பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 31, 2022

- காதல் துரோகி -


நம்பிக்கை துரோகம். ஜீரணிக்க முடியாதது. தன் கண்முன்னே நடந்து கொண்டிருப்பதை மேற்கொண்டு பார்க்க முடியவில்லை.

அவள் சிரித்துக்கொண்டிருக்கிறாள். முகம் பிரகாசமாக இருக்கிறது. யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள். யாராக இருக்கும். தன்னைவிடப் பணக்காரன் போலத் தெரிகிறது. அதனால்தான் மயங்கிவிட்டாளா. தன்னைவிடா அவனால் அவளைக் காதலித்துவிட முடியும். தன் உயிருக்கு இணையாக நினைத்த காதலி; எப்படி அவளால் தன்னை ஏமாற்ற முடிந்தது.

துரோகம் செய்த காதலியைக் கொல்லவேண்டுமென மனம் துடிக்கிறது. இந்த உணவகத்திலேயே அதனைச் செய்ய வேண்டுமென முடிவெடுத்தான். புனிதமான தன் காதலுக்கு இப்படியொரு துரோகம் செய்து காதலை மாசுபடுத்தியவளை உடனே பலி தீர்க்க வேண்டும். 

மேஜையில் இருந்த கத்தியுடன் எழுந்தான். 
"என்னங்க.. டாய்லெட் போக எதுக்கு கத்தி.." என மனைவி கேட்கவும், மகள் சிரிக்கலானாள்.

சமாளித்துக்கொண்டு அமர்ந்தான். இவர்கள் மட்டும் இயங்கில்லாமல் இருந்திருந்தால் அந்தக் காதல் துரோகியை கொன்றுவிட்டுதான் மறுவேலை பார்த்திருப்பான்.

ஜனவரி 29, 2022

‘உங்கள் தக்காளி சட்னியும் என் இரத்தமும்’

 


இந்தக் கேள்வி ரொம்ப நாளாகவே இருக்கிறது. எவ்வளவோ கேட்டு வாங்கிக் கட்டிகிட்டாச்சி. இதையும் கேட்டுக்குவோம். வாங்கிக் கட்டிக்குவோம் என்ன வந்திடப்போகிறது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்து;நடத்தியது. பலருக்கும் குறிப்பாகச் சில புதிய முகங்களுக்கு விருதுகள் கிடைத்தன. வழக்கம் போல யாருக்குக் கிடைக்கக்கூடாது எனப் பலர் யூகித்திருந்தார்களோ அவர்களுக்கே கிடைத்து விட்டதாகப் பலரும் தங்களின் அதிருப்த்தியைத் தெரியப்படுத்தினார்கள். வாழ்நாள் சாதனையாளர் என்கிற விருது பெறவேண்டியவரின் பெயரை, சிறந்த துணை கதாப்பாத்திர தேர்விற்கு வைத்துவிட்டதாகவும் கூட முகநூல் ஆதங்கம் ஒன்றைக் காண நேர்ந்தது.

இன்னொன்று, சமீபத்தில் தொலைக்காட்சியில்  ஒலியேறிய நாடகங்களைக் குறித்துப் பல்வேறு கருத்துகள்/பார்வைகள் வந்திருந்தன. அரைமணி நேர நாடகத்தில் விளம்பரம் போக மீதமுள்ள பெரும்பாலான நேரத்தில் கதாப்பாத்திரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டும், இன்னும் சில கதாப்பாத்திரங்கள் கட்டிலில் படுத்திருந்த வண்ணம், அலுவலகம் என்ற பெயரில் கணினிக்கு முன்னும் கணினிக்குப் பின்னும் இரு  கதாபாத்திரங்கள்  பேசிக்கொண்டிருக்கின்றன. படக்கருவி ஏங்கல் சரியில்லை,  கதாப்பாத்திரங்கள் வெறும் வசனத்தையே பேசுகின்றன, காட்சிகள் நகரவில்லை. இம்மாதிரி பல.

இதில் பலருக்கும் உடன்பாடு இருந்தன. அதற்கான பின்னூட்டங்களை அந்தந்தக் கருத்தையொட்டி கவனிக்க முடிந்தது. இது எதுவும் சிக்கல் இல்லை. பார்வையாளனாக ரசிகனாக இவற்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அப்போதுதான் கலை வளர்ச்சியடையும் என்கிற எதிர்ப்பார்ப்பும் உங்களிடம் இல்லாமலில்லை.

இதையே இன்னொரு தளத்தில் செய்தால் நீங்களே எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள். திட்டிப்பேசுகின்றீர்கள். புதியவர்களை அழிப்பதாக வதந்தி பரப்புகிறீர்கள். புரிகிறதா?

சரி, சொல்கிறேன். ஆனால் இதனை என்னில் இருந்து நான் சொல்ல நினைக்கிறேன். ஏனெனில் சட்டென ஏதாவது ஒரு குழுவில் சிரமம் பாராது என்னை உறுப்பினர் ஆக்கிவிட்டு தான் மறு வேலை பார்ப்பீர்கள் என்ற அச்சம்தான். அந்த மெல்லிய கோட்டிற்கு மிக அருகிலிருந்தே நான் இதனைச் சொல்ல முயல்கிறேன்.

நீங்கள் ஒரு தொலைக்காட்சி தொடரை தொடர்ந்து பார்க்கிறீர்கள். நான் ஒரு புத்தகத்தைத் தொடர்ந்து வாசிக்கிறேன். நீங்கள் பார்த்தத் தொடரிலிருந்து உங்களுக்கு ஒன்று தோன்றுகிறது. நான் வாசித்த புத்தகத்திலிருந்து எனக்கு ஒன்று தோன்றுகிறது. நீங்களும் உங்கள் கருத்தினை எழுதுகிறீர்கள். நானும் என் கருத்தை எழுதுகிறேன். இதுவரை சரிதான். ஆனால் எழுதி முடித்தப்பிறகு நீங்கள் எழுதியது கலையை வளர்ப்பதாகவும் நான் எழுதியது கலையைச் சிதைப்பதாகவும் எப்படி மாற்றப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் நாடகமோ திரைப்படமோ ‘நல்லாவேயில்லை’ எனச் சொல்ல முடிந்தவர்கள் கூட ஒரு கதையை/புத்தகத்தை வாசித்து இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று சொல்லும் என்னை என்னவோ போல் பார்க்கிறீர்கள்.

நீங்கள் ஒரு திரைப்படம் குறித்தும் அதன் நாயக பிம்பம் குறித்துப் பேசுகிறீர்கள், கைத்தட்டல்களைச் சேர்த்துக் கொள்கிறீர்கள். யாரும் உங்களிடம் நீ எத்தனை திரைப்படம் எடுத்துவிட்டாய் எனக் கேட்பதில்லை. ஆனால் நாவலை வாசித்துச் சில குறைகள் இருப்பதாகச் சொல்கிறேன். நீ எத்தனை நாவல்கள் எழுதிவிட்டாய் என்பதுதான்    முதற்கேள்வியாக  உங்களிடமிருந்து வருகிறது.

இன்னும் கூட அதிகம் பேசலாம். ஆனால் நான் கேட்க நினைக்கும் அடிப்படை கேள்விகளைத் தான் கேட்டுள்ளேன். நாம் இருவரும் கலையை நம் ரசனையின்  அடிப்படையிலிருந்துதான் அணுகுகிறோம். என்னவென்று திரைப்படத்துக்காரர்கள் தூரமாக இருப்பதாலும் கதை/புத்தகம் எழுகின்றவர்கள் உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதாலும் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்னவோ.

இரண்டரை மணிநேரம் திரைத்துறை பார்த்து, மூன்று நான்கு மணி நேரம் விருது நிகழ்ச்சி பார்த்து ஒரு பக்கம் கருத்து தெரிவிக்க நேரமிருக்கும் உங்களுக்குப் பல மணிநேரம் (பக்கங்களைப்பொருத்து) ஒதுக்கி வாசித்து அதையொட்டி மேலும் சிலவற்றைக் கோடிட்டுக்காட்டத் தேடி வாசித்து எழுதுகின்றவர்கள் மீது ஏன் வெறுப்பு.

ஒரு பக்கம் கலையை வளர்ப்பதாகச் சொல்லும் நீங்களே ஏதோ ஒரு காரணத்தால் அதையே கதைகளில்/புத்தகங்களில் செய்யும் என் மீது வெறுப்பு உள்ளதாக ஏன் வேடம் போடுகின்றீர்கள்.


- தயாஜி

புத்தகசவாசிப்பு_2022_4 பால் சக்காரியாவின் 'யேசு கதைகள்'



யேசு கதைகள்
தலைப்பு – யேசு கதைகள்
எழுத்து – பால் சக்காரியா
தமிழாக்கம் – கே.வி.ஜெயஶ்ரீ
வகை – சிறுகதைத் தொகுப்பு
வெளியீடு – வம்சி பதிப்பகம்
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

பவா  செல்லதுரை மூலம் இந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். சில ஆண்டுகளுக்கு முன் மலேசியா வந்திருந்தவர், இந்தப் புத்தகத்தில் இருந்து இரு கதைகளை மக்களிடம் கூறினார். அவர் அக்கதைகளைச் சொல்லும் போதே என்னைக் கவர்ந்தது. ஒரு திரைப்படம் பார்ப்பது போல ஒவ்வொரு காட்சிகளையும் தன் சொற்கள் மூலம் காட்சி பரிணாமத்தைக் கொடுக்க முயன்றார். கொடுக்கவும் செய்தார்.

அப்போது தொடங்கி, பல மாதங்களாக ‘யேசு கதைகள்’ புத்தகத்தைத் தேடினேன். கடைசியில் கிடைத்தது.

இப்புத்தகத்தில் ஐந்து சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கியுள்ளன. ‘யேசுவின் மீட்பு’ என்னும் தலைப்புல் புத்தகத்திற்கான முன்னுரையை ஜெ.ஜெயகரன் கொடுத்திருக்கிறார். இக்கதைகளையும் அதன் தேவைகளையும் புரிந்து கொள்ள இம்முன்னுரை உதவும்.

மலையாளத்தில் மட்டுமன்றி தமிழிலும் நன்கு அறிமுகம் கொண்ட பால் சக்காரியா தன் கதைகளின் வழி யேசுவை அணுகிய விதம் மாறுபட்டிருந்து. தேவதுதனை வேறேப்படியும் பார்க்க விரும்பாத பார்ப்பவர்களையும் விரும்பாத சமூகத்திலிருந்து வெளிவந்து இவர் அணுகியிருந்த யேசு மனதிற்கு நெருக்கமாகிறது. இப்படிக்கூட யேசுவை அணுகலாம்தானே என நம்மையே கேட்க வைக்கிறது.

எல்லாம் வல்ல இறையாக இருக்கும் யேசு, எல்லா நோய்களுக்கும் சுகமளிக்கும் யேசு தன்னால் ஏதும் செய்ய முடியாதவனா தோன்றுவதை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ‘அன்னம்மா டீச்சர் – சில நினைவுக் குறிப்புகள்’ அப்படியொன்றி நிகழ்த்தி காட்டியிருக்கிறார் எழுத்தாளர். இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இக்கதைதான் முதன்மையானது.

தன்னைவிட இளம் வயதிலேயே மறித்த யேசுவிற்குத் தன்னை அக்காவாகப் பாவிக்கும் அன்னம்மா டீச்சருக்காகத் தம்பியாகவே தோன்றுகிறார் யேசு. அன்னாம்மா டீச்சர் வாழ்க்கையைத்தான் நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தன்னைச் சுற்றி எல்லாறையும் கரை சேர்க்க வேண்டும். உடன் பிறப்புகளுக்கு வாழ்க்கை அமையவேண்டும். குடும்பம் தலையெடுக்க வேண்டும். இதுவெல்லாம் வேண்டும் என்ற போதும் தன்னால் தனக்காகப் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் என்கிற நிலையில் அன்னம்மா டீச்சரில் வாழ்க்கைச் சூழலை அழகாகவும் ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறார் எழுத்த்தாளர்.

‘யாருக்குத் தெரியும்’ என்கிற கதையைத்தான் பவா செல்லதுரை சொல்லக் கேட்டேன். அப்போது அவர் காட்டிய அந்தப் பரிணாமத்தை என்னால் வாசிப்பில் அடைய முடியவில்லை. வாசிப்பு கதையை மேலும் எனக்கு அணுக்கமாக்கியது. குழந்தைகளைக் கொன்று குவித்த போர் வீரன் விபச்சார விடுதிக்கு வருகிறார். அங்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அது குழந்தை யேசு. விபச்சார விடுதியின் தலைவி, குழந்தை யேசுவை காப்பாற்றுகிறார். பெற்றோருடன் குழந்தையை அனுப்பி வைக்கும் போது தனக்காக மட்டுமின்றி அந்தப் போர் வீரனுக்காகவும் பிரார்த்தனைச் செய்கிறார்.

ஒவ்வொரு கதையிலும் யேசுவை ஒவ்வொரு விதத்தின் தன் எழுத்துகளின் வழி அணுகி, வாசகர்களுக்கும் புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்துள்ளார். ஒரு படைப்பாளி எவ்வாறாகப் படைப்பை படைக்கின்றார் என்பது ஆழமான கேள்வி. அர்த்தம் பொதிந்த பதில் அதற்குத் தேவை.

யேசு பொதுவானவர் என்று சொல்லிச்சொல்லி அவரை ஒரு மத நிறுவனராகவே மாற்றிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், அந்தத் தேவ மைந்தனை சக மனிதனாகப் பாவித்து மனிதனுக்கு மிக நெருக்கமான பரிசுத்த ஆவியாக மாற்றி ஆன்ம ரீதியான நெருக்கத்தையும் நேசத்தையும் இக்கதைகளின் வழி , வழி சமைத்திருக்கிறார்.

- தயாஜி

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)


#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 

பைத்தியம் பலவிதம்



 
இதை எப்படிப் பார்ப்பது தெரியவில்லை. இப்போதுதான் மழை மெல்ல நிற்கிறது. அதுவும் அடைமழை. இந்நேரம் பார்த்து என் பக்கத்துவீட்டுப் பைத்தியம் செய்யும் காரியத்தை பாருங்களேன்.

வாலி நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து செடிகளுக்கு ஊற்றிக்கொண்டிருக்கிறார். செடிகளுக்கு வாயிருந்தால் அழுது வடிந்திருக்கும் போல. போதாக்குறைக்கு, குழாயில் குழாயைப் பூட்டியும் செடிகளுக்கு தண்ணீர் அடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த அடைமழையில் நனையாத மண்ணா இந்த வாலி தண்ணீரில் நனைந்து விடப்போகிறது. உண்மையில் பைத்தியங்கள் பல விதத்தில்தான் இருக்கிறார்கள் போல.
அதிலும் எங்கள் பக்கத்துவீடு. இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போகிறேனோ என்கிற பயமே வந்துவிட்டது.

நான் பார்ப்பதைக் கவனித்துவிட்டார் போல. சிரித்துக் கொண்டே என்னையும் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சொல்லிப் பரிந்துரை வேறு செய்கிறார். பைத்தியக்கார வேலையில்  பங்கெடுக்கக் கூப்பிடுகிறார். சமாளித்து வீட்டிற்குள் வந்துவிட்டேன்.
மறுநாள். புலனச்செய்திகள் பறந்தன. வீட்டு வாசலில் வந்து பார்க்கிறேன். நேற்றுவரை இருந்த செடிகள் எதுவும் இப்போது இருக்கவில்லை. எல்லாம் வாடி வதங்கி மண்ணோடு மண்ணாகியிருந்தன.

பக்கத்துவீட்டு பூச்செடிகளைப் பார்த்தேன். எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தன. இதெப்படி சாத்தியம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த செடிகொடிகளும் தெரியவில்லை. மரங்கள் கூட பொலிவிழந்து இலைகள் உதிர்ந்துவிட்டன.

நேற்று பெய்ந்த ஆசிட் மழை பற்றி ஆளுக்கு ஆள் கருத்துகளைப்  புலனத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  பக்கத்துவீட்டுப் பைத்தியத்திற்கு  முன்னமே எப்படித் தெரிந்தது.
அது சரி இப்போது யார் பைத்தியம்?

ஜனவரி 28, 2022

- புலியொன்றின் நன்றி நவில்தல் -


    எங்கள் மீது கருணை காட்டியமைக்கு நன்றி. நீங்கள்தான் எங்கள் பசியைப் புரிந்து கொண்டீர்கள். உங்களையா இவர்கள் திட்டுகிறார்கள். உங்களையா இணையத்தில் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். மூளை இல்லாதவர்கள். அவர்கள் எங்கள் இனத்தையும் எங்கள் பசியையும் தெரிந்து கொள்ளாதவர்கள்.

    அடர் காடுகளில் எங்களால் வாழ முடியவில்லை. துள்ளி ஓடும் மான்களை ஓடி பிடிக்க மரங்கள் தடையாக இருக்கின்றன. ஆமாம் அது எங்கள் ஓட்டத்தின் பெருந்தடை. நீங்கள் வெட்டி விற்கும் மரங்களால் எங்கள் உணவுப்பாதையில் தடைகள் இருக்கவில்லை.

    பாய்ந்தோடும் இறையைப் பாயாமலேயே பிடித்து தின்ன நீங்கள் அழிக்கும் காடுகள் உதவுகின்றன. தூரத்தில் மேயும் எந்த மானையும் பார்ப்பதற்கு உயர்ந்த மரங்கள் மறைக்கின்றன. அதைத்தானே வெட்டுகிறீர்கள். பிறகு ஏன் திட்டுகிறார்கள். தைரியமாக இருங்கள்.

    அடுத்ததாக நீங்கள் சொல்லவிருக்கும் 'மழையில், வெள்ளம் வருவது மீன்களுக்கு நல்லது' என்னும் பத்திரிகை சந்திப்பில் 'காடழிப்பது புலிகளுக்கு நல்லது' என்று நீங்கள் சொன்னதை மறந்துவிடுவார்கள்.





#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#குறுங்கதை

ஜனவரி 27, 2022

- ஆமென் -

"இளவரசு... இளவரசு..."

அந்தக் குரல் மெல்ல கேட்டது. ஆனால் யாரை அழைக்கிறார்கள் என தெரியவில்லை. தன்னை பீட்டர் என்றே அழைக்க வேண்டும் என்கிற உத்தரவு வந்த பிறகும் யார் இப்படி விளையாடுவது என தெரியவில்லை.

தீராத வயிற்று வலிக்கு தான் கொடுத்த முதல் விலை அந்தப் பெயர் மாற்றம். தப்பித்தால் போதும் பிழைத்தால் போதும் என்றான போது பெயரில் என்ன இருக்கிறது.

"இளவரசு... இளவரசு.."

மெல்ல அருகில் வந்த உருவம். அவன் தலையை வருடியது. உள்ளுக்குள் ஏதோ ஊடுருவுவதாக உணர்ந்தான். இதுவரை இல்லாத உற்சாகம் உடலில் குடியேறியது. தூய்மையான ஒளிர்ந்த வெண்ணிற ஆடையில் இருந்து ஏதோ ஒன்று அவன் மீதும் பிரகாசத்தைப் பரவவிட்டது.

உடலில் இருந்து கொஞ்ச நஞ்ச வலியும், மனதில் இருந்த குழப்பமும் மெல்ல சீராகிக்கொண்டிருக்க, வந்தவர் கிளம்பலானார்.

"யார் நீங்கள் ?"
 
அவர் நகரந்து கொண்டெ தன் கையை உயர்த்தினார். செக்கச்சிவந்திருந்த உள்ளங்கையில் ஓட்டை தெரிந்தது.

"நீங்கள்... நீங்கள்..." அவனுக்கு வார்த்தை வரவில்லை. அவர் மெல்ல மறையலானார்.

"இளவரசு.. இளவரசு..." அப்பெயர் மட்டும் அறை முழுக்க நிறைந்தது. தான் பீட்டர் அல்ல இளவரசுதான் என புரியத்தொடங்கினான். பெயரில் என்ன இருக்கிறது.

வந்தவர் பீட்டர்களுக்கு மட்டுமா வருகிறார், இளவரசுகளுக்கும் வந்து கொண்டுதானே இருக்கிறார்.

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 
#குறுங்கதை

- பாதுகாப்பற்றப் பிரபஞ்சத்துளி -



"அதோ தெரிகிறதே நிலவு, அங்கிருந்துதான் வந்தேன்.."

"ஓ, சூரியன் முழுக்கத் தேடினாலும் இப்படி ஓர் அழகியைக் காண முடியாதுதான்..."

"சரி வருகிறாயா...  கொஞ்ச தூரம் பூமிக்கு சென்றுவரலாம்"

"வேண்டாம் பொண்ணே அவர்களுக்கு நம்மை அடையாளம் தெரியாது..."

"அதனால் என்ன.?"

"உன்னையும் என்னையும் கொன்றுவிட்டுதான் , நம்மை யாரென்று விசாரிக்கிறார்களாம்."

"என்னது கொலை செய்வார்களா.. யாரவர்கள்...?"

"அவர்கள் மனிதர்களாம். கொலையும் செய்வார்கள்"

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 
#குறுங்கதை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்