- கத்தும் கிளிகள் -
#குறுங்கதை 2021 - 22
"காப்பாத்துங்க.... காப்பாத்துங்க..."
முனகல் சத்தம் பக்கத்து வீட்டுக்காரரை பதறச்செய்தது. ஏதோ ஒரு பெண்ணின் குரல். உயிருக்கு பயந்து கெஞ்சும் பலவீனமானக் குரல். என்ன செய்யலாம். யோசிக்கலானார்.
தாமதமின்றி சிலரை அழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டு வாசலில் நிற்கலானார். வீட்டில் உள்ளவர்களை அழைக்கவும் செய்தார்.
உள்ளிருந்து வெளியில் வந்த குமாருக்கு ஒன்றும் புரியவில்லை. தான் மாட்டிக்கொண்டதாக நினைத்தார். எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
'என்ன?' என்பதாக தலையை ஆட்டினார்.
"சார் உங்க வீட்டுல இருந்து ஒரு பொண்ணு அழற சத்தம் கேட்குது... என்ன நடக்குது...?, நீங்க இங்க வந்து ஒரு மாசம் கூட ஆகல... அதுக்குள்ள என்ன இதெல்லாம்...?"
"பொண்ணு அழற சத்தமா? என் வீட்டுல இருந்தா..?"
"பின்ன யார் வீடு?..யாரோ ஒரு பொண்ணு காப்பாத்துங்க.. காப்பாத்துங்கனு கத்தற சத்தம் கேட்குது.... யாருன்னு எங்களுக்குத் தெரியனும். இல்லைன்னா போலிஸை கூப்டுவோம்.."
"இப்ப என்ன உங்களுக்கு? அந்த பெண்ணை பாக்கனும் அவ்வளவுதான...?"
சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் சென்றார். கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்தார். அவருடன் 'காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..' என முனகிக்கொண்டே ஒரு கிளியும் கூண்டுடன் வந்தது. பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் பயம் காட்டுவதாகவும் அந்தக் கிளி இருந்தது.
"சார் இது இந்த கிளியோட சத்தம் சார்... கூண்டை திறந்துவிட சொல்லுது.. பத்து வருசமா வளர்த்துகிட்டு இருக்கேன்.."
வந்திருந்தவர்கள் சிரிப்பதா அழுவதா எனத் தெரியாமல் அசடு வழிய அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராக கிளம்பினார்கள்.
அவர்களை நினைத்து சிரித்துக் கொண்டே கிளியுடன் வீட்டிற்குள் சென்றார் குமார். கதவை பூட்டினார். கிளியை அதற்குரிய இடத்தில் வைத்தார். அதற்கு ஒரு வெள்ளை எலியை தின்னக்கொடுத்தார்.
சமையல் அறைக்குச் சென்றார். கத்தியை எடுத்துக் கொண்டார். மறைவாக இருக்கும் கதவை திறந்தார். நடந்துக் கொண்டே
"நாக்கு இருந்தாதான காப்பாத்துங்கன்னு கத்துவ.....??"
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக