கதை வாசிப்பு 21- 'பிரிவென்ற உறவு'
கதை வாசிப்பு 21- 'பிரிவென்ற உறவு'
ஆகஸ்ட் மாத மயில் இதழில் 'பிரிவென்ற உறவு' என்ற கதையை கூலிம் கேடாவைச் சேர்ந்த சு.சத்தியா எழுதியிருக்கின்றார். குறுங்கதை என்ற குறிப்புடன் இக்கதையை பிரசுரம் செய்திருந்தார்கள். ஆனால் சிறுகதைக்கான அம்சத்தையே இக்கதை கொண்டிருக்கிறது.
கதை.
விவாகரத்து மனுவை நீதிபதி ஒத்தி வைக்குமிடத்தில் கதை ஆரம்பமாகிறது. கையெழுத்திட்டுவிட்டு மகள் அப்பாவையே பார்த்து ஏங்க, மகள் கனிமொழியை இழுத்துப்போகிறார் அம்மா. காரில் மகளுடன் செல்லும்போது எல்லாவற்றையும் மகளுக்காகத்தான் செய்தாலும் அப்பாவையே ஏக்கப்பார்வைப் பார்த்த மகளை கடிந்துக்கொள்கிறார். அந்நேரம் மகளை திசைதிருப்ப பூங்காவிற்கு வாகனத்தைச் செலுத்துகிறார்.
பூங்காவில் அம்மா கைபேசியில் இருக்க,
பழைய நினைவுகள் வர, அதனை ஒதுக்கி மீண்டும் நிகழ்காலத்துக்கு வருகிறார். கனிமொழிக்கு விளையாட இன்னொரு சிறுமி அங்கு கிடைக்கிறாள் அம்மாவின் பக்கத்திலேயே இருவரும் விளையாடுகிறார்கள். அவர்கள் பேச்சு அப்பா அம்மா குறித்து மாறுகிறது. கனிமொழி தன் பெற்றோர் பிரிந்ததை சொல்லிவிட்டு புதிய தோழியின் பெற்றோர் சண்டை போடுவார்களா என கேட்டுவிடுகிறாள். அதற்கு அந்த தோழி, சண்டை வரும், அம்மாவும் அப்பாவும் மாற்றி மாற்றி ஏசிக்கொள்வார்கள் பின்னர் அப்பா தன்னையும் கூட்டிக்கொண்டு இரவு உணவுக்கு பிறகு சமாதானமாகிவிடுவார்கள் என சொல்கிறாள். இதனையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கனிமொழியின் அம்மாவிற்கு சுறுக்கென்கிறது. எல்லோர் வீட்டிலும் இப்படித்தானோ , கணவர் ஏன் விட்டுக்கொடுக்கவில்லை பெண் என்றால் ஆண்களிடம் அடிமைப்பட்டிருக்கத்தான் வேண்டுமா இனி தான் சுதந்திரமாக வாழ போவதாக தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கனிமொழியை அழைத்துக்கொண்டு புறப்படுகின்றார்.
அச்சமயம் கனிமொழியின் புதிய தோழியின் பெற்றோர் வருவது தெரிகிறது. கனிமொழி அவர்களை மட்டுமே பார்க்கிறாள், கதை முடிகிறது.
கதை குறித்து.
இக்கதையை வாசிக்கையில் அதன் முடிவு கனிமொழியின் அம்மா தன் தவறை உணர்ந்து கணவருடன் சேர்வதாக இருக்கும் என்கிற மனநிலையை மாற்றி இக்கதையை முடித்திருக்கிறார் எழுத்தாளர். இங்குதான் சிறுகதைக்கான அம்சத்தை உணர முடிகிறது. சிறுகதைக்கு என்ன தேவை. எந்த இடத்தில் திருப்பம் வைக்கலாம் போன்ற நுணுக்கம் இவருக்கு கைவந்துள்ளது. கதை தொடங்கிய இடத்தில் இருந்து முடிவை நோக்கி சோர்வின்றி வாசகர்களை அழைத்துச்செல்கிறது.
அதோடு சிலவற்றை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இக்கதையில் வரும் சிறுமிகள் பாத்திரம் அதற்கேற்ற மொழியை பயன்படுத்தவில்லை. இதுபோன்ற கதைகளில் அல்லது குழந்தைகள் சிறுமிகள் பேசுவது போல இருந்தால் அவர்களின் மொழியைக் கவனிக்கவேண்டும். அவர்களின் உரையாடலில் இருக்கும் எதார்த்தமே சிறுகதைக்கு பலம் சேர்க்கும்.
தொடர்ந்த வாசிப்பும் தொடர்ந்த எழுத்தும் இவருக்கு நல்ல வழிகாட்டியாக அமையும். அதன் மூலம் நல்ல சிறுகதைகளை நமக்கு அவர் வழங்குவார் என நம்புகிறேன்.
அதோடு,
இரு பக்க குறுங்கதைக்கு இப்படியான பகிர்வு வேண்டுமா என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். ஏனெனின் இருக்கும் காலம் கொஞ்சமோ என உள்ளூர பயம் கொஞ்சநாளாக இருந்துவருகிறது.
அரைபக்கமே இருந்தாலும் சிறுகதைக்கான கூறுகள் இருப்பின் அதனை கவனப்படுத்துவது அவசியம் என நினைக்கிறேன். வாசகரின் கடமையும் அதுதான்.
-தயாஜி
0 comments:
கருத்துரையிடுக