பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 25, 2023

'மராம்பு' - புத்தகவாசிப்பு 4 (2023)


‘மராம்பு – புத்தகவாசிப்பு 4 (2023)

தலைப்பு - மராம்பு
எழுத்து - நசீமா ரசாக்
வகை - குறுநாவல்
வெளியீடு - யாவரும் பதிப்பகம்
புத்தகம் வாங்க - +60164734794 புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை (மலேசியா)


மராம்பு என்பது பாலைவனத்தில் பூக்கும் ஒருவித பூ. அதுவே தலைப்பாகிவிட்டது. ஆனால் இந்தப் பூக்கள் வேறொரு நிலத்திலிருந்து பிழைக்க வழியற்று அல்லது கூடுதல் வருமானத்திற்கு துபாய் வந்து சேரும் மனிதர்களைக் குறிப்பிடுவதாய்ப் பார்க்கிறேன்.  அப்பூக்கள் மலர்கின்றவனா மிதிபட்டு மடிகின்றனவா என்பது யாரும் முன் யூகிக்காத ரகசியம்.

 
சொல்லப்போனால் துபாய் என்று சொன்னாலே அடுத்த வார்த்தையாக பாலைவனம் என வந்து விழுந்துவிடும். ஆமாம், ‘துபாய் பாலைவனம்’ என சேர்த்துச் சொல்லிப் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். இப்போது யோசிக்கையில் துபாய் என்ற வார்த்தைக்கும் பாலைவனம் என்ற வார்த்தைக்கும் எவ்வளவு பெரிய  இடைவெளியைக் காலமும் உழைப்பும் அம்மண்ணின்  வழங்கியிருக்கிறது எனப் புலப்படுகிறது.

‘மராம்பு’ எழுத்தாளர் நசீமா ரசாக் எழுதியிருக்கும் இரண்டாவது நாவல்; குறுநாவல். தற்போது துபாயில் வசிக்கிறார் என்று அறிகிறேன்.

 திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவது காலா காலமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சொந்த மண்ணைவிட்டு பிழைப்பிற்காகவும் உயிர் பிழைத்திருப்பதற்காகவும் ஓடி வாழ்கின்றவர்களிலும் ஓடியே போனவர்களிலும் நமக்கு ஒரு சிலரையாவது தெரிந்திருக்கும். நாமே கூட அப்படியானவர்களாக இருக்கலாம். நானும் கெடா மாநிலத்தில் பிறந்து வளர்ந்து இன்று தலைநகர் கோலாலும்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இரண்டும் மலேசியாவிற்குள்தான் என்றாலும் சொந்த மண்ணும் அம்மண்ணின் மக்களுக்கும் ஈடாக எதையுமே என்னால் இங்கு உணர முடியவில்லை. சொந்த நாட்டில் ஐந்து ஆறு பயண இடைவெளியே என்றாலும் என்னால் ஒரு நெருக்கத்தை உணரமுடியாத போது நாடு விட்டு நாடு பிழைப்பிற்காகக் கிளம்பு போகிறவர்களை நினைத்தால் மனம் ரொம்பவும் சங்கடப்படுகிறது.

எங்கள் நாட்டு உணவகங்களிலும் பிற கடைகளிலும் வேலை செய்யும் வெளிநாட்டுக்காரர்களை யாரும் திட்டும் போதும் அடிக்கும் போதும் இப்படித்தானே எங்கள் நாட்டிலிருந்து வெளியூர் வேலைக்குச் சென்ற ஏதோ ஒரு இளைஞனுக்கும் நடந்து கொண்டிருக்கும் என நினைத்துக் கொள்வதுண்டு.

 வெளிநாட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் நாயகி வள்ளி. ஏமாற்றப்படுகின்றாள். தனக்கு ரொம்பவும் அந்நியமான நிலத்தில் அவள், இனி என்ன செய்வாள் எப்படி சொந்த ஊருக்குத் திரும்புவாளா என்பதுதான் இக்குறுநாவலின் மையக்கரு.

 இதே கதைக்கருவில் நமக்கு பல கதைகள் பத்திரிகை செய்திகள் சினிமா படங்கள் அறிமுகமாகியிருக்கின்றன. அதிலிருந்து எப்படி ‘மராம்பு’ தனித்திருக்கிறது என்பதில்தான் எழுத்தாளரின் உழைப்பும் வெற்றியும் இருக்கிறது.

 புத்தகத்தைக் கையில் எடுத்ததும் அதன் பின்னொட்டைக் குறிப்புகள் வழியில் முன்னமே எனக்குத் தெரிந்த இதன் அறிமுகத்தை வைத்து துபாய்க்கு வேலைக்குச் சென்று அங்குச் சிக்கல் மாட்டிக்கொள்ளும் பெண்களின் கதை எனப் புரிந்து கொண்டேன். வழக்கமாக ஆண்களையே இது போன்ற கதைகளுக்கு மையப்பாத்திரமாக வைப்பார்கள். இக்குறுங்கதைகள் பெண்கள் எதிர்நோக்கிய; அதுவும் துபாய்க்குச் சென்ற பெண்கள் எதிர்நோக்கும் சிக்கலைப் பற்றித் தெரிந்துகொள்ளப்போவதாக முன்முடிவுடன் நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். என் முன்முடிவை ஓரளவிற்கு எழுத்தாளர் பூர்த்தி செய்தார் என்றே சொல்லலாம்.

 ஆனால் இக்கதைக்களம் துபாயாக இல்லாமல் வேறொரு நாடாக இருந்தாலும் கதையில் அது எந்த மாற்றத்தையும் கொடுக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் இக்கதையின் கதைக்களமாக இருக்கும் துபாய் சில இடங்களைத் தவிர பிற இடங்களில் துபாயில்தான் கதை நடப்பதற்கான எந்த அடையாளமும் இருக்கவில்லை.

 ‘வள்ளி பால்கனியில் நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்களுக்கு புரூஜ் கலீபா என்ற உலகத்திலே உயரமான கட்டிடம் தெரிந்தது. அங்கு இருப்பவர்கள் தங்களை போன்ற எந்த போராட்டமும் இன்றி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பார்களா? என்று நினைத்தாள்.’ என எழுத்தாளர் சொல்கிறார். கதை நடக்கும் நிலமும் அக்கதையும் இப்படி ஒன்ற கலந்த ரசவாதத்தை பிற இடங்களில் கவனிக்க முடியவில்லை. இந்த உவமை துபாய் தவிர பிற நாட்டில் நடப்பதாக எழுதினால் செல்லுபடியாகாதுதானே.

 இக்குறுநாவலில் ரயில் நிலையங்கள், தங்கும் விடுதி, விடுதிக்கு அருகில் இருக்கும் சாலையும் கடையும் தவிர துபாய் என்பதற்கான பிற கவனிக்கத்தக்க அடையாளம் இருக்கவில்லை. இவ்வளவு ஏன் துபாய் வாழ் மனிதர்களும் அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையும் பெரிதாகப் பதிவாகவில்லை.

தமிழகத்திலிருந்து விமான நிலையத்தில் திக்குமுக்காடி நிற்கும் வள்ளி, விமானத்தில் ஏறி துபாய்க்கு இறங்கும் வரை எழுத்தாளர் கண்முன்னே நிகழ்வது போல மிக துல்லியமாக எழுதியிருப்பார். அதனை வாசிக்கையில் நாமே விமான நிலையத்தில் நிற்பதாகவும் எங்கே என் கடவுச்சீட்டு எனவும் தேட வைத்துவிடுகிறார்.

இவை கொடுத்த அதிகப்படியா ஆர்வமும் எதிர்பார்ப்பும் துபாய்க்குச் சென்ற பிறகு குறைந்துவிட்டது. ஒரு வேளை நாயகி வள்ளியின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருந்தால் இத்தனைக் கேள்விகளுக்கு இடமிருக்காது. எழுத்தாளரின் குரல் நாவல் முழுக்க தனியாக ஒளித்து கொண்டிருக்கும் போது இத்தகைய கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் எழுவது இயல்புதானே.

ஒரு வேளை எழுத்தாளர் தான் வள்ளியின் சார்பாக வள்ளியைப் பற்றி எழுத நினைத்திருந்தாரோ என்னவோ.

துபாய்ச் செல்லும் வள்ளி; தனது ஏஜென்டால் ஏமாற்றப்படுகிறாள். அவள் தங்க வேண்டிய விடுதியில் இருக்கும் நான்கு பெண்களும் இவளில் நிலையைப் புரிந்துகொண்டு உதவுகிறார்கள். வள்ளிக்கு வேலையை ஏற்பாடு செய்கிறார்கள். முதல் மூன்று மாதங்களுக்கு அவளக்கு விடுதி வாடகை ஏஜென்டால் (கொஞ்சம் நல்ல ஏஜென்ட்தான் போல) செலுத்தப்பட்டுவிட்டதால், தங்குவதில் சிக்கல் இல்லை. ஆனால் சாப்பாடு செலவுக்கும் வீட்டுக்கு அனுப்பவேண்டிய பணத்திற்கும் தமிழகத்தில் தன் தாயின் பொறுப்பில் இருக்கும் பிள்ளைகளிடம் கைப்பேசியில் உரையாடவும் பணமும் அதற்குத் தகுந்த வேலையும் வேண்டும்.

வள்ளி சந்திக்கும் நான்கு பெண்களும் நான்கு வாழ்க்கை பின்புலத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆளுக்கொரு சிக்கலைச் சந்திக்கின்றார்கள். வாசகர்கள் இவற்றை இக்குறுநாவலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இப்போது நான் சொல்லிவிட்டால் அதன் சுவாரசியம் குறைந்துவிடும்.


இந்நாவலில் நான் ரொம்பவும் ரசித்த இடம் ஒன்று உள்ளது. ரசிக்க மட்டுமல்ல. யோசிக்கவும் வைத்தது. அடிக்கடி  ஜானு வள்ளிக்காகக் கர்த்தரிடம் பிரார்த்தனைச் செய்வதாகச் சொல்லுவாள்.


சொல்லுவதோடு மட்டுமல்லாமல் வள்ளிக்கு ஏற்ற வேலையையும் தேட செய்வாள். நான்கு பெண்களில் ஒருத்தி விபத்தில் இறந்துவிடுகிறாள். அவளது அண்ணனுக்குத் தகவலைச் சொல்கிறார்கள். அவரால் துபாய்க்கு வரவும் முடியாது இறந்த தங்கையைத் தாய் நாட்டிற்கு கோண்டு வரவும் முடியாது. இதுவரை உழைத்தவள் அனாதையாக அடக்கம் செய்யப்படப்போகிறாள். அண்ணனோ அவளுக்காகப் பிரார்த்தனை மட்டுமே தன்னால் செய்ய முடியும் என்று சொல்லி தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டார். இரு மனிதர்கள் பிரார்த்திப்பதாகச் சொல்கிறார்கள். ஒருவார்த்தையில் மட்டுமே ஒரு சத்தியம் இருந்தது அது ஒரு பெண்ணிற்கு அவளைக் காப்பாற்றிக் கொள்ள வேலையைத் தேடி கொடுக்க வைத்தது. இன்னொரு பிரார்த்தனை தனது இயலாமையின் மீது கழிவிரக்கமாக்கப் பயன்படுத்தப்பட்டது.

நிறைவாக; 

100 பக்கங்களில் இக்குறுநாவலை எழுத்தாளர் முடித்திருக்கிறார். இன்னும் மெனெக்கெட்டிருந்தால் ஐந்து பெண்களில் வாழ்க்கையை அதிகமாகச் சொல்லி நம்மைக் கலங்கடித்திருக்க முடியும். பாதகமில்லை. இப்போது இந்நாவல் கொடுக்கும் வாசிப்பு அனுபவம் முக்கியமானதுதான். வாழ்க்கை ஒரு கதவை அடைத்தால் நம்பிக்கை ஒரு கதவைத் திறப்பதற்குக் கற்றுக்கொடுக்கும் என சொல்கிறது ‘மராம்பு’.

எழுத்தாளருக்கு வாழ்த்துகள். 

- தயாஜி

ஜனவரி 24, 2023

'தலைவர்' - புத்தகவாசிப்பு 3 (2023)



‘தலைவர்’– புத்தகவாசிப்பு 3 (2023)

தலைப்பு – தலைவர்
எழுத்து – எம்.பிரபு
வகை – சிறுகதைகள்

சொல்லித்தான் ஆகவேண்டுமா? என எனக்கு நானே சிலசமயங்களில் கேட்டுக்கொள்வது உண்டு. ஏனெனில் நாம் ஆசைப்பட்டு எதிர்ப்பார்த்து சொல்லுவதும் எழுதுவதும் நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இருந்தும் ஏன் சொல்லத் தோன்றுகிறது, ஏன் எழுதத் தோன்றுகிறது என்றால் நாம் நம் சொல்லின் மீதும் எழுத்தின் மீதும் வைத்திருக்கும் நேர்மையும் அதன் விளைவுகள் கொடுக்கும் பலன்கள் மீதான நம்பிக்கையும்தான் காரணம்.

கடந்த ஆண்டு வாசித்த புத்தகப்பட்டியலை மீண்டும் ஒரு கண்ணோட்டமிடுகையில் என் சொந்த மண்ணின் (மலேசியா) எழுத்தாக்கங்களை (புத்தகங்களை) வாசித்தது குறைவாக இருந்தது தெரிந்தது. இவ்வருடம் தொடங்கி மாதம் ஒரு மலேசிய புத்தகத்தைக் குறித்து புத்தகவாசிப்பு பகுதியில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
அந்த வகையில் தொடக்கமாக மலேசிய எழுத்தாளர் எம்.பிரபுவின் தலைவர் சிறுகதைத் தொகுப்பு குறித்து என் வாசிப்பனுபவத்தை எழுதுகிறேன்.

மலாய் மொழியில் குறிப்பிடும்படியான சிறுகதைகளை எழுதி அறியப்பட்ட எழுத்தாளர். ‘கருப்பைய்யா’ என்ற தலைப்பில் மலாய்ச் சிறுகதைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். ‘தலைவர்’ இவரது முதல் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு.

இத்தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நான் ஏழு சிறுகதைகளை மட்டுமே வாசித்துள்ளேன். பாதிக்குப்பாதி சிறுகதைகளை மட்டுமே வாசித்து இதனை எழுதுவதற்கு நான் மட்டும் பொறுப்பல்ல. அந்த எழுத்தாளரும்தான்.

பதிப்பகங்களை அணுகாமல் நாமே சொந்தமாக புத்தகங்களை பதிப்பிப்பதற்கான வாய்ப்புகள் இப்போது எங்கும் உண்டு. நாமே கதையை எழுதி நாமே அதனைத் திருத்தி நாமே அதனை நேர்படுத்தி நாமே அதற்கு பக்கங்களை அடுக்கி நாமே அதனை அச்சகத்துக்கு அனுப்பி நாமே அங்கும் பிழைத்திருத்தம் பார்த்து புத்தகத்தை அச்சடித்து கையில் பெற்றுக்கொள்ளலாம். கொஞ்சமாய் உழைப்பும் கூடுதலாய் பணமும் இதற்கு போதுமானது. ஆனால் இதன் வழி கையில் கிடைத்திருக்கும் புத்தகத்தின் தரம் கேள்விக்குறியாகிறது. புத்தகத்தின் தரமே கேள்விக்குறிக்குள்ளாகிறது என்றால் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து யோசிக்கத்தானே வேண்டும்.

ஒருபக்கம் பதிப்பகங்களால் உண்டாகும் நம்பிக்கை ராயல்டி போன்ற சிக்கல், இன்னொரு பக்கம் நானே செய்துக்கொள்கிறேன் என்பதில் ஏற்படும் குளறுபடி. கடைசியில் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கி வாசிக்கும் வாசகனை யார் கவனிக்கிறார்கள்.  வாசகனுக்காகத்தான் செய்கிறோம் என்கிறார்கள் ஆனால் அவனை கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை.

இவ்வளவும் பேசுவதற்கு காரணம் இந்தச் சிறுகதைத் தொகுப்பும் ‘செல்ப் பப்ளிஷிங்’ என்றழைக்கப்படும் எழுத்தாளரே புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார்.
எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் இடையில் செறிவாக்கம் செய்வதற்கு ஒருவர் வேண்டும் என்பதை நான் எப்பவும் வழியுறுத்துகிறேன். சில எழுத்தாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் தனது படைப்பு வாசகனிடம் செல்வதற்கு முன்பாக எடிட்டரிடம் செல்வது தனக்கு ஏற்படும் அவமானமாகப் பார்க்கிறார்கள். தனது படைப்பை எடிட்டர்கள் சிதைத்துவிடுவதாகப் பார்க்கிறார்கள். இவர்களின் எழுத்தால் வாசகர்கள் சிதைந்துபோவதை விட அதற்கு முன்னமே அந்தப் படைப்பு சிதைவது ஒன்றும் பெரிய குற்றமில்லைதான். குறைந்த பட்சம் பிழைத்திருத்தக்கூட இவர்கள் யாரையும் அணுகுவதில்லை.

தலைவர் சிறுகதைத் தொகுப்பை முழுமையாக வாசிக்க விடாதது அதிலிருக்கும் எழுத்துப்பிழைகள். என்னதான்  மேய்ப்பு பார்த்தாலும் எப்படியாவது சில எழுத்துப்பிழைகள் புத்தகத்தில் வந்துவிடுகிறதே என்கிற வருத்தம் எல்லா எழுத்தாளர்களுக்கும் உண்டு. ஆனால் வரிக்கு வரி எழுத்துப்பிழைகள் தென்படும் போது தொடர் வாசிப்பை அது தடை செய்கிறது. முதல் வரியில் எழுத்துப்பிழையாய் இருக்கும் சொல் இரண்டாவது வரியிலேயே பிழையின்றி இருக்கிறது. இப்படி பல இடங்களின் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. எழுத்தாளர் கூடுதல் கவனத்தை இதற்குத்தானே கொடுத்திருக்க வேண்டும். அதிலும் எளிய சொற்கள் கூட பிழையாக அச்சேறியிருப்பது வாசகனாய் எனக்கு வேதனையைக் கொடுக்கிறது.

இப்படி சொல்லி எழுத்தாளரை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் எழுத்தாளர் என்கிற பொறுப்பிற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

முதல் கதை, ‘இரு உலகம்’. ரொம்பவும் நன்றாக வரவேண்டியக் கதை. நிஜ உலகத்திற்கும் (இன்னொரு) நிழல் உலகத்திற்கும் சென்றுச்சென்று திரும்பி போராடும் பெண் இறுதியாய் மருத்துவமனையில் இருக்கிறாள்; இதுதான் கதை. உளவியலை அழகாய் பயன்படுத்த வேண்டியக் கதை. ஆனால் இரு உலகங்களின் என்ன நடக்கிறது என்று சொல்லுவதிலேயே எழுத்தாளர் ஆர்வத்தைக் காட்டி கதையை முடித்துவிட்டார். யோசிக்கையில் இரு உலகங்களை இடப்பக்கம் ஒரு புள்ளியாகவும் வலப்பக்கம் ஒரு புள்ளியாகவும் மருத்துவ உலகத்தை ஒரு புள்ளியாகவும் வைத்து முக்கோணத்தில் ஒரு உளவியல் கதையை அபாரமாக கையாண்டிருக்கலாம். தவறவிட்டுவிட்டார்.

‘ஆ யீக்கு வந்த ஆசை’ என்ற சிறுகதை தலைப்பில் இருந்த ஈர்ப்பு கதையில் இல்லை. திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ விரும்பும் இளைஞன் காதலியுடன் சேர்ந்து வாழந்து காதலி கர்ப்பமாகிறாள், காதலன் விபத்தில் இறந்து போகிறான். சீன சமூகத்தில் நடக்கும் கதையாக காட்டி எழுத நினைத்து அதனையும் முழுமையாக்கவில்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து இக்கதையை வாசிக்கும் ஒருவருக்கு சீன சமூகத்தைப்பற்றி நாயகி நாயகனின் பெயரளவில் மட்டுமே தெரிந்து கொள்வார்கள். அதைத்தாண்டி இக்கதையில் அவை பயன்படவில்லை. இதனை ஒரே வரியில் பத்திரிகைச் செய்தியாக்கிடலாம். இளைஞர்களின் இந்த திருமணம் மீதான வெறுப்பிற்கு என்ன காரணம், ஏன் அவர்களால் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ரொம்பவும் மேலோட்டமாக சொல்லிச்சென்றுவிடுகிறார். அவ்வளவே என கதை முடிந்து விடுகிறது. யாருக்கோ என்னமோ நடந்துவிட்டது என்ற எண்ணமே கதையை வாசித்து முடிக்கையில் தோன்றுகிறதே தவிற அதைத்தாண்டி வாசகனிடம் எதையும் சொல்லவில்லை.

‘புது முதலாளி’  என்னும் கதையும் அப்படித்தான். அப்பா இறந்த பின் அவரது வியாபாரத்தை தொடரும் மகன் பணத்தின் மீது குறியாக இருக்கிறான். அவனுக்கு பணம் மீதும் பெரிய வீடு கார் போன்றவற்றின் மீதும் ஈர்ப்பு இருக்கிறது. பலரிடம் வெறுப்பை சம்பாதித்தாலும் பொருட்களின் விலையைக் குறைக்க விரும்பவில்லை. திடீரென இறந்த அப்பா அவனது கனவில் தோன்றி கண்டிக்கின்றார்; அவன் திருந்திவிடுகிறான். இதனைத்தான் 12 பக்கங்களில் சம்பவங்களாக எழுதியிருக்கிறார். ஆனால் இக்கதையின் தொடக்கம் நன்றாக அமைந்திருந்தது. எடுத்த உடனேயே கதைக்குள் இழுத்துவிட்டது. இருந்தும் என்ன செய்ய.

‘குப்பாய்க்கிழவி’ என்னும் கதையில் கிழவி தன் இயலாமையையும் தன் கடந்த காலத்தையும் சொல்லி புலம்புகிறாள். அதற்கான மொழி முழுமையாக இக்கதையில் கைவரவில்லை. மிகப்பெரிய வரலாற்று பின்னணியைச் சொல்ல இடமுள்ள சிறுகதை.

‘ஒரு கொலைகாரனுக்குப் பின்னால்’. ஒரு சைக்கோ எப்படி உருவாகிறான் என்பதை எந்த களப்பணியும் செய்யாமல் சினிமா இத்தனை நாட்களாய் காட்டியுள்ளதையே திரும்ப கதையாக்க முயன்றுள்ளார். இம்மாதிரியான மனித மனதின் சிக்கல்களைச் சொல்லும் கதைகளுக்கு தேவை இருக்கிறது. ஆனால் அதற்கு எழுத்தாளர் உழைக்க வேண்டும். அத்தேவையை வெறும் சம்பவங்களைக் கொண்டே நகர்த்தியுள்ளார்.

‘நீ நான் மனம்’, காதலில் ஏமாற்றமடைந்த காதலன் தன்னையும் தன் மனதையும் பிரித்து அதனுடன் உரையாடுகிறான்; சுவாரஷ்யமாக இருக்கிறா? ஆனால் கதை அப்படி அமையவில்லை. அப்படி அமைவதாக ஆரம்பித்து கதை வழக்கமான திடீர் திருப்பத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. இக்கதைக்கு பயன்படுத்தப்பட்ட யுக்தி கவனிக்கத்தக்கது. கூடுதல் கவனம் கொண்டிருந்தால் எழுத்தாளரின் முக்கியமான கதையாக வந்திருக்கும்.

இன்னும் ஒரே கதையை மட்டும் வாசிக்கலாம் என்கிற முடிவில், தலைப்பு சிறுகதையான ‘தலைவர்’ சிறுகதையை வாசித்தேன். சமகால அரசியல் சூழல்களையும் அதன் சூழ்ச்சிகளையும் சொல்ல முயற்சிக்கும் கதை. ரொம்பவும் மேம்போக்காகவே கதையை நகர்ந்தி சென்றுவிட்டார். இதுவும் முக்கியமான கதையாக வரவேண்டிய கதைதான்.

நிறைவாக, எழுத்தாளரிடம் சொல்வதற்கான கதைக்கருக்கள் இருக்கின்றன. ஆனால் அதனை கதையாக்குவதற்கு தேவையான கூடுதல் உழைப்பும் கலந்துரையாடலும் நிகழாமல் போனதே இத்தகைய பலவீனங்களுக்கு காரணமாக இருக்கலாம். 

அது ஒன்றும் கலையவே முடியாத ஒன்றல்ல. நினைத்தால் சீக்கிரமே அடுத்தடுத்து நல்ல கதைகளை எழுத்தாளரால் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை இம்முதல் தொகுப்பு கொடுத்திருக்கிறது. இவரின் பெயர் சொல்லும் வகையான சிறுகதையை இவர் எழுத வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பிலேயே இதனை எழுதியிருக்கிறேன்.

பின்குறிப்பு; எழுத்தாளருக்கு நெருக்கமாக இருப்பதாக நினைப்பவர்கள் யாரும் “என்ன இப்படியெல்லாம் எழுதியிருக்கு?” என்று கோவப்பட்டாலும் எழுத்தாளரிடம் புகார் செய்தாலும் உங்களிடம் சிறு வேண்டுகோல், உங்கள் அக்கறையை இச்சிறுகதைத் தொகுப்பை முழுமையாக வாசித்து ஒரு கட்டுரை மூலமாக காட்டுங்கள். நன்றி.


ஜனவரி 23, 2023

'தண்ணீர்ச் சிறகுகள்' புத்தகவாசிப்பு 2 (2023)


தலைப்பு – தண்ணீர்ச் சிறகுகள்
எழுத்து – கலாப்ரியா
வகை – கவிதை
வெளியீடு – சந்தியா பதிப்பகம்
புத்தகம் வாங்க - +60164734794 புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை (மலேசியா)

இவ்வாண்டில் வாசித்து முடித்த இரண்டாவது புத்தகம். முதல் கவிதை புத்தகமும் கூட. கவிஞர் கலாப்ரியாவின் ‘தண்ணீர் சிறகுகள்’

கவிதை வாசிப்பை நான் கால இயந்திரத்துடன் ஒப்பிட்டே பேசுவேன். அது ஒரு டைம் மிஷின்; சொல்லப்போனால் காலக்கடத்தியும் கூட. கவிதை எந்தக் காலத்தைக் குறித்து எழுதியிருந்தாலும் அது தன்னை நிகழ்காலத்திலேயே நிறுத்தியிருக்கும். அப்படியே, கவிதைகள் தன்னை வாசிக்கின்றவர்களை காலத்தின் முன்னோக்கியும் பின்னோக்கியும் அழைத்துச் சென்று விளையாட்டு காட்டிவிடும். எத்துணை நகைமுரண் இது.

இப்புத்தகத் தொடக்கத்தில் கவிஞர் கலாப்ரியா சில கவிதைகள் பிறந்த கதையைச் சொல்லியிருப்பார். அவரின் அனுபவங்களுடன் அக்கவிதைகளை வாசிக்கும் போதும், பின் ஒவ்வொரு கவிதைகளாக வாசிக்கும் போதும் வாசகர்களுக்கு இருவேறு பரிணாமங்களை அவை கொடுக்கின்றன. அதனால்தான் என்னவோ கவிஞர்கள் ஏதோ ஒன்றை கவிதையாக்குகிறார்கள் வாசகர்கள் அதில் தங்களுக்கான ஏதேதே இருப்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

மானின் ரத்தம்
புலி மடுவில்ப்
பாலாய்

என்கிற கவிதையைத் திரும்ப திரும்ப வாசிக்கின்றேன். மூன்றே வரிகள்தான். ஆனால் அது தன்னகத்தே சுமந்திருக்கும் மாயத்திற்கு நாம் பக்கம் பக்கமாக எழுதலாம். பாவத்தையும் புண்ணியத்தையும் கவிஞர் ஒரே கோட்டில் இணைத்துவிட்டார். இரண்டுக்குமே சம பங்கையும் கொடுத்துவிட்டார். இதில் ஒன்றைக்கூட்டி மற்றொன்றைக் குறைத்தால்; என்ன குறைத்தால்? அப்படி குறைக்கவே முடியாது என்பதுதானே  கவிஞர் போட்டிருக்கும் கோடு. அது அப்படியேத்தான் இருக்கும். அது இயற்கை. அந்தச் சுழல் அப்படித்தான் இயங்க வெண்டியுள்ளது.

உன் நினைவை
மீட்டுக் கொடுத்தான்
உன் காதலன்

என்கிறார். காதலன் என்று முடியும் இடத்தில் காதலி என்று மாற்றி வாசிக்கும் சுதந்திரத்தை அதன் முதல் இரண்டு வரிகளே ஒப்புதல் கொடுக்கின்றன. இதில் ஒரு காவியச் சோகம் தெரியவில்லையா. உண்மையில் நினைவுகள் என்பது வலி நிவாரணியும் வலியில் காரண கர்த்தாவாகவும் ஆகிவிடுகின்றன. அவள் நினைவையோ அவன் நினைவையோ மீட்டுக்கொள்கிறோம் என்பதுவரை மனம் லேசாகிறது. நினைவுகள் இனிக்கின்றன. ஆனால் யார் மூலம் அது சாத்தியமாகிறது என தெரிந்து கொள்ளும் இடத்தில் மனம் கனக்கிறது, கூடவே நினைவுகள் கசக்கச் செய்கின்றன.

குழந்தைகள் குறித்த நம் கவிஞரின் கவிதைகள் எப்போதும் கவனிக்கத்தக்கவை. இத்தொகுப்பிலும் அவ்வாறு சில கவிதைகள் இருக்கின்றன. அதிலொன்று;

குழந்தை 
வரைந்தது
பறவைகளை மட்டுமே
வானம்
தானாக உருவானது

எத்தனை அழகாக ஆழமானப் பார்வை. வானத்தை எப்படி வரைவது. ஒரு பக்கத்தாளில் நீலமடித்து வானம் வரையலாம்தான். பெரியவர்கள் அப்படித்தானே யோசிக்கிறோம். நீலம் நிறைந்திருந்தால்தான் அது வானம். குழந்தைகள் அப்படி நினைப்பதில்லை. வெள்ளைக் காகிதத்தில் இரு வாளைந்த கோடுகளை இணைத்து அவற்றைப் பறக்கும் பறவைகள் ஆக்கிவிடுகிறார்கள். பிறகென்ன வானம் தானாக உருவாகிவிடுகிறது. குழந்தைகள் மனம் அத்தகையதுதானே.

ஒரு குழந்தை இப்படியென்றால் இன்னொரு குழந்தை மீன் நீந்த தண்ணீரை வரைகிறது அவசர அவசரமாக,

மீன் வரைந்ததும்
முனையொடிந்த
பென்சிலை அவசரமாய்ச்
சீவுகிறது குழந்தை
தண்ணீர்க் கோடுகள்
தீற்ற

இப்படி குழந்தைகளின் இருவேறு மனநிலைகளைக் கவிஞனால்தானே உள்வாங்க முடிகிறது. கோடு போட்டு வானம் காட்டிய குழந்தையால் மீனை வரைந்து அது கடலென்று காட்ட முடியாதா என்ன?

பல சமயங்களில் கவிஞனின் கேள்வியில் இருந்தும் கவிதைகள் பிறக்கின்றன. அதற்கு ஓர் உதாரணம்தான் கவிஞரின்;

கனவுகள் ஏதும்
வந்ததா
கண்ணப்ப நாயனாருக்கு
கண் மூடிக்
கண் தோண்டிக்
கண் தைக்கும் 
நேரத்தில்

அற்புதங்களும் அதிசயங்களும் எப்போதும் யாருக்கும் நடக்கலாம் என்பதைத்தான் காட்டுகிறாரோ ?

தன் குறிப்பின்
அழகான கையெழுத்தைத்
தானே வியந்து
தள்ளி வைத்தான்
தற்கொலையை

தள்ளி வைத்தத் தற்கொலை இனி அவனுக்கு தேவையிருக்காது என்றே கவிஞர் நம்ப வைக்கிறார். இப்படி ஏதாவது ஒரு அதியத்தை நாம் கண்டுபிடிக்கத்தான் வேண்டும் வாழ்வதற்கு, அது வெளியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்குள்ளேயே இருக்கலாம். பாலோ கொயிலோவின் ரசவாதி நாவலின் நாயகன் புதையல் தேடி தேசம் கடந்து பயணம் போவான். பல அனுபவங்களைப் பெறுவான். கடைசியில் அவன் தேடி வந்த புதையல் அவன் பயணம் தொடங்கிய இடத்தின் காலுக்கு அடியில்தான் இருக்கும். காலுக்கு அடையில் இருந்தாலும் அதனை அடைய அதற்கான அனுபவம் தேவையென்று எழுதியிருந்தால் அவன் என்ன  செய்வான்; பாவம். இக்கவிதை எனக்கு அந்நாவலின் நாயகன் சாண்டியாகோவை நினைக்க வைக்கிறது.

கவிஞரின் பார்வை எப்படி ஒன்றைப் பார்க்கிறது என்பது கவிதையை மேலும் அழகூட்டுவதாக அமைந்துவிடுவிறது. அதற்கு சான்றாக கவிஞரின் இன்னொரு கவிதை;

தன்னைப் பற்றியும்
பாடச் சொல்லி
தண்ணீர் முத்துக்கள்
சூடியிருக்கிறது
தாமரையிலை

தன்னிடம் அதிகாரம் இருப்பதையே இங்கு பலர் விரும்புகிறோம். எவ்வளவு நெருக்கம் கொண்டிருந்தாலும் அன்பு பாராட்டினாலும் உள்ளுக்குள்ளே உள்ளத்தின் ஓரத்தில் பிறர் மீது அதிகாரம் செலுத்தவே பலரும் பிரயாசைப் படுகின்றோம். ஒருவேளை இதைத்தான் கவிஞர்,

சின்னவளைச் சேர்த்து
விளையாடு என்றால்
பெரியவள் தேர்ந்தெடுப்பது
டீச்சர் விளையாட்டு

விளையாடவும் வேண்டும் தன் கையில் அதிகாரமும் வேண்டும் என ஆசைப்படும் அந்தப் பெரியவளை நாம் எத்தனை இடங்களில் பார்த்திருக்கிறோம்.

தவம் செய்கிற புத்தனைப்
பார்த்துப் பார்த்துப்
பயந்தபடியே
உண்ணுகிறது
ஒரு கனிந்த
அரசம் பழத்தை
அணில் ஒன்று

என்கிறார் கவிஞர். எனக்கென்னவோ, அந்த அணில் புத்தனைப் பார்த்து பயப்படவில்லை. புத்தனின் பெயரிலும் அவனது போர்வையிலும் மனிதர்கள் செய்யும் அட்டூழியங்களைக் கண்டே அணில் அஞ்சியதாகப் படுகிறது. அணில் மட்டுமா அஞ்சுகிறது. நீங்களும் நானும்தானே அஞ்ச ஆரம்பித்திருக்கிறோம்.

கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுடன் உரையாடும் போதெல்லாம் கவிதைகளையும் வாசிக்க வழியுறுத்துவேன். அது அவர்களுக்கு வார்த்தைகள் வழியாகவும் கவிஞனின் பார்வை வழியாகவும் உதவக்கூடும் என சொல்லுவேன். ஒரு கவிதை ஒரு சிறுகதைக்கான பொறியையும் போட்டுவிடக்கூடியது.

திடீரெனப்
பெயர் அழைக்கப்பட்டுத்
திரும்ப நேரும் போதெல்லாம்
கண்களில்
ஏன் இவ்வளவு
இறந்த காலம்

இக்கவிதையை வாசித்து முடிக்கவும் சிறுகதைக்கான அழகான தொடக்கமும் மனதில் தொற்றிக்கொண்டது. கவிஞரின் கேள்விக்கு பதில் தேடி தொடர்ந்தால் ஓர் அழகான சிறுகதையை எழுதிவிடலாம்.

கவிஞர் கலாப்ரியாவின் ‘தண்ணீர்ச் சிறகுகள்’ கவிதைத் தொகுப்பினைக் குறித்தும் இக்கவிதைகள் குறித்தும் இன்னும் எழுதவே தோன்றுகிறது. அதற்கான அத்தனைக் கவிதைகளையும் இத்தொகுப்பு கொண்டிருக்கிறதுதான். எல்லாவற்றையும் சொல்லிவிடுவதை விட சொல்லாமல் விட்டவைதான் இதன் மீது அதிக ஈர்ப்பு கொடுக்கும் என்பதால் கவிஞரின் கவிதையொன்றையே நிறைவுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்.

நல்ல நடன நிகழ்ச்சி
பார்த்து விட்டு வருகையில்
களவி முடித்த
களைப்பு

- கவிஞர் கலாப்ரியா (தண்ணீர்ச் சிறகுகள்)

#தயாஜி

ஜனவரி 17, 2023

"அப்பறம்.... நாம எப்ப சந்திக்கலாம்...."


சகோதரர் கவிஞர் மு.மணிக்குமாரை சந்தித்தேன். சமீபத்தில் நடந்த 'உளமுற்ற தீ' புதுக்கவிதைகள் புத்தக வெளியீட்டில் கடைசி வரை இருந்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள இயலவில்லை.

ப.இராமு அறக்கட்டளை வெளியீடு செய்திருக்கும் இரண்டாவது தொகுப்பு புத்தகம் இது.  இம்முறை புதுக்கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். இது போன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கது. நன்கு அறியப்பட்ட கவிஞர்களின் கவிதைகள் இதில் இருந்தாலும் பல புதியவர்களுக்கு இலக்கிய முகவரியாகவும் இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.

இப்புத்தகத்தைத் தவறவிட விரும்பப்பில்லை. முயன்றேன். கவிஞர் மு.மணிக்குமார் உதவினார். வெறுமனே புத்தகத்தைக் கேட்டார்; கொடுத்துவிட்டு செல்வோம் என்று நினைத்திடாமல் எங்கள் சந்திப்பு உரையாடலாகத் தொடர்ந்தது. நல்லவேளையாக கவிஞருக்கு அதற்கான நேரம் கிடைத்திருந்தது.

அடிக்கடி சந்தித்துக்கொள்ளாவிட்டாலும் சந்திக்கும் போதெல்லாம் அன்பு பாரட்டுகின்றவர்களின் கவிஞரும் ஒருவர். பார்த்த உடனே உடல் நலம் குறித்து விசாரித்தார்.

மருந்துகளால் உடல் பலவீனமடைந்து வருவதால், இப்போது மருந்துகளைத் தவிர்த்து தியானம் பிரார்த்தை போன்ற அகம்சார்ந்த தேடல்களில் ஈடுபட்டுள்ளதைச் சொல்லி சிரிக்கலானேன். அவரும் சிரித்தார்.  இதனைக் குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம், பலருடனான உரையாடல்கள் சிரித்த முகமாய்த் தொடங்கி வெறுக்கும் முகமாய் முடிந்த கதைகளெல்லாம் நமக்கு தெரியும்தானே.

'உளமுற்ற தீ' கவிதைத் தொகுப்பு குறித்த என் முதற்கட்டப் பார்வையைப் பறிமாறிக்கொண்டேன். நேர்த்தியான வடிவமைப்பு, அழகான முகப்பு, கவிதைகளுடன் கவிஞர்களின் அறிமுக குறிப்பும் புகைப்படங்களும் இருந்தது பாராட்டத்தக்கது. ஏனெனில் பல கவிஞர்களின்/ எழுத்தாளர்களின் குறிப்புகள் (புகைப்படங்கள் உட்பட) ஆவணப்படுத்தப்படாமல் இன்று இல்லாமலேயே போயிருக்கின்றன.



பிறகு புத்தகத்தை வாசித்து என் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்றைய சந்திப்பில் கவிஞருடன் மலேசிய இலக்கியம் குறித்து மேலோட்டமாக பேசினேன். முன்னமே அவர் ஒவ்வொன்றையும் உள்வாங்கியிருந்தது அவரது பேச்சில் தெரிந்தது.

கடந்த ஆண்டு ஐந்து எழுத்தாளர்களின் முதல் புத்தகங்களை வெளியிட காரணமாக இருந்த மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் நிறுவனர் (அகிலம் நீ) பொன் கோகிலம் குறித்தும் பேசினோம். குறுகிய காலத்தில் பல இளம் எழுத்தாளர்களை அவர் அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் எங்கள் இருவருக்கும் மாற்று கருத்து இல்லை. 

இதன் வழி தங்களின் எழுத்துலக அடையாளத்தைத் தொடங்கியவர்கள் தொடர்ந்து தங்களின் அடையாளத்தைக் காப்பாற்ற அவர்களின் தொடர்ந்த எழுத்து பயணம் மட்டுமே உதவும் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. பொன் கோகிலத்தின் தலைமைப்பண்பு பற்றி குறிப்பிடும் போது, குறுகிய இடைவெளியில் பலரை முன்னிலைப்படுத்தியிருக்கும் பண்பு பாராட்டக்குரியது என்றார். உண்மைதான் அவர் முகம் மட்டுமே இருக்க வெண்டிய பல இடங்களில் பலரின் முகங்களைக் காண்பதற்கும் தனித்தனி ஆளுமைகளாக அவர்கள் வளர்வதற்கும் அதுதானே தொடக்கப்புள்ளி; இதுதானே அவர்களுக்கு ஏற்ற பள்ளி.

அப்படியே 'வல்லினம்' ம.நவீன் ,  கே.பாலமுருகன் என இன்னும் சிலரின் இலக்கிய செயல்பாடுகள் குறித்து கருத்துகளைப் பறிமாறிக்கொண்டோம். யோசிக்கையில் எப்போதுமில்லாத அளவிற்கு இன்றைய இளைஞர்கள் வாசிப்பிலும் எழுத்திலும் ஈடுபாடு காட்டுவதற்கும் தத்தம் கருத்துகளைப் பொதுவெளியில் வைப்பதற்குமான நகர்வுகளுக்கு இவர்கள் எல்லோரும் முக்கியமான காரணம் என்றும் சொல்லலாம்.

எனது இன்றைய புத்தக விற்பனைத் தொழிலையும் என் கடந்த கால  வனொலி அறிவிப்பாளர் பணியைப் பற்றியும் பேசினோம். என் வாழ்வில் பசுமையான பல நினைவுகளையும் பல துரோகங்களையும் கொண்டதை எப்படி மறப்பது. இப்போது கூட எனக்கான இடம் இன்னமும் எனக்காக இருப்பதாகவே தோன்றுகிறது. 

இன்னும் பலவற்றைப் பேசினோம். இன்றையப் பொழுதை நல்லப் பொழுதாக அவரின் வருகை மாற்றியிருந்தது. வாய்ப்பிருந்தால் சொல்லுங்க அடிக்கடி சந்திக்கலாம் என்றார்; இதைவிட நமக்கு வேறு என்னங்க வேணும்.

எனக்கு அவர் 'உளமுற்ற தீ' புத்தகத்தையும் அவரின் கவிதைத் தொகுப்புகளான 'விரல் நுனியில் விடியல் கனவுகள்', 'எனது இன்னொரு நான்' என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் கொடுத்தார். 

ஒருவரிடமிருந்து புத்தகத்தை பரிசாகப் பெற்றால் அவருக்கும் ஒரு புத்தகத்தைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. நானும்  எனக்கு பிடித்த எழுத்தாளரான அகரமுதல்வனின் இரண்டாம் லெப்ரிணண்ட் சிறுகதைத் தொகுப்பினை அவரிடம் கொடுத்து அதற்கான காரணத்தையும் பகிர்ந்தேன்.

மனதிற்கு பிடித்தவற்றை பிடித்தவர்களோடு உரையாடுவதுதான் எத்துணை இன்பமானது. அப்பறம் நாம எப்ப சந்திக்கலாம்.....

ஜனவரி 08, 2023

2022-ல் வாசித்தவை


கடந்த ஆண்டு (2022) வாசித்த புத்தகங்கள்...

நாவல்கள்
1. ஏழாம் உலகம் - ஜெயமோகன்
2. வாழ்ந்தவர் கெட்டால் - க.நா.சு
3. நாளை மற்றொரு நாளே - ஜி.நாகராஜன்
4. ஒற்றன் - அசோகமித்திரன்
5. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
6. பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள் ( மொழியாக்கம்)
7. மிஸ்டர் ஜூல்ஸ்ஸுடன் ஒரு நாள் - டயான் ப்ரோகோவன் (மொழியாக்கம்)

சிறுகதைகள்
8. யேசு கதைகள் - பால் சக்காரியா (மொழியாக்கம்)
9. திமிரி - ஐ.கிருத்திகா
10. அமானுஷ்ய நினைவுகள் - அசோகமித்திரன்
11. முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு - அகரமுதல்வன் 
12. கரு - யோகாம்பிகை
13. தீக்‌ஷா - ஏ.கே.ரமேஷ்
14. அப்பாவின் அம்மா - சுமத்ரா அபிமன்னன்
15. 42 குறுங்கதைகள் - பத்மநாதன் பரசுராமன்
16. அப்பாவின் கைக்கடிகாரம் - குறுங்கதைகள் - உமாதேவி வீராசாமி
17. சரீரம் - நரன்
18. துயிலாத ஊழ் - சமகால ஈழச் சிறுகதைகள்
19. ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள் - பா.வெங்கடேசன்
20. ஈட்டி - குமார் அம்பாயிரம்

கட்டுரைகள்
21. எழுதுதக் பற்றிய குறிப்புகள் - பா.ராகவன்
22. கழிவறை இருக்கை - லதா
23. நடைவழி நினைவுகள் - சி.மோகன்
24. நூலக மனிதர்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
25. கதாப்பாத்திரங்களின் பொம்மலாட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
26. நிலவழி - எஸ்.ராமகிருஷ்ணன்
27. பின் கதை சுருக்க - பா.ராகவன்
28. ஏன் வாசிக்க வேண்டும் - ஆர்.அபிலாஅபிலாஷ்
29. வாசிப்பின் வழிகள் - ஜெயமோகன்
30. கதையும் புனைவும் - பா.வெங்கடேசன் (நேர்காணல்:த.ராஜன்) 

கவிதைகள்
31. வியனுலகு வதியும் பெருமலர் - இளங்கோ கிருஷ்ணன்


பெரும்பாலும் வாசித்த புத்தகங்களைப் பற்றி எனது வலைப்பூவிலும் முகநூலிலும் எழுதியுள்ளேன். இன்னும் எழுதாதவற்றை இவ்வாண்டில் எழுத வேண்டும். புத்தகமாக அல்லாமல் தனித்தனிக் கதைகளாக கவிதைகளாக வாசித்தவை பற்றி என வலைப்பூவில் எழுதியுள்ளேன்.

தொடர்ந்து என்னை வாசிக்கவும் எழுதவும் வைத்துக்கொண்டிருக்கும் இயற்கைக்கு என் அன்பு......

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 

ஜனவரி 06, 2023

விசாரணை அதிகாரி - புத்தக வாசிப்பு 1 (2023)

எந்த படைப்பையும் அதன் மூல மொழியில் படிப்பதன் வழி அதனுடன் நெருக்கமாகலாம் என்கிற கருத்து அவ்வபோது எட்டிப்பார்க்கிறது. இருந்தும் நம் தாய்மொழியில் அப்படைப்பின் மொழியாக்கத்தை வாசிக்கும் போது எந்தக் குறையுமின்றி அப்படைப்பை உள்வாங்க முடிகிறது.

அதற்கு உழைக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் எப்போது நன்றிக்கு உரியவர்கள்.

சில மொழியாக்கங்கள் தொழில் ரீதியாக வியாபாரத்தையும் விற்பனையையும் முதன்மைப்படுத்தி வாசகர்களை படுத்தி எடுக்கிறது. கூகல் மொழியாக்கத்திற்கு சற்றும் குறைவைக்காத நேரடி மொழியாக்கங்கள் அவை. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளை மொழியாக்கம் செய்துள்ளோம் என்கிற விளம்பரத்தைத் தவிர அம்மொழியாக்கத்தில் வேறொன்றும் இருக்கவில்லை.

அதற்காகவே மொழியாக்கப் படைப்புகளை தேர்ந்தெடுக்கையில் பலவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எந்தப் பதிப்பகம், எந்த எழுத்தாளர், யார் மொழிபெயர்ப்பாளர் போன்றவை அதில் முக்கியமாக அடங்கிவிடும்.

இவ்வருட தொடக்கத்தில் எனக்கு பிடித்த ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துகளை வாசிக்க எடுத்தேன்.

விசாரணை அதிகாரி என்கிற புத்தகம்; கரமசோவ் சகோதரர்கள் நாவலின் திருப்புமுனை அத்தியாயம் என்ற குறிப்பில் வந்துள்ளது. நூல்வனம் பதிப்பகம் மிகவும் நேர்த்தியாக புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். சமீப காலமாக சொல்வனம் பதிப்பகத்தின் வெளியீடுகள் தரமானதாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றன. முதல் பார்வையிலேயே கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றன. நூல்வனம் மணிகண்டனுக்கும் அவரின் குழுவினரின்  அக்கறைக்கும் உழைப்பிற்கும் வாழ்த்துகள்.

‘விசாரணை அதிகாரியை’ கவிஞர் ஷங்கர்ராமசுரமணியன் மொழிபெயர்த்துள்ளார். அதற்கு காரணமாகவும் அவர்தான்  மொழிபெயர்க்க வேண்டும் என எஸ்.ராமகிருஷ்ணன் முன்மொழிந்துள்ளார். எஸ்.ராவின் கணிப்பு வாசகர்களுக்கு விருந்தாக அமைந்துவிட்டது.

விசாரணை அதிகாரியை வாசித்து முடிக்கவும்; எப்படியாவது கரமசோவ் சகோதரர்களை வாசித்துவிட வேண்டும் என்கிற விருப்பம் எழுந்துவிட்டது. பல நாட்களாக என் புத்தக அலமாரியில் இருக்கும் அப்பெருநாவலை வாசித்திட வேண்டும்.

கடவுளின் பெயரால் உருவான ஒன்று பின்னர் கடவுளுக்கே எதிராக; அந்தக் கடவுளே இனி தெவையில்லை என்ற நிலைக்கு வருகிறது. அதற்கான காரணக்காரியங்களை அடுக்கிக்கொண்டுப்போகும் விசாரணை அதிகாரி கதாப்பாத்திரம் நம்மையும் ஒருகணம் தன்வசம் இழுத்துக் கொள்கிறது.

கடவுள் பூமிக்கு வந்து அவர் எதிர்க்கொள்ளும் சிக்கலையும்  அவரால் எதிர்க்கொள்ளப்படும் சிக்கல்களையும் பல கதைகளில் வாசித்திருப்போம் திரைப்படங்களாகவும் பார்த்திருப்போம். எழுத்தாளர்களுக்கு முழு சுதந்திரம் உள்ள கதையோட்டம் அது. சிலர் அதில் நகைச்சுவையையும் சீர்த்திருத்த கருத்துகளையும் இன்றைய காலக்கட்டத்தின் மாற்றத்தையும் சொல்லியிருப்பார்கள்.

‘கரமசோவ் சகோதரர்கள்’ எழுதிய தஸ்தயெவ்ஸ்கி; அதன் விசாரணை அதிகாரி அத்தியாயத்தில், எழுப்பியிருக்கும் கேள்வி மிக முக்கியமானது. இன்றளவும் ஒவ்வொரு மனிதனாலும் அவனவன் சூழலுக்கு அக்கேள்வி ஏதாவது ஒரு வடிவில் வந்து நிற்கிறது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மதி மயங்குகிறோமா அல்லது அதனை தாண்டி வருகின்றோமா என்பதுதான் ரொம்பவும் கடினமான ஒன்று. அவற்றை கேள்வி பதிலிலிருந்து குறிப்பாக முடிவான கேள்விகளில் இருந்து கதையை நகர்த்தியிருக்கிறார்.

‘அதைப் பொறுத்தவரை நீ சொன்னது சரிதான். மனித இருப்பின் ரகசியம் வெறுமனே பிழைத்திருப்பதில் இல்லாமல் எதற்காக நாம் வாழ்கிறோம் என்பதிலேயே உள்ளது………..’ என்ற நாவலில் வரிகளிலேயே இந்த வாசிப்பனுபவத்தை நிறைவு செய்கிறேன்.  


டிசம்பர் 20, 2022

எழுத்தாளர் தமிழ்மகனுடன் சந்திப்பு


எழுத்தாளர் தமிழ்மகன் மலேசியா வந்திருந்தார்.  அவரது ‘படைவீடு’ நாவலுக்கு தேசிய நில நிதி கூட்டுரவு சங்கம்,  ‘தான் ஶ்ரீ கே.ஆர்.சோமா இலக்கிய அறவாரிய விருதினை  அறிவித்திருந்தார்கள்.  அதன் பொருட்டு ரொம்பவும் குறுகிய காலப்பயணமாக வந்திருந்தார். 
சில காரணங்களால் அந்த விருது நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அது என் மனதை நெருடவே செய்தது.

 குறிப்பாக உடல் நலம் பொருட்டும் குடும்பச்சூழல் பொருத்தும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்வது சாத்தியமற்று இருக்கிறது. இது இயல்பான காரணம்தான் எல்லோரும் சொல்லும் காரணமும்தான். ஆனால் இதன் விளைவு மெல்ல மெல்ல நம்மை நாம் விரும்புகிற மனிதனில் இருந்து கொஞ்சமும் நமக்கு சம்பந்தம் இல்லாத இன்னொரு மனிதனாக நம்மை மாற்றிவிடக்கூடும். 

ஆகவே முடிந்தவரை; குறைந்தபட்சம் சில சந்திப்புகளையாவது தவறவிடக்கூடாது என்கிற அடுத்தாண்டு திட்டத்திற்கு இப்போதே பிள்ளையார் சுழி போட்டுக்கொண்டேன் எப்படியாவது எழுத்தாளர் தமிழ்மகனிடம் ஓரிரு வார்த்தைகளையாவது பேச நினைத்தேன். குறைந்தது நான் அவரின் எழுத்துகளை வாசித்திருக்கிறேன் என சொல்வதற்கான வாய்ப்பாக அது இருந்தாலும் எனக்கும் போதுமானது.

 ஏனெனில் அதுதான் ஓர் எழுத்தாளருக்கு நாம் கொடுக்கும் முதல் மரியாதை.

அவர்களை சந்தித்து அவர்களுடன் விருந்துண்டு அவர்களுடன் புகைப்படங்களில் சிரித்து வைப்பதெல்லாம் ஒன்றுமில்லை. சித்தர்கள் பாணியில் சொல்வதென்றால் அவை எல்லாம் சிற்றின்பம். அப்படியெனின் பேரின்பம்? ஆம் அது அவர்களின் எழுத்துகளை வாசிப்பது. அதனை அவர்களிடம் சொல்வது. அதிலும் எழுத்தாளர்களின் எழுத்திலிருந்து நாம் கண்டடைந்த ஒன்றை அவர்களுடன் பகிர்வது அல்லது சண்டையிடுவது.

எழுத்தாளர் தமிழ்மகன் மீண்டும் தமிழகம் செல்வதற்குள் அவரை சந்திக்க முயன்றேன். அதிஷ்டவசமாக அது சாத்தியமானது. அவர் புறப்படுவதற்கு முன்பாக பார்க்கலாமே என்றார். நல்ல வேளையாக அது காலை சிற்றுண்டியாக இருந்தது.
காலை 9.30க்கு சந்திப்பு முடியானது. காலை 7க்கே நான் எழுத்து தயாராகிவிட்டேன். 
அப்படியிப்படி என சாலை நெரிசல்களில் சிக்கியும் சிக்காமலும் ஒருவழியாக கூகல் காட்டிய குறுக்கு வழிகளில் எல்லாம் நுழைந்து பல சாகசங்களைச் செய்து ஒரு மணி நேரத்திற்கு முன்னமே தங்கும் விடுதியை அடைந்துவிட்டேன்.

 இடத்தை அடைந்ததுதாம் தெரிந்தது, அது என் வீட்டிலிருந்து குறைத்து அரை மணி நேரத்தில் கூட என்னால் வர முடிந்த இடம்தான். ஆனால் காலை நேர வாகன நெரிசலில் இருந்து என்னை காப்பாற்றுகிறேன் பேர்விழி என கூகல் மேப் செய்த காரியத்தில் தலை கொஞ்சம் சுத்திதான் விட்டது.

வீட்டில் இருந்து புறப்படும் முன்னமே அவரின் புத்தகங்களை அலமாரியில் இருந்து எடுத்து வைத்தேன். எந்தப் புத்தகத்தில் கையொப்பம் வாங்கலாம் என்கிற தீவிர யோசனை வந்து சேர்ந்தது.
2012-ஆம் ஆண்டில்தான் நான் அவரின் ‘மீன் மலர்’ சிறுகதைத் தொகுப்பின் வழி அவரை வாசிக்க ஆரம்பித்தேன்; அதில் கையெழுத்து வாங்கலாமா? அதன் பிறகு வாங்கிய ‘ஆண்பால் பெண்பால்’ என்னும் நாவலில் வாங்கலாமா? ஆனால் நான் முழுமையாக வாசித்து முடிக்காத புத்தகங்களில் அதுவும் ஒன்று ‘சரி மீதியை அப்பறம் வாசிச்சிக்கலாம்’ என்று எடுத்து வைத்த அதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியாத நாவலில் அவரிடம் கையொப்பம் வாங்குவது எனக்கு குற்றவுணர்ச்சியைக் கொடுத்தது. சரி சமீபத்தில் வாங்கி, என நண்பருக்கு பரிசாக கொடுத்த புத்தகமான ‘எட்டாயிரம் தலைமுறை’ சிறுகதைத் தொகுப்பில் வாங்கலாம் என யோசிக்கையில் எனக்கு ரொம்பவும் பிடித்த அ.முத்துலிங்கம் முன்மொழிந்த ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் வாங்கலாமா என்று மீண்டும் குழம்பலானேன். 

என் நிலைமையை அறிந்த என் இல்லாள்; “விருது கொடுக்கற புத்தகத்திலேயே ஆட்டோகிராப் வாங்கிடுங்களேன்” என்றார். “அட ஆமாம்ல.. அதைப் பத்திய யோசனையே இல்லா போச்சி” என்றேன். அதற்கு இல்லாள் ஒரு பதில் சொன்னார், அது நமக்கு வேண்டாம்.
ஒர் எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பது எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு நான் சொல்லும் பாலப்பாடம். மீண்டும் ஒரு முறை அவரது எழுத்துகளை மீள்ப்பார்வை செய்தேன். அப்போதுதான் அவருக்கு இம்மாதம் பிறந்த நாள் என  அறிந்து கொண்டேன். புத்தகங்களையும் அங்கீகாரங்களையும் விட சிறந்த பரிசுகளை எழுத்தாளர்களுக்கு எப்படி கொடுக்க முடியும். 

ஆகவே நான் எழுதிய மூன்று புத்தகங்களான ‘ஒளி புகா இடங்களின் ஒலி’ பத்திகள் தொகுப்பையும், எனது சொந்த பதிக்கபத்தில் நான் வெளியிட்ட ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல – 101 குறுங்கதைகள்’ தொகுப்பையும், ‘பொம்மி’ என் முதல் கவிதைத் தொகுப்பையும் அவருக்கு பரிசளிக்க எடுத்து வைத்தேன்.

காலை சிற்றுண்டியில் சந்திக்கலானோம். அவரும் அவரது துணைவியாரும் வந்தார்கள். எங்கள் இருவருக்கும் வழிவிட்டு அவரது துணைவியார் தனியாக அமர்ந்து கொண்டார். அடடே இப்படி பிரித்துவிட்டோமே என்கிற எண்ணம் எழுந்தது, அதனைப் புரிந்து கொண்டவர் ‘நீங்க பேசுங்க’ என்றார். அம்மாவிற்கு என் நன்றி.

எழுத்தாளர் தமிழ்மகன் எதிரில் அமர்ந்து என்னால் முழுமையாகச் சாப்பிட முடியவில்லை. இத்தனை நாடகளாக வாசித்த அவரது எழுத்துகளின் உருவும் குருவும் அவர்தானே. அவரின் கரிசனமாகக் குரல் என்னை இயல்பு நிலைக்கு திருப்பியது.

பலவற்றைப் பேசினோம். ஆனால் இப்போது யோசிக்கையில் நான் தான் அங்கு அதிகம் பேசியிருக்கிறேன் என தோன்றியது. அவர் அதிகம் கேட்பவராகவே இருந்தார். அவருக்கு மலேசிய எழுத்தாளர்களைத் தெரிந்திருந்தது. விசாரிக்கவும் செய்தார்.

அப்போது நான் சுஜாதாவின் தீவிர வாசகனாக இருந்தேன். முடிந்தவரை அவரின் அனைத்து ஆக்கங்களை வாசிக்கும் உத்வேகம் இருந்தது. அதில் ஓரளவிற்கு வெற்றியும் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தமிழ்மகனின்  ‘மீன் மலர்’ சிறுகதைகளை வாசிக்கையில் சுஜாதாவின் பாணி இருந்ததாகப்பட்டது. அதன் பிறகு மேலும் சிலர் இவரின் எழுத்துகளைக் குறித்து சொல்லும் போது ஜூனியர் சுஜாதா என்று சொல்வதையும் வாசித்திருந்தேன்.

அதுவரை கேட்டுக்கொண்டிருந்தவர் சட்டென; “நீங்க சொல்லுங்க தயாஜி நான் சுஜாதா மாதிரி எழுதறேனா?” என கேட்டுவிட்டார்.

அக்கேள்வி என்னை யோசிக்கவும் வைத்தது. அப்போது என் மனதில் ஒரு பதிலும் தோன்றியது. அது நான் சுஜாதாவை தீவிரமாக வாசித்த காலம் என்பதால் வாசிக்கும் எல்லாவற்றிலும் நான் சுஜாதாவை காணவே விரும்பினேன். சின்ன சின்ன வாக்கியங்கள், வித்தியாசமான திருப்பங்கள், கதைச்சொல்லலில் புதுமை போன்றவை அதன் எழுத்தாளர்களைத் தாண்டியும் எனக்கு சுஜாதாவையே நினைவூட்டியதைச் சொன்னேன்.
 தொடர்ந்து ஒரே எழுத்தாளரின் எழுத்துகளை வாசிக்கும் சிலருக்கு ஏற்படும் தடுமாற்றம் எனக்கும் ஏற்பட்டிருந்ததைச் சொன்னேன். 
அதன் பிறகு என்னால் வாசித்து முடிக்க முடியாத அவரது ‘ ஆண்பால் பெண்பால்’ நாவல் குறித்து பேசினேன். அந்நாவலில் இருந்து சிலவற்றை அவரும் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் அவரது மின்னங்காடி பதிப்பகத்தையும் நான் எனது வெள்ளைரோஜா பதிப்பகத்தைப் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் பேசினோம்,  திட்டங்களைப் பகிர்ந்து கொண்டோம். அதோடு அவரது புத்தகங்கள் எனது ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில்’ எப்போதும் இருக்கும் என்றேன்.

பிறகு நாங்கள் இருவரும் பக்கத்திலிருந்த பணப்பட்டுவாடா இயந்திரம் (ஏ.டி.எம்) வரை சென்று வந்தோம். 

தங்கும் விடுதிக்கு வரவும், வாகனமோட்டி அவருக்காக காத்திருக்கவும் சரியாக இருந்தது. ஏனெனில் விமான நிலையம் செல்வதற்கு முன்பாக சில பொருட்களை வாங்குவதற்கு பிரிக்பீல்ட்ஸ் சென்று வரவேண்டும். வாகன்மோட்டியைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவரது துணைவியார் வரவேற்பறைக்கு வர காத்திருந்தோம்.

வாகனமோட்டி பரபரப்பாக உள்ளே நுழைந்தார், “என்ன இன்னும் கிளம்பலையா.. மணியாகுது.. போய்ட்டு திரும்ப வந்து நாம் ஏர்போர்ட் போகனும்ல மணியாகுது” என்றுய கைகடிகாரத்தை பார்த்தார். அவர் பேசிய விதம் எனக்கே ஒருவித பதற்றத்தைக் கொடுத்துவிட்டது. நம்மை நம்பி வந்திருக்கும் விருந்தாளியிடம் இப்படியா இந்த தோரணையிலா பேசவேண்டும். சரி அவர் அவசரம்; அவரின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு அவருக்குத்தானே தெரியும் என என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். ஆனால்; இதுவே இவ்விடத்தில் ஓர் எழுத்தாளர் இல்லாமல் நடிகர் சூர்யாவோ, உலக நாயகன் கமல்ஹாசனோ இருந்திருந்தால் இப்படித்தான் அவர் பேசியிருப்பாரா என்கிற கேள்வி எழுந்தது. ஒரு வாசகனாக எழுத்தாளரின் முன் முழுமையாக சாப்பிடாமலே வயிறு நிறையும் எனக்கு இப்படித்தானே யோசனை எழும். 

சின்ன ஆலோசனை; இனி இவ்வாரான பிரமுகர்களை கவனிக்கவோ அவர்களுக்கு வாகன்மோட்டியாக வருகின்றவர்களிடம் யாரை அவர்களின் பொறுப்பில் கொடுக்கின்றோம் என சொல்லிவிடுங்கள். ஏனெனில் நானும் இவ்வாறு எழுத்தாளர்களை கவனிக்கும் பொறுப்பில் இருந்திருக்கிறேன் இருக்கவும் செய்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என் பொறுப்பில் இருந்த எழுத்தாளரை தொலைக்கவும் செய்திருக்கிறேன்; அது வேறொரு சுவாரஷ்யமான கதை.

இவர் மட்டுமல்ல; இக்கேள்வியை இங்குள்ள ஊடகங்களிடமும் நாம் வைக்கலாம். ஒரு சினிமா பிரபலம் மலேசியா வரும் போது வரிந்து கட்டி நிற்கும் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இப்படியான எழுத்தாளர்களோ அல்லது சமுகம் சார்ந்து இயங்குபவர்கள் வரும் போதோ அவ்வளவாகக் கண்டுக்கொள்வதில்லை.

 மலேசியாவிற்கு வரக்கூடிய எழுத்தாளர்களுக்கே இந்நிலை என்றால் இங்குள்ள எழுத்தாளர்களின் நிலையையும் இங்குள்ள சில ஊடகங்கள் எவ்வாறு அவர்களை பயன்படுத்துகிறது மரியாதை கொடுக்கிறது என யூகித்துக் கொள்ளுங்கள்.

பரபரப்பாய்ப் பேசி முடித்த வாகனமோட்டியிடம் எனது கைப்பேசியைக் கொடுத்து எங்கள் இருவரையும் படம் பிடிக்க சொன்னேன். அவரும் சிரித்த முகத்துடன் செய்தார். அந்த நேரத்தைப் பயன்படுத்தி தமிழ்மகனின் படைவீடு நாவலில் அவரிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டேன். எனது மூன்று புத்தகங்களையும் அவரிடம் சந்திப்பின் நினைவாகவும் முன்னமே பிறந்தநாள் பரிசாகவும் கொடுத்தேன்.

அவரது துணைவியாரும் வந்துவிட்டார். அவர்கள் பொருட்களை வாங்க புறப்பட; என்னையும் எழுத்தாளர் உடன் வரீங்களா என்று அழைத்தார். ஆசையாகத்தான் இருந்தது ஆனால் இயலவில்லை என்று வருந்தினேன்.
பரபரப்பான சூழலிலும் தன் வாசகனுக்கு நேரம் ஒதுக்கிய அவனுக்கு சிற்றுண்டியும் கொடுத்த எழுத்தாளர் தமிழ்மகனுக்கும் அவரது துணைவியருக்கு என அன்பும் நன்றியும்.

இதுதான் அவர் மலேசியாவிற்கு வரும் முதல் முறை. மீண்டும் அவரை மலேசியாவிற்கு அழைப்பேன் என்றேன், இங்கு அவரின் எழுத்துகளுக்கு இருக்கும் வாசகர்கள் அவரை சந்தித்து கலந்துரையாடல் செய்யும் காலம் அதிக தூரமில்லை என்கிற நம்பிக்கையான வார்த்தைகளின் மூலம் அவரிடம் இருந்து விடை பெற்றேன்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்