சலூன் கடைக்காரரின் சயின்ஸ்
#குறுங்கதை 2021 - 7
- சலூன் கடைக்காரரின் சயின்ஸ் -
"இன்னும் ஒருத்தர் இருக்காரு தம்பி..." என்றார். சரி அதுவரை நாளிதழ் வாசிக்கலாமே என காத்திருக்கலானேன். நாற்காலியில் அமர்ந்திருப்பவர் தான் பார்த்த பலரின் தலை முடி வெட்டு குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
கடைக்காரரும் "ஆமாம்" போட்டுக் கொண்டே அவருக்கு ஏற்றார்போல முடியைக் கத்திரித்துக் கொண்டிருந்தார். அமர்ந்திருப்பவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி சொல்லவே நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.
கடைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அமர்ந்திருப்பவரின் தாடியை கவனித்து, "தம்பி உங்களுக்கு தாடி இப்படிதான் விட்டு விட்டு வளருமா?" என்றார்.
"அதான் ணே... வீட்டுல எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கும். எங்க அண்ணனுக்கும் அப்பாக்கும் தாடி அவ்வளோ அடர்த்தியா இருக்கும்... ஏன் கேட்கறீங்க..."
"ஒன்னுமில்ல தம்பி" என்று ஏதோ யோசித்தார்.
"பரவால சொல்லுங்க அண்ண... ஏதும் மருந்து இருக்கா..?"
"அதுக்கில்ல தம்பி.. தாடி இப்படி விட்டு விட்டு வளர்ந்தா கர்ப்பப்பைல ஏதோ பிரச்சனை இருக்கும் அதான் கேட்டேன்.."
" ஐயோ என்ன சொல்றீங்கண்ண... !!!! எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல...."
அவர்கள் தொடர்ந்தார்கள்.
எனக்கு பகீரென்றது. எனக்கும் தாடி விட்டு விட்டுதான் வளர்ந்திருக்கும். எனது கர்ப்பபையில் என்ன பிரச்சனை இருக்குமோ என பயம் வந்தது. அமர்ந்திருப்பவரை விட எனக்குத்தான் இப்பொழுது பீதி அதிகமாகியது.
கைபேசியை எடுத்து காதில் வைத்தேன். எழுந்தேன். பேசுவது போல பாவனை செய்தேன். அப்படியே கடையைவிட்டு வெளியேறினேன்.
"இன்னிக்கு முடி வெட்டன மாதிரிதான்.." என சொல்லிக்கொண்டெ நடக்கலானேன். அவர் சொன்னது காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. வலது கையால் வயிற்றைத் தடவுகிறேன். பொறி தட்டியது.
ஒரு நிமிஷம்..!!!. "ஆமா ஆம்பளைக்கு ஏது கர்ப்பப்பை...!!"
0 comments:
கருத்துரையிடுக