் நாம் என்னவெல்லாம் ஒரு படைப்பில் இருந்து பெற்றுக் கொள்கிறோம் எவ்வாறு விடுபட்டதைப் பூர்த்திச் செய்துக் கொள்கிறோம் என்பது வாசகரின் அகம் சார்ந்த கேள்வி.

        ‘வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி’ கவிஞர் எழுத்தாளர் சூழலியலாளர் என பண்முகத்தைக் கொண்டிருக்கும் நக்கீரன் அவர்கள் எழுதியிருக்கும் குறுநாவல். இவ்வாண்டு காடோடி பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. ‘காடோடி’ நாவல் மூலம் பரவாலக அறியப்பட்டவர். தன் சூழலியல் கட்டுரைகள் மூலம் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                இந்நாவல் பாலியல் தொழிலில் சிக்கிக்கொள்ளும் பெண்களைக் குறித்தும் தெரிந்தே வேறு வழி இன்றி இத்தொழிலுக்கு வந்தவர்கள் பற்றியும் பேசுகின்றது. மொத்தமே 66 பக்கங்கள் கொண்ட நாவல். ஆசிரியர் இக்குறுநாவலை பதினான்கு அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார். ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் போது, பட்டாம்பூச்சிகள் பற்றியக் குறிப்புகளை இணைத்துள்ளார். இதுவரை நமக்கு தெரிந்த பட்டாம்பூச்சிகள் குறித்தத் தகவல்களாக அல்லாமல் முற்றிலும் வேறு மாதிரியான தகவல்களாக அவை அமைந்துள்ளன. சொல்லப்போனால் பாலியல் விடுதியில் சிக்கிக்கொள்ளும் பெண்களின் மனநிலையையும் அந்த தகவல்களுடன் நாம் இணைத்துப்பார்க்கலாம்.

            உதாரணமாக; ‘ எல்லா வண்ணத்துப்பூசிகளையும் பறவைகளால் உண்ண முடியாது. சில வகைகள் தம் உடலில் தாவரங்களின் நஞ்சை ஏற்றி வைத்திருக்கும்’ என்கிற தகவலை இக்குறுநாவலில் வரும் சில காதாப்பாத்திரத்துடன் இணைத்துக் கொள்ள முடிகிறது. அது பொருந்தவும் செய்கிறது.

            உலகின் எல்லா தேசங்களிலும் பெண்களின் உடல்களை வைத்து வருமானம் ஈட்டும் கூட்டம் இருக்கிறது. அதிகமாய் பணம் புழங்கும் இடமாகவும் அதிகமாய் வன்முறை கட்டவிழ்க்கப்படும் இடமாகவும் அது இருக்கின்றது. அதில் விரும்பியும் கட்டாயத்தின் பெயரிலும் பல பெண்கள் வந்துச்சேர்கிறார்கள். சமயங்களில் ஆண்களும் பாதிக்கப்படுவதுண்டு ஆனால் இதுவரை அவர்கள் பற்றிய பெரிதாக யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

            இந்நாவலிலும் அப்படியான சில பெண்கள் வருகின்றார்கள். ஆளுக்கொரு பின்னணி. மனதை வருத்தும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வாழ்க்கைக் கதை. இதில் விந்தை என்னவென்றால் இவர்களை அறியாமலே யாரோ ஒருவர் இவர்கள் அனைவரையும் இயக்கிக் கொண்டே இருக்கிறார்கள் என இக்குறுநாவல் பேச முற்படுகின்றது. ஆனால் அது முழுமையற்ற ஒன்றாக நாயகனின் சாதாரண உரையாடலில் கடந்துவிடுகின்றது. இப்படி அழுத்தம் கொடுத்திருக்க வேண்டிய பல இடங்களில் சாதாரணமான உரையாடல் மூலமும் உரைநடை மூலமும் ஆசிரியர் கடந்து விடுகின்றார்.

            பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களில் உரையாடல் அதன் இயல்பில் இல்லாமல் தன்னை ஒரு கட்டுப்பாட்டில் வைத்து ஆசிரியர் எழுதியிருப்பதாகவே படுகின்றது. அல்லது இவ்விடத்தை இவ்வளவிற்கு பேசினால் போது மேற்கொண்டதை வாசகர்கள் முடிவெடுத்துக் கொள்வார்கள் என ஆசிரியர் நினைதிருக்கலாம்.


            பாலியல் தொழில் நடக்கும் இடத்தை இயல்பாகவே சொல்லிச்செல்லும் கதைகளில் அவர்கள் அன்றாட தேவைகளை ஆசிரியர் சொல்லும் போது நம்மையும் அது பாதிக்கச்செய்கிறது. நாளொன்றுக்கு தனக்கு கிடைக்கும் வருமானத்தை அறை வாடகைக்கும், தங்களை பாதுகாக்கும் நபருக்கும், தங்களின் தங்குமிட வாடகைக்கும் கொடுக்க வேண்டும். அது போக மீதப் பணமே அப்பெண்களின் சேமிப்பு. இப்படி தினமும் செலுத்த வேண்டிய கட்டணத்திற்காக குறைந்தது மூன்று வாடிக்கையாளர்களாவது தேவை. போதாததிற்கு தினமும் இருநூறு வெள்ளி சம்பாதிக்கலாம் என சொல்லித்தான் நாயகியை அழைத்து வந்திருக்கிறார்கள். அதற்கு தி னம் அவள் பத்து வாடிக்கையாளர்களையாவது சந்திக்க வேண்டும். அவர்கள் வெறும் பத்து வாடிக்கையாளர்கள் அல்ல, பத்துவித வினோதமான மனிதர்கள். அதில் சில மிருகங்களும் உண்டு. சில பார்வையாளர்களும் உண்டு. அவ்விடுதி எல்லாவித வதைகளையும் எல்லாவித ஏமாற்றங்களையும் எல்லாவித எதிர்ப்பார்ப்புகளையும் சுமந்துக் கொண்டே இரவை கழித்துக் கொண்டிருக்கிறது.

            நாயகிக்கு பாதிப்பைக் கொடுப்பதற்காகவே ஒரு மனநலம் பாதித்த! மனிதனை ஆசிரியர் நடமாட விட்டிருக்கின்றார். ஆழமாக காட்டியிருக்க வேண்டிய கதாப்பாத்திரத்தை வெறுமனே அதிர்ச்சிக் கொடுப்பதற்காகவும் கடைசி அத்தியாயத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டதாகத் தோன்றுகின்றது.

            ஐயா நக்கீரன் அவர்களால் ஒரு விளைவிற்கு முன்னால் இருக்கும் சர்வதேச அரசியலை எளிதாகச் சொல்ல முடிகின்றது. இக்குறுநாவலில் அதனை முழுமையாக பயன்படுத்திருக்கலாம். எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை மீண்டும் படைப்பாக்கம் செய்வதில் வாசகர்களை அப்படைப்பு ஏமாற்றக்கூடும். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், அவர்கள் சொல்லும் காரணம் அதனை நடத்துகின்றவர்கள், அது நடக்கும் இடம் போன்ற பல விபரங்கள் நம்மில் பல பேருக்குத் தெரிந்திருக்கும். சிலருக்கு நேரடி அனுபவமாகவும் சிலருக்கு இன்னொருவரின் அனுபவத்தின் மூலமாகவும் இன்னும் சிலருக்கு சமூக வலைத்தளங்களிலும் கிடைத்துவிடுகின்றது. இது போன்றவற்றைத் தாண்டி தத்தம் படைப்பில் எப்படி அவர்களை அணுகுகின்றோம் எவ்வாறு வாசகர்களுக்கு அவர்களைக் காட்டுகின்றோம் என்பதைப் பொறுத்தே அப்படைப்பு வாசகர் மத்தியில் வெற்றியா தோல்வியா என்பது தெரியும்.

        இந்நாவலை வாசித்து முடித்தப்பின், நாயகியைச் சுற்றி மட்டும் கதையை நகர்த்திருந்தால் ஆழமானச் சிறுகதையாக இது வந்திருக்கும் எனத் தோன்றியது. அல்லது இன்னும் ஆழமாக கதாப்பாத்திரங்களின் மனங்களையும் சொல்லும் படைப்பாக வந்திருந்தால் குறைந்தது 200 பக்கங்களில் ஒரு முழுமையான நாவலாக அமைந்திருக்கும். இப்போது முழு நாவலை, முடிந்தவரை சுருக்கமாக மீண்டும் சொல்லியது போல அமைந்திருக்கின்றது.

            சொல்லப்போனால், பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றவர்களும் மனிதர்கள்தான் அவர்களுக்குண்டான மரியாதையைக் கொடுப்பதற்கு ‘வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி’ குறுநாவல் ஒரு தொடக்கமாக அமையும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும். ஏனெனில் இதில் விடுபட்டதை இவர்கள் இருவர்தான் மீண்டும் எழுதவிருக்கின்றார்கள்.

புத்தகவாசிப்பு_2021 ‘கானகன்’

புத்தகவாசிப்பு_2021 ‘கானகன்’

தலைப்பு –‘கானகன்’ (யுவ புரஸ்கார் விருது பெற்ற நாவல்)
வகை – நாவல்
எழுத்து – லஷ்மி சரவணகுமார்
வெளியீடு – எழுத்து பிரசுரம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

        லஷ்மி சரவணகுமாரின் நாவல்; ‘கானகன்’. இந்நாவலைப் பற்றி எழுதும் போது பெரும்பாலானவர்கள் ஒரே வரியில் எழுதி சென்றதை கவனித்துள்ளேன். ‘புலியின் வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் நாவல்’ என எழுதுவதன் மூலம் தாங்களும் இந்நாவலை வாசித்துவிட்டோம் என காட்டுகின்றார்களே தவிர இன்னொரு வாசகர்களுக்கு இந்நாவலை அறிமுகம் செய்யும் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஒற்றை வரி விமர்சனத்தையும் ! (விமர்சனமா…?) நாவலின் பின்னட்டையில் பேராசிரியர் எஸ்.வி.ஆர் சொன்னதில் இருந்து எடுத்திருக்கின்றார்கள்.
வழக்கமாக எழுதுவது போல நாவல் வாசிப்பு குறித்து இம்முறை நான் எழுதப்போவதில்லை. இந்நாவலில் நான் கண்ட வேறொன்றை எழுத முயல்கிறேன்.

அதற்கு முன்;

        இயல்பாகவே லஷ்மி சரவணகுமாரின் எழுத்துகளில் மனதின் வெளிப்பாடுகளை காணலாம். அன்பாக கருணையாக காமமாக வன்மமாக மனிதனை அலைக்கழிக்கும் உணர்வுகளின் வெளிப்பாடுகளாகவே கதாப்பாத்திரங்கள் அமைந்திருக்கும். ல.ச.கு எழுதும் பெண்கள் பெரும்பாலும் வாசிக்கின்றவர்களை வசீகரிக்கவே செய்வார்கள். அப்படியும் பெண்களால் முடியுமா என்கிற கேள்வியை எழ வைத்து, அவள் நினைத்தால் இன்னும் கூட செய்ய முடிந்தவள் என்கிற எண்ணத்தை வாசகர்கள் மனதில் வர வைக்கும்.

        விரைவிலேயே ல.ச.குவின் எழுத்துகளின் பெண்கள் என யாரும் ஆயுவுகள் செய்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.

        அவரின் சிறுகதைகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். கானகன் நான் வாசித்திருக்கும் ல.ச.குவின் மூன்றாவது நாவல். ‘உப்பு நாய்கள்’ நாவலில் தொடங்கி ‘ரூஹ்’ பிறகு கானவன் நாவலை வாசித்து முடித்தேன். ரூஹ் நாவல் வாசிப்பு அனுபவம் குறித்து எழுதியுள்ளேன். ஆனால் இன்னவரைக்கும் அவரது ‘உப்பு நாய்கள்’ நாவல் பற்றி என்னால் முழுமையாக எழுத முடியவில்லை. மீண்டும் அதனுள் செல்ல இயலவில்லை.

இன்றுவரை அந்நாவலில் வரும் சம்பத்தை மறக்கவும் மறுக்கவும் முடியவில்லை.

        அந்நாவல் வாசித்த சில ஆண்டுகளில் அது போலவே; அதனைக் காட்டிலும் பல சம்பவங்களை கேள்விப்பட்டும் பார்த்தும் வந்திருந்தாலும் அந்த உப்பு நாய்கள் கொடுத்த அதிர்ச்சியும் காட்டிய வாழ்க்கையும் மனதில் அப்படியே இருக்கிறது.

இனி…

        கானகன், எழுத்துகள் வழி காட்சிகளை காட்டியபடி நகர்ந்துச் செல்கிறது. தங்கப்பனின் புலி வேட்டையில் நாவல் ஆரம்பமாகின்றது. அப்பழுக்கற்ற ஒரு வேட்டைக்காரனாக நாவல் முழுக்க தங்கப்பன் வருகிறான். அவனை எதற்காக நேசிக்கின்றோமோ அதற்காகவே அவனை வெறுக்கவும் செய்கிறோம். இவனல்லவா வேட்டைக்காரன் என சொல்ல வைத்து, ச்சே இவனெல்லாம் ஒரு வேட்டைக்காரனா என்கிற கேள்வியை எழ வைக்கின்றார் ஆசிரியர். எண்ணம் செயல் முழுக்க வேட்டைக்காரனான தங்கப்பன் காட்டின் வேட்டையிலும் கட்டிலின் வேட்டையிலும் தான் ஒரு தேர்ந்த வேட்டைக்காரன் என்பதை காட்டிக் கொண்டே இருக்கின்றான்.

        தன் மூன்றாம் மனைவிக்கு பிறந்த வாசியை முழுமனதாக தங்கப்பன் ஏற்றுக் கொள்ளும் போது அவன் செய்த எல்லா தவறுகளுக்கும் நாம் அவனை மன்னித்துவிடுகின்றோம். தனக்கு துரோகத்தால் தான் ஏமாற்றப்பட்டு கொலை செய்யப்பட போகின்றோம் என தங்கப்பன் அதிர்ச்சியாகும் போது நாமும் அதிர்ச்சியாகின்றோம். அதற்கு காரணமான வாசியை வெறுக்கின்றோம். ஆனால் நிலமையை அடுத்த சில வினாடிகளிலேயே உணர்ந்துவிட்ட தங்கப்பன் தனக்கு இதைவிட கௌரவமான சாவு வாய்க்காது என முழுமனதாக புலிக்கு தன்னை கொடுக்கின்றான். உண்மையில் நான் தங்கப்பனுக்காக வருத்தப்படுகின்றேன்.

            தான் நம்பியதை நம்பியபடியே செய்த ஒரு தேர்ந்த வேட்டைக்காரனுக்கு இப்படியா சூது செய்து சாவு வரவேண்டும். ஆனால், அவன் சாவு இந்த வனத்தை அபகரிக்க நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையப்போகின்றது என நினைக்கையில் அவனது சாவிற்கு வாசி கொடுத்திருக்கும் அர்த்தம் புரிகிறது.

            செல்லாயிக்கும் சடையனுக்கும் பிறந்தவன் வாசி. சடையனும் ஒரு சித்தன் போல சில இடங்களில் தென்படுகின்றான். அவன் ஓர் அப்பாவி பைத்தியம் என நம்ப வைக்கின்றான். துரத்திக் கொண்டு வரும் யானை கூட்டத்தின் முன்னே பெரிய யானையின் தோளில் அமர்ந்து அவற்றை விரட்டி மாவீரனாக மாறியும் விடுகின்றான். ஆசிரியர் அக்காட்சியை சொல்லியிருக்கும் விதம் வாசிக்கையில் அந்த யானை கூட்டத்தில் நாமும் சிக்கிக் கொண்டதாக நினைக்க வைக்கிறது.

            சடையனுக்கு பிறந்து அம்மா செல்லாயி உடன் தங்கப்பன் இருப்பிடத்தில் வாழ்ந்தாலும் தனக்குள் இருக்கும் தன் அப்பா சடையனை கண்டுக்கொள்ளவே வாசி முயல்கிறான். அவனைச் சுற்றி நடக்கும் அமானுஷ்யங்கள் ஆச்சர்யங்கள் எல்லாம் அவனை அவன் பிறப்பின் நோக்கம் அறிய அழைத்துச் செல்கிறது.

            தங்கப்பனின் நண்பனாக அவனை மனிதனாக பாவிப்பவனாக அன்சாரி வருகிறான். நாவலில் அன்சாரிக்கு முக்கிய இடம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், ஆண்களின் மனம் எத்தனை கொடுமை செய்யக்கூடியது எத்தனை அன்பு காட்டக்கூடியது என சொல்வதற்கு உதாரணமாக அமைந்திருக்கின்றது. அன்சாரிக்கு தங்கப்பனின் இரண்டாவது மனைவி மாரி மீது ஈர்ப்பு இருக்கின்றது. மாரிக்கும் இது ஓரளவிற்கு புரிந்தாலும் அவள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

        மாரியிடம் அன்பாகவும் பண்பாகவும் பழகிக் கொண்டிருந்த அன்சாரி, அவளை அடைவதற்கான வாய்ப்பு கை நழுவி செல்வதை தாங்காது மாரியிடம் மிருகமாக மாறுகின்றான். முரண்டு பிடித்தவள் இறுதியில் இறங்கிவிடுகிறாள். அன்பும் காமமும் யார் யாரை விட முக்கியமானவர்கள் என்கிற கேள்விக்கு இவர்கள் இருவருமே பதிலை தேடிக் கொள்கிறார்கள்.

        நாவலில் காட்டப்பட்டிருக்கும் முக்கியமான பெண் கதாப்பாத்திரங்கள்; தங்கப்பனின் மனைவி சகாயராணி , இரண்டாவது மனைவி மாரி, மூன்றாவது மனைவி செல்லாயி (சடையனின் மனைவி), ஜமிந்தாரின் மனைவி, குயிலம்மாள் (வாசியின் மனைவி).

        தன் கணவனின் இரண்டாம் மனைவில் மாரி, அன்சாரியை பிடித்திருப்பதாக சகாயராணியிடம் சொல்லும் போது அவள் அதனை புரிந்துக் கொண்டு பேசுவது முக்கியமான ஒன்று. ஒரு தாயைப் போல மகளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டவளாய் சகாயராணி தெரிகிறாள்.

          தான் பிறந்த குலத்தில் பெண்கள் வேட்டைக்கு செல்பவர்கள் அல்ல. மாறாக காட்டையும் அதன் ஜீவராசிகளையும் பாதுகாப்பவர்கள். ஆனாலும் தனக்குள் இருக்கும் வேட்டைக்காரியை இழந்துவிடாமல் அதற்காகவே தேர்ந்த வேட்டைக்காரனான தங்கப்பனிடம் செல்கிறாள் செல்லாயி. அவளை திரும்ப அழைக்கவும் விரும்பாத சடையன். அவள் விருப்பத்திற்கு எந்த தடையும் சொல்லவில்லை.


        நாவலில் வரும் ஜமீந்தாரின் பகுதி, தனி ஒரு நாவலாக நம்மை எழுத வைக்கிறது. மது மயக்கத்தில் எல்லோரும் மயங்கி உறங்கிவிட வாசியிடம் உறவு கொள்கிறாள் ஜமிந்தாரின் மனைவி.

        ஒரு பெண்ணை எத்தனை பூட்டு போட்டு பூட்டி வைத்தாலும் அவள் விரும்பினால் அன்றி எந்த பூட்டும் அவளை பூட்டிவிடுவதில்லை. அங்குதான் வாசி தான் ஒரு முழுமையான ஆணாகிவிட்டதை உணர்கிறான். மறுநாள் அனைவரும் வேட்டைக்கு கிளம்ப, கர்ப்பிணி மானை பலர் தடுத்தும் சுட்டுவிகிறார் ஜமிந்தார். வாசி உடனே மானிடம் சென்று அதன் வயிற்றில் இருந்து மான் குட்டியை வெளியில் எடுக்கின்றான். இக்காட்சி ஜமிந்தாரை ஏதோ செய்தது. அலறிக்கொண்டே ஓடியவர்தான் அதன் பின் திரும்பவே இல்லை. சில நாட்கள் கழித்து ஜமிந்தார் இல்லாமலேயே அவரின் குடும்பம் திரும்ப அவர்கள் ஊருக்கு செல்கிறது.

            யானை ஏன் ஊருக்குள் வருகிறது. கொல்லும் புலியை ஏன் கடவுளாக பார்க்கிறார்கள். காட்டில் வசிப்பவர்களை ஏன் விரட்டுகிறார்கள். அழியும் காடு யாருக்கு லாபத்தைக் கொடுக்கின்றது. போன்ற பலவற்றை இந்நாவல் வழி அறிய செய்கிறார் ஆசிரியர்.

        வழக்கமான வாசிப்பு அனுபவத்தை எழுதாமல், கானகன் நாவலில் உள்ள கதாப்பாத்திரங்களை எழுதியுள்ளேன். நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல்தான்.

            இன்னும் சொல்லப்போனால் ஒரு வரியில் இந்நாவலை சொல்லிவிட்டு கடந்து போகவே முடியாது. நான் சொல்லியிருப்பது மிகவும் குறைவுதான் இன்னும் அதிகம் எழுதலாம். அதற்கான அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கிய நாவல்தான் கானகன். நாவலை கொடுத்த லஷ்மி சரவணகுமாருக்கு அன்பும் நன்றியும்.

புத்தகவாசிப்பு_2021 ‘ரூஹ்’


புத்தகவாசிப்பு_2021 ‘ரூஹ்’

தலைப்பு –‘ரூஹ்’
வகை – நாவல்
எழுத்து – லஷ்மி சரவணகுமார்
வெளியீடு – எழுத்து பிரசுரம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)


- ரூஹ் – மனம் காட்டும் கண்ணாடி -



    வாசித்து முடித்ததும், அழுதுவிட்டேன். உண்மையில் வாசிக்கும் போதே அழ ஆரம்பித்துவிட்டேன்.
        
    நமக்குள் இருக்கும் நமது பலவீனங்களை அதன் நகர்வுகளையும் லஷ்மி சரவணகுமாரால் எளிதில் கண்டறிய முடிகிறது. அப்படித்தான் ‘ரூஹ்’ எனது பழைய நினைவுகளையும் எனது நண்பர்களின் வாழ்க்கையையும் மீள் செய்வதாக அமைந்திருந்தது.

    ல.ச.கு-வின் எழுத்துகளின் நமக்கு தெரியாத மனிதர்கள் பற்றிய அறிமுகம் எப்போதுமிருக்கும். அவர்களின் வன்மம், காமம், கனிவு, அன்பு, நம்பிக்கை, அழுகை, என பல திசையிலிருந்து கதாப்பாத்திரங்களை அவரால் ஒரு மையப்புள்ளியில் இணைக்க வைக்க முடிகிறது.

    வாசகர்களையும் அதில் சேர்ந்து பயணிக்க வைக்கிறது. தொடர்ந்து ல.ச.கு-வின் எழுத்துகளை வாசிக்கின்ற வாசகன் என்கிற முறையில் அவரது ‘ரூஹ்’ நாவலை பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை பகிர நினைக்கின்றேன்.

    ‘ரூஹ்’, தன்னை வெளிகாட்டிய வடிவம் புதுமையாக இருந்தது. காலத்தை முன்னும் பின்னும் நகர்த்தி அதனை ஒற்றை மையத்தில் கொண்டு வரும் யுக்தி நாவலை ஆர்வத்துடன் வாசிக்க வைக்கிறது.
மலாய் மொழியில் ரூஹ் (ROH) என்றால் ஆவி, ஆன்மா என்பதைக் குறிக்கும். புனித ஆத்மாவையும் அப்படி அழைப்பார்கள். இந்நாவலில் அப்படியான புனித ஆன்மாவாக ராபியாவைப் பார்க்க முடிகின்றது.

        பதினெட்டாம் நூற்றாண்டில் விலை மதிப்பற்ற பச்சை நிற கல்லை அதற்கான இடத்திற்கு சேர்ப்பதற்கு அஹமத் என்னும் தேர்ந்த மாலுமியுடன் சில ஞானிகள் பயணமாகிறார்கள். அக்கல் கொள்ளைப்போகிறது. அதனை மீட்க எதனையும் சந்திக்கத் துணிவுடன் அஹமத்தும் ஞானிகளும் மீண்டும் அந்த கடற்கொள்ளையர்களிடமே செல்கிறார்கள். அந்த கல்லால் ஈர்க்கப்பட்ட அரசன் அக்கல்லை கொடுக்க மறுக்கிறார். ஆனால் அந்த அரண்மனையில் இருந்தே கல் வெளியேற்றப்படுகிறது. அந்த பச்சை நிற கல், அரண்மனையில் இருந்து ஊர் ஊராய் செல்லும் பொம்மலாட்டக் கலைஞருக்கு கிடைக்கிறது. அக்கல் வேறொரு பயணத்தை ஆரம்பிக்கிறது.

        இதன் ஊடே இன்னொரு கதையாக, ஜோதியின் வாழ்க்கையும் நகர்கின்றது. ஜோதிக்கு பெண் குரல். அதனால் பல அவமானங்களையும் உதாசினங்களையும் சந்திக்கின்றான். தன் மூதாதையர்கள் தொன்று தொட்டு செய்து வைத்த பொம்மலாட்ட கூத்தில் அவனால் பங்காற்ற முடியவில்லை. ஜொதியை வாசிக்கும் போது நம்மால் அதனை எளிதில் கடந்துவிட முடியாது.

        மனமும் அதன் கட்டற்றத் தன்மையை ஒரு மனிதன் எதிர்க்கொள்வது சமயங்களில் ஆபத்தில் முடிந்துவிடுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆண்களால் ஜோதி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆழாகிறான். ல.ச.கு அதனை எழுதியிருக்கும் விதம் நம் தூக்கத்தை தொலைக்கிறது. மனிதனுள் இருக்கும் மிருகம் வேட்டையாட வெளி வரும் பொழுதுகளை அவரால் எளிதில் வாசகர்களுக்கு கடத்திவிட முடிகிறது. என் நண்பர்களில் சிலர் இது போன்ற சிக்கல்களால் காணாமலே போய்விட்டார்கள். அந்த வயதில் என்னால் புரிந்தும் புரியாமல் போன பல கேள்விகளுக்கு ஜோதியின் வாழ்க்கை மூலமாக பதில்களைக் கொடுத்திருக்கிறார்.

        இன்னொரு பக்கத்தில் , ஒரு தேவதை போல, எல்லோர்க்குமான அன்பை தானே சுமந்துக் கொண்டிருப்பதாக ராபியா அறிமுகம் ஆகிறாள்.

        ஒவ்வொருவர் வீட்டிலும் இப்படியான ஒருத்தி இருக்க வேண்டும் என ஆசைப்படும் அளவிற்கு ராபியாவை காட்டியுள்ளார். ராபியாவின் கணவன் அன்வரை நம் அன்றாக வாழ்க்கையில் சந்திப்போம். அன்வர், எல்லா துடிப்பு மிக்க இளைஞர்கள் போலவே தானே செயல்பட நினைத்து, முனைந்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அன்வருக்கும் ராபியாவிற்கு திருமணமாகிறது. அழகான மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்கிறார்கள். வாழ்க்கை சமயங்களில் நமது எந்த நிலையையும் தூக்கியெறிந்துவிடும். ராபியாவிற்காக நம்மை அழவும் வைக்கிறார். நல்லவர்களுக்குத்தான் எத்தனை சோதனைகள் எத்தனை வேதனைகள் என நினைக்கும் போது நம்மால் எப்படி அழாமல் இருக்க முடியவில்லை.

        கொள்ளைப்போகும் மரகத கல் – அமானுஷ்ய பயணம் , ஜோதியின் நிலையற்ற தன்மை – மன போராட்டம், ராபியாவின் அன்பும் அழுகையும் என மூன்று முடிச்சுகளும் ஒரு மையத்தில் வந்து நிற்கிறது.

நாவலில் ஆங்காங்கு வாசித்தவைகள் ஒரு கோட்டில் வருகின்றன.

            பாலோ கொயலோவின் ‘ரசவாதி’ என்னும் நாவலை சில இடங்களில் ரூஹ் நினைக்க வைத்தது. இரண்டிலுமே மையமாக இருப்பது மானிதனின் மனம் நம்பும் ஒன்றிற்கான பயணத்தை இப்பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்கின்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம்.
ரூஹ்- வாழ்க்கையின் விளையாட்டு எங்கிருந்தும் அடுத்ததொரு பயணத்தை கொடுக்கும் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது. லாபங்களை போன்றதே இழப்புகளும் , சிரிப்பை போன்றே அழுகையும் என்கிற தேற்றுதலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றது.

            வழக்கத்திற்கு மாறாக இந்நாவல் வாசிப்பைக் குறித்து குறைவாகே எழுதியுள்ளேன். ஒரு கண்ணாடி போல பல இடங்களில் என்னை எனக்கு காட்டிய இந்நாவலில் பல நாட்கள் தொலைந்திருந்தவன் நான். நீங்களும் உங்களை கண்டுணர்ந்து தொலைய வேண்டும் என்பதற்காகவே நாவலின் முழு சித்திரத்தையும் கொடுக்க விரும்பவில்லை.

        நான் எதை எப்படி சொல்லியிருந்தாலும், வாசிப்பவர்களுக்கு வேறொரு வாசிப்பு அனுபவத்தையேக் கொடுக்கக்கூடய நாவல் இது.

மே 26, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘மாறிலிகள்’

புத்தகவாசிப்பு_2021 ‘மாறிலிகள்’

தலைப்பு –‘மாறிலிகள்’

வகை – சிறுகதை தொகுப்பு

எழுத்து – சித்துராஜ் பொன்ராஜ்

வெளியீடு – அகநாழிகை

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

 

‘மாறிலிகள்’. சிங்கை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு. இச்சிறுகதை நூல், 2016-ம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கிய விருதினைப் பெற்றது. இந்நூலுக்கு 2017-ம் ஆண்டின் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘கரிகாற்சோழன்’ விருதும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சித்துராஜ் பொன்ராஜ் தன் இளவயது முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறவர். மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருகிரார். தமிழில் இருந்து சிறுகதை, கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் இருந்து சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழ்மொழியில் பெயர்த்திருக்கிறார். கன்னடத்தை வீட்டின் மொழியாகக் கொண்ட இவர், சமஸ்கிருதம், ஹீப்ரூ, பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளிலும் தேர்ச்சிக் கண்டவர்.

இச்சிறுகதை தொகுப்பிற்கு ஆசான் ஜெயமோகன் முன்னுரை கொடுத்திருக்கின்றார்.

சென்ற இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதி என்று சித்துராஜ் பொன்ராஜின் மாறிலிகளைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தமிழில் சில சிறுகதைத் தொகுதிகள் முதன்மையான படைப்பாளிகளின் வரவை அறிவித்ததனால் இன்றும் நினைக்கப்படுபவையாக உள்ளன. சுந்தர ராமசாமியின் அக்கரைச்சீமையிலே அசோகமித்திரனின் வாழ்விலே ஒருமுறை வண்ணத்தாசனின் தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் போன்றவை. அவ்வரிசையில் வைக்கத்தகுந்த தொகுப்பு மாறிலிகள். சிங்கப்பூரின் அரை நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட எழுத்து அதன் இயல்பான முதிர்ச்சியை இத்தொகுதியில் அடைந்திருக்கிறது. இது ஒரு தொடக்கப்புள்ளியாக அமையுமென்றால் தமிழ் இலக்கியத்தின் ஒளி மிக்க ஒரு பகுதியாக சிங்கப்பூர் இலக்கியம் வளரும் என்று எண்ணுகிறேன்.’ என ஜெயமோகன் சொல்லியிருப்பது இச்சிறுகதைகள் மீதான ஆர்வத்தைக் கூடுகின்றது.

இத்தொகுப்பில் மொத்தம் 15 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் முந்தைய கதைகளை நினைவுப்படுத்தாமல் நகர்ந்துச் செல்கிறது. ஒரு சிறுகதை எப்படி சொல்லப்பட வேண்டும் என பாடம் எடுப்பவர்களுக்கு மத்தியில் அப்படியான கதைகளை எழுதி வாசிப்பவர்கள் தாங்களே அதனை கண்டுக்கொள்ள செய்திருக்கின்றார் ஆசிரியர்.

ஒவ்வொரு கதையும் உண்மையில் ஒவ்வொரு கதைகளாக விரிகின்றன. அறம், காதல், காழ்ப்புணர்ச்சி, ஏமாற்றம் , இயலாமை, இழப்பு, நகைச்சுவை, ஆணவம்  என கதைகள் தனியாகத் தெரிகின்றன. நாம் எங்கிருந்து எழுதுகின்றோம் என்பதை விட எந்த பார்வையில் எழுதுகின்றோம் என்பது எழுதுவதற்கு முக்கியம் என நம்புகின்றேன். மலேசியாவில் எழுதப்படும் பல கதைகளை தமிழ்நாட்டு கதைகள் போல பல இடங்களில் பாசாங்கு மொழியில் (அம்மொழி தமிழக எழுத்தாளர்களைப் போல அமைந்திருக்கும்) இருந்துவிடுவதை கவனித்துள்ளேன். அதில் அசல் தன்மை இருக்காது அல்லது குறைவாக இருக்கும். ஒரு சிலரே தங்களின் மண்ணிற்கான மொழியை எழுத்தாக்கம் செய்து தனிந்து தெரிவார்கள். அவ்வகையில் சிங்கை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள், அம்மண்ணிற்கு (தார்ச்சாலைக்கு) உண்டான மொழியில் கதைகளை எழுதியுள்ளார். இருப்பினும் வாசிக்கையில் எவ்வகையிலும் வாசகர்களுக்கு குழப்பத்தைக் கொடுக்காதவாறு அது அமைந்துள்ளது.

ஒவ்வொருவருக்குள்ளும் ‘அறம்’ என்ற ஒன்று எப்போது இருப்பதாக நினைக்கிறேன். அது மனசாட்சியின் குரலா? கர்மாவின் காரணமா என பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஒரு காலக்கட்டத்தில் ஆடிவிட்ட ஆட்டங்களுக்கு காலம் சரியான நேரத்தில்  அறம் கொண்டு பேசவும் பதில் கொடுக்கவும் செய்கிறது. இதனாலேயே நம் வாழ்வில் நாம் பல துரோகிகளை மன்னிக்கும்படியும் ஆகின்றது. எழுத்தாளர்கள் இதனடிப்படையில் எப்படியும் ஒரு கதையை எழுதியிருப்பார்கள் அல்லது எழுத தயாராய் இருப்பார்கள்.

இத்தொகுப்பில் ‘அறம்’ என்கிற அடிப்படையைக் கொண்டு ‘தர்ம ரதம்’ என்கிற கதையை எழுதியிருப்பார். சிங்கப்பூர் பின்னணியில் சில வரலாறுகளை சொல்லிச் செல்லும் கதையில் சரியான நேரத்தில் பேசத்தவறிய மனிதன் அவனது அறத்தின் குரலைக்கு எப்படி பயந்திருக்கிறான் என சொல்லும் கதை. தனக்கு நன்மை செய்த ஒருவரை நண்பர் ஏமாற்றும் போது தடுக்காமல் உண்மையைச் சொல்லாமல் சின்ன சபலத்தில் அமைதி காக்கிறார் பழனியப்பன். ஏமாற்றி வாங்கிய பணத்தை மேஜை டிராவருக்குள் வைக்கிறார். பத்து ஆண்டுகளாக அந்த பணம் மீண்டும் எடுக்கப்படாமல் கட்டும் பிரிக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருக்கிறது. அவர் விபத்தில் இறந்த பின் அவரது மகன் அதனை கண்டு நம்மிடம் சொல்லுவதாக கதை முடிகிறது. அப்பணக்கட்டில் யாரின் பணம் என்கிற குறிப்பையும் பழனியப்பா எழுதியிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக பழனியப்பா எப்படியெல்லாம் மன வேதனைக்கும் குற்றவுணர்ச்சிக்கும் ஆளாகியிருப்பார் என நினைக்கையில் நம்மையும் சுயபரிசோதனை செய்யத் தோன்றுகிறது. ஒரு சின்ன சபலம் எத்தனை ஆண்டுகளாக பின் தொடர்ந்துவிடுகிறது. அவர் இருக்கும் வரை மட்டுமல்ல இறப்பு வரையும் தொடர்வே செய்கிறது. இறந்த பிறகாவது ஆத்மா சாந்தியடைந்திருக்குமா என தெரியவில்லை.

இரண்டாவது கதை ‘கர்ண யட்சிணி’. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிவதாக கதை தோன்றினாலும், முடிவில் தன் பலவீனங்களை மறைக்க சிலவற்றை செய்யத்தான் வேண்டியுள்ளதை காட்டுகிறது. தன் மீது விழுந்துவிட்ட அடையாளத்தை மாற்ற முயற்சிக்கும் போது கூட நம்மை மீறியும் நாம் யாரென்று வெளிகாட்டிக் கொள்கிறோம். இக்கதையின் நாயகிக்கு அதுதான் நடந்துள்ளதாக தெர்கிறது.

மூன்றாவது கதை ‘விடியல் தவம்’ ஆசான் ஜெயமோகன் இக்கதை குறித்து முன்னுரையிலேயே ஆழமாக கூறியுள்ளார். சீன சமையல் கலையில் சாதனை படைக்க நினைக்கும் தமிழ் இளைஞனின் கதை. சமையில் போட்டியில் தொடங்கி இரண்டாம் நிலை வெற்றியில் கதை முடிகிறது. அதற்குள் நாயகன் மீது நமக்கு ஒருவித அன்பையும் அவர் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் கொடுத்துவிடுகிறார்.  

‘முடிவொழுக்கம்’ நான்காவது கதை. ஆண் பெண் பாலியல் தேவைகள் குறித்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் மாய தடையொன்று நம் சமூகத்தில் இருக்கவே செய்கிறது. ஏன் எழுதப்பட்டது என கொஞ்சமும் யோசிக்காமல் பிறரையும் யோசிக்க விடாமல் சில வார்த்தைகளிலே முழு கவனத்தை வைத்து முழு படைப்பையும் புறக்கணித்துவிடுகிறார்கள். பாலியல் கல்வி/தேவை பற்றிய பிரக்ஞை இல்லாதது பல குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கு காரணமாகிறது. தன்னால் மனைவியை திருப்தி படுத்த முடியாததை மறைக்க தினமும் குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புருத்தி தன் ஆண்மையை நிலைக்காட்டும் ஆண்கள் உண்டு. தன் தேவைகளை பூரித்தி செய்யாத கணவனை வார்த்தைகளாலும் செயல்களாலும் சிதைக்கும் பெண்களும் உண்டு. ‘முடிவொழுக்கம்’ கதையில் தன் உடல் தேவைக்கு கணவரின் நண்பனை நாடும் மனைவில், அவரும் சரியவரவில்லை என அவரையும் ஒதுக்குகிறார். கதையை முழுமையாக வாசிக்க பல கேள்விகளைக் கொடுக்கும்.

‘மூன்று சந்திப்புகள்’ ஐந்தாவது சிறுகதை. வயதான கணேசன், குடும்ப தேவைக் கருதி வேலை தேடுகின்றார். முதல் சந்திப்பில் வேலை கிடைக்கவில்லை. இரண்டாவது சந்திப்பில் தன் பழைய நண்பரையும் அவரது மகளையும் சந்திக்கின்றார். மூன்றாவது சந்திப்பில் நண்பரின் மகளை சந்திக்கின்றார். மகளின் மூலம் இவருக்கு வேலை கிடைக்கிறது. இக்கதையில் இன்றைய இளைஞர்களின் வாழ்வியலை தொட்டு எழுதியுள்ளார். ஒரு காலத்தில் மறைந்திருந்து  மது குடித்து பழகியவர்களுக்கு, இன்றைய தலைமுறை மது ஊற்றிக் கொடுப்பதை தொழிலாகவே செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாமையைக் கோடிட்டுள்ளார்.

ஆறாவது கதை, ‘இரண்டாம் வாய்ப்பாடு’. மனித மனம் எத்தனை விசித்திரமானது. எப்போது ஒருவரை தனக்கு கீழாகவே வைத்திருக்க நினைக்கிறது. மாறான தனக்கு இணையாக வாழ்வதை விரும்புவதில்லை போலும் என யோசிக்க வைக்கும் கதை. பிலிப்பீன்ஸ்க்கார பெண்னை காதலிக்கும் முரளி. அதனை தன் வீட்டில் சொல்ல தயங்குகிறான். பல வீடுகளில் வேலைக்கார பெண்களாகப் பார்த்து பழகி பிலிப்பீன்ஸ்க்கார பெண்ணை தன் மனவியாக ஆக்கிக் கொள்வதில் மனத்தயக்கம் கொள்கிறார் முரளி. இத்தனைக்கும் இருவரும் வேதியியல் ஆராய்ச்சியாளர்களாக ஒன்றாக பணியாற்றுகின்றார்கள். இன்றைய உரையாடலில் முரளியை நன்கு அறிந்துக்கொண்ட அந்த பெண் எடுக்கும் முடிவு பாராட்டத்தக்கது. எழுத்தாளருக்கும் பெண்கள் மீதான கவனிப்பும் அக்கறையும் இருப்பதை கதைகளில் தொடர்ந்து வாசிக்க முடிகின்றது.

ஏழாவது கதை ‘முல்லை வனம்’. ஒருவருக்கு தேவையான ஒன்று அதனை கொஞ்சமும் பயன்படுத்தாத அதன் அருமை தெரியாதவர்களிடம் இருப்பதென்பது எத்தனை வேதனை. இக்கதையில் அதனை உணரலாம்.

எட்டாவது கதை,  ‘அறம் கூத்தாகும்’. இக்கதையின் வடிவம் எனக்கு பிடித்திருந்தது. மகிழ்ச்சியின் எல்லைவரை நம்மை அழைத்துச் சென்று, இதுவரை அழைத்துச் சென்றதெல்லாம் அடுத்து வரவிருக்கும் வேதனைக்கும் வலு சேர்க்கத்தான் என சொல்லி தூக்கி வீசுவது போன்றதொரு கதை. குழந்தைக்கு காது குத்துவதற்கு வீடே விழாக்கோலம் கொண்டிருக்கிறது. நம்மையும் அதில் ஒருவராக இணைத்துக் கொள்ள செய்கிறோம். ஆனால் அவ்வீட்டில் தனி அறையொன்றில் இருக்கும் பெண் மிகுந்த வேதனையில் இருக்கிறாள். அவரை சந்தித்து நடக்கும் உரையாடலில் ‘‘எனக்கு வந்த குட்டிக் கிருஷ்ணனையே நான் வேண்டாம்னு தூக்கி எறிஞ்சவோ. பாவி’’ என சொல்லி விம்மி விம்மி அழுகிறாள். தனக்கு வராத குழந்தையை நினைத்து அப்பெண் அழவில்லை, தான் வேண்டாமென தூக்கி எறிஞ்ச குழந்தையை நினைத்து அழுகிறாள். தான் செய்துவிட்ட செயலுக்கும் காலம் கொடுத்திருக்கும் தண்டனை எத்தனை கொடுமையானது.

ஒன்பதாவது கதை.  ‘தேவேந்திரன் பன்ணிய டிராமா’ தலைப்பிலிருந்தே கதை ஆரம்பித்துவிடுகிறது. வயிற்றுப் பிழைப்பிற்கு எப்படியெல்லாம் நாடகம் ஆடவேண்டியுள்ளது. கீழிடத்தில் இருந்து மேலிடம் வரை அத்தகைய நாடகங்கள் அரங்கேறிக்கொண்டே இருப்பதை சிரிக்கும்படி சொல்லும் கதை.

 ‘மாறிலிகள்.’ பத்தாவது கதை. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என சொல்வதற்கு தகுந்த மனிதர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். பலரால் தங்களின் வெண்மைகளைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களின் அனுபவங்கள் விடுவதில்லை. மாறிலிகள் கதையில் வரும் நாயகி வாழ்வில் நடந்த ஏமாற்றத்தை ஒரு முறையேனும் நான் கேள்விப்பட்டிருப்போம். உண்மையும் செய்தியாக சொல்லுவதற்கும் புனைவாக்கி சொல்வதற்கும் உள்ள வித்தியாசங்கள் அதிகம். உண்மையைக் கூட கடந்துவிடலாம். ஆனால் புனைவின் உள்ளே நாமும் நுழைந்துவிடுவதால் நமக்கும் வலிக்கச் செய்கிறது. திருமணத்தில் ஏமாறும் பெண்கள் என்கிற வகைமாதிரி பல கதைகளை நாம் வாசித்திருப்போம். ஆனால் இக்கதை தனித்து தெரிகிறது. அதற்கு ஆசிரியர் எடுத்துக் கொண்ட கதை சொல்லும் முறையைச் சொல்லலாம்.

‘வெட்சிப் பூக்கள்’ பதினோறாவது கதை. கண்முன்னே மெல்ல மெல்ல நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அப்பாவின் மரணத்தை எதிர்க்கொள்ளும் மகன்.

பனிரெண்டாவது கதை. ‘துளசி மாடம்’. இக்கதை போல நிஜத்தில் நடந்த இரண்டு மூன்று கதைகள் எனக்கு தெரியும். அலுவலகத்தில் சூழ்ச்சி செய்யும் தோழி. அது அலுவலகத்தில் மட்டும் நடக்கவில்லை. யாரும் எப்படி வேண்டுமானாலும் நம்மை இயக்கி அவர்களின் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்கிற எச்சரிக்கையைக் கொடுக்கும் கதை. முடிவு நெருங்கும் போது நம் யூகங்களைவிடவும் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

பதிமூன்றாவது கதை, ‘தாளோர நாரைகள்’. எதிர்ப்பார்ப்புகள் நம்மை இயல்பாக சிந்திக்கவிடுவதில்லை. அது நமக்கு சாதகமாகவே சிந்திக்க வைக்கிறது. எதார்த்தம் என்பது கசப்பானது ஆனால் நம்மை நம்ம வைத்து ஏமாற்றாது. அதனை ஏற்றுக் கொள்ள மட்டும் மன தைரியம் வேண்டும். தொகுப்பில் எனக்கு பிடித்த கதை. கடலால் தன் குடும்பத்தை ஊரை தன் மக்களை இழந்த ஜப்பானியப் பெண். கடலையே தன் தாயாக பாவித்து விலாங்கு மீன்களை காப்பாற்றுகிறாள். அவளால் வெங்கட் கொண்ட காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனும் அவளுக்காக அவளுடன் சேர்ந்து செயலாற்ற முடியும் என சொன்னாலும் அவள் சம்மதிக்கவில்லை. ஒருவர் ஆத்மார்த்தமாக செய்ய நினைக்கும் கடமையை அவ்வாறே இன்னொருவராலும் செய்ய முடியுமா என்கிற கேள்வியை நாம் செய்திருக்கிறோமா என கேட்க வைக்கும் கதை,

பதினான்காவது கதை, ‘களங்கம்’. போலி எழுத்தாளர்களை பகடி செய்யும் கதை. சிரிக்க வைக்கிறது.

கடைசி கதை, ‘மோகவல்லி’ திருநங்கையின் மனநிலையைச் சொல்லும் கதை. ஏதோ ஒன்று அவர்கள் மனதில் குறையாக இருந்துக் கொண்டெ இருப்பதை காட்டுகிறார் ஆசிரியர்.

நிறைவாக, ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்குறது. இத்தொகுப்பு நம்மைச் சுற்றி கதைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை என காட்டுகிறது. கதை எவ்வளவு முக்கியமோ கதை சொல்லும் முறையும் முக்கியம் என காட்டும் தொகுப்பு. வழக்கமாக நாம வாசிக்கும் கதை பாணியில் இருந்து மாறுபட்ட கதையமைப்பு கொண்ட கதைகள். சிறுகதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு புதிய பாணியைக் கற்றுக் கொடுப்பதோடு நில்லாமல் வாசிக்க வாசிக்க நமக்குள் அகம் சார்ந்த கேள்விகளை தூண்டுகிறது.

 

#தயாஜி

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்