பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

குறுங்கதை2023 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுங்கதை2023 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அக்டோபர் 29, 2023

குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது

 


குறுங்கதை எழுதும் வகுப்பு 1 - நிறைவடைகிறது


  செப்டம்பரில் தொடங்கிய வகுப்பு அக்டோபரில் நிறைவடைந்தது. இரு மாத வகுப்பாக திட்டமிட்டு அதன்படி அதனை வழிநடத்தி முடித்தோம். பல புதியவர்கள் கலந்து கொண்டார்கள். கவனிக்கத்தக்க எழுத்தாளர்களும் கலந்து கொண்டது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

  குறுங்கதை எழுதுவதில் இருக்கும் சுதந்திரம் குறித்தும் அதிலிருந்து அடுத்த படைப்பாக்கத்திற்கு எப்படி நகர்வது எனவும் கலந்து பேசினோம். ஒவ்வொருவரும் அவர்களின் எழுதும் திறனை குறுங்கதை எழுதுவதில் இருந்து கண்டுகொண்டார்கள்.

 ஏற்கனவே நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் கருத்துகளும் அவர்களில் பகிர்தலும் வகுப்பிற்கு பயனாக அமைந்தது.

  தொடக்கமாக குறுங்கதைகள் குறித்த அறிமுகம் வழக்கப்பட்டது.  அதன் பின் பயிற்சிகளும் இடுபணிகளும் வழங்கப்பட்டன. பங்கெடுத்தவர்கள் தங்களின் திறமைகளைச் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

   கதைகளை எழுத கண்ணுக்கு எட்டிய காட்சிகள் கூட போதும்; அதிலிருந்து பல கதைகளுக்கான கருக்களை நாம் கண்டுகொள்ளலாம் என்பதை ஒவ்வொருவரும் நன்கு புரிந்து கொண்டார்கள்.

  இவ்வகுப்பில் கொடுக்கப்பட்ட இடுபணிகளில் இருந்து மொத்தமாக 20க்கும் அதிகமான குறுங்கதைகளைத் தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொரு கதையும்  நிச்சயம் கவனத்தை ஈர்க்கும் கதையாக அமைந்திருக்கின்றது.

    விரைவில் இக்கதைகளை குறுங்கதைத் தொகுப்பாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

   குடும்ப மாதுவின் சுதந்திரம் நோக்கிய குரலாய் ஒலிக்கும் கதைகள், திருவள்ளுவரின் கடைசி குறள் குறித்த கதை, அபலநகைச்சுவையை மையப்படுத்திய கதைகள், மக்களால் குற்றம் சுமத்தப்பட்டவரின் மறுபக்கம், பேய்கள் என்பவை இருக்கிறதா என நம்மையே கேட்க வைக்கும் கதை, சினிமாவின் தாக்கம் மாணவச்சமூகத்தில் எந்த விளைவுகளைக் கொடுக்கின்றன,  பூமியை தூய்மைப்படுத்த சொல்லி விண்வெளியை வீணாக்கும் அறிவியலில் கதை, கனவையும் நினைவையும் ஒரே மாதிரி அணுகும் கதை, மனமுறிவுகளால் மூன்றாம் தரப்பிற்கு ஏற்படும் பாதிப்பு என பலவேறுபட்ட கதைக்களன்களையும் ஓரளவிற்கு மாறுபட்ட கதைச்சொல்லும் யுக்தியையும் பயன்படுத்தி இக்கதைகளை இவர்கள் எழுதியிருந்தார்கள். 

     அவர்களின் அனுமதியுடன் அக்கதைகளை விரைவில் உங்களோடு பகிர்கிறேன்.

   இவ்வாறு எங்களின் முதல் குறுங்கதை எழுதும் வகுப்பு நிறைவடைந்தது. நவம்பரில் இரண்டாம் வகுப்பை தொடங்குகின்றோம். 

    உங்களுக்கும் குறுங்கதைகள் எழுத ஆர்வம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள். 

 குறுங்கதைகளைப் புரிந்து கொள்வதிலிருந்து உங்களுள் மறைந்திருக்கும் எழுத்தாற்றலை நீங்க கண்டுபிடித்து எழுதலாம்.


எழுதுவோம்… 

அதுதான் இரகசியம்…

அதுவேதான் தியானம்…


அன்புடன் தயாஜி 

அக்டோபர் 22, 2023

மனமுறிவு

 

 



அம்மா அப்படித்தான் சொல்லியிருந்தார். இனி இவர்தான் எனக்கு அப்பாவாம். ஆமாம் அப்பாவாம்.  அப்பாவா? எப்படி இவர் எனக்கு அப்பாவாக இருக்க முடியும். 

அப்பா இனிமேல் வீட்டிற்கு வரமாட்டாராம். வரக்கூடாதாம். வாரம் ஒரு முறை மட்டும் வருவாராம். இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அப்பா ஏன் இன்னமும் வரவில்லை.

அம்மா இருக்கும் போதெல்லாம் புது அப்பா ரொம்ப கண்டிப்பானவராக இருப்பார். ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது. சாக்லெட் சாப்பிடக்கூடாது. மழையில் நனையக்கூடாது. சத்தம் போட்டு சிரிக்க கூடாது. வீட்டில் ஓடி பிடித்து விளையாடக்கூடாது. சுவற்றில் கிறுக்க கூடாது என்று எப்பவும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். 

என் அப்பா எப்பவும் அப்படி சொல்ல மாட்டார். சொல்லவே மாட்டார். அவரும் என்னுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவார். மழையில் என்னுடன் ஓடி பிடித்து விளையாடுவார். கலர் பென்சில்களை வாங்கி கொடுத்துக்கொண்டே இருப்பார்.

அப்போது என் அப்பா செய்ததையெல்லாம் புது அப்பா இப்போது செய்யக் கூடாது என்கிறார். அப்போது என் அப்பா செய்யாததையெல்லாம் இப்போது புது அப்பா செய்கிறார்......

அக்டோபர் 21, 2023

எப்படித்தான் வாழ்கிறார்கள்

 


- எப்படித்தான் வாழ்கிறார்கள் -

சிறந்த தம்பதிக்கு விருது கொடுக்கும் விழா. அதற்கென்றே சில தம்பதியினர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அவர்களுக்கு தெரியாமலேயே ஒரு குழு ஒவ்வொரு தம்பதியையும் பின் தொடர்ந்தது.

தம்பதியரில் யார் சிறந்த தம்பதி என  அறிவித்தார்கள். பலரும் தங்களுக்கு அந்த இடம் கிடைக்காதது குறித்து வருத்தம் இருந்தது. எப்படி அவர்களால் இப்படி வாழ முடிகிறது என்று பொறாமையும் பட்டார்கள்.

ஐம்பதை நெருங்கிய மனமொத்த தம்பதியினர் விழா மேடையில் ஏறுகிறார்கள். பார்த்துக்கொண்டிருக்கும் பல தம்பதிகள் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள்.

பலரும் அவர்களை முன்னுதாரணமாக எடுத்தார்கள். எப்படி வாழ்கிறார்கள் பாரேன் என பேசவும் செய்தார்கள்.

மேடையில் கணவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. "ஐயா உங்க கல்யாண நாள் எப்போ?"

அவருக்கு பதில் நினைவில் இல்லை. கூட்டத்தில் ஏதோ சலசலப்பு. பின் மனைவியிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. அவருக்கும் நினைவில் இல்லை.

இருவருக்குமே திருமண நாள் நினைவில் இல்லை இவர்கள் எப்படி மனமொத்த தம்பதிகளாக வாழ்வதாகச் சொல்கிறார்கள் என்று குழம்பினார்கள்.

சிலருக்கு மட்டும் அதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு நன்றாகத்தெரியும். எப்படித்தான் வாழ்கிறார்கள் என்ற கேள்விக்கு இப்படித்தான் வாழ்கிறோம் என்ற பதில்தான் அவர்களுடையதும்.


அக்டோபர் 18, 2023

தீவிரவாதி

 

அவனைக் கொல்வதற்கு முன்பாக விசாரித்தார்கள். விசாரிக்காமல் யாரையும் அதிகாரிகள் ஒருபோதும் கொல்வதில்லை. இல்லை இது கொலையில்லை. தண்டனை.

 அதிகாரிகள் விசாரிக்காமல் இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கியதில்லை.

அவன் முதலில் அழத்தொடங்கினான். அழுகிறான் அழுதுக்கொண்டே இருக்கிறான். இது அவனது நாடகமாகக்கூட இருக்கலாம். உடலில் உள்ள காயங்களும் முகத்திலிருக்கும் வீக்கமும் தலையிலிருந்து வழியும் இரத்தமும் அப்படியொன்றும்  வலிக்காது என அதிகாரிகளுக்கு தெரியும்.

வாயில் காய்ந்த ரொட்டியைத் திணித்தார்கள். அது தொண்டையில் சிக்காமலிருக்க எதையோ வாயில் ஊற்றினார்கள். அவனால் எதையும் விழுங்க முடியவில்லை. எதையும் சொல்லவும் முடியவில்லை. வாந்தி எடுத்தான். திணித்ததிலிருந்து திணிக்காததும் அவன் தின்னாததும் வெளியில் தெரித்தன. 

அவனை  சிறிது நேரம் ஓய்வெடுக்க வைத்தார்கள்.

மீண்டும் ஒரு முறை விசாரித்தார்கள்.  இம்முறை அழுகை குறைந்திருந்தது. மூச்சு மட்டும் அதிகப்படியாக ஏறியேறி இறங்குகிறது.

அவனிடமிருந்து எந்த விபரங்களையும் வாங்க முடியவில்லை. அப்படியொரு பயிற்சியை அவன் பெற்றிருக்கக் கூடும். 

 தாங்கள்  தாக்குதல் நடத்திய இடத்தில் மயங்கிய நிலையில் இவனை கண்டுபிடித்திருந்தார்கள். தெளிவாக இருந்தால் இவனும் ஓடியிருப்பான்.

அவனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காது என உறுதியானது. உண்மையைச் சொல்லாத குற்றத்திற்காகவும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத குற்றத்திற்காகவும் அதிகாரி முன் வாந்தி எடுத்த குற்றத்திற்காகவும் தாக்குதல் நடந்த இடத்தில் பிடிபட்ட குற்றத்திற்காகவும் இன்னும் சில இதுவரை கண்டுபிடிக்காத குற்றத்திற்காகவும் தீவிரவாதி என உறுதி செய்து அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இது இங்கு நடந்துகொண்டிருக்கும் போது, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சிலர் தங்களில் உறவினர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். 

அதில் ஓர் அம்மா தேடுவது; எப்போதும் அழுதுக்கொண்டிருக்கும் தனது ஐந்து வயதான வாய்ப்பேச வராத குழந்தையை..... குழந்தையை...... குழந்தைகளை.... குழந்தைகளையும்.....

அக்டோபர் 17, 2023

ஈரம்

 

அந்த அதிகாரியின் மனதில் ஈரம் இருக்கத்தான் செய்கிறது. 

இந்த யுத்தம் யாருக்காக இருந்தாலும் எந்த மதத்திற்காக இருந்தாலும் யாருடைய ஆணவத்திற்காக இருந்தாலும் அங்கு குழந்தைகளும் பெண்களும்  வயதானவர்களும் நோயாளிகளும் பாதிக்கப்படக்கூடாது. கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்காத அப்படி எந்த தெரியாத எந்த மனிதனையும் கொல்வது தர்மமாகாது.

ஆனால் வேறு வழியில்லை. யுத்தம் அதன் கோரத்தாண்டவத்தை ஆடத் தொடங்கிவிட்டது. அதிகாரியின் அறையிலிருந்து ஊர் முழுக்க கேட்கும் ஒலிபெருக்கி அதிரத்தொடங்கியது.

"அப்பாவி மக்களை கொல்வது எங்கள் நோக்கமல்ல. ஆனால் இது யுத்தம் இரு தரப்புகளுக்குமே இழப்புகள் இருக்கும். உங்களுக்கு இன்னும் 6 மணிநேரம் அவகாசம் கொடுக்கிறோம். உடனே இவ்விட்டத்தைவிட்டு வெளியேறுங்கள்.   உங்கள் நிலைமை எங்களுக்கு தெரியும். இந்த யுத்தத்தில் நாங்கள் ஜெயித்த பின் உங்களுக்கான சிறந்த வாழ்வை நாங்களே உங்களுக்கு அமைப்போம். அதுவரை ஊர் எல்லையில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் நீங்கள் தஞ்சம் புகுங்கள். "

அறிவிப்பைக் கேட்ட மக்கள் மிச்சமிருந்த உயிரையும் மிச்சமே இல்லாத உடமைகளின் எச்சங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். ஊரே இப்போது மயானமாக இருந்தது. சின்ன வித்தியாசம் முன்பு நடமாடும் பிணங்கள் இருந்தார்கள். இப்போது நடமாடாத பிணங்கள் இருக்கின்றன.

சரியாக ஆறு மணிநேரம் முடிந்தது. அதிகாரி தன் அறையில் யாருடனோ பேசுகிறார்.

"உன்னிடம் இன்னும் எத்தனை குண்டுகள் மிச்சமுள்ளன..?"

"200"

"அதில்  180 குண்டுகளை நீ மிச்சப்படுத்து, மற்றதை பயன்படுத்து..... குண்டுகள் நமக்கு முக்கியம்.... வீணாக்காதே...."

பேசி முடித்ததும், மக்கள் நுழைந்த மருத்துவமனை வெடித்து மனித உடல் சிதறி விழுகின்றன.

அந்த அதிகாரியின் மனதில் ஈரம் இருக்கத்தான் செய்கிறது. அது முழுக்க முழுக்க அப்பாவி மக்களின் செங்குருதியினால் நனைந்திருந்தது...


- தயாஜி

ஏப்ரல் 13, 2023

தீண்டாமை


"என்னப்பா உங்க ஆளுங்களை கோவிலுக்குள்ளயே விட மாட்டறாங்க.. நீ என்னடான்னா சாமி.. சாமின்னு நம்பிகிட்டு இருக்க...?"

"என்ன செய்றது... உங்க யாராலயும் தலைவராக முடியாதுன்னு முடிவு பண்ணி.... நாலாவது தலைவராகவும் உங்க தலைவரின் வாரிசையே தலைவராக்க கோஷம் போட்டுக்கறாங்க.. ஆனாலும் நீங்க அதே கட்சிக்கு ஓட்டு போடறது இல்லையா..."

"நான் சொல்றது தீண்டாமை.."

"அங்கிருந்து பார்த்தா இது உங்களுக்கு தீண்டாமை... இங்கிருந்து பார்த்தா அது எங்களுக்கு அது தீண்டாமை...."

#தயாஜி
#குறுங்கதை
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

பெயர் தெரியாத பறவை


'பெயர் தெரியாத பறவை'

கொஞ்ச வருசத்துக்கு  முன்ன நடந்த சம்பவம். நம்ம குமாரு இருக்கானே குமாரு.. அவனுக்குத்தான் நடந்தது.  காட்டுக்கு போய்ருக்கான். அங்க நரி ஒரு பறவகிட்ட சண்டை பிடிச்சிகிட்டு இருந்ததாம். இவனைப் பார்த்ததும் அந்த நரி ஓடிப்போச்சாம். அந்த பறவயும் நரிகிட்ட அடியும் கடியும் வாங்கி பறக்க முடியாம கிடந்துச்சாம்.

பாவம் பார்த்து நம்ம குமாருதான் அந்தப் பறவயை எடுத்து வந்தான். வீட்டுல வச்சி கைவைத்தியம்லாம் செஞ்சான். அதும் கொஞ்ச நாள்ல குணமாச்சி.

எது என்ன நினைச்சதோ தெரியல அதோட குமாரு கூடவே இருந்துச்சி. அந்தப் பறவக்கு என்ன பேருன்னும் தெரியல என்னதா தீனின்னும் தெரியல. குமாரு எதை சாப்டறானோ அதையே அந்தப் பறவயும் சாப்டுக்கும்.

எங்ககூடயும் நல்லா விளையாடும். ஆனா யாராச்சும் குமாரு மேல கை வைச்சாங்கன்னு வைங்க பயங்கரமா கத்தி பயம்காட்டும். நல்ல பறவதான் எங்க யாரையும் கொத்தாது. அப்படியே நாலஞ்சி வருசமா குமாரு கூடவே ஒன்னுமன்னா இருந்தது.

போனவாரம் பாருங்க. திடீர்னு யார் என்ன சொன்னாங்கன்னு தெரியல. சில அதிகாரிங்க வந்தாங்க. இது ஆபத்தான பறவையாம். வீட்டுல வச்சிருக்க கூடாதாம். பெரிய குத்தமாம். கைது செய்து தண்டம் போடவும் முடியுமாம்.

குமாரும் நாங்களும் அந்தப் பறவயைப் பத்தி நல்லவிதமாத்தான் சொன்னோம். அதிகாரிங்க கேட்கவேயில்ல.

பாவம் குமாரும் அந்தப் பறவையும்தான். கடைசியா குமாரு அழறான், அந்தப் பறவயும் கத்திகிட்டே ஆளுக்கு ஒரு திசைல நிக்கறாங்க.

அந்த ஆபத்தானப் பறவயை அதிகாரிங்க அவங்க பாதுகாப்புல வைக்க போறாங்களாம். தேவைப்பட்டா குமாரும் நாங்களும் கடிதம் போட்டு அனுமதி வாங்கிட்டு எப்ப வேணும்னாலும் அந்தப் பறவயைப் பாக்கலாம்னு சொன்னாங்க.

குமாரு சரியா சாப்டு ரெண்டு நாளாச்சி. அவனால அந்தப் பறவ இல்லாம இருக்க முடியல. அந்தப் பறவைக்கும் அப்படித்தானே இருக்கும். எத்தினி வருஷம் ஒன்னா இருந்தாங்க.

எங்களால குமாரை அப்படி பாக்க முடியல. சரி அதிகாரிங்க சொன்னது போல கடிதம் போட்டு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாம்னா, யாரைப் பாக்கனும் எப்படி எழுதனும் யார்கிட்ட கொடுக்கனும்னு எதுவுமே தெரியல.

நல்ல வேளையா ஒரே வாரத்துல அதிகாரிங்க எங்களைப் பாக்க வந்தாங்க. அந்த பறவ ரொம்ப ஏங்கியிருக்கும் போல.

வந்தவங்க நம்ம குமாரை கைது செய்துட்டாங்க. என்னடா இதுன்னு எங்களுக்கும் ஒன்னும் புரியல.  விசாரிச்சாதான் தெரியிது அந்தப் பறவ செத்துப்போச்சாம். குமாருதான் காரணமாம்.

ஏங்க இத்தினி வருசமா குமாருதான பார்த்துகிட்டான். இப்படி ஒரு வாரத்துல கூட்டிட்டு போய் சாகடிச்சிட்டு குமார் மேல குத்தம் சொன்னா நியாயமான்னு கேட்டா...

ஆபத்தான பறவையை வைச்சிருந்தது முதல் குத்தம்.
அதுக்கு சோறு போட்டது ரெண்டாவது குத்தம்.
அதை வீட்டுல வச்சது அடுத்த குத்தம்னு அடுக்கிட்டே போறாங்க.

இதையெல்லாம் பார்த்த குமாருக்கு மூளை கலங்கிடுச்சி போல. அதிகாரிங்கட்ட போய்ட்டு அந்தப் பறவக்கு என்ன பேருன்னு கேட்கறான்.

அதுக்கு ஒர் அதிகாரி சொல்றாரு, "அது ஆபத்தான பறவை...." 

ஏங்க நீங்களே சொல்லுங்க அந்தப் பறவயா ஆபத்தானது?

#தயாஜி
#குறுங்கதை
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்