பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் தொடக்க மாநாடு 2024
பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் தொடக்க மாநாடு 2024, ஈப்போவில் (21/7/24) சிறப்பாக நடைபெற்றது. ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் ஏற்பாட்டிலும் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தோழமையிலும் இம்மாநாடு நடந்தது.
இம்மாநாட்டிற்கு நானும் இளம் எழுத்தாளர் பிருத்வியும் அறிவிப்பாளர்களாகச் சென்றிருந்தோம்.
இம்மாநாட்டிற்கு 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்னும் இலக்கிய உரை வழங்க தமிழ்நாட்டில் இருந்து 'கல்விக் கடவுள் காமராச அறக்கட்டளை நிறுவனரும் காமராசரின் பேத்தியுமான திருமதி T.S.K மயூரி கண்ணன் M.A வந்திருந்தார்.
18 பிரமுகர்களுக்கு தக்கார் சிறப்பு செய்யப்பட்டது. நம் நாட்டில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
புத்தகக்கண்காட்சியும் நடைபெற்றது. அரங்கம் முழுக்க அறிந்த எழுத்தாளர்கள் புதிய/இளம் எழுத்தாளர்களும் நிறைந்திருந்தார்கள்.
சிறுகதைக் களஞ்சியத்தில் என்னுடன் அறிவிப்பாளராக வந்திருக்கும் ஆசிரியரும் இளம் எழுத்தாளருமான பிருத்வியின் சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.
மாநாட்டு சிறப்பு மலரில் 'இளையோர் எழுதட்டும் இலக்கியம் வளரட்டும்' என்ற தலைப்பில் திரு.எம்.ஏ.அலி ஒரு கட்டுரையையும், 'எழுத்தாளர்களின் ஆக்கத்திறனில் செயற்கை நுண்ணறிவின் பங்கும் அதன் தாக்கமும்' என்ற தலைப்பில் முனைவர் க.உதயகிமாரும், 'விமர்சனங்கள் யாருக்காக?' என்ற தலைப்பில் நானும் ஒரு கட்டுரையை எழுதியுள்ளோம்.
ஒருமைப்பாடு துறை துணை அமைச்சர் மாண்புமிகு சரஸ்வதி கந்தசாமி தன் உரையில், தன் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நூலகத்தின் ஏற்பாட்டில் இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தவுள்ளதாகக் கூறினார்.
இம்மாநாடு அந்த எண்ணத்திற்கு காரணமாக அமைந்ததையும் கூறியவர், அப்போட்டிக்கான பரிசு தொகை விபரங்களையும் பேசினார். இப்போட்டி இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அமையவும் புதிய எழுத்தாளர்களுக்கு நல்லதொரு தொடக்கமாக அமையவும் வாழ்த்துவோம்;எதிர்ப்பார்ப்போம்.
கையில் கிடைத்த மூன்று தொகுதிகள் கொண்ட சிறுகதைக் களஞ்சியத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. மலேசியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்கள் இதில் பங்கெடுத்துள்ளார்கள். நம் நாட்டின் மூத்த படைப்பாளிகளில் இருந்து இளம் படைப்பாளிகள், மாணவர்களின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னணியில் பெரிய உழைப்பு அடங்கியுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எனக்கு இந்தக் களஞ்சியம் குறித்து பேசவும் எழுதவும் சில கருத்துகளும் விமர்சனங்களும் உள்ளன. வாய்ப்பிருப்பின் விரைவில் அதுபற்றி எழுதுகிறேன்.
ஒரே இடத்தில் அறிந்த எழுத்தாளர்களையும் இளம்/புதிய எழுத்தாளர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. அறிவிப்பாளராக இருந்ததால் பலருடன் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஆனால் அடுத்தடுத்து எழுதுவதற்கான பல கதைகள் அங்கு கிடைத்தன.
இம்மாநாட்டிற்கு அறிவிப்பாளராகும் வாய்ப்பைக் கொடுத்தமைக்கு கவிரத்னா டாக்டர். அருள் ஆறுமுகம் அவர்களுக்கும் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்திற்கும் எனது அன்பும் நன்றியும்.
(அதிகம் எழுதவேண்டியுள்ளன; முதற்கட்டமாக இப்பதிவு இருக்கட்டும்💙)
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம் #சிறகுகளின்_கதை_நேரம்
0 comments:
கருத்துரையிடுக