WWW.செய்வினை.COM
மார்க்கெட் சென்று வந்தவன் தூங்குகிறான். அதிகாலை நான்கு மணிக்கே எழுப்பி விட்டிருந்தாள். இதோடு பத்து மணி வரை தூங்கலாம். தொந்தரவு செய்ய மாட்டாள். சமைப்பதற்கு முன் வாசலை கூட்டிப் பெருக்கும் பழக்கம் அவளுக்கு உண்டு. பிறகு சமைத்துவிட்டு கணவனை எழுப்புவாள். அதன் பிறகு மத்தியானம் வரை அவள் தூங்குவாள்.
வாசல் விளக்கை போட்டாள். கதவைத் திறந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னமோ ஒன்று ரத்தத்தில் நனைந்து கிடக்கிறது. எலியோ? இல்லை ! வேறு என்னவாக இருக்கும். மெல்ல அதன் அருகில் வருகிறாள்.
கோழியின் தலை. அதிலிருந்து ரத்தம் வழிந்திருந்தது. அதன் கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஐயய்யோ!!
எவளோ செய்வினை வச்சிட்டா... !அப்படியே மனதார மாரியாத்தாவையும் காளியாத்தாவையும் கூம்பிட்டாள்.
உடனடியாக அந்த கும்பகர்ணனை எழுப்பி எதாவது செய்ய வேண்டும். உள்ளே ஓடத்தொடங்கினாள். அவசரத்தில் கால், வாசல் படியில் இடித்து விட்டது. உயிர் வலி போனது. குழம்பியிருக்கிறாள். அவள் சொல்ல நினைத்தது, வலி உயிர் போனது. அந்த உயிரை அதிக தூரம் போகாதவாறு பிடித்து இழுத்துக் கொண்டாள். கால் சுண்டு விரலில் ரத்தம் வழியத் தொடங்கியது. உலகத்திலேயே வைத்த செய்வினை உடனே வேலை செய்தது இதுவாகத்தான் இருக்கும்.
கணவனின் முகத்தைப் பார்ப்பதற்கு முன் பல முகங்கள் அவள் முன் வந்துச் சென்றன.
ராசாத்தி - போன வாரம் சண்டை போட்டிருந்தாள்..
கல்யாணி - ரெண்டு நாள் முன்னாடி சண்டை போட்டிருந்தாள்.
காயத்ரி - நேற்று சண்டை போட்டாள்
பங்கஜம் - நாளைக்கான சண்டையை இனிமேல்தான் யோசிப்பாள்.
இதில் யாராவதுதான் செய்வினை வைத்திருக்க வேண்டும். அந்த செய்வினைக்கு இன்றோடு ஒரு செயல்பாட்டு வினையை வைத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டாள்.
அடித்து எழுப்ப, கணவனும் அடி வாங்கி எழுந்து உட்கார்ந்தான். விபரத்தைச் சொன்னாள். அரை தூக்கத்தில் கணவன் தலையில் அடித்துக் கொண்டான். காலையில் மார்க்கேட்டில், தான் வாங்கி வந்திருந்த வெட்டப்பட்ட கோழியில் இருந்து தலை தவறி வாசலில் விழுந்திருக்கும் என்று சொன்னான்.
இப்போதுதான் அவளுக்கு நிம்மதி. கணவனை தூங்கச் சொன்னாள். இயல்பு நிலைக்கு திரும்புகிறாள்.
ஆனால் இன்று அவளது கணவன் கோழி இறைச்சியை வாங்கவே இல்லை என்ற தகவல் எனக்கும் இப்பொழுது உங்களுக்கும் மட்டும் தெரியும்.
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக