பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 20, 2015

சிறுகதை - சீனக்கிழவன்



சீனக்கிழவன்


   என்னவோ போல் இருந்தது. இன்னும் புதிய வீட்டுக்கு வந்து முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை. இப்படியொரு அபசகுனம் மனைவியை பதட்டமடைய செய்தது. எனக்கு அந்த சீனக்கிழவனை பார்க்கும் வரையில் பெரிதாக ஒன்றும் தோனவில்லை. கூன் விழுந்த முதுகுடன் குடையை கைப்பிடிபோல பாவித்து, தூக்கிப் பிடித்திருக்கும் சாக்குப்பையுடன் மொட்டை தலையோடு முட்டை கண்,  ஏதோ வளர்ந்திருக்கும் ஜந்து போலவே அந்த சீனக்கிழவன் தெரிந்தான்.

   காரில் இருந்து வாங்கிய சாமான்களோடு இறங்கி கொண்டிருந்தோம். எங்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த சீனக்கிழவன். பழைய வீடாக இருந்திருந்தால் இன்னேரம் கதையே வேறு மாதிரி இருந்திருக்கும். இந்த அடுக்குமாடி வீட்டுக்கும் என் பழைய குணம் தெரிய கூடாது எனதால் பெரிதாக கிழவனை கண்டுக்கொள்ளாமல் இருந்தேன்.

    சாமான்களுடன் மின்தூக்கிக்கு காத்திருந்தோம். அதுவரை தூரத்தில் தெரிந்த கிழவன் நொண்டி நொண்டி எங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். அவன் வருவதற்குள்ளாக மின்தூக்கி வரவெண்டும் என மனைவி பிரார்த்திக்க நடந்தது. சில சமயம் மட்டும் மனைவிகளின் பிரார்த்தனை பலிப்பது கணவன்களுக்கு எத்தனை பாதுகாப்பு என நினைத்து கிழவனுக்கு முன் மின்தூக்கியில் ஏறினோம்.

   வழக்கம் போல ஞாயிறு காலையில் மார்கெட் போக வேண்டியிருந்தது. ஆண்களின் ஞாயிற்றுக்கிழமை விடிவதும் தெரிவதில்லை. முடிவதும் தெரிவதில்லை. அதனால்தான் என்னமோ சனிக்கிழமை இரவு கொண்டாடப்படுகிறது.

   காருக்கு போய்க்கொண்டிருந்த போதுதான் ஏதோ முனகல் சத்தம் கேட்டது. திரும்பினேன். அந்த சீனக்கிழவன் தான். என்னை பார்த்து செய்கை செய்துக் கொண்டிருந்தான். வெறும் சீனக்கிழவன் இல்லை. அவன் ஊமை சீனக்கிழவன் எனவும் தெரிந்தது

   இப்படியானவர்கள் பேசினாலே எனக்கு ஒவ்வாது. அதிலும் செய்கை காட்டுகின்றார் என்றால் சொல்லவே வேண்டாம். எனக்கும் பரிவு பச்சாதாபம் எல்லாம் இருக்கிறது. உதவி கேட்ட பலருக்கு லைக் பட்டன் அழுத்தியிருக்கிறேன்.

   அருகில் வருவது பிடிக்காததால் சட்டென  காரில் நுழைந்து பூட்டிக்கொண்டேன். காரை கிளப்புவதற்கு முன்னமே கார் கண்ணாடியை தட்டிக்கொண்டிருந்தான் அந்த சீனக்கிழவன். வெறுப்புடன் பாதி கண்ணாடியை மட்டும் இறக்கி என்னவென்று தலையாட்டினேன். தன்னுடைய சாக்குப்பையை காட்டி. ஏழு என காட்டி எங்கள் வீடு இருக்கும் மாடியைக் காட்டினான்.

ஒன்னும் புரியவில்லை.

   மீண்டும் தலையாட்டி  முகத்தை சுழித்தேன். மீண்டும் தன்னுடைய சாக்கு பையை காட்டி, ஏழு விரல்களை காட்டி எங்களை வீட்டை சுட்டிக்காட்டி தலையை வேகமாக ஆட்டினான். இந்த மாதிரி பைத்தியங்கள் பேசினாலே புரியாது. செய்கைக்கு மட்டுமா மதிப்பு இருக்கப்போகிறது. காரில் இருந்த ரொட்டியை அந்த சீனக்கிழவனுக்கு கொடுத்துவிட்டு நானும் செய்கையில் என்ன சொன்னேன் எனவே தெரியாமல் எதையோ சொன்னேன். புரிந்தது போல கிழவன் தலையாட்டி காருக்கு வழிவிட்டான். கண்ணாடியை ஏற்றினேன். காரை கிளப்பினேன்.

   தினமும் சினக்கிழவனை பார்க்கும் துயரச்சம்பவங்கள் நடந்துக் கொண்டே இருந்த. அது எனக்குள்ளே ஒரு வித அசூயையை ஏற்படுத்துவதை உணர்ந்தேன். யாரிடமாவது கிழவனை குறித்து கேட்டு தொலைக்கலாம் என்றால், மிகச்சரியாக மறந்து தொலைக்கிறேன்.

   கார் பழுது. நண்பரின் காரில் வீட்டு பாதுகாவலர் கூடாரத்தில் இறங்கிக்கொண்டேன். அலுவலக பணிக்கான மடிக்கணினியை பத்திரமாக தோளில் மாட்டிக்கொண்டு உள்ளே மடிக்கணினி இருப்பதை உறுதி செய்துக் கொண்டேன். எதிர்பாராத மழை சட்டென கொட்டியது. வேறு வழி இன்றி இறங்கிய இடத்திலேயே நின்றுவிட்டேன். நேரம் ஆகவும் மழை அதிகமானது. என்னுடன் மழைக்கு ஒதுங்குபவர்களும் கூடிக்கொண்டே போனார்கள். இன்னும் ஒருவர் கூட்டத்தில் நுழைந்தாலும் வரிசையின் முதலில் நிற்கும் நான் மழையில் நனையவேண்டும். மூச்சை பிடித்துக் கொண்டு மின் தூக்கி வரை ஓடினாலும் ஜட்டி வரை நனைந்துவிடும் அபாயம் இருப்பது நன்றாகவே தெரிந்ததிருந்தது.

   வழுக்கி வெளியே வரவும் குடைக்குள்ளே நுழையவும் சரியாக இருந்தது. சீனக்கிழவன் குடைக்கு வெளியே நனைந்துக் கொண்டே செய்கையில் என்னிடம் எதையோ சொல்லிக்கொண்டிருந்தான். பின் குடையை என் கையில் கொடுத்துவிட்டு. சாக்குப்பையை இறுக்க பிடித்துக் கொண்டு அவன் பாட்டுக்கு நடந்தான். கையில் குடை கிடைத்த திருப்தியில் மின்தூக்கிக்கு போனேன்.

   மின்தூக்கி திறந்தது. கையில் இருந்த குடையை என்ன செய்வது என்று யோசித்தேன். சீன கிழவனையும் காணவில்லை. பக்கத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் அந்த குடையை சொருகி விட்டு மின்தூக்கிக்குள்ளே போனேன்.

   வீட்டு வாசலில் காலனியை கழட்டிக்கொண்டிருந்தேன். பக்கத்தில் அந்த குடை. அதே குடைதான். மழையில் இருந்து நனையாமல் இருக்க சீனக்கிழவன் கொடுத்த குடை. உடனே மனைவியை அழைத்தேன். குடையை குறித்து கேட்டேன். வீடு திரும்பும்போது கடினமான மழையாம். காருக்குள்ளேயே அமர்ந்திருக்கிறாள். கார் கண்ணாடியை தட்டி அந்த சீனக்கிழவன் தான் குடையைக் கொடுத்து சென்றிருக்கிறார்.

   எனக்கு ஒரே குழப்பம். எது முதலில் நடந்திருக்கும். எது இப்போது நடந்திருக்கும் என யோசித்துக் கொண்டே மீண்டும் கீழே இறங்கினேன். குப்பைத்தொட்டியில் சொருகிய குடை இல்லை. அதற்கு பதில் சீனக்கிழவனின் சாக்கு பை ஈரத்துடன் இருந்தது. அதனை எந்த அருவருப்பும் இன்றி வீட்டுக்கு கொண்டு வந்தேன்

  இன்றுவரை திறக்கப்படாத அந்த சாக்குப்பையை வைத்துகொண்டு காத்திருக்கிறோம். மீண்டும் அந்த சீனக்கிழவர் வருவாரென்ற எதிர்ப்பார்ப்புடன்.

-தயாஜி-

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்