- திறந்து மூடும் கதவு -
#குறுங்கதை 2021 - 16
- திறந்து மூடும் கதவு -
"இன்னமும் பயமா?"
என கேட்கும் போது, மேனேஜர் கண்களில் கோவம் இருந்தது.
"...."
ஸ்ரீயிடம் பதில் இருந்தது. ஆனால் சொல்லவில்லை. சொன்னாலும் கேட்கும் நிலையில் மேனேஜர் இல்லை.
"சொல்லுங்க ஸ்ரீ.. இன்னமும் பயப்படறீங்களா..? அதான் எல்லாத்தையும் விளக்கி சொல்லிட்டேன்ல. கூட்டிட்டு போயும் காட்டிட்டேன்"
"ஆனா சார்..."
"இத பாருங்க... அது தானியங்கி கதவு. சென்ஸார் இருக்கு... யாராச்சும் பக்கத்துல வந்த கதவு தானா திறந்து தானா மூடிக்கும். இதுக்கு போய்டு பேய் பிசாசுன்னு பயப்படறீங்க... இனிமேல் இந்த மாதிரி கதவுங்கதான் எல்லா இடங்களிலும் வரப்போகுது..."
"ஆனா சார், நேத்து ராத்திரி அங்க யாருமே இல்ல. நான் லிப்டுக்கு காத்திருந்தேன். அந்த கதவு தானா திறந்து தானா மூடியது....."
" நீங்களாம் ஒரு டெக்னிஷன்... இங்க பாருங்க ஸ்ரீ.. அந்த கதவுக்கு பக்கத்துல சென்ஸார் இருக்கு... அது மனுசங்க வந்தா மட்டுமில்ல சிட்டுக்குருவிங்க வந்தாலும் சென்ஸார் எடுத்து கதவை தானா திறந்து
தானா மூடியிருக்கும். "
"ஆனா சார் என் கண்ணுக்கு சிட்டுக்குருவி தெரியல..."
" அது உங்க கண்ணோட பிரச்சனை. கதவோட பிரச்சனை இல்ல..."
ஸ்ரீ மேற்கொண்டு பேசவில்லை. ஸ்ரீயை வழக்கம் போல மேலும் மட்டம்தட்ட நினைத்த மேனேஜர்,
"நீங்க பயந்துகிட்டே இருங்க.. இப்ப ராத்திரி ஷிப்டுக்கு நான் போறேன்.." எழுந்த மேனேஜர் பதிமூன்றாவது மாடிக்குச் சென்றார்.
ஸ்ரீ வேலை தெரிந்த டெக்னிஷன் தான். தானியங்கி கதவு பற்றி தெரியாதவன் அல்ல. ஆனால் இன்னும் மின்சார இணைப்பை கொடுக்காத கதவு இரண்டு நாட்களாக நள்ளிரவுக்கு திறந்து திறந்து மூடுவது பற்றிய அவனது பயத்தை மேனேஜர் காது கொடுத்துக் கேட்கவில்லை. போவதற்கு முன்பாவது முழுமையாக கேட்டிருக்கலாம்.
0 comments:
கருத்துரையிடுக