பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 16, 2021

#கதைவாசிப்பு_2021 முதியவளின் நிர்வாணம்

#கதைவாசிப்பு_2021 முதியவளின் நிர்வாணம்

 தலைப்பு – முதியவளின் நிர்வாணம்

எழுத்து-  ஹேமலதா

வகை – குறுங்கதை

பிரசுரம் – கனலி (ஏப்ரல் 2021)

 

குறுங்கதைக்கு ஏற்ற கச்சிதமான கரு. ஆனால் வாசகர்களின் மனதில் இக்கதை பல்வேறாக விரியவடைகிறது.  நம்மையும் ஒரு பாத்திரமாக சேர்த்துக் கொள்கிறது.

நிர்வாணமான முதியவளிடம் இருந்து கதை தொடங்கி அவளிடமே முடியவும் செய்கிறது. ஆனால் அம்முதியவளை சுற்றி இருப்பவர்களின் மன இயல்புகளை கதை முழுக்கவும் பார்க்க முடிந்தது.

கதை. பேருந்து நிலையத்தில் ஒரு முதியவள் நிர்வாண நிலையில் இருக்கிறாள். அங்கு பேருந்திற்காக வருகின்றவர்கள் எப்படி அதனை எதிர்கொள்கின்றார்கள். அவர்களின் மனவோட்டம் என்ன. அவர்களா அம்முதியவளை காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் கதை.

ஒரு இளைஞன். ஒரு நடுத்தர வயதுக்காரர். ஒரு பெண், மகளுடன் சாலையை கடக்கும் அப்பா என ஒவ்வொருவரும் அந்த முதியவளின் நிர்வாணத்தை எதிர்கொள்ளும் விதம் நம் சமூகத்தில் நாம் ஒதுங்கியும் கண் மூடி கடந்துவிட்ட சூழல்களை நமக்கு நினைவுப்படுத்துகிறது. பேருந்து வரவும், மூவறும் பேருந்தில் ஏறி சுய திருப்தி அடைந்துக் கொள்கிறார்கள்

என்ன நடக்கும் யார்தான் காப்பாற்றுவார்கள் என்கிற கேள்வியை கடைசி வரை எழுத்தாளர் காப்பாற்றியுள்ளார்.  கதையின் நிறைவில், யாரால் வந்தது என்று அடையாளம் காட்டாதபடிக்கு  ஒரு வேன் வந்து நிற்கிறது. அதிலிருந்து பச்சை சேலை அணிந்த பெண்கள் அம்முதியவளை நோக்கி வருகிறார்கள்.

யார் அழைத்திருப்பார்கள் என்கிற கேள்விகளின் ஊடே நாம் என்ன செய்திருப்போம் என்கிற சுயபரிசோதனைக்கு இக்கதை வழி அமைக்கிறது.

 

#தயாஜி


கதையை வாசிக்க 

http://kanali.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/

புத்தகவாசிப்பு_2021 தன் மீட்சி

புத்தகவாசிப்பு_2021 'தன் மீட்சி'

 தலைப்பு – தன்மீட்சி

வகை – கட்டுரைகள்

எழுத்து – ஆசான் ஜெயமோகன்

வெளியீடு –தன்னறம் , குக்கூ காட்டுப்பள்ளி

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794

தன்மீட்சி. ஆசான் ஜெயமோகன் புத்தகம். தன்னறம் மற்றும் குக்கூ காட்டுப்பள்ளி வெளியிட்ட புத்தகம். 23 தலைப்புகள் உள்ளன. முன்பே இணையத்தில் வந்து வாசித்தவை. தனித்தனியே வாசித்திருப்பினும், ஒரே நேர்கோட்டில் அமைந்த ஒரே புத்தகமாக வாசிக்கையில் புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றது.  

ஆசான் என அவர் அழைப்பதற்கான காரணத்தை கண்டு கொள்ள வைக்கும் புத்தகம். அவரை மட்டுமின்றி நம்மையும் கண்டறியச் செய்யும் புத்தகம். தனது வாசகர்கள் தன்னை நோக்கி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கொடுத்திருக்கின்றார். துளியென வந்த கேள்விகளுக்கு கடலென பதில் கொடுத்து வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னக தேடலுக்கு வழி செய்துள்ளார்.

 எந்த ஐயத்தையும் தைரியமாக முன்வைக்கலாம் என்கிற நம்பிக்கையை ஆசான் அளவிற்கு யாரும் கொடுத்திருக்கிறார்களாக என்பது தேடுதலுக்கானது. கேள்வியிலேயே கேட்பவர்களின் அகத்தினை ஆசான் அறிந்துக்கொள்வதோடு அந்த பதிலை வாசிப்பவர்களின் மனதின் கேள்விகளையும் உணர்ந்து பதில் கொடுத்துள்ளார்.

சமீப காலமாக  என் மனம் நிலைகொள்ளாமல் போனது. சமீபத்திய சில நெருக்கமானவர்களின் மரணம், மறந்துவிட்ட  நினைவுகள் தன்னை மீள் செய்யத் தொடங்கிவிட்டன. அதன் அடுத்தகட்டமாக உடல் நிலையும் மோசமாகத் தொடங்கியது. நண்பனின் துரோகம் போலிகளுக்கு கிடைக்கும் கௌரவம், வேகமாக செயல்பட முடியாமை, மறதி, காரணமற்ற அழுகை என அடுத்தடுத்து என மனதை பதட்டமடைய செய்தன. எத்தனை முறை மன்னிப்பை கொடுத்தாலும் அதன் முனை கூரான ஆயுதமாக மாறி என்னையே காயப்படுத்த ஆரம்பித்தது.

அச்சமயம்தான் மீண்டும் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க மனநிலையை சரிகட்ட முடிந்தது. ஆனால் வாசித்து முடித்த சில நாட்களில் மீண்டும் எண்ணங்கள் தடுமாற ஆரம்பித்துவிடுகின்றன. அதனை தவிர்க்கவே இடைவெளி இன்றி வாசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ‘தன்மீட்சி’யை வாசிக்க நேர்ந்தது.

ஆசானின் வாசகர்களின் கேள்விகளின் ஆங்காங்கே என்னையும் நான் பார்க்கலானேன். ஆனால் நான் ஏன் நேரடியாக ஆசானிடம் இக்கேள்விகளைக் கேட்கவில்லை என தெரியவில்லை.  வழிதவறிய குட்டி ஆடை தன்  மார்மீது அணைத்து அன்பாகவும் பயம் காட்டியும் தொலையாமலிருக்க வழிகளை ஆசான் சொல்வதாகவே உணர்ந்தேன்.

எதை என் மனம் விரும்புகின்றது எதை செய்யும் பொழுது நான் நானாக உணர்கிறேன், என்பதனை கண்டறிவதுதான் தன்னறம் என உணர்ந்தேன். இன்னொருவர் பார்வையில் தெரிவது நான் அல்ல. அது என்னில் இருந்து இன்னொருவர் உருவாக்க விரும்பம் பிம்பமே. உண்மையில் என்னை நான் உணர்ந்து என கடமைகளை செய்யும் அதே வேலையில் என் அறத்தினை கண்டறிந்து சமன்நிலை குலையாமல் வாழ்வதுதான் என் வாழ்வு.

 முயற்சிகளும் முன்னெடுப்புகளும் தோல்வியடையும் பொழுதும் அதனை தொடர தடைகள் ஏற்படும் போது நிலமையை நாம்தான் மேலும் சிக்கலாக்கிக்கொள்கிறோம். மாறாக, ‘ஒருவர் தனக்கு உண்மையிலேயே எது முக்கியம் என உணர்கிறாரோ அதை செய்ய முடியும் என்றே நினைக்கிறேன்’ என்கிறார் ஆசான். இயலாமைக்கு ஆள்காட்டி விரலால் எதையோ காட்டினாலும் மிச்ச மூன்று விரல்கள் நம்மை காட்டுவது போலல்லவா காட்டிவிட்டார்.

‘செயல்’ ஒன்றே எல்லாவற்றும் பதில் கொடுக்கக்கூடியது. அதுவே நம்மை யாரென்றும் நாம் யாருக்கானவர்கள் என்றும் கண்டறிய உதவுகிறது. அதையே ‘செயல் போல நிறைவளிக்கக்கூடிய ஏதுமில்லை’,  ‘குதியுங்கள். குதிக்காமல் நீந்த முடியாது’ என்கிறார்.

மேம்போக்காக பார்த்தால், தன்முனைப்பு புத்தகம் போல தெரியும் புத்தகம் இதுவென ஒரு முறை இந்த நூல் குறித்து அப்படியான ஒரு பதிவை வாசிக்க முடிந்தது. ஆழ்ந்து வாசிக்கையில் தன்முனைப்பு பேச்சாளரின் எழுத்துகளில் இருந்து தன்னறம் உணர்ந்த ஆசானின் எழுத்துகள் நம் மனதிற்கு நெருக்கமாகின்றன. பல இடங்களில் தன் சொந்த அனுபவத்தை ஆசான் சொல்லிச் செல்கிறார்.

தன் அனுபவத்தை தத்துவார்த்தமாக மாற்றி அதனை வாசகர்கள் மீது கடத்தும் சூட்சுமம் அறிந்தவன் ஆசான். அதில் நம் தேடலுக்கான பதில் இருக்கவே செய்யும். இதற்கான நல்ல உதாரணம் ‘தன்னறம்’ என்னும் முதல் கட்டுரையைச் சொல்வேன். ‘திருடனை  துரத்த நாய் உள்ளே வந்தது. திருடன் ஓடியும் நாய் உள்ளேயே சுற்றி வருகிறது’ என்பதில் ஆழம் இக்கட்டுரையை வாசிக்கையில் பிடிபடும். இப்படியாக என்  மனதிலும் சில காரணங்களுக்காக நுழைந்துவிட்ட நாயோன்று, காரணமானவர்களை நான் மன்னித்தும் கூட உள்ளேயே சுற்றி வருவதை மனக்கண்ணில் கண்டு பயந்துவிட்டேன். என் சிக்கல்களுக்கு ஆதாரக் காரணம் அதுவென புரிந்தது.

‘புத்தகத்தை வாசிப்பவர்கள்’ பற்றிய கட்டுரையில் வாசகர்கள் தத்தம் நிலையை மேலும் உயர்த்திக் கொள்ளும்படி எழுதியுள்ளார்.

மேலும் இப்பெருவாழ்வில் நம்மை வாழ வைக்கும் இடங்களையும் வீழ வைக்கும் இடங்களையும் கண்டறியும் படி இந்த நூல் உருவாகியுள்ளது. ‘யார் யாரோ, அவர் அதுவே’ என்பதாக நாம் யாராக இருக்கிறோமோ யாருக்காக இருக்கின்றோமோ அதுவே நமக்கான தன்னறம். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு திறப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் சிலவற்றை அறிந்துக் கொண்டாலும் கூட வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் மீதான அன்பும் வந்துவிடும்.

‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’ என்கிற கேள்வியை எதிர்க்கொள்கின்றவர்கள் அனைவரும் ‘தன்மீட்சி’ புத்தகத்தை வாசிக்கும் படி கேட்கிறேன். நாம் தேடியலையும் காரணத்தை எளிமைப்படுத்திக் கொடுத்திருக்கிறார் ஆசான். அதில் கேள்விகளையும் விதைக்கின்றார். அதனால்தான் அவர் ஆசான்.

-       தயாஜி

ஏப்ரல் 12, 2021

புத்தகவாசிப்பு_2021 எழிலிக்கு வேரின் சாயல்

புத்தகவாசிப்பு_2021 எழிலிக்கு வேரின் சாயல்

 தலைப்பு – எழிலிக்கு வேரின் சாயல்

வகை – கவிதை

எழுத்து – கவிஞர் நெய்தல்

வெளியீடு – டிஸ்கவரி புக் பேலஸ்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794

 


      எழிலிக்கு வேரின் சாயல். தலைப்பு முதலில் என்னை ஈர்த்தது. யோசிக்க வைத்தது. யார் அந்த எழிலி என தேட தூண்டியது. புத்தகத்தின் முகப்பு ஓவியமும் வசீகரித்தது. ஏதோ ஒன்றை சொல்ல காத்திருக்கும் ஒன்றாகவே ஓவியம் அமைந்திருந்தது. கையில் எடுத்து கொஞ்ச நேரம் முகப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தோள் மீது அமந்திருக்கும் அந்த குழந்தைதான் எழிலியா என எண்ணிக்கொண்டேன்.  எழிலி என்றால் மேகம். என என் தேடலுக்கு கவிஞர் பதில் கொடுத்துள்ளார்.

      ஐம்பது கவிதைகள் அடங்கிய கவிதை தொகுப்பு. வேவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. ஆச்சர்யம் என்னவெனில் எந்த கவிதைக்கும் தலைப்பு இல்லை. வாசிக்கின்றவர்களையே கவிதைகளுக்கு ஏற்ற தலைப்பை வைக்கும் படி கவிஞர் கூறியுள்ளார். இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாய் இருக்குமென வசிக்க ஆரம்பித்தேன். முதல் இரண்டு கவிதைகளுக்கு தலைப்பு வைத்தேன். ஆனால் அடுத்தடுத்த கவிதைகளுக்கு அது சாத்தியமில்லாமல் போனது. தலைப்பைத் தேடுவதைக் காட்டிலும் கவிதை கொடுக்கும் அனுபவம் அசாத்தியாமாக அமைந்தது.

‘நிலமிழந்த உழவன்

அங்காடி வாசலொன்றில்

காப்பாளனாய் நிற்கிறான்

வனமிழந்த களிறு

கடவுளின் வணிக வளாகத்தில்

சில்லறைகளுக்கு ஆசி வழங்குகிறது

பிரபஞ்சத்தின் இரு பெரும்

சோக சாயல்கள்’

      என்றொரு கவிதை(பக்கம் 40). நிலமிழந்த உழவனையும் வனமிழந்த யானையையும் ஒரு கோட்டில் வைக்கிறார். தனக்கான வாழ்நிலத்தை இழந்து இன்று ஏதோ ஓரிடத்தில் அடிமையாக இருக்கும் இருவரையுமே இந்த பிரபஞ்சத்தின் சோக சாயல்களாக பார்க்கின்றார்.

      ஏதோ அவசரத்தின் நடுவில்

     சட்டென கடந்துபோகும்

     அந்த ஒற்றைபபாடல்’

      என்றொரு கவிதை தொடங்குகிறது (பக்கம் 13) நமது வாழ்க்கை பாடலோடு இணைந்துதான் இருக்கிறது. நம் சோகத்தை நம் மகிழ்ச்சியை நம் ஆற்றாமையை என நமது எல்லாவித உணர்ச்சிகளையும் ஒரு பாடல் தூண்டிவிடக்கூடியது. அப்படியான ஒரு அனுபவத்தை சொல்கிறது கவிதை.

      தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் கலைந்துபோன கடந்த கால நினைவுகளாக பதிவாகியுள்ளன. அவற்றில் வீடு, நிலம், உறவு, அருவி, காடு, இரவு, மரணம், ஏக்கம், காதல்  என வந்து நம்மையும் மீள் நினைவுகளுக்கு அழைத்துச் செல்கிறது.

     ‘ஒரு நாளில் என்ன இருக்கிறது?’

      என்ற கேள்வியோடு ஒரு கவிதையை ஆரம்பிக்கின்றார்(பக்கம் 65/66). ஒருநாளில் என்னவெல்லாம் நடக்கின்றது என சொல்லும் எளிய கவிதைதான். ஆனால் அதன் முடிவில் ‘எத்தனையோ இருக்கிறது/அத்தனையையும் பார்க்கும் விதத்தில்தான்/ இருக்கிறது’ என நாம் தவறவிட்டுக் கொண்டிருக்கும் தருணங்களை கோடிட்டு காட்டுகின்றார்.

      ரசிக்கப்படாத கோடை மாலை’

      என்று தொடங்குகிறது ஒரு கவிதை (பக்கம் 19). கண்டுகொள்ளாத காதலை சொல்லத்துடிக்கும் கவிதை இது. இத்தொகுப்பில் காதல் மீதான ஏக்கமும் அதன் ஏமாற்று வலியும் பல இடங்களில் கவிதைகளாக வெளிபட்டு நாம் மறைத்து வைத்திருக்கும் நினைவுகளுக்கு கதவை திறந்துவிடுகின்றது.

      ஆயுதமேந்தி கடவுள்களை வாழ்விக்கும்

     கொள்கைவாதிகளே!

     உங்களுக்கு எமது பிரியங்கள்’

      என்று தொடங்கும் காலத்திற்கு ஏற்ற கவிதையும்(பக்கம் 26) உள்ளது. கவிதையின் முடிவில் ‘அன்பு செய்ய பழகுவோம், வாருங்கள்’ என்கிறார். சொல்லப்போனால் நாம் எல்லோரும் அதைத்தான் கேட்கிறோம். ஆனால் சாத்தியப்படுவதில்லை.  

      ‘மழையின் போதெல்லாம்

     துளித்துளியாய் உள்ளிறங்குவாள்

     பள்ளியோடத்து அக்கா’

      என்கிற கவிதை(பக்கம் 58) பள்ளியோடத்து அக்காவை நினைவுப்படுத்துகிறது. ஆனால் ஏன் நினைவுப்படுத்துகிறது எப்படி நினைவுப்படுத்துகிறது என்பதில்தான் கவிஞர் நம் மனதை கணக்க வைக்கிறார்.

      ஒரு கவிதை ஒன்றில் இருந்து இன்னொன்றாய் மாறும் அதிசயத்தை செய்துள்ளார் கவிஞர். (பக்கம் 46/47) தொடக்கத்தில் வேப்பமரத்தை நினைக்க வைக்கிறது. அது வெறும் வேப்ப மரம் மட்டுமல்ல என்கிறதை சொல்லிக்கொண்டே அங்கிருந்து இறந்தவர்கள் பற்றிய நினைவலைக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுகின்றது.

      நிறைவாக, இக்கவிதை தொகுப்பு நம்மை கவிதைகளுக்கான தலைப்பை தேட வைத்து கவிதைகளுக்குள்ளே நம்மை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. இன்னும் அதிகம் இத்தொகுப்பை பற்றி எழுதலாம். நீங்களும் வாசித்துவிட்டு வாருங்கள். நாம் கலந்துரையாடலாம். அதுதானே கவிஞருக்கு நாம் கொடுக்கும் கை குலுக்கள்.

நன்றியும் அன்பும்

-       தயாஜி

 

 

 

ஏப்ரல் 10, 2021

புத்தகவாசிப்பு_2021 ஆரண்யம்

புத்தகவாசிப்பு_2021 ஆரண்யம்

தலைப்பு – ஆரண்யம்

வகை – கவிதை 

எழுத்து – கவிஞர் கயல்


   சமீபத்தில் வாசித்த கவிதை தொகுப்பு. ஆரண்யம். எழுத்து கவிஞர் கயல். மிகவும் ரசித்த கவிதை தொகுப்பு. ஆரண்யம் என்றால் வனம். காடு. இந்த புத்தகத்தின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பு. வாசிக்கையில் கவிஞர் நம் கையைப் பற்றிக்கொண்டு வனத்திற்கு அழைத்துச் செல்வதாகவே தோன்றியது.

   எல்லோருக்கும் தங்களின் பால்யம் குறித்த நீங்காத நினைவுகள் இருக்கவே செய்யும். அதில் காடும் காடு சார்ந்த அனுபவங்களும் குறைவின்றியே இருக்கும். இக்கவிதைகள் காடு மீதான எனது நினைவுகளை மீள் செய்துள்ளது. காடு என்பது வெறும் காடு அல்ல என திரும்பத் திரும்பச் சொல்கிறது.

   கவிஞர் வனத்தை தாய்மை கொண்டு அணுகுகின்றார். குழந்தைபோல ரசிக்கிறார். தன்னை வண்ணத்துப்பூச்சியாக்குகிறார். தன்னை நதியாக்குகிறார். தன்னை மரமாக்குகிறார். நிறைவாக தன்னையே வனமாக மாற்றிக் காட்டுகின்றார்.

   அது வனம் மட்டுமல்ல நம் வாழ்வு. இயற்கையின் அன்னை. அதுவே இறைவன். இறைவனுக்கும் காதலுக்கும் இடைபட்ட இடைவெளியை வனம் நிரப்புவதை எழுதுகின்றார்.

   வனத்தைச் சொல்லும் போது யானையை மறக்க முடியுமா? இத்தெகுப்பில் யானை பற்றிய கவிதைகள் சில உள்ளன.

தன்னை அண்ணாந்து

பார்க்கும் சிறுமி,

தவறவிட்ட தன் குட்டியை நினைவூட்ட

சுரக்கும் பால் மடி கனக்கத்

தள்ளாடியபடி ஆசீர்வதிக்கும்

கோயில் யானை

   என்ற கவிதையை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியவில்லை. எனக்கு யானை பிடிக்கும் என்பதால் மட்டுமல்ல. யானையை கவிஞர் காட்டிய தருணத்தினால். நமக்கு தெரிந்ததெல்லாம் யானை மட்டுமே. அது யானைமட்டுமல்ல அதுவும் தாய்தான்.  

   எத்தனை பறவைகளின் பெயர்களை மறந்துவிட்டோம் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. கவிஞர் சொல்லும் ஒவ்வொரு பறவையின் பெயரும் குற்றவுணர்ச்சியைக் கொடுக்கிறது.

சாவுக்குருவி,

சாத்தான் குருவியென

வசவுகள் வாங்கி

சகுனத்துக்கு

ஏவல் பலிக்குப்

போக எஞ்சியவை மட்டுமே

வாழ்கிறோமென

நள்ளிரவில்

கதறும் ஆந்தைக் குரலை

உற்றுக் கேட்கையில்

ஒலிக்குமொரு கேள்வி

“இதில் , யார்

சாத்தான்?” என்று.

   இனி ஆந்தையின் அலறல் சத்தம் அபசகுணமாய் அல்ல நம் மனசாட்சியின் குரலாகவே ஒலிக்க வைக்கிறார் கவிஞர்.

   மனிதனின் சுயநலம் எத்தனையோ இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு இலாபம் கிடைக்க தான் முன்னேறி நடக்க எதனையும் செய்ய துணிந்துவிட்ட மனிதனிடம் இல்லாத குற்றவுணர்ச்சியை தேடவைக்கும் கவிதையாகவே,

தளும்பிச் சிரிக்கும் ஆறு

கிறங்கி நீந்தும் கூழாங்கற்கள்

வரவேற்கும் மரங்கள்

வனத்தின் குரலாய்ப்

புள்ளினத்தின் பாடல்

என

இருந்தன காடுகள்

மனிதன் கோடரி

செய்யக் கற்கும் வரை

   என்கிற கவிதையைச் சொல்லலாம். இக்கவிதைக்கு சற்றும் குறைவில்லாத வகையில் இன்னொரு கவிதையும் உண்டு. அது மனிதனின் சுயநலத்தில் தனக்கும் பங்குண்டு என மரங்கள் அழும் கவிதை. அது;

ஆதிக் கோடரிக்

கிளையொன்றின்

பாவந்த் தீர்க்க

இன்னும் எத்தனை

சிலுவை

எனக் கேவியழுகிறது

ஒவ்வொரு மரமும்

வெட்டுருகையில்.

போதும்….

   தன்னை முழுவதுமாய் இன்னொன்றாய் ஆக்கிவிட மனிதர்களால் முடிகிறது.  ஆனால் கவிஞர்களால் மட்டுமே அதனை முழு உணர்வுப்பிரக்ஞையுடன் செய்ய  முடிகிறது. தன்னை மரமாக மாற்றிக் காட்டும் கவிஞர் அதன்  வலியை இப்படிச் சொல்கிறார்.

என் உயிரைக் கொல்கிறது

நம்பிக்கையில்லாத் தீர்மானமாய்

எம் பக்கத்து மரங்களிலெல்லாம் பறவைகள்

வந்தமராதிருப்பது…

   மரத்திற்கு மட்டுமல்ல நமக்கும் கூட புறக்கணிப்பின் வலியை இக்கவிதை நினைவுப்படுத்துகிறது.

   மேலும் ஒரு கவிதையில் மரத்தைப் பற்றி சொல்கிறார் ஆறு வரி கவிதையில் ஆறுவரிகளுமே கவிதைகளாக பரிணமிக்கும் அதிசயத்தை காண முடிகின்றது, அது

-மரம்-

இறைமகளின் தரைச் சிங்காதனம்

தாக வேரின் மழைத் தூது

வனமங்கை இடையாடும் மரகதச் சீலை

எவர் அடியும் பணியாத் தலை

புவியில் பொன்வண்ணப் பூ விசிறி

பறவை ஒலியில் பேசுந் தெய்வம்

   மீண்டும் ஒரு முறை இந்த ஒவ்வொரு வரியும் என்னை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. ஒரு புகைப்படம் போல, ஒரு அமானுஷ்யம் போல, ஒரு தேவதை போல, ஒரு வரம் போல.

   இத்தொகுப்பில் இன்னும் பல கவிதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் புதிதான உலகை நமக்கு காட்ட முற்படுகின்றது. ஆனால் அவ்வுலகில்தான் நாம் வாடகை கட்டாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் நியாபகப்படுத்துகின்றது.

எதிர்ப்பட்ட பின்

கடப்பது கடினம்

காதல்,

கடவுள்,

காடு

   என்னும் இக்கவிதை, இத்தொகுப்பை சுருக்கிச் சொல்வதாகவேப் படுகிறது. ஒரு முறை இக்கவிதைகளை வாசித்த பின், அது கொடுக்கும் நினைவலைகளை சாதாரணமாய் கடந்துவிட முடியாது. அவ்வகையில் கவிஞருக்கு என் நன்றியும் அன்பும்….

அன்புடன் #தயாஜி

மார்ச் 27, 2021

வெறிநாய்கள்

 


        இன்றும் தேடலானாள். ஆனால் கொஞ்சம் மும்முரமாக. அந்த நாய்களின் குரைப்புச் சத்தம் அவள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காதில் புகுந்த சத்தம் மூளையை குடைவதாக உணர்ந்துக் கொண்டிருக்கிறாள். இப்படியாக குரைக்கத் தெரிந்த நாய்களை அவள் இதுவரையில் பார்த்திருக்கவில்லை. இன்னும் குளிக்கவில்லை. வாசலுக்கு வந்து காத்திருந்த அம்மாவை திட்டிவிட்டுதான் உள்ளே வந்தாள். வழக்கமாக நடப்பதுதான். அம்மா அடுத்து செய்ய வேண்டியவற்றை செய்யலானார். மேஜை மீது சுலோச்சனாவுக்கு வேண்டிய இரவு உணவை வைத்தார்.  மகளின் அறையை ஒரு முறை தட்டி சாப்பிட அழைத்தார். கணினி திரையில் தேடிக்கொண்டிருந்தவள்,

     “எனக்கு தெரியும்மா…. இருங்க வரேன்… இப்ப அது ஒன்னுதான் இங்க குறைச்சல் இங்க..”

       மேற்கொண்டு அம்மாவிற்கு செய்ய ஒன்றுமில்லை. மேஜை மீது வைத்திருந்த உணவுகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என பார்க்கலானார். சமையல் அறை நாற்காலி மீது வைத்திருந்த சிறிய துணியை எடுத்தார். மேஜையை இன்னொரு முறை துடைத்தார். துடைத்தவர் அங்கேயே அமர்ந்தார். சுலோச்சனாவின் இந்த  குணத்திற்கு தானும் ஒரு காரணம் என நினைத்து வருந்தினார். அவள் எத்தனை அன்பானவளாக இருந்திருக்கிறாள் என்பதை அம்மா இன்னொரு முறை நினைத்துப் பார்க்கலானார். காலமும் சூழலும் எத்தனை மாற்றங்களைப் போகிற போக்கில் செய்துவிடுகின்றன.

        அப்பா இல்லாத குடும்பத்தை காப்பற்றத்தான் கடவுள் அவளுக்கு தம்பியைக் கொடுத்திருக்கிறார் என்பார். அதற்காகவே அம்மா, தம்பி மீது அதிக அக்கறை காட்டினார். சுலோச்சனாவிற்கும் அது புரிந்தே இருந்தது. அவளும் தம்பிக்காக பலவற்றை விட்டுக்கொடுத்தாள். ஒரு முறை தனக்கு கிடைத்த வெளிநாட்டு மேற்படிப்பிற்கான வாய்ப்பை தம்பிக்காகவே விட்டுக்கொடுத்தாள். அம்மாவால் வீட்டு வேலையைத் தவிர வெளி வேலை செல்ல முடியாது செய்யவும் முடியாது. அப்பாவின் மரணம் அம்மாவை மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பாதித்து இருந்தது. அம்மா அதிக தூரம் கூட நடப்பது கூடாது என மருத்துவர் சொல்லிவிட்டார். யோசித்துப் பார்த்தால், நாள் ஒன்றுக்கு  அம்மா வீட்டில் நடந்த நடையை கணக்கிட்டாலே கூட தாமானை இரண்டு முறை சுற்றியிருப்பார்.

       சுலோச்சனாவிற்கு தம்பி மீது பாசம் இல்லாமலில்லை. தனக்காக செலவு செய்வதைக் காட்டிலும் தம்பியின் தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தாள். தம்பி மேற்படிப்பு படிக்கதற்காக தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டவள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். அவளின் வேலையிடத்தில், வேலையின் நுணுக்கங்கள் தெரியாதவர்கள் கூட இவளுக்கு மேலதிகாரிகளாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் தங்களுக்கு பின்னால் வைத்திருக்கும் படிப்பின் பெயர்தான். என்னதான் தான் அவ்வாறு தன் பெயருக்கு பின்னால் எந்த படிப்பின் பெயரையும் வைத்திருக்காவிட்டாலும், அவள் சொந்தமாகவே கற்று தேர்கிறவள், கற்றுக்கொண்டிருப்பவளும். எப்படியும் கொஞ்ச நாளில் தம்பி குடும்ப பொறுப்பை கையில் எடுத்துக் கொள்வான். தான் விட்ட படிப்புகளையெல்லாம் மீண்டும் தொடங்கலாம் இதே அலுவலகத்தில் தனக்கு தகுதியான இடத்தில் அமர்ந்துக் கொள்ளலாம் என தினமும் எண்ணிக்கொண்டிருந்தாள். அம்மாவும் அவளும் இதையேதான் அடிக்கடி பேசிக்கொண்டார்கள்.

       அவர்களுக்கான விடியல் ஒரு நாள் வந்தது. விடியவும் செய்தது. ஆனால் வெளிச்சம் இந்த குடும்பத்தில் விழவில்லை. மாறாக மேலும் இருள்தான் சூழத்தொடங்கியது.  தம்பியைக் காணவில்லை. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டான். எங்கே போனான் என்ன ஆனான் என்பது யாருக்கும் தெரியவில்லை. தலை நிமிர வேண்டிய குடும்பத்தின் கழுத்தில், தான் நம்பியிருந்த தங்க சங்கிலி அறுந்து விழுந்தது மட்டுமின்றி கழுத்தையும் சேர்த்து அறுத்துவிட்டு விழுந்தது.

        அழுது முடிக்கக்கூட அதிக நேரம் கிடைக்கவில்லை. அவள் இன்னொரு சிக்கலை சந்தித்தாள். அலுவலகத்தில் அவளின் வேலை மீது குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கின. அவள் எழுதும் கடிதங்களில் எழுத்துப்பிழைகள். முறையாக கோப்புகளை அடுக்காததால் சில இழப்புகள் என ஒன்றின் பின் ஒன்றாக வந்தன. இச்சமயம் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடந்துக் கொண்டிருப்பதாக அவளின் ஆழ்மனம் சொல்லத்தொடங்கியது. தாமதிக்காது மற்ற இடங்களுக்கு வேலைக்கான மனுவை அனுப்பினாள். அவள் எதிர்ப்பார்த்த சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. ஆனால் வீட்டிலிருந்து தூரம். இப்போதைக்கு பொது பேருந்தில் செல்லலாம். பழைய வேலையிட சிக்கல்களில் இருந்து தப்பித்தாள். இன்னொரு சிக்கலில் சிக்கப்போவதை நினைத்துப் பார்க்கவில்லை.

       காலையில் கிளம்புகிறவள் திரும்ப வீடு வருவதற்குள் இருட்டிவிடும். வீட்டில் இருந்து கொஞ்சம் தூரம் நடந்துதான் பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும். இரவு அந்த வழியில் வீடு திரும்புவதுதான் அவளுக்கு பயத்தைக் கொடுக்கத் தொடங்கியது. அவ்வழியில் சில காலி வீடுகள் புதர் மண்டிக் கிடக்கின்றன. அங்கு சாலை விளக்கும் இல்லை. பேருந்தை விட்டு இறங்கியவுடன் மடமடவென நடந்துச் செல்வாள். சமயங்களில் யாரோ அவளை அழைப்பு போல தோன்றும். யாரோ தன்னை பின் தொடர்வதாகவும் தோன்றும்.  

         தினமும் இவ்வழியில் நடப்பது அவளுக்கு பொரும்பாடாய் இருக்கிறது.  தனது கைப்பையில் இருக்கும் ‘பெப்பர் ஸ்ப்ரே’-வை எடுத்து கையில் இறுக்கமாக பிடித்துக் கொள்வாள். அவளின் நடை வேகம் கூடும். வீடு வருவதற்குள் வியர்த்து வடிவாள். அம்மாவிடம் இதனைச் சொல்லவும் முடியாது. உடனே அவசரமாக காரை வாங்க சொல்லுவார். தினமும் பேருந்து நிலையம் வரை தான் வந்து காத்திருப்பதாக சொல்லுவார். அம்மாவின் உடல் நிலைக்கு இதுவெல்லாம் சரியாக வராது. தம்பியின் மேற்படிப்பிற்காக முன்னமே வாங்கியுள்ள வங்கி கடனால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்காவது வேறு எதற்கும் அவளால் கடன் வாங்க முடியாது எங்கிருந்து கார் வாங்குவது.

       இதற்கிடையில்தான் அவள் ஒன்றை கேள்விப்பட்டாள். அவள் வீட்டிற்கு வரும் இருள் சூழ்ந்த பகுதியில் சில வெறி நாய்கள் சுற்றிக்கொண்டிருப்பதாகவும், சிலரை கடித்திருப்பதாகவும் பேருத்து நிலையத்தில் ஒருவர் சொல்லிகொண்டிருந்தார். இயல்பாகவே நாய் என்றால் சுலோச்னாவிற்கு பயம்.

       பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவளை ஒரு நாய் துரத்தி அவள் கீழே விழுந்துவிட்டாள். நாய் அவளருகில் வருவதற்கு முன்னதாக தம்பி கையில் கட்டையுடன் ஓடி வந்து காப்பாற்ற முயன்றான். பயந்துவிடாத நாய் அவன் மீது பாய்ந்தது. அந்த கலவரத்தில் தம்பிக்கு கன்னத்தில் நகக்கீரல் ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால் கடையில் கட்டையில் அடி வாங்கிய நாய் ஓடிவிட்டது. நாய்களை நினைக்கும் போதெல்லாம் தம்பியையும் அவன் கன்னத்தில் பதிந்த தழும்பையும் அவளால் நினைக்காமல் இருக்க முடியவதில்லை. அன்று முதல் அவளுக்கு நாய்கள் என்றால் ஒவ்வாது. எத்தனை குட்டியாக எத்தனை அழகாக இருந்தாலும் நாய்கள் என்றாலே அவளுக்கு ஒவ்வாமைதான். அதனால்தான் இரு பெண்கள் இருக்கும் வீட்டில் காவலுக்கு நாய் வளர்க்கச்சொல்லி அம்மா கேட்டதற்கும் மறுத்துவிட்டாள். வீட்டில் இருக்கும் மின்சார அலாரம் நம்மை காப்பாற்றிக்கொள்ளும் என கூறிவிட்டாள்.

     இப்போது தினமும் நடந்து வரும் பாதையில் இப்படி ஒரு சிக்கலை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. அதனை நினைத்துக் கொண்டு வந்ததால் என்னமோ இன்று பல இடங்களில் நாய்களின் நிழல்களைக் கண்டாள். இந்த இருள் வழியில் சமீபகாலமாக தன்னை பின் தொடர்ந்து வந்ததும் அதில் ஒரு நாய்தான் என்பதை புரிந்துக் கொண்டாள். இதுகளுக்கு ‘பெப்பர் ஸ்ப்ரே’ போதாது வேறு ஏதாவது ‘ஸ்ப்ரே’ தான் தேவை என முடிவெடுத்தாள். வீட்டிற்கு வந்ததும் வராததுமாக அறையில் புகுந்து சாப்பிடக்கூட வராமல் கூகளிடம் நாய்களை விரட்டுவதற்காக ‘ஸ்ப்ரே’ எங்கே கிடைக்கும் என அலசிக்கொண்டிருக்கிறாள்.

      மறுநாள், பேருந்து தாமதமானது. அவளுக்கும் தாமதமானது. வழக்கத்தைவிட சில மணி நேரம் தாமதமாகத்தான் பேருந்து அவளை இறக்கிவிட்டது. விரைந்து நடக்கலானாள். வெறி நாய்கள் நிறைந்த வழியை கடக்க வேண்டும். எதற்கும் கையில் ‘பெப்பர் ஸ்ப்ரே’வை வைத்துக் கொள்ள நினைத்தவள் கைப்பையில் கைவிட்டாள். அது அதில் இல்லை. எங்கே விட்டாள் என நினைத்துப் பார்க்க நேரமில்லை. முழுவதும் பாதுகாப்பற்ற சூழல் அவளை சூழ்ந்தது. மேலும் அவளை பயம் காட்ட அவள் பின்னால் யாரோ நடந்து வருவது போல சத்தம் கேட்டது. அவள் பெயரையும் யாரோ அழைக்கிறார்கள்.

    நடையை  அதிகப்படுத்த முயன்றாள். அச்சமயம் அவன் முன்னே ஏதோ ஒரு பெரிய உருவம் குதித்து நின்றது. அவள் அலறுகிறாள். பின்னால் இருந்து ஒருவன் அவளது வாயை பொத்தி, அப்படியே அவளை தூக்குகிறான். முன்னே குதித்தவன் அவளின் கால்களை தூக்குகிறான். இருவரும் அவளை பக்கத்தில் இருக்கும் காலி வீட்டிற்கு தூக்கிச் செல்கிறார்கள். யாரோ பின் தொடர்வதாக தெரிந்துக் கொண்ட ஒருவன் “யார்டா அது?” என சத்தமிட்டான். அப்போது அந்த மூன்றாவது ஆள்…!

       ஒருவனின் காலை கடித்தது. அவளை பிடித்திருந்த கைகள் விட்டன. இமைக்கும் நேரத்தில் வெறி பிடித்த நாய் இருவரையும் கடித்து குதறத்தொடங்கியது. சுலோச்சனாவின் கண் முன்னே இருவரும் அலறிக்கொண்டு ஓடினார்கள். அவளுக்கும் என்ன செய்வது என தெரியவில்லை. சற்று நேரத்தில் அந்த வெறி நாய் அவளருகில் வந்து நின்றது. பயத்துடன் மெல்ல மெல்ல எழுந்தாள். நாய் வாலை ஆட்டியது. தனது ஆடையையும் தலை முடியையும் சரி செய்துக் கொண்டாள். மெல்ல நடக்கலானாள். அந்த நாயும் அவள் பின்னே நடக்கலானது.

       வழியில், மீண்டும் யாரோ அவள் பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள். அந்த குரல் அவளுக்கு மிக நெருக்கமான குரலென மனம் சொல்லிக்கொண்டது. அப்படியே நின்றுவிட்டாள். யாரோ பின்னால் நிற்பதை உணர்ந்தாள். திரும்பிப் பார்க்கிறாள். அந்த நாய் மட்டுமே வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. அதன் கன்னத்தில் எப்போதோ கடிபட்ட தழும்பொன்று பளிச்சிட்டது.

-       தயாஜி

     

 

மார்ச் 10, 2021

'மலேசிய நாவல்கள்’ – ஆறாவது கட்டுரையை முன் வைத்து


‘மலேசிய நாவல்கள்’ – ஆறாவது
கட்டுரையை முன் வைத்து

     தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

   ஆறாவது கட்டுரையாக, ‘சென்று சேராத முன்னோடி ’ என்ற தலைப்பில் ஐ.இளவழகு குறித்து எழுதியுள்ளார்.



லட்சியவாதம் என்கிற பதம் இங்கு எவ்வாறு புரிந்துக்கொள்ளப் படுகின்றது என்கின்ற அறிமுகத்துடன் கட்டுரை தொடங்குகின்றது. 

1. சமூகப் பொறுப்புணர்வை அதிகம் வலியுறுத்துவது.
2. சித்தாந்த பலம் இல்லாத எழுச்சிக்கனவுகளை உருவாக்குவது.
3. அன்பு, கருணை, காதல், மனிதாபிமானம், என அனைத்திலும் மிகையான வெளிப்பாடுகளைக் கொண்டது. 
4. வாழ்வை எளிமைப்படுத்திக் காட்டுவது.

என இலட்சியவாத எழுத்துகளை வரையறை செய்கிறார் கட்டுரையாசிரியர்.

இக்கட்டுரை ஐ.இளவழகு எழுதிய 'இலட்சியப் பயணம்' எனும் 424 பக்க நாவலைப் பற்றி விரிவாக பேசுகிறது.  இந்நாவல் பின்புலத்தை சொல்லும் போது, மலேசிய எஸ்.பி.எம் தேர்வுக்கு தெர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசிய நாவல் என்கிறார். அதோடு மாணவர்களின் பிரதிக்காகத் தணிக்கை செய்யப்பட்டு சுருக்கப்பட்டதையும் குறிப்பிடுகின்றார்.

இந்நாவலின் சிறப்பம்சமாக, 
1. தோட்ட வாழ்வின் அத்தனை அம்சங்களையும் விரிவாக சொன்ன பாங்கு.
2. மையமாக மாதவன் எனும் கதாபாத்திரம் இருந்தாலும் அவனுக்கு ஈடாக அவன் தந்தை ஆண்டியப்பன் மற்றும் இதர கதாப்பாத்திரம் வந்து பல்வேறு மனோநிலைகளை வெளிப்படுத்துகின்றனர்.  

அடுத்ததாக இந்நாவல் கொண்டுள்ள பலவீனப்பகுதிகளை பேசுகின்றார் ஆசிரியர். கதாப்பாத்திரம் அடையும் மாற்றம் குறித்து தெளிவான சித்தரிப்பு இல்லாமை முக்கிய பலவீனம் என்கிறார். 
 
படைப்பாளர்களுக்கு அரசியல் புரிந்துணர்வு எத்தனை அவசியம் என கோடிட்டுக் காட்டுகின்றார். அதுதான் தெரிந்தோ தெரியாமலோ படைப்பில் வெளிவந்துவிடுகிறது. பலர் வழிந்தே தங்களில் அரசியலை படைப்புகளில் புகுத்துகின்றார்கள். சிலர் தங்களையும் அறியாமல் எழுத்தின் வழி தங்களை காட்டிக் கொடுத்துக் கொண்டுவிடுகிறார்கள். 

ஐ.இளவழகு எழுதியிருக்கும் 'லட்சியப் பயணம்' எனும் இந்நாவல், எழுத்தாளருக்கு தெளிவான அரசியல் பார்வை இல்லாததால் அது அடைய வேண்டிய இடத்தை அடையாமல் சரிந்துவிடுகிறது என்பதனை புரிந்துக்கொள்ள முடிகின்றது.

படைப்பை நோக்கி வைக்கப்படும் விமர்சனம் படைப்பாளரை நோக்கி திரும்புவது இயல்புதான். அதனையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால் படைப்பாளர் ஒன்றை நம்பி அதனை படைப்பில் புகுத்துகின்றாரா? அல்லது அத்தகைய (அன்றைய)சூழல் அவருக்கு கொடுத்த தெளிவற்ற சிந்தனை படைப்பில் புகுந்துவிடுகின்றதா என கவனிக்க வேண்டியுள்ளது. 

ஏனெனில், சில காரணங்களால் 'இந்நாவல் ஒரு வரலாற்று மோசடி. அதனை எண்ணி எழுத்தாளன் தலைகுணிந்துதான் ஆகவேண்டும்' என்கிறார் கட்டுரையாசிரியர். இவ்வாறு சொல்வது ரசனை விமர்சனத்திற்கு அவசியம்தான என கேட்க தோன்றுகிறது.

ஒருவேளை இந்நாவலில் எழுத்தாளர் புகுத்தியுள்ள அரசியல் பார்வையால் அவர் லாபம் அடைந்து பொருள் ஈட்ட அதனை மேற்கொண்டார் என நிரூபனம் ஆகியிருந்தால் கூட மேற்சொன்ன கூற்றை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். அப்படி நிரூபனம் ஆகிடாத ஒன்றை, எழுத்தாளரின் அன்றைய சூழலில் தெளிவற்ற அரசியல் பார்வையை இன்றைய சூழலில் இருந்து பார்க்கையில் அதனை விமர்சனப்பூர்வமாக அணுகலாமே தவிர  அதனை எழுதியதற்காக எழுதியரை 'தலைகுனிய' சொல்வதெல்லாம் அநாவசியமாகவே தோன்றுகிறது. 

இருந்தும் '..... சிறுசிறு இடையூறுகளால் நாவலைப் புறக்கணிப்பது நம் வரலாற்றின் ஒரு பகுதியைப் புறக்கணிப்பதும் தான்'  என சொல்வதன் வழி இன்றைய தலமுறையினர் இந்நாவலை தேடும் வழி செய்கிறார் கட்டுரையாசிரியர்.


#தயாஜி

பிப்ரவரி 24, 2021

‘மலேசிய நாவல்கள்’ – ஐந்தாவது கட்டுரையை முன் வைத்து



‘மலேசிய நாவல்கள்’ – ஐந்தாவது
கட்டுரையை முன் வைத்து

     தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

   ஐந்தாவது கட்டுரையாக, ‘நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ ’ என்ற தலைப்பில் கா.பெருமாள் குறித்து எழுதியுள்ளார்.

'சிறுகதையில் எழுத்தாளன் வாழ்க்கையின் ஒரு புள்ளியை அறிந்துக்கொள்ள முயல்கிறான். நாவலில் வாழ்வின் எண்ணற்ற திசைகளை ஓர் ஒட்டுமொத்த பார்வையில் தொகுக்கப் பழகுகிறான்.' என நாவல் எழுதுவற்கும் சிறுகதை எழுதுவதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை சொல்லி கட்டுரையை ஆரம்பிக்கின்றார்.  அதோடு ஜெயமோகனின் 'வெள்ளையானை' நாவலை முன்வைத்து மேற்சொன்னவற்றை விளக்குகின்றார்.

கா.பெருமாள் எழுதிய 'துயரப்பாதை' நாவலைப் பற்றி பலவீனமாக எழுதப்பட்டு பலகாலமாக கொண்டாடப்பட்ட நாவல் என்கின்றார். இத்தகையப் பார்வையை இக்கட்டுரையின் தலைப்பிலேயே உணர முடிந்தது.

246 பக்கங்கள் கொண்ட நாவலை நான்கே வரிகளில் சொல்லிவிடுகின்றார். மேற்சென்று நாவலின் பலவீனங்களைப் பேசுகின்றார்.

1958 சங்கமணி நாழிதழில் தொடர்கதையாக வெளிவந்த 'துயரப்பாதை' பின்னர் 1978ம் ஆண்டு நாவலாக வெளிவந்தது. அன்றைய சுழலில் இந்நாவலைப்பற்றி சொல்லப்பட்ட கருத்துகளை வாசிக்கையில் ஒரு பக்கம் அதிர்ச்சியும் இன்னொரு பக்கமும் குழப்பமும் வராமல் இல்லை.

புத்தகத்தில் இக்கட்டுரைக்கு பக்கங்கள் குறைவுதான். சிக்கல் இல்லாமல் வாசிக்கும்படி எழுதியுள்ளார் ஆசிரியர்.

ஒரு காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட படைப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மீள்வாசிப்பு செய்வதும் அதுபற்றி பேசுவதும் அவசியம் என்பது இக்கட்டுரை வழி முக்கியத்துவம் பெருகின்றது. 

ஆனால் மீள்வாசிப்பில் அப்படைப்பை மட்டுமே கைகொள்ளாமல் அந்நாவல் எழுதபட்ட கால சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 

ஏனெனில் ஒரு படைப்பை கொண்டாடும் மனநிலையை புரிந்துக்கொள்ள அது உதவும். அதனை ஒரு போதும் குறைத்து மதிப்பிடலாகாது. 

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்