பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புன்னகை மட்டும் போதுமெனக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புன்னகை மட்டும் போதுமெனக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜனவரி 08, 2020

'புன்னகை மட்டும் போதுமெனக்கு' வாசித்தவர் பார்வை 4

https://tayagvellairoja.blogspot.com/2020/01/blog-post_5.html

 புன்னகை மட்டும் போதுமெனக்கு  சிறுகதைக்கு வந்திருக்கும் வாசகப்பார்வை



ராஜேஸ்வரி (படைப்பாளர்)
மலேசியா 


கதை முடிந்ததும் உடனே மறுமுறை படிக்கவேண்டியுள்ளது சிலவற்றை தெளிவு படுத்திக்கொள்ள.
அப்படி படிக்கும்போது கதை சுலபமாக புரிகிறது.


'புன்னகை மட்டும் போதுமெனக்கு' வாசித்தவர் பார்வை 3

https://tayagvellairoja.blogspot.com/2020/01/blog-post_5.html

 புன்னகை மட்டும் போதுமெனக்கு  சிறுகதைக்கு வந்திருக்கும் வாசகப்பார்வை


 ந.பச்சைபாலன் (படைப்பாளர்)
மலேசியா 
தயாஜிக்கு இது முக்கியமான சிறுகதையாக அமைகிறது. பிடிபடாத கதை நகர்த்தலாகத் தோன்றினாலும், முடிவுக்கு வந்தபின் மீண்டும் படிக்கத் தூண்டும் கதை. பெருநகரத்தில் இப்படியும் நடக்குமா என அதிர்ச்சி வலையில் தள்ளிவிடும் கதை. பூடகமாகக் கதையைச் சொல்லிச் சென்று கடைசியில் முடிச்சை அவிழ்க்கிறார். 
வெளிப்படையாகச் சொல்லாததே இக்கதையின் பலம். ஆனாலும், மறுவாசிப்பில் தெளிவாகிறது. 

வாழ்த்துகள் தயாஜி. "நான் வந்திட்டேன்னு சொல்லு" என்று நீங்கள் சொல்வதுபோல் உள்ளது. இன்னும் வாசிக்காதவர்கள் வாசியுங்கள்👌👍🙏

ஜனவரி 07, 2020

'புன்னகை மட்டும் போதுமெனக்கு' வாசித்தவர் பார்வை 2


 புன்னகை மட்டும் போதுமெனக்கு  சிறுகதைக்கு வந்திருக்கும் வாசகப்பார்வை



இரா.சண்முகநாதன் நடேசன்
மலேசியா 


வாசித்தேன். முதலில் குழப்பம். ஒவ்வொரு சூழலையும் ஆசிரியர் நியாயப்படுத்திக்கொண்டே வருமின்றாரோ என்ற கேள்வி என்னுள் எழ, 'செல்வி தான் வசிக்கும் இடத்தில் கூட தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை' என்பது போன்ற செயல்கள் நெருடலைத் தந்தாலும் அவள் அமைதியும் அடக்கமும் கொண்ட பண்பாடு மிக்கவள் என பதிலளித்துக் கொண்டு வாசிப்பைத் தொடருகின்றேன்.


வசதிமிக்க வசிப்பிடத்தில் வசிக்கும் அளவுக்கு வசதி படைத்த அவர்களுக்கு , குழந்தைகளை வீட்டிலேயே ஆள்வைத்துப் பராமரிக்க பணமில்லையா அல்லது மனமில்லையா என்ற கேள்வி எழும்போது, அதனையும் ஆசிரியர் " இன்றைய பரபரப்பு சூழலில் குழந்தைகளை காப்பகத்தில் வளர்ப்பதே பாதுகாப்பானது " என்ற வரிகளின் வரிகளின் வாசிப்பைத் தொடரச் செய்கிறார்.

குழந்தையைக் காணச் செல்லும் இடத்தில்,பெற்றோரைக் கண்டதும் கையுடைந்த பொம்மையை போர்த்தித் தூங்கச் சொல்லி வரும் வரிகள், சகாயம் செல்வி போன்று பிள்ளைகளைக் காப்பகத்தில் வளர்க்கும் பெற்றோர்களுக்கு கொடுக்கும் சாட்டையடியாக நான் கருதுகிறேன். பெற்றோர்கள் இருந்தும் காப்பகத்தில் வளரும் குழந்தைகள் அனைவருமே கையுடந்த பொம்மைகள் என்று சொல்லாமல் சொல்ல வருகின்றார் ஆசிரியர்.

பொம்மையை தூங்கச்சொல்லி விட்டுப் பின் குழந்தை பெற்றோரைக் காண வரும்போது ஆங்கே கதையின் தலைப்பு அவிழ்த்து விடப்படுகின்றது.

இருந்தும் குழந்தையை காப்பகத்தில் வளர்க்க வேண்டிய காரணம் என்ன எனும் கேள்வியும் பின் தொடர்ந்தே வருகின்றது. அதற்கு சீனக்கிழவி தற்காலிக விடை தருகிறாள். அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும் மற்றும் இரண்டு மாதங்களில் எல்லாம் சரியாகி விடும் எனும் வரிகள் செல்வி ஒரு நோயாளி என்று வாசிப்பவர்களை முடிவெடுக்க வைக்கின்றார்.


சிறுகதை எழுத்தாளரின் ஆற்றலே அவர் எடுக்கும் முடிவில் தான் உள்ளது.பல கதைகளில் எழுத்தாளனின் கதையை வாசித்து முடிக்கும் முன்னே வாசகன் முடிவுக்குக் கொண்டு வந்து விடுகின்றான். சில படைப்பாளர்கள் மட்டுமே எதிர்பாராத முடிவுகளோடு வாசவனை நெகிழச் செய்து விடுகின்றனர்.அவர்களில் தயாஜியும் ஒருவர் எனலாம்.மிஸ்டர் லிம் 4-ன் மூலம் செல்வி ஈடுபட்டிருக்கும் தொழிலை கோடிகட்டி நமது ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார்.


பிரிகபீல்ஸ் வட்டார சிவப்பு விளக்குப் பகுதிகள் மூடப்பட்டு விட்டன எனும் தகவலின் வழி சகாயம் புலம்ப, சீனக்கிழவி அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்யச் சொன்னதன் வழி செல்வியின் தொழிலைப் பற்றிய அதர்ச்சியை அவிழ்த்து விடுகின்றார் ஆசிரியர்.
செல்வி உள்ளுக்குள் புன்னகைத்தாள். இனி அவளுக்குத் தன் குழந்தையை மட்டுமே கட்டியணைக்கும் பணி.இனி யாருக்கும் அஞ்ச வேண்டாம் என்பதை உணர்த்தும் வரிகளில் கதையின் தலைப்பு மிளிர்கிறது. இருந்தும் இக்கதையில் வரும் பாத்திரங்களான சகாயமும் செல்வியும் ஒருவகையில் நோயாளிகளே. ஆம் மனநோயாளிகள். பல வழிகள் இருந்தும் இம்மாதிரியான இருளில் வாழ்வை இழந்து வளத்தத்தேடும் நோயாளிகள். இவர்களின் தேடல் தீராது; தொடரும் எனும் எதார்த்தத்தை சகாயம் 'மிஸ்டர் லிம் 3-க்கு தொடர்பு கொள்வதன் வழி ஆசிரியர் மெய்ப்பிக்கின்றார்.

குறிப்பு;
அல்ட்ராமேன் கையால் காட்டும் சிலுவைப் போன்ற குறியால்.. எனும் வரிகளால் கதைக்கு எந்த முன்னேற்றமும் இல்லை.
நன்றி.
இரா.சண்முகநாதன் நடேசன்






'புன்னகை மட்டும் போதுமெனக்கு' வாசித்தவர் பார்வை 1

 புன்னகை மட்டும் போதுமெனக்கு  சிறுகதைக்கு வந்திருக்கும் வாசகப்பார்வை


கலை இளங்கோ (படைப்பாளர்)
சிங்கப்பூர்

தங்களது முழு கதையையும் படித்தேன். 
சரி கதைக்கு வருவோம். ஒவ்வொரு எழுத்தாளரின் முயற்சியும் மதிக்கத்தக்கது. தங்களது முயற்சிக்குப் பாராட்டு!
மலேசியாவின் கோலாலம்பூர் பகுதி வாகன நெரிசல் கண்முன்னே வந்து போனது. இயல்பான விஷயங்களைக் கதையில் கூறியது சிறப்பு தான். இருந்தாலும் கதையில் சில இடங்களில் மயக்கம் தென்பட்டது. ஏன் குழந்தை தனியாக இருக்கிறது? அந்த கணவனுக்கு வேறு என்ன சிக்கல் ? பணத்தின் மீதுள்ள மோகம் குழந்தையின் தந்தையை ஆட்கொண்டு விட்டது போல. மலாய் மொழி சொற்களின் மணம் வீசும் தருணம் மலேசியா மண் வாசனையைத் தூக்கி விட்டது. பெண்கள் இருவரும் என்ன பெரிசா பேச போகிறார்கள் என்று மட்டமாக எண்ணும் உள்ளங்களுக்குச் சவுக்கடி காத்திருக்கிறது.



ஜனவரி 05, 2020

புன்னகை மட்டும் போதுமெனக்கு…

இன்றைய மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பில் *'புன்னகை மட்டும் போதுமெனக்கு'* எனும் என் சிறுகதை வந்துள்ளது. வாய்ப்பு இருப்பின் வாசித்து நண்பர்கள் தத்தம் கருத்துகளைச் சொல்லவும். அது எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
மக்கள் ஓசைக்கும் அதன் பொறுப்பாசிரியர்க்கும் என் நன்றி.




       இன்று விடுமுறை வேண்டுமென்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். பதில் ஏதும் வரவில்லை. பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. ஆனாலும் நம்பிக்கையின் பொருட்டு வெளியில் செல்வதற்கு தயாரானாள். கணவனும் சொன்னது போலவே மிகச்சரியாக பத்து நிமிடத்தில் கிளம்பிவிட்டான். பிசினஸ் மேன்களுக்கே உரிய மிடுக்குடன் வாசனையைத் தன் உடல் முழுக்க கலந்திருந்தான். இன்று குழந்தையை பார்க்க செல்லவேண்டும் என்று ஏற்கனவே சொல்லிவிட்டாள்தான் ஆனாலும் மீண்டும் ஒரு முறை நினைவூட்டுவது அவள் வழக்கமாக செய்தவது. ’ஒன் காலில்’ இருக்கிறாள் (one call என்று வாசிக்கவும் அல்லது ஒரு காலிலா என்று உங்களுக்கும் இப்போதே சிரிப்பு வரலாம்.) எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம். சிரித்த முகமாக இருப்பவர்களுக்கும் எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க விரும்புகின்றவர்களுக்கும் இப்படியான முதலாளிகள் கிடைப்பது அவ்வளவு சிரமமில்லை.

       முதலாளியிடமிருந்து பதில். ‘தாராளமாக விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், இன்று வேலை செய்ய போதுமான ஆட்கள் இருக்கிறார்கள்’ என்ற குறுஞ்செய்தியை படித்தவுடந்தான் ஏதோ திருப்தி வந்தது. இல்லாவிட்டாலும் உதவிக்கு சக பணியாளர்கள் இருக்கிறார்கள். முதலாளியை விட கஸ்டமர்களின் கோவத்துக்குத்தான் பதில் கொடுக்க சிரமப்படுவார்கள். எப்போதும் தன்னால் மற்றவர்களுக்கு சிரமமேதும் வந்திடக்கூடாதென்ற மனம்தான் அவளை இத்தனை நாட்களாய் தனித்துக் காட்டிக்கொண்டிருக்கிறது.

     செல்வி சகாயம் குடும்பத்தினர். கோலாலும்பூரில் இருக்கும் நவீன பல்லடுக்கு மாடிவீட்டில் வசிக்கிறார்கள். உள்ளே நுழைவற்கே காரணம் முதல் அடையாள அட்டை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே நுழைவதற்கான மின்சார தடுப்பை திறப்பார்கள். அல்லது உள்ளே இருந்து ஒரு ஆள் வெளியில் வந்து பேசி அவர்களை கூட்டிச்செல்ல வேண்டும். இருபதாவது மாடியில் இருந்து இதுவரை ஒரு மாடி மேலேயும் சென்றதில்லை. ஒரு மாடி கீழேயும் சென்றதில்லை. மின்தூக்கியில் வேறேந்த பட்டன்களையும் அவள் தட்டியதில்லை. அவ்வபோது வேறு மாடிகளில் மின்தூக்கி நின்று கதவு  திறந்தாலும் அவள் எட்டிப்பார்த்தது இல்லை. குணிந்த தலை கொண்டவளை அந்த பல்லடுக்கு மாடிவீட்டில் யாருக்கும் சரியாக அடையாளம் தெரியாது. கணவன் சகாயம் தன் வியாபார தரத்துக்கு தான் எங்கே வசிக்கிறோம் என்ன மாதிரியான காரை பயன்படுத்துகிறோம் என்பதை அத்தனை கவனம் கொண்டவர். ஒவ்வொரு முடிவையும் அது சார்த்தவாறே இருக்கும்படிப் பார்த்துக் கொள்வார். 

    இப்படித்தான் ஒரு முறை அவளை சந்திக்க வந்தவரை அவளே அழைத்து செல்ல கீழறிங்கினாள். பாதுகாவலர்கள் அவளை அடையாளம் தெரியவில்லையென ஏதேதோ கேள்விகளைக் கேட்டு குடைந்துவிட்டார்கள். 

நல்லவேளையாக, கணவன் வீட்டிற்கு வரும் நேரம் என்ற படியால், சில நிமிடங்கள் காத்திருந்து மூவரும் ஒன்றாக வீட்டுக்கு வந்தார்கள். அப்போதுதான் உடன் வந்திருந்த சீனர் இந்த குடியிருப்பு பகுதியை குறித்து தனக்கு தெரிந்ததை சொன்னார். வழக்கமாக இங்கிருக்கும் சிலரை பார்க்க வரும்போது, இப்படி காக்க வைக்க மாட்டார்களாம் அவர்களே காரில் கூட்டிவந்து பின்னர் கூட்டிப்போவார்களாம். அதிலும் இந்த மின் தூக்கியில் நான்காம் எண் இல்லாத்தற்கு சொல்லப்படும் வழக்கமான கதையை சொல்லிக்கொண்டிருந்தான். 

ஆனால் அவனுக்கு அதில் இருக்கும் நம்பிக்கையை இதுவரை யாராலும் உடைக்க முடியவில்லையாம்.

    செல்வியும் சகாயமும் குழந்தைக்கு கொடுப்பதற்கான விளையாட்டு சாமான்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு அவுட்டர்மேன் பொம்மைகள் குறித்து ஒன்றுமே தெரிவதில்லை. ஆமாம், இங்கே அவுட்டர்மேன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உச்சக்கட்ட சண்டையில் அவுட்டர்மேன் கையில் காட்டும் சிலுவை மாதிரி குறிதான் பிரச்சனை என்று சிலர் சொல்லிகொண்டாலும், வன்முறை அதிகம் இருப்பது குழந்தைகளுக்கு தக்கதல்ல என்று செய்திகளை ஊடகங்கள் சொல்லிக்கோண்டே இருந்தன. அவுட்டர்மேன்கள் செய்த வன்முறைகளைவிட ஊடகங்கள் காட்டிய படங்களும் பரப்பிய செய்திகளும்தான் குழந்தைகளுக்கு அச்சமூட்டுபவையாக இருந்தன.

   காற்றால் நிரம்பியிருந்த தேவதை பொம்மையை செல்வியும், படுத்துக் கொண்டு துப்பாக்கியில் சுடும் இராணுவ வீரன் பொம்மையை சகாயமும் எடுத்து வந்தார்கள். பின்னர் அவர்களுக்குள்ளாகவே பேசி இரண்டில் குறைந்த விலை கொண்டதை வாங்கிக்கொண்டார்கள். சகாயத்தை பொருத்தவரை உயர்ந்த வியாபார காந்தங்கள் செலவு செய்வதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

    இப்போதைக்கான பரபரப்பு சூழலில் குழந்தை, குழந்தைகள் காப்பகத்தில் இருப்பதுதான் எத்தனை பாதுகாப்பானது. தேவைப்படும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றாலும், மாதத்தில் மூன்று முதல் நான்கு நாட்களில் மட்டுமே கட்டாய விடுமுறை எடுக்க வாய்ப்பு கொண்ட சுமதிக்காக சகாயம் தங்கள் குழந்தையை பார்க்கும் நாளில் மட்டும் விடுமுறை என்று வீட்டில் இருப்பார். மற்ற நாளில் வேலை என்று வீட்டில் இருப்பார். 

நல்லவேளையாக சொந்த தொழில் செய்துவருவதால் சகாயம் எடுக்கும் ஒரு நாள் விடுமுறைகளுக்கு பாதிப்பு வரவில்லை. செல்வியின் ராசியால் இன்னும் எத்தனை தொழில்களையும் அவர் தொடங்கலாம், சமயங்களில்  சில தொழிகளில் பெருத்து நஷ்டம் ஏற்படுவது உண்டு. அதற்கும் கூடசெல்வியின் ராசிதான் கை கொடுக்கும். அத்தொழில்கள் எப்படி நஷ்டமாகின்றன என்பதற்கு பெரிய பட்டியலே வைத்திருக்கிறார் சகாயம். நல்லவேளையாக அவர் தொடங்கிய ஆறாவதோ ஏழாவதோ தொழிலில் கொஞ்சம் வருமானம் இப்போது வருகிறது.

    காரில் செல்லும் போது பாடல்களை கேட்கும் வழக்கத்தை கொஞ்ச நாள் நிறுத்தியிருந்தார். தனக்கு விடுமுறை சொந்த கதையாக இருந்தாலும் மனைவிக்கு அவ்வாறில்லை. ஓவர் டைம் வேலையால் மட்டுமே கோலாலும்பூர் போன்ற பெருநகரங்களில் வாழ முடியும். இல்லையெனில் இருக்கவே இருக்கிறது பெருநகரங்களின் மறுமுனை பெருநரகம். எப்போதும் இரைச்சல், தூங்கவிடாத மோட்டார் உறுமல்கள், பூனைகளைவிட பெரிய எலிகள், பள்ளிச்சீருடைகளில் பலான காட்சிகள். ஏனப்பா இதுவெல்லாம் பெருநகரங்களில் இல்லையா என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இருக்கிறதுதான் சில மாற்றங்களுடன். இரைச்சல் சத்தம் அவரவர் வீட்டு கதவுக்கு பின்னாலேயே நின்றுவிடுகிறது.மற்றவர்க்கு அது குறித்த அக்கறை இல்லை. மோட்டார்களை எங்கோ வைத்து எங்கோ இருக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டும். பூனைகளைவிட பெரிய எலிகளை பொறித்து தின்று செறிக்க பழகிவிட்டார்கள். பிறகு பள்ளிச்சீருடைகளின் பலான காட்சிகள் கண்ட இடங்களில் நடப்பதில்லை, பெரும்பாலும் அவரவர் சொந்த வீட்டு கட்டிலிலோ பள்ளிக்கு என சொல்லி வாங்கும் கட்டணத்திலே ஹோட்டல்களில் நடந்துவிடுகிறது. கிடைக்கும் நேரமெல்லாம் காரில் பயணிக்கும் போதுதான் என்றானபோது அதை செல்வியுடனான உரையாடல்களால் நிரப்பிக் கொள்வார் சகாயம். தன் வாழ்வில் எத்தனை சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதனையும் கலைவதற்கு செல்வி இருப்பதுதான் எத்தனை பாக்கியம். அவ்வபோது சகாயம் அவளுக்கு நன்றி சொல்ல மறப்பதே இல்லை. இதுவரை அவளுக்காக பெரிதாக ஒன்றும் செய்யவில்லையென்றாலும் அவள் மீதான அன்பு எப்போதும் ஏற்றமடைந்துக் கொண்டேதான் இருந்தது.

    குழந்தைகள் எல்லாம் ஆளுக்கொரு விளையாட்டு பொருள்களுடன் இருந்தார்கள். கீர்த்தரோஷன் மட்டும் கையுடைந்த யாரோ எப்போது விட்டுப்போன பொம்மையுடன் இருந்தான். “கீர்த்தா… கீர்த்து கண்ணா, கீர்த்தூ…ரோஷன்… அய்யா ரோஷனு..” என்று ஆளுக்கு ஆள் அழைத்தார்கள். எதற்கும் அசைந்துக் கொடுக்கவில்லை குழந்தை. இதனை கவனித்த சீனக்கிழவி, ’கீத்தாலோசா’ என அழைக்கவும் சட்டென பிரக்ஞ்சை கொண்ட குழந்தை வாசலை பார்க்க அப்பா அம்மா வந்திருப்பது குழந்தையைக் குதூகலப்படுத்தியது. கையுடைந்த பொம்மையை பத்திரமாக படுக்க வைத்து, தன்னுடைய போர்வையை அதற்கு கொடுத்து தூங்கச்சொல்லியப்பின் பெற்றோரிடம் வந்தான்.

    ஆசை தீர கொஞ்சியவர்கள் அவனை தூங்கவைத்து, அவன் தூங்கவைத்த கையுடந்த பொம்மையை எடுத்துவிட்டு தேவதை பொம்மையை படுக்க வைத்தார்கள். வாழ்வில் ஏதாவது பிடிப்பு இருக்கவேண்டியதின் அவசியத்தை குழந்தைகள் காட்டிவிடுகிறார்கள். வாழ்வின் குறிப்பிட்ட எல்லைவரை செல்ல முடிந்த தம்பதியர் குழந்தையென்ற சாவி கொண்டு அடுத்தடுத்த இன்ப கதவுகளை திறந்துச் செல்கிறார்கள். இப்போதெல்லாம் பெற்றுகொள்ளும் குழந்தைகளைவிட பெற்று கொல்லும் குழந்தைகள் எண்ணிக்கைதான் அதிகம். வாழ்வின் வழியே திறந்திடாவர்கள், பாவச்சுமைகளுடன் பயணிக்க தயாராகிறார்கள்.

    புறப்படும் முன் சீனக்கிழவி அவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள். தான் காருக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிழவியிடம் கையசைத்துவிட்டு புறப்பட்டார் சகாயம். குழந்தை குறித்து சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிய பின், செல்வியின் உடல் நலம் குறித்து விசாரித்தாள். அவ்வபோது மருத்துவ பரிசோதனை செய்யும்படியும் கேட்டுக்கொண்ட சீனக்கிழவி, இன்னும் எத்தனை மாதம் குழந்தை இந்த காப்பகத்தில் இருக்கும் என விசாரித்தாள். அதற்காகவே காத்திருப்பது போல எஞ்சியிருக்கும் இரண்டு மாதங்களை சொன்னாள். ” எல்லாம் சரியாகிவிடும் நான் உன் குழந்தையை பார்த்துக்கறேன். நீயும் வந்துவந்து போ. ஒன்னும் பிரச்சனை இல்லை. இனிமேலாவது உன் புருசனை ஒழுங்கா இருக்க சொல்லு. அப்பறம், அவ்வளோதானா இல்ல.. அடுத்து வேற யெங்கயும் பார்த்துட்டாரா…” என்ற சீனக்கிழவி தன் கைபேசிக்கு அழைப்பு வந்ததும், அடுத்தமுறை பேசலாம் என செய்கை காட்டி திரும்பினாள். காரின் ஹார்ன் சத்தம் கேட்கும்வரை அப்படியே நிலைகுத்தி நின்றிருந்தாள் செல்வி.

கார், வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

  ”ஆமா, அந்த கெழவிக்கு என்னாவாம்? எப்ப பார்த்தாலும் உன் கிட்டதான் வந்து பேசுது… ஏன் நான் இருக்கும் போது வந்து பேசாதாமா..?” என்றவன் பதிலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காமல், ”ஆமா..ஆமா.. ரெண்டு பொம்பளைங்க.. என்னாத்த பேச போறிங்க.. எங்களை மாதிரி நாட்டு நடப்பையும் பிசினஸ் பத்தியுமா பேச போறிங்க..?, வீட்டுல தண்ணி இல்ல, காட்டுல பன்னி இல்லைன்னு எதையாவது ’கோசோங்கா’ பேசுவிங்க”

    கைபேசி ஒலித்தது, “சீக்கிரம் எடுத்து பாரு, சீனன் வேலைக்கு வர சொல்லிட போறான், அந்த வழியாதான் போவோம், இறக்கி விட்டுடறேன். இல்லைன்னா திரும்ப வரனும்.. எதுக்கு ரெண்டு வேல..டோல் காசு வேற.. டோல் எடுக்கறதுக்குள்ள உசுர எடுத்துடுவானுங்க போல…”

   ‘Besok jgn dtg… polis masuk.. kita punya hal cukup..good luck’) என்று இருந்தது.படித்ததும் மெல்லிய புன்னகையில் விபரத்தை சொன்னாள். ஏதோ கணக்கிட்டவர். கைபேசியை எடுத்தார். ‘எம்’ வரிசையில் ஒவ்வொரு பெயராக கீழே இழுத்துக் கொண்டிருந்தான். ’MR.லிம் 4’ என்ற எண்ணுக்கு அழைத்தார்.

    சகாயம் சீனத்தில் பேசினான். இன்னும் எத்தனை மொழி தெரியுமோ தெரியவில்லை. ஆனல சகாயத்திற்கு கோவமாக வந்தது.

   “பாரேன், இந்த எழவெடுத்தவனுங்கள…. ரெட் லைட் ஏரியாவ மூடிட்டானுங்களாம். இனி பிரிக்பீட்ல இருக்க முடியாதாம்… சீல் வச்சிட்டானுங்களாம்… நாசமா போறவனுங்க… எதை மூடனுமோ அதை மூடமாட்டானுங்க.. இதை மூடி நம்ம வயுத்துல அடிக்கறானுங்க…”

    செல்வி உள்ளுக்குள் நிம்மதியாய் புன்னகைத்தாள். இனி அவள் தம் குழந்தை மட்டுமே தன்னை கட்டியணைக்கும்படி வாழலாம். எல்லோரையும் தைரியமாக நேர்கொண்டு பார்க்கலாம். யாரும் அவளை போகவிட்டு பின்னால் பேச மாட்டார்கள். மொத்தத்தில் அவளுடன் இனி அவளுக்கானது மட்டுமே என்கிற புல்லரிக்கும் ஏற்பட்டது. 

சட்டென , கார் வழக்கமாக செல்லும் வழியின்றி வேறு பாதைக்கு போகத்தொடங்கியது.

“அப்போ நாம வீட்டுக்கு போகலையா…?”

“இல்ல…”

”இப்ப எங்க போறோம்?”

”ஏன் உனக்கு தெரியாதா.. லிம்-கிட்ட வட்டிக்கு காசு கேட்டிருந்தேன், இன்னுக்கு வர சொல்லியிருந்தான்…”

    சகாயம் கைபேசியில் ’மிஸ்டர் லிம் 3’ என்ற எண்ணுக்கு அழைத்தார். செல்வி தன் குழந்தையை நினைத்துக்கொண்டாள். மீண்டும் புன்னகைத்தாள் ஆனால் அவளின் கண்கள் மட்டும் கலங்கிக்கொண்டிருந்தன…


- தயாஜி -

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்