புத்தகவாசிப்பு_2021 ‘இடைவெளி’
புத்தகவாசிப்பு_2021 ‘இடைவெளி’
தலைப்பு
–‘இடைவெளி’
வகை
– நாவல்
எழுத்து
– எஸ்.சம்பத்
வெளியீடு
– டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகத்தை
வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)
மரணத்தை நாம் எப்படி எடுத்துக்
கொள்கிறோம், என்கிற கேள்விக்கு பல பதில்கள் உண்டு. தத்துவ பார்வையில், ஆன்மிக பார்வையில்,
என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் ஒரு சாமானியன்
அதனை எப்படி எதிர்க்கொள்கிறான் என்பதுதான் ‘இடைவெளி’
எஸ்.சம்பத்
அதிகம் எழுதிடவில்லை. சொல்லப்போனால் ‘இடைவெளி’ நாவலாக வெளி வந்ததைக்கூட அவர் பார்க்கவில்லை.
எழுத்தாளர் சி.மோகன் மூலம் கவனம் பெற பெற்றவர்களின் எஸ்.சம்பத்தும் ஒருவர். நன்றிக்குரிய
செயல். இல்லையென்றால் எஸ்.சம்பத் போன்ற படைப்பாளர்களை பலரும் காணாமல் இருந்திருப்பார்கள்.
இடைவெளி நாவலில் வரும் நாயகன், தினகரன்
உண்மையில் எஸ்.சம்பத்தின் இன்னொரு உருவகம் எனவும் சொல்கிறார்கள்.
நாவல் முழுக்க தினகரனின் மன ஓட்டமே முதன்மையாக
இருக்கிறது. சொல்லப்போனால் கதைச்சொல்லியையும் தினகரனையும் நம்மால் பிரித்துப் பார்க்க
முடியவில்லை. இரண்டும் பல இடங்களில் ஒரே குரலாக ஒலிக்கவும் செய்கிறது.
எல்லோரும் சாகத்தான் போகிறோம். ஆனால் ஏன்
சாவை கண்டு அஞ்சுகின்றோம். ஏன் எதையெதையோ சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கின்றோம்.
எத்தனை முரண்களுடன் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்
என்கிற கேள்வியை எழ வைக்கும் நாவல்
சமீபத்தில் எம்.ஏ.சுசிலா அவர்கள் மொழிபெயர்ந்த
‘தாஸ்தயொவஸ்கி கதைகள்’ புத்தகத்தை வாசித்தேன். அதில் ‘ஒரு மெல்லிய ஜீவன்’ கதையில் வரும்
நாயகனை ‘இடைவெளி’ நாவலில் வரும் தினகரன் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்.
சாவுடன் உரையாடல் நடத்தும் தினகரன் போன்றே
பலரும் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் அதனை புரிந்துக் கொள்ளாது தற்கொலை
செய்துவிடுகிறார்கள். தினகரன் போன்றோரே சாவுடன் நடத்தும் உரையாடலை வாழ்வில் விளையாட்டாய்
எதிர்க்கொள்கிறார்கள்.
நம்முடன் பயணிக்கும் ஒரு மனிதன் அவனது
மனஓட்டங்களை நம்முடம் பகிர்ந்துக் கொண்டு நமக்கும் அத்தகைய கேள்விகளைக் கொடுத்து செல்வதாகவே
இந்நாவல் அமைந்திருக்கிறது.
யோசிக்கையில் எஸ்.சம்பத் இருந்திருந்தால்
இன்றைய இக்கட்டான காலகட்டத்திற்கு ஏற்ற படைப்பாளியாக இருந்திருப்பார். அவருக்கென்று
ஒரு வாசக படையே உருவாகியிருக்கும். 116 பக்கங்கள் கொண்ட நாவல்தான். சீக்கிரத்தில் வாசித்து
விடலாம். கண்டிப்பாக வாசிக்கவும் வேண்டும். நிச்சயம் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை
கொடுக்கும். தத்துவங்களின் அடிப்படையில் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகாமல், வாழ்வை
அதன் போக்கில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் தினகரன், குழம்பிய மனதுடன் மரணத்தை புரிந்துக்
கொள்ள முயல்வதும் அதற்கான அவரது முன்னெடுப்புகளும் அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
நாவலை வாசித்து முடித்துவிட்ட திருப்தியை
என்னால் உணர முடியவில்லை. எங்கோ எதையோ தவற விட்டதாக மீண்டும் மீண்டும் பக்கங்களை வாசிக்கின்றேன்.
ஆனால் நான் தவற விட்டது நாவலில் இல்லை நடைமுறை வாழ்க்கையில் இருப்பதாக உணர்கிறேன்.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக