ஆகஸ்ட் 15, 2026
மே 27, 2026
- கவிதையைச் சுமப்பவர்கள் -
மூடாத
ஜன்னல் ஓரத்தில்
அமர்ந்தபடி
கவிதை எழுதுகிறவன் நான்
என் வீட்டில்
எழுதுவதற்கென
கொடுக்கப்பட்ட மாளிகைவாசல்
அதுதான்
சாலையோர மனிதர்களில்
ஒருசிலரையாவது
எனக்கு
கொஞ்சம் தெரியும்
கவிதை வராத நாட்களில்
போவோர் வருவோர்
முகங்களில்
ஏதாவது தட்டுப்படுகிறதா என
பார்ப்பதுதான்
என்
பொழுது போக்கு
எழுதி முடித்த கவிதைகளின்
கடைசி வரிகளை
அழித்துவிடுகிறேன்
அவற்றை
காற்றில் பறக்கவிடுகிறேன்
ஜன்னலின் வழி
அவை
பறந்திறங்கும் போது
பறவைகளில் நிழலைப்
போலிருக்கும்
விலாசமற்ற வாசலைத் தேடி
கண்டடையும்
தபால்காரன் போல
கடைசி வரிக்கு
ஏற்ற யாரோ ஒருவரை
அந்தக் கவிதைகள்
தேடி தவழ்கின்றன
என் கவிதைக்கான
கடைசி வரியை
நீண்ட காலமாக
சுமந்தபடி வாழும்
யாரோ ஒருவர்
இந்த வழியே
எப்போதாவது
வராமலா போய்விடுவார்...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
மே 16, 2026
- பசிக்கும் வயிறுகள் -
முழுதும்
நனைவதற்கு முன்
இறகில் ஈரம் ஏற்றிய
பாரத்தோடு
பசித்த வயிற்றுடன்
எம்பி எம்பி
எப்படியோ பறந்த
பட்டாம்பூச்சியொன்று
சுவரோரம் வந்து
ஈரம் காயவும்
மழை மறையவும்
காத்திருக்கிறது
எங்கிருந்தோ
வீசி வந்த
நாக்கொன்றின் நுனி பட்டு
பல்லியின் வாய்க்குள்
நுழைகிறது
ஈரம் காய
பல்லிக்கும் பொறுமையில்லை
ஈரம் காய
பட்டாம்பூச்சிக்கும் வாய்க்கவில்லை
மே 09, 2026
- சமாதானம் செய்வேன் -
அழுவதைக் கண்டேன்
இடது பக்க
கன்னத்தில் வழிந்த கண்ணீர்
கழுத்தில் இறங்கி
ஆடைக்குள்ளே மறைகிறது
எந்தத் தடையுமில்லாமல்
நீண்ட நதியாய்
வழியும்
கண்ணீரைக் கண்டதும்
எனக்கும் அழத் தோன்றியது
நான் அப்படித்தானே
யாராவது அழுதால்
நானுமே சேர்ந்து கொள்வேன்
பழகிவிட்டது
அழுவதில் நான்
அந்தப் பெண் போல
தேர்ச்சி பெற்றவன்
அல்ல போலும்
அழ தொடங்கிய
ஐந்தாவது வினாடியில்
மூக்கில் சளி உருவாகிவிடும்
மூக்கை உறிஞ்சியபடியே
அழுவேன்
என்
மூக்குறிஞ்ச சத்தத்தை
அந்தப் பெண்
கண்டுகொண்டாள்
என்னைத் திரும்பி பார்த்து
அவளது கண்ணீரைத்
துடைத்தபடி
"ஒன்னுமில்ல ஒன்னுமில்ல..."
என
மெல்லிய குரலில்
சொல்லியபடி
கொஞ்சமாய்ச் சிரிக்க முயன்றாள்
அழுத கண்கள்
இன்னுமே கலங்கியபடி இருக்க
எனக்காக சிரித்து
என்னை சமாதானம் செய்யும்
அவளை
நான் எப்படி
சமாதானம் செய்வேன்...
மே 03, 2026
மே 02, 2026
ஏப்ரல் 30, 2026
ஏப்ரல் 29, 2026
ஏப்ரல் 27, 2026
- பிரபஞ்ச சமையல் -
என்ன சாப்பிடலாம்
என்பதும்
இன்று
என்ன சமைக்கலாம்
என்பதும்
ஒரே இலக்கை
அடையக்கூடிய
இருவேறு செயல்கள் அவ்வளவே
நாம் சாப்பிடுவதை
மட்டுமே
உயிர்வாழ உகந்ததாக
பார்த்து கொண்டிருக்கிறோம்
- வீழ்ச்சியின் எழுச்சி -
நீள அகலத்தில்
என்ன இருக்கிறது
தள்ளி நிற்காமல்
சட்டென குதித்து
நனைந்து
குளிர்ச்சியைக் கொண்டாட
வேண்டாமா
குதிப்பதற்கும்
குளிர்வதற்கும்
பயம் கொண்டால்
நீர்வீழ்ச்சிகள் எதற்கு
வீட்டுக்குழாயே போதாதா
நனைந்து கொள்ள....
ஏப்ரல் 26, 2026
ஏப்ரல் 25, 2026
- முதல் பரிசு -
குழந்தைகளுக்கான
ஓவியப்போட்டியில்
விதிமுறைகளுக்கு உட்பட்டு
பெற்றோரின் கண்காணிப்பில்
வண்ணம் தீட்டிய
குழந்தைக்கு
முதல் பரிசு கிடைத்தது
தன்
கை போன
போக்கில்
வண்ணங்களை அலையவிட்டு
பரிசு நிராகரிக்கப்பட்ட
குழந்தையின்
ஓவியம்
அவள் வீட்டில்
அழகான சட்டகத்தில்
தேதி நாள் விபரங்கள்
அறிவித்தபடி
அந்தக் குழந்தையைப் போலவே
அங்கும் இங்கும்
குதித்து விளையாடி கொண்டிருக்கிறது
அது
அந்தக் குழந்தைக்கு
ஒவ்வொருநாளும்
பரிசு கொடுத்தபடி
இருக்கிறது...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
ஏப்ரல் 24, 2026
- கருணைக்கரம்-
ஆகக்கடைசியாக
என் மீது
கருணை கொண்ட
இரு கரங்களைச்
சந்தித்தேன்
இறுக்கமாய்ப் பற்றினேன்
அணைத்தேன்
ஆசுவாசம் கொண்டேன்
இத்தனை நாட்களாய்
அவை
எனது வலப்பக்கத்திலும்
இடப்பக்கத்திலுமே
இருந்திருக்கின்றன....
ஏப்ரல் 22, 2026
- வலைக்குள் குழு -
சர்க்கஸ் வலை
அவிழ்ந்து விழுந்தது
சரி செய்வதற்குள்
உள்ளிருந்த
புலிகளில் ஒன்று
சட்டென தாவி
பார்வையாளர்கள் மத்தியில்
குதித்தது
யாருக்கும்
என்ன செய்வதென புரியவில்லை
அலறல் சத்தங்களுடன்
அங்கும் இங்கும்
ஓடத்தொடங்கினர்
எல்லோரும் தன்னைவிட்டு
ஓடுவதைப் பார்த்த
புலிக்கு மிகுந்த ஏமாற்றம்
அதற்கும்
அடுத்தென்ன என்பது
புரியவில்லை
சர்க்கஸ் வலைக்கே
திரும்பலாம் என்றது
வலைக்குள் இருந்த
புலிகளில் ஒன்று
அதன் பயிற்சியாளரைப்
பாதி தின்றுவிட்டிருந்தது
எங்கிருந்தோ வெடித்த
துப்பாக்கி தோட்டா
வலைக்கு வெளியில்
திகைத்து நின்ற புலியை
முதலில் துளைத்தது
வலைக்குள் குழுக்குள்ளும்
இருக்கும்வரை
எல்லோருக்குமே
பாதுகாப்புதான் போல...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
ஏப்ரல் 20, 2026
- விரல் முளைத்த இலை -
உள்ளங்கை நிறம் கொண்ட
ஏதோ ஒரு
மரத்தின் இலையை
இன்று கண்டேன்
உதிர்ந்த இலையா
என் உஷ்ணத்தை
உணர்ந்த இலையா என
பிடிபடவில்லை
இந்த நெடுஞ்சாலையில்
இன்னும்
சூரியனே முழுதாய் விழிக்காத
நேரத்தில்
என்னிடம் ஏன் வந்ததென
தெரியவில்லை
அதற்கும்
விரல் முளைக்கும் ஆசை
வந்திருக்க வேண்டும்
உள்ளங்கையில் அது
என் விரல்களைக் கொஞ்சநேரம்
தனதாக்கி கொண்டது
விரலாசை இன்று
நிறைவேறிய பின்பு
அணில் குஞ்சு போல
வலிக்காது பிடித்து
மெல்ல மெல்ல நடந்து
அருகிலிருந்த
மரத்தின் அடியில்
இறக்கிவைத்தேன்
முத்த ஈரத்தை விரலிடுக்களில்
விட்டுவிட்டு
சட்டென துள்ளி குதித்து
மரத்தில் ஏறி
காய்ந்திருந்த கிளையில்
ஒட்டி
துளிர்க்கத் தொடங்கியது
தன் வாலை
மெல்ல அசைத்து
என்னையும் வழியனுப்பியது...