பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

லஷ்மி சரவணக்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லஷ்மி சரவணக்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆகஸ்ட் 10, 2016

கதை வாசிப்பு 22 - 'மத்திய சிறைவாசி எண் 3718'

கதை வாசிப்பு 22 -
 'மத்திய சிறைவாசி எண் 3718'

    விகடன் (10/8/16) இதழில் லஷ்மி சரவணகுமாரின் 'மத்திய சிறைவாசி எண் 3718' என்ற சிறுகதை வந்துள்ளது.

    இன்னொருவர் மனைவிமீதான ஈர்ப்பை காதலை வேறொரு கோணத்தில் இருந்து சொல்லியுள்ளார். கதை சொல்லப்பட்ட விதம் படிப்பவரின் மனதில் பாதிப்பைக் கொடுக்க தவறவில்லை.

கதை.

   சிறையில் இருக்கும் விஜிக்கு அமுதா எழுதிய கடிதத்தில் இருந்து கதை தொடங்குகிறது. அமுதாவின் கணவன் மனோ இராணுவத்தில் இருப்பவர். பாதிநாள் விடுமுறையில் ஊரிலேயே இருப்பார் அவர்களுக்கு ஆதிரா என்ற குழந்தையும் இருக்கிறது.
விஜி தன் மீது கொண்டிருக்கும் இனம் புரியாத ஈர்ப்பை புரிந்துக்கொண்டும் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள் அமுதா.
அமுதாவின் கணவன் ஊரில் இருக்கும் போதெல்லாம் அவரை சந்திப்பதை தவிர்க்கிறான் விஜி. மனோ ஊர் திரும்பும்போது மட்டும் வழியனுப்ப வந்த விஜியை இராணுவத்தில் சேர்வதற்கு தயாராக சொல்லி வீட்டில் பழுது பார்க்கும் வேலை இருப்பதாகவும் சரி செய்ய ஆள் அனுப்பவும் சொல்லி விஜியின் தேவைக்கு பணம் கொடுக்கிறார் மனோ.
வீட்டில் அமுதாவும் குழந்தையும் மட்டும் இருக்கிறார்கள்.

   வீட்டிற்கு வந்திருந்த விஜி அமுதாவிற்கும் எதிர்பாராத விதமாக முத்தம் கொடுத்துவிடுகிறான். அதனை பெற்றுகொண்ட அமுதா சுயநினைவு வந்து அதனை தவிர்த்து அவனுக்கு இதெல்லாம் வயது கோளாறு அவன் மீது எந்த வெறுப்பும் இல்லையென்று அனுப்புகிறாள்.

   பின்னர் ஒரு நாள், ஊர் பிரச்சனையில் மனோ வெட்டிக்கொல்லப்படுகிறார்.
மனோவைக் கொலை செய்த இருவர்  நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள். எதிர்பாராத விதமாக விஜி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு வெட்டிக்கொல்கிறான். அவ்விடமே கைதாகி கொண்டுச்செல்லப்படுகிறான். அங்கிருக்கும் கூட்டத்தில் அமுதாவை கண்டு அவள் மட்டு புரியும் விதம் புன்னகைக்கிறான்.

    சிறைச்சாலையிலும் அமுதாவிற்கு தொல்லை கொடுக்காமல் தானே தவறான வழிகளில் பணம் சம்பாதிக்க முயன்று பின்னர் காவலாளிகளால் தண்டிக்கப்படுகின்றான். வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றலாகிறான். அங்கு அவனை சந்திக்க வரும் அமுதாவுடனான உரையாடலில் அவள் இப்படியாக சொல்கிறாள், 'இனி நான் உனக்கு தேவையில்லாமல் இருக்கலாம் ஆனா நீ எனக்கு தேவை'.

    விஜிக்கு உணவு கொடுக்கும் முன்பாக அங்குள்ள விண்ணப்பத்தில் தன்னை விஜியின் மனைவி என குறிப்பிட்டு எழுதுகிறாள்.

கதை குறித்து,

    பொது புத்தியில் இருந்து மறக்கப்படும் மறுக்கப்படும் மனிதனின் கதையாக இதனைச்சொல்லலாம். சமூகம் சொல்லிக்காப்பாற்ற நினைக்கும் நன்னெறிகூறுகளை இதில் காண முயன்றால் இக்கதை மீது இயல்பாகவே ஓர் வெறுப்பு ஏற்படும்.

    கதை சொல்லும் விதம் வாசகர்களை கவர்ந்துள்ளது. யூகிக்க முடியாமலும் தான் யூகித்ததை நம்பாமலும் கதை செல்கிறது. உதாரணமாக விஜி கொலை செய்வான் என நாமே நம்புகிறோம். பின்னர் ஏன் கொலை செய்தான் என நம்ப மறுக்கின்றோம்.

    விஜிக்கும் அமுதாவுக்குமான ஈர்ப்பை அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லியுள்ளார் எழுத்தாளர். கதை காட்சிகளாக கண் முன் விரிவது கதையின் பலம்.

    தன் கணவன் மனோவின் மரணத்தை அவள் எதிர்கொள்ளும் விதம் அவள் மீது நமக்கு பரிதாபத்தைக்கொடுக்கிறது. விஜி் தனக்கு கொடுத்த முத்தத்திலும் , பின்னர் விஜியின் மனைவி என தன்னை சொல்லிக்கொள்ளும் போதும் அமுதா மீது கோவமோ வெறுப்போ வரவில்லை.  அமுதா செய்தது சரியென விஜியின் வருகைக்காக நம்மையும் காக்க வைப்பது மூலம் கதையில் வென்றுள்ளார் லஷ்மி சரவணகுமார்.
இக்கதை அவரின் வாசகர்களை அதிகப்படுத்தும் என நம்பலாம்.


- தயாஜி

ஜூலை 14, 2016

கதை வாசிப்பு -13 ‘ஜீசஸின் முத்தம்’

     

கதை வாசிப்பு -13 'ஜீசஸின் முத்தம்'

    லஷ்மி சரவணக்குமாரின் 'மயான காண்டம்' சிறுகதை தொகுப்பில் 'ஜீசஸின் முத்தம்' என்ற கதை உள்ளது.

   தலைப்பை படித்ததும் நமக்குள் ஆர்வம் தூண்டப்படுகிறது. ஒரு பக்கம் ஜீசஸையும் மறுபக்கம் முத்தத்தையும் எந்த புள்ளி இணைக்கும் என நாம் நமது கற்பனைக்கு சென்றுவிடுகிறோம்.

கதை.

   காதல் தோல்வி அடைந்த இருவர் இன்னோரு காதலில் இணைகிறார்கள்.
சாதாரண கதை. ஆனால் கதை சொல்லும் விதம் கவர்கிறது. இதுதான் நடக்கும் என நம் முன் யூகங்களை அடுத்தடுத்து தோற்கடித்து மீண்டும் நாம் நினைத்ததையே கதையில் காட்டும் சுவாரஷ்ய நடை.

   காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு காதல்தான் மருந்தாகும் என கதை தன்னை வாசகர் முன் காட்டுகிறது. தோல்வியும் ஏமாற்றமும் நம்மை ஏமாளியாக்கும் முட்டாளாக்கும் என்பது மட்டும் அல்ல மாறாக இவ்வாழ்வை புரிந்துக்கொள்ளவும் உதவும் என நினைக்கவைக்கிறது கதையின் இரண்டு கதாப்பாத்திரங்கள்.

- தயாஜி

டிசம்பர் 12, 2015

மயானத் தங்கத்தில் மறைந்திருக்கும் இன்னொரு மனிதனின் வாழ்வு





   சம்பவம் ஒன்று நடக்கிறது. கொலை. தற்கொலை. விபத்து. திட்டமிட்ட கொலை. திட்டமிடாத கொலை. ஏதோ நடந்துவிட்டது என கடந்துவிடுவதில் நமக்கு பழக்கம் இருக்கிறது. ஒருவேளை நம்மவர் யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால் கொஞ்ச நாள் துக்கம் அனுபவிப்போம். போராட்டவாதி என்றால் சில காலம் போராடிக்கொண்டிருப்போம். அதிகம் போனால் இடைவேளி விட்டு தேர்தல் காலங்களில் மீண்டும் தூசு தட்டிகொள்வோம்.

  எல்லாவற்றையும் கடந்துவிடுதல் எளிதல்ல.கடந்துவிட முடியாதவற்றால் நமது மனதில் சலனம் ஏற்படுகிறது. அச்சலனம் மனதின் பகுதியொன்றின் நுழைந்துவிட்டு குடைந்துக் கோண்டே இருக்கும். சில சமயங்களில் எப்போதோ பார்த்து கேட்ட சம்பவம் ஒன்று மீண்டும் மனதிலிருந்து வெளிப்பட்டுவிடும். அதன் அசூயை அவ்வளவு எளிதில் கடக்கக்கூடியது அல்ல அப்படியொரு சலனத்துடனே இதனை எழுதுகிறேன்

   ’மயானத் தங்கம்மராட்டி சிறுகதையை தனக்கான பாணியில் படமாக்கியிருக்கிறார் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார். வேலை தேடித்தேடி சோர்ந்திருக்கிறான் நாயகன். இயந்திரங்களை நம்பும் முதலாளிகள் வாழ்ந்துக் கோண்டிருக்கும் உலகில் மனிதர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் வேலை கிடைத்துவிடுமா என்ன?.  வேலைக்கான எவ்வழியும் நாயகனுக்கு இல்லை.  எதேச்சையாக மயானத்தில் தங்கம் கிடைத்துவிடுகிறது.

  அங்கிருந்துதான் நாயகனின் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது. மயானத்திலேயே தங்கம் தேட ஆரம்பிக்கின்றான். பணக்கார பிணங்களை தேடி , தோண்டி எடுத்து அவையிடம் தனக்கான ஏதும் கிடைக்குமா என்பதை தேடுவதையே தன் தொழிலாக்கிகொள்கிறான். மனைவியின் வருத்தமும்  அறிவுரையும் விரக்தியடைந்த நாயகனின் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவில்லை. வேலை பூர்த்தி செய்யவேண்டிய குடும்ப பசியை மயான தங்கங்கள் பூர்த்தி செய்ய தொடங்கின

  ஊரில் அது பிரச்சனையாக வெடிக்கிறது. பிணங்களை தோண்டுகின்றவனை தேடும் படலம் தொடங்குகிறது. நாயகன் மயானத்துக்குச் செல்கின்றான். அதுவரை பார்த்துக் கொண்டிந்த எனக்கு அடுத்த காட்சிகள் மனதில் ஓடத்தொடங்கின. ஆனால் சில நொடிகளில் ஏமாந்தேன்.

  அங்கே நடக்கும் விபரீத்தால் தனது நான்கு விரல்களையும் இழந்துவிடுகிறான் நாயகன். இனி எதுவும் வேண்டாம் ஆபத்து இல்லாத அசிங்கம் இல்லாத மரம் வெட்டும் வேலைக்கு உறவினருடன் செல்ல சொல்கிறாள். அங்கு நடந்த விபத்தால் விரல் இழந்ததாக ஊர் மக்களிடம் சொல்லிக்கொள்ளலாம் என மனைவி அவனை வழியனுப்புகிறாள். ஆனால் நாயகன் சென்ற இடம் இனி திரும்ப முடியாத இடம்

  ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றுடன் கதை முடிகிறது. அதிலிருந்து பார்வையாளர்கள் மனதில் இதுவரை கடந்துவிட்ட ஏதோ என்று தன்னை மீண்டும் புதிப்பித்துவிடுகிறது.

     நடந்துவிட்ட சம்பவங்களில் தொடக்கத்தில் ஏதோ ஒரு காரணியாக சமூகம் இருக்கிறது. அதன் பின்னால் நாம் மறைந்துக் கொண்டு சமூகத்தை திட்டிக் கொண்டிருக்கிறோம்.




மயானத் தங்கம் குறும்படத்தை இதில் சொடுக்கி பார்க்கலாம்.
 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்