பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 28, 2023

🙏எழுத்தாளர், ஆசிரியர் இராஜேஸ்கன்னி நினைவாக... 🙏

 


காலை, தம்பி பிருத்வி அழைத்திருந்தார். ஆசிரியை இராஜேஸ்கன்னி காலமாகிவிட்டதைக் கூறினார். இன்று என் முதல் தொலைபேசி அழைப்பு அதுதான். செய்தி கேட்டதிலிருந்து அதிக நேரம் என்னால் என் இயல்பு நாளுக்கு திரும்ப முடியவில்லை. பாராங்கல்லை சுமப்பது போல இதயம் கணக்கத்தொடங்கியது; அத்தனையும் ஆசிரியை இராஜேஸ்கன்னியின் நினைவுகள்தான்.

பல ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருப்பவர். நாளிதழ்கள் முதல் இதர ஊடகங்கள் வரை புனைப்பெயரிலும் தன் பெயரிலும் எழுதி வந்தவர். முகநூல் வழி அவருடன் எனது பழக்கும் இன்னும் நெருக்கமானது. என் கதைகளைக் குறித்து அவர் சொல்லும் கருத்துகளுக்கு நான் கொடுக்கும் பதில்கள் எங்கள் நட்பை இன்னும் அதிகமாக்கியது.

அதன் பின் ‘வெண்பலகை’ மூலம் எங்கள் பேச்சு இன்னும் ஆழமாகியது. இங்கும் அவர் ஆர்வமாக எழுதினார். கவிதைகள் மீது அவருக்குள்ள ஆர்வத்தை அறிந்த பின் சில கவிதைப்புத்தகங்களை அவருக்கு பரிந்துரைச் செய்தேன். அவரும் அவற்றை வாங்கி ஒவ்வொன்றையும் வாசிக்கும் போதெல்லாம் அது பற்றி என்னுடன் பேசலானார்.

‘வெண்பலகை’ சிறுகதை கலந்துரையாடலுக்கு அவர் அனுப்பிய சிறுகதைக் குறித்து பேசினேன். பின் தனிப்பட்ட முறையில் என்னை அழைத்து அச்சிறுகதையில் மேலும் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என ஒரு மாணவி போல கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். அதன் பின் ‘வெப்பம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி எனக்கு வாசிக்கக் கொடுத்தார். அதிலும் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என சொன்னதும் உடனே என்னை அழைத்தார்.

அவருடனான உரையாடலில் மேலும் பலவற்றைப் பேசலானோம். விரைவில் தானும் புத்தகம பதிப்பிக்க ஆவல் கொண்டிருப்பதைச் சொன்னார். இப்படியான  ஆசைகள் பலருக்கும் இருக்கிறதுதான். பணம் இருந்தால் யாரும் புத்தகம் போடலாம் என்கிற நிலைக்கு மெல்ல மெல்ல தள்ளுப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இராஜேஸ்கன்னி அதற்காக உழைக்க தயாராய் இருந்தார்.

குறிப்பாக தனது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு ஏதும் ஆலோசனை உண்டா எனவும் கேட்டார்.
உண்மையில் இப்படி கேட்பவர்களை எனக்கு எப்பவும் பிடிக்கும். தான் செய்ய வேண்டிய செயல் அல்லது தான் எழுதவுள்ள படைப்பு எப்படி இருக்க வேண்டும் என மற்றவருடன் கலந்து ஆலோசிப்பது ரொம்பவும் முக்கியம். அதுதான் நம்மை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும்.

நீரலைகளும் நினைவலைகளும் என்ற தலைப்பில் கடலை களமாகக் கொண்ட சிறுகதையை எழுதினார். பின்  வெப்பம் என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினார். நிலம், காற்று, ஆகாயம் என்ற கதைக்களத்தில் அடுத்த மூன்று கதைகளை எழுதிவிட்டால் பஞ்சபூதங்கள் பற்றியக் கதைகளாக அவை அமைந்துவிடும் என்றேன். உடனே அவர், அடுத்த கதை காற்றைப் பற்றித்தான் பாதி எழுதியுள்ளதாகச் சொன்னார். அவர் இதனை யோசிக்கவில்லையென்றும் ஆனால் நல்ல யோசனை என்றும் குறித்து கொண்டார்.

அவருக்கு கவிதைகள் மீதும் ஆர்வம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் முகநூலில் தொடர்ந்து கவிதைகளையே அதிகம் எழுதி வந்தார்.

ரொம்பவும் சமீபத்தில் நாங்கள் ஆரம்பித்த ‘குறுங்கதை எழுதும் வகுப்பில்’ ஆர்வமாக பங்கெடுத்தார். முதல் வகுப்பு முடிந்ததும் அவர் எனக்கு அனுப்பிய கருத்துகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
குறுங்கதைகளையும் எழுத அவர் ஆர்வமாக இருந்தார்.

அவர் பல சமயங்களில் அவர் காணாமல் போய்விடுவது வழக்கமானது. அது பற்றி விசாரித்தேன். உடல் நிலை குறித்தும் அதற்கான மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் பேசினார். நானும் அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்கு ஆளாகும் ஆள் என்பதால் இரு நோயாளிகளும் நோய்களையும் எப்படியெல்லாம் அதனிடமிருந்து தப்பிக்கின்றோம் எனவும் பேசி சிரித்திருக்கிறோம்.

வெறும் பெயருக்காகவும்; தனிப்பட்ட லாபக்கணக்கிலும் தங்களை எழுத்தாளர்கள்  என சொல்லிக்கொள்பவர்கள் மத்தியில் உண்மையாக தன்னை எழுத்தாளராக நிலைநிறுத்த தொடர்ந்து முயன்றவர். முயன்றவர் என்பதை விடவும் தொடர்ந்து எழுதியவர் என்றே சொல்ல வேண்டும்.

இவ்வளவு சீக்கிரத்தில் அவரின் காலம் முடிந்திருக்க வேண்டாம். ஆனால் ஏதாவது ஒரு வகையில் அவரின் எழுத்துகள் இங்கு வாழும் என அவரின் படைப்புகளை வாசித்தவன் என்கிற முறையும் நான் நம்புகின்றேன்.

இந்நேரத்தை பயன்படுத்தி இன்னொன்றையும் இங்கு பதிவு செய்ய நினைக்கிறேன். இதில் ஏதும் தவறு இருப்பின் சுட்டுங்கள்; திருத்திக்கொள்கிறேன்.

ஆசிரியைக்கு இரங்கல் தெரிவிக்கும் சில பதாகைகளைப் பார்க்க நேர்ந்தது. அதிலொன்று சிறு நெருடலைக் கொடுத்தது. அதனால் அதனை இவ்விடத்தில் சொல்கிறேன்.

ஒரு பதாகையில், ‘இயல் எழுத்தாளர், ஆசிரியர் இராஜேஸ்கன்னி ஆறுமுகம்’ என குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

அவர் இயல் எழுத்தாளரா? இயல் குழும எழுத்தாளரா? எது சரி எது பொருந்தும் என உங்களுக்கு தெரியாதா?
இயல் என்னும் அமைப்பு எப்போது தொடங்கியது? இராஜேஸ்கன்னி எப்போதிலிருந்து எழுதுகிறார்? என்று கூடவாக யாருக்கும் யோசிக்க நேரமில்லை.

இறந்தவர் மீது அதுவரை அவருக்கு ஒன்றுமே செய்யாத கட்சியொன்று தன் கட்சி கொடியை அவரின் உடலில் போர்த்தும் சினிமா காட்சியை இச்செயல் நினைக்க வைக்கிறது.

இது இத்தனை ஆண்டுகாலமாக எழுதிவந்த ஓர் எழுத்தாளரை தன் குறுகிய வட்டத்தில் நிற்க வைத்து அவமானப்படுத்துவது போல் ஆகாதா?

உங்களிடம் வரும் ஒவ்வொருவர் மீதும் நீங்கள் உங்கள் பிராண்டுகளைக் குத்துவீர்கள் என்றால்; அவர்கள் உயிரோடு இருக்கும் போதே உங்கள் ப்ராண்டின் பெயர் அவர்கள் பெயர் முன்னால் குறிப்பாக அவர்களை எழுத்தாளர் என அழைக்கும் முன்னமே உங்கள் பிராண்டை சொல்ல வேண்டும் என சொல்லிவிடுங்கள்.

எழுத்தாளரே தன்னை எங்கிருந்து வந்தேன் என சொல்வதுதானே எந்த பிராண்டுக்கும் மரியாதை. பிராண்டாக சென்று மற்றவர் உழைப்பின் முன்னே அமர்ந்து கொள்வது எவ்வளவு அவலம்.
உங்களுடன் பயணிப்பவர்களிடமும் இதையே நானும் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் செய்யும் செயல்கள்தான் நம்மை விளம்பரப்படுத்தவேண்டுமே தவிர நாம் நம்மை விளம்பரப்படுத்துவதையே செயலாக செய்யக்கூடாது என்பது எல்லோருக்குமே பொருந்தும்.

உங்கள் பிராண்ட் தெரியவேண்டும் என்றால் எழுத்தாளர் இராஜேஸ்கன்னி அவர்களின் படைப்புகளை உரியவரிடம் தொடர்பு கொண்டு வாங்கி அதனை நல்ல முறையில் செறிவாக்கம் செய்து புத்தகமாக வெளியிடுவதுதான். அப்படி செய்தால் அல்லது அப்படி செய்ய முற்பட்டாலே போதும் நீங்கள் எதை விளம்பரப்படுத்த நினைக்கிறீர்களோ அது தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொள்ளும். ஏனெனில் நீங்கள்; செயலில் இறங்கிவிட்டீர்கள்.

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம்  இல்லாது இதனை எழுத முயன்றுள்ளேன்.

தவறு இருப்பின் நீங்கள் யாரும் தாராளமாக சுட்டுலாம்.

அதே போல என் கேள்விகளில் நியாயம் இருப்பின் உங்கள் செயலில் மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். அல்லது அடுத்தும் இப்படியே செய்யுங்கள்; என்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

#தயாஜி


Related Posts:

  • இரு சூப்பர் ஸ்டார்கள் (இருவரும் என் பாதையை மாற்றியவர்கள் )ப்ளாஷ்பேக்: ரஜினி – சுஜாதா சந்திப்பு பாட்ஷா படம் வெளிவரவிருந்த சமயம்… எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு… Read More
  • என் கவிதையானவளே....அழகியான அழகியவள் அவள்கத்தாலக் கண்ணழகிகார்மேகப் பொட்டழகிஇல்லாத இடையழகிஇருக்கின்ற தொடையழகிசொல்லாத மொழியழகிசொக்கத்தங்க ஸ்பரிசழகிவற்றாத அன்பழகிவாடாத இதளழக… Read More
  • மின்னல் fm-ல் 2010எங்கள் (நமது)மின்னல் குடும்பம்........ .minnalfm.comeநம்ம குடும்பம் பெரிசுதான் போங்க....!!!நேற்று நான் படித்த புத்தகங்கள் என்னை இங்கே சேர்த்தது..இன்று… Read More
  • பிம்பங்கள்....அவளை அவ்வளவு சீக்கிரத்தில் நான் மறக்கவில்லை. எப்படி மறப்பது..? அவளால் ஏற்பட்ட வலிதான் இன்னமும் இருக்கிறதே. அதற்கான காரணக் காரியங்களைப் பற்றி இப்போ பேச… Read More
  • எப்படி வெல்வது...இங்கே வெளிச்சம்,தேவையானதால்....இருட்டு இல்லாமல் போய்விட்டது....இப்படித்தான்இங்கு பணம்தேவையானதால்என் குணம் நிராகரிக்கப்பட்டது......விழிகள் தோறும்வாசனை … Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்