பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

கவிதை25 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை25 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிசம்பர் 02, 2025

- கல் கடவுள் காசு -


கல்லைக்
கடவுளாக்கத் தெரிந்தவன்
பக்தன்

கடவுளைக்
கல்லாக்கத் தெரிந்தவன்
அரசியல்வாதி

கல்லையும் கடவுளையும்
காசாக்கத் தெரிந்தவன்
வியாபாரி

மூவரும்
தனித்தனியாய்
இருந்தால் மட்டுமே
நமக்கு அடையாளம் தெரியும்....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


அக்டோபர் 05, 2025

- உங்களில் யாரும் -


மன்னிக்கவும்

இன்னும்
அவ்வளவு தூரத்திற்கு
என்னால் வரமுடியாது

உங்களில் யாரும்

என் துயரங்களைத்
தூக்கிச் செல்லுங்களேன்

நான் கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக்
கொள்கிறேன்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

அக்டோபர் 04, 2025

- சாத்தானின் கன்னுக்குட்டி -


கடவுளால் மட்டுமே
காப்பாற்ற முடிந்த
இடத்திற்கு
எங்களைத்
தள்ளிவிடுகிறீர்கள்

நாங்கள்
கடவுளின்
செல்லப்பிள்ளையாகவும்
மாறுவோம்

சாத்தானின்
கன்னுக்குட்டியாகவும்
மாறுவோம்

அக்டோபர் 01, 2025

- கரையறியா கண்ணீர் -


யாரோ ஒருவரின்
முன்னால் அமர்ந்து
உங்களால்
இப்படி அழமுடிகிறதே
அது போதாதா

இங்கு
அழவும் முடியாதவர்களே
அதிகம்

குறைந்தபட்சம்
அவர்களால்
சேர்ந்தும் சேர்த்தும்
வாழ முடிந்தது
அந்தக் கண்ணீரைத்தான்

ஒருபோதும் அது
கண்களை விட்டு
தவறியும்
வழிந்தது இல்லை
அதற்கான
வழி
அறிந்ததும் இல்லை

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

செப்டம்பர் 11, 2025

- ஊழல் வினை -


ஊழல்வாதிகளுக்கு
எடுக்கவும் பதுக்கவும் தெரிகிறது
அனுபவிக்க வாய்ப்பதில்லை...

உணர்ந்த மக்களுக்கு
எதிர்க்கவும் எரிக்கவும் வாய்க்கிறது
பயன்படுத்த தெரிவதில்லை....

செப்டம்பர் 10, 2025

- ஊமைகள் -


ஆமையோட்டில்
அழகாய்
வரைந்து கொடுக்கிறார்கள்
ஓவியங்களை

வரைந்தவர்களுக்கும்
வாங்கியவர்களுக்கும்
அது
மகிழ்ச்சி
கொண்டாட்டம்
கௌரவம்
அடையாளம்
நினைவுச்சின்னம்

சுமந்து கொண்டிருக்கும்
ஆமைகளுக்கு

அது
நிகழ்கால சுமை
வருங்கால ஊனம்
நிரந்தர துயரம்....

செப்டம்பர் 09, 2025

- அதிலொரு ஆனந்தம் -


எங்களைப் பேச
சொல்லாதீர்கள்
எங்களைச் சிரிக்க
சொல்லாதீர்கள்
எங்களைச் சிந்திக்க
சொல்லாதீர்கள்
எங்களை எழுத
சொல்லாதீர்கள்

பின்னர்
நீங்களே எங்களைக்
கொன்றுவிடுவீர்கள்

அதிலொரு ஆனந்தம்
உங்களுக்கு....

செப்டம்பர் 08, 2025

- எதற்கு வேண்டும் கவிதை ? -


கவிதை எழுத
இனி கஷ்டப்பட
தேவையில்லை...

எதை
எழுதி கொடுத்தாலும்
கவிதை என
விற்றுவிடுகிறார்கள்...

நல்ல கேமரா காட்சி
ரம்யமான பின்னணி இசை
சிரித்தபடி பேசும் முகம்...

மற்றபடி
கவிதை புத்தகங்கள்
விற்க
எதற்கு வேண்டும்
கவிதை...

செப்டம்பர் 07, 2025

- ருசிக்கும் உதிரம் -



முட்களைத் தின்னும்
ஒட்டகத்திற்கு
வாயில் ருசிப்பது
தன் உதிரம்தான் என
தெரியாது சுவைப்பது
போலத்தான் இங்கு

தீவிர இலக்கியவாதிகளின்
நண்பர்கள்

சம்பந்தமே இல்லாமல்
அவர்களும் தீவிர
இலக்கியவாதிகள் போல
நடமாடுகின்றார்கள்

இக்கவிதையில்
சம்பந்தமே இல்லாமல்
வந்த ஒட்டகமும்
அதன் உதிர ருசியும் போல...

ஆகஸ்ட் 22, 2025

முத்தம் பார்க்கின் குற்றம் காணாதே


உதட்டில் போதையை

வைத்துக்கொண்டு

இன்னொரு முத்தத்தை

தடுமாறாமல் கொடுக்கச்

சொல்லி

ஏன்

வன்முறை செய்கிறாய்


வாய்க்கும் வசதிக்கும்

தகுந்தபடி

கொடுத்துவிட்டு போகிறேன்


முத்தம் பார்க்கின்

குற்றம் காணாதே


#தயாஜி

ஆகஸ்ட் 18, 2025

அல்பம்


எவ்வளவோ 

பொய்கள் சொல்லியிருக்கலாம்

எவ்வளவோ 

நாம் ஏமாற்றியுமிருக்கலாம்


அல்பம் 

ஒரு மிட்டாயை 

திருட்டுத்தனமாய்

வாயில் போட்டு

சாப்பிட முடியவில்லை


உச்சிமுடியைப்

பிடித்து இழுத்து

வாயைத் தானாய்த் 

திறக்கவைத்து

மிட்டாயைக் கண்டுபிடித்து


அவள் பங்கை 

கடித்தெடித்து

மிச்சத்தை என் வாயிலேயே  போட்டுவிடுகிறாள் 

பொம்மி

அந்த 

அல்ப மிட்டாய்

அற்புதமாய் ருசிக்கிறது...


#பொம்மி #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்