தீரா காதல்
ஒரு நீண்ட கவிதை
- பிரபலமற்ற வாசகன் -
உங்கள் புத்தகங்கள்
பிரபலமானவர்கள்
கைகளில் இருக்க வேண்டும்.
உங்கள் புத்தகங்களைப் பிரபலமானவர்கள்
பேச வேண்டும்.
உங்கள் புத்தகங்களுடன்
பிரபலமானவர்கள் படம் பிடிக்க வேண்டும்.
உங்கள் புத்தகங்களுக்கு
பிரபலமானவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
உங்கள் புத்தகங்களை
பிரபலமானவர்கள் இரசித்து லயிக்க வேண்டும்.
உங்கள் புத்தகங்களைவிடவும்
பிரபலமானவர்களே உங்களுடன் நிற்க வேண்டும்.
சரிதான்
ஆனால்
உங்கள் புத்தகங்களை
வாங்குவதற்கு மட்டும்
ஏன்
வாசகனை அழைக்கின்றீர்கள்
நீங்கள்
உங்கள் புத்தகங்களை
பிரபலமானவர்களுக்கு
அன்பளிப்பாக கொடுத்துவிடுவதாலா?
பரவாயில்லை
வாசகனுக்கு ஒருபோதும்
பிரபலமும் தேவைப்படாது
பிறர் பலமும் தேவைப்படாது...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
ஆச்சரியங்களைப் பார்த்து
ஆச்சரியப்படாமல் இருப்பதுதான்
இப்போதெல்லாம்
ஆச்சரியமாகத் தெரிகிறது !
வயதாகிவிட்டதா?
இல்லை
பார்த்திருந்த
ஆச்சரியங்கள் எல்லாம்
வலியாகிவிட்டதால்...
#தயாஜி
அவர்களின்
எல்லா கேள்விகளுக்கும்
நாம் பதில் சொல்கிறோம்
அவர்களின்
எல்லா செயல்களுக்கும்
நாம் பதில் சொல்கிறோம்
அவர்களின்
எல்லா வாக்குறுதிகளுக்கும்
நாம் பதில் சொல்கிறோம்
அவர்களின்
தோற்கும் தருவாயில்
" உன் மாத சம்பளம் எவ்வளவு? "
என கேட்கிறார்கள்
நம்மால்
பதில் சொல்ல முடிவதில்லை
நாம் தோற்கிறோமாம்.
அவர்கள் ஜெயிக்கிறார்களாம்.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
ஒரு கொலையை நியாயப்படுத்த
அந்தப் பிணத்திற்கு
மதத்தின் அடையாளத்தையோ
இனத்தின் அடையாளத்தையோ
ஜாதியின் அடையாளத்தையோ
மொழியின் அடையாளத்தையோ
சொல்லிவிட்டால் போதும்
என்கிற மனநிலைக்கு
மெல்ல மெல்ல
நம்மை நகர்த்தி
தோழமையோடு தள்ளிவிட்டு
நம்மையும் நம்ப வைத்துவிடுகிறார்கள்...
#தயாஜி
உன்னோடு பேசுவதற்கு
என்
எல்லா வார்த்தைகளும்
ஏங்குகின்றன
எம்பி குதிக்கின்றன
நீ சொன்ன
ஒற்றைச் சொல்லின்
போதாமையால்
அவை
தினம் தினம்
மௌனத்தற்கொலை
செய்கின்றன
நான் ஒருவனே
அந்த மரணங்களுக்கு
ஓசையற்ற ஓலம்
உன் பேரிரைச்சல்
என்றாவது ஒரு நாள்
என் நிசப்தத்தின்
வெறுமைக்கு முன்
மண்டியிடும்
தலைவணங்கும்....
உனக்கு என்ன வேண்டும்
உனக்கு என்னதான் வேண்டும்
என என்னை
எண்ண வைக்கிறாயே
சொல்லேன் உனக்கு
எது வேண்டும்
என்னதான் வேண்டும்
என்னிடமிருந்து உறவா
என்றைக்கும் சேரா பிரிவா
என்னதான் முடிவுடன்
நீ என்னுடன் நெருங்குகின்றாய்
என்னதான் எதிர்ப்பார்க்கிறாய்
நாள் முழுக்கப் பேசுகிறாய்
நாள் முழுக்க மௌனத்தில் நிலைக்கிறாய்
திடீரென ஒருநாள்
நம்மால் இனியெப்போதும்
சேர முடியாது என்கிறாய்
அடுத்த நாளே
நானின்றி வாழ முடியாதெனவும்
அழுகிறாய்
புலனச்செய்திகளில் வெறும் புள்ளிகளாகவே பதிலிடுகிறாய்
ஒரு முறையே பார்க்கும்படி
உன் புன்னகையை அனுப்பி மறைக்கிறாய்
என்னிடம் சேமிக்க எதையுமே கொடுக்காமல்
என்னிடமிருந்து எதைத்தான் நீ கேட்கிறாய்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்
- சேராவரம்போல்
இங்கு எல்லார்க்குள்ளுமே
ஒரு காதல் கதை உண்டு
இங்கு எல்லோருக்குமே
ஒரு காதல் தோல்வி உண்டு
இங்கு யாரோ ஒருவர்தான்
காதலில் வெற்றியடைகிறார்
ஆனால் ஏனோ
எல்லா தேசத்திலும்
தோல்வியடைந்த காதல் கதைகள்
மட்டுமே
காலத்திற்கும் உயிர்ப்போடு இருக்கின்றன
சாகாவரம்போல் சோகமும் இருப்பதில்லை
சேராவரம்போல தீரா காதலும் மரிப்பதில்லை
அது சிரஞ்சீவிய காமம்.....
#தயாஜி
என்னிடம்
பழைய முகம் ஒன்று
கொஞ்ச காலமாக
இருக்கிறது
என்றாவது ஒரு நாள்
தேவையிருப்பின்
கொஞ்சமாய்
எடுத்துப் பார்த்துக்கொள்வேன்
பின் மீண்டும் பத்திரப்படுத்திக்
கொள்வேன்
மனம் கொஞ்சம் ஆசுவாசமாகும்
குறிப்பாக
எப்போதெல்லாம் கண்களை மீறி
கண்ணீர் வருகிறதோ
அப்போதெல்லாம்
அந்த முகம்தான் ஒரே ஆறுதல்
எத்தனையோ முறை
காயப்பட்டவனின்
முகம் அது
ஆனாலும் மீண்டும் மீண்டும்
வலி தாங்கவே விரும்புகிறது
என்ன செய்ய
அன்பென்பது அன்பாகவே அமைவதுமில்லை
நட்பெண்பது நட்பாகவே
அமைவதுமில்லை
ஒருவேளை உங்களுக்கு
அப்படியொன்று அமைந்துவிட்டால்
உண்மையில் நீங்கள்
கொடுத்து வைத்தவர்கள்
உங்களுக்கு கூடுதல் முகங்கள்
தேவைப்படாது....
பரவாயில்லை
#தயாஜி
சந்திக்கின்றோம்
நாம் சந்திக்கின்றோம்
மீண்டும் நாம் சந்திக்கின்றோம்
பலநூறு ஆண்டுகளுக்கு
ஒருமுறை
இங்கு மீண்டும் நாம் சந்திக்கின்றோம்
ஆனாலும் அத்தனையும்
நேற்று போல
இன்று போல
இப்பொழுது போல
இந்நொடி போல
அத்தனையும் நெருக்கமாக இருக்கிறது
அத்தனை நெருக்கமாக அணைக்கிறது
நீ அதே காதலோடுதான்
இருக்கிறாயா
நீ இன்னமும் அதே காதலோடுதான் இருக்கிறாயா
சொல்
உன் பதிலில்தான்
என் பதிலையும் வைக்க
நினைக்கிறேன்
எல்லையற்ற மணற்படுக்கையில்
என்னை நானே புதைத்துக் கொள்கிறேன்
காணா தூரம் நீ
செல்வதற்கு முன்பாக
வாயேன்
என்னுடன்
கொஞ்ச நேரம்
புதைந்து கொள்வோம்
ஜென்ம ஜென்மமாய்ப்
பிரிவதற்கே சந்திக்கும்
சாபம் பெற்றவர்கள் நாம்
நம்மால் வேறென்ன செய்ய முடியும்
#தயாஜி
இன்றோடு முடிந்தது
என்று அறிவித்து
நடந்தார்கள்
அடுக்கி வைத்தவற்றை
எடுத்து வைக்க
நேரம் இருக்கிறது
உதவிக்கு ஆட்களும்
இருக்கிறார்கள்
கணக்கு வழக்குகளை
எல்லாம்
தனித்தனியாய்ப் பார்த்துக்கொள்வார்கள்
யாருக்கும் எந்தச்
சிக்கலும் இல்லை
நான் மட்டும் ஏனோ
தனியே அமர்ந்திருக்கின்றேன்
இல்லை
இதுவரை விற்ற புத்தகங்களின்
நினைவில் அமர்ந்திருக்கின்றேன்
இதுநாள்வரை
இங்கிருந்தவை இனி
எங்கெங்கோ செல்லப்போகின்றன
புதிய ஸ்பரிசங்களை
அனுபவிக்கப்போகின்றன
ஏதோ ஓர் உள்ளங்கை வியர்வையில் வெட்கப்படப்போகின்றன
நிச்சயம் யாரோ
ஒருவரைத் தாலாட்டப்போகின்றன
யாரோ ஒருவரின் துக்கத்தைக் கெடுக்கப்போகின்றன
எல்லாவற்றையும்
தாங்கதான் வேண்டியுள்ளது
உங்களிடம் மன்றாடியொன்றைக் கேட்கிறேன்
புத்தகங்களை கவனமாகக் கையாளுங்கள் நண்பர்களே
அதுவும் எங்களுக்கு குழந்தைகளே....
நீண்ட நாட்களுக்கு பிறகு
நாங்கள் சந்தித்தோம்
உணவருந்தினோம்
பேசினோம்
எங்கள் இருவரில்
யார் சொன்னாரோ தெரியவில்லை
சட்டென ஒரு வார்த்தை
எங்கள் இருவரின்
காதிலும் ஒரே நேரத்தில்
விழுந்தது
நாங்கள் அதிர்ச்சியானோம்
அந்த வார்த்தை
மெல்ல மெல்ல
கீழிறங்கி இதயம் வரை
எட்டிப்பார்த்தது
அது எங்களுக்கு நாங்களே
சொல்லிக்கொள்ளும்
வார்த்தையாகவே
தன்னைக் கற்பிதம் செய்தது
எங்கள் உரையாடல் நின்றது
வாயிலிருந்து வெளிவரவேண்டிய
வார்த்தைகளையும் கேள்விகளையும்
எங்களுக்குள் நாங்கள்
அனுப்பிக்கொண்டோம்
அது எங்களுக்கான
உரையாடலாய் மாறி
இன்னொரு பரிணாமம்
அடைய முற்பட்டது
நாங்கள்
மீண்டும் ஒருவரையொருவர்
பார்க்கலானோம்
மீண்டும் அந்த வார்த்தைகள்
எங்கிருந்தோ வந்தன..
"இங்கு யாருக்கும் எதுவும் தெரியாமலில்லை...
அவரவர் தேவைக்கு ஏற்றார்போலவே அவரவர் பழக்கத்தை வைத்துக்கொள்கிறார்கள்.... அவர்களுக்காக வருத்தப்பட என்ன இருக்கிறது...
நீ உன் வேலையை செய்தாலே போதும்.. நீ அதற்காகப் பிறந்தவன் தானே அதை மட்டும் செய்.... அவரவர்க்கு தெளிவு பிறப்பின் அவர்கள் தானாய் வருவார்கள்..
வழி அறிவார்கள்.."
அந்த அசரீரி
எங்கிருந்து வந்ததென
தெரியவில்லை
ஆனால் அது
எங்குச் செல்லவேண்டுமென
தெரிகிறது....