எழுத்தாளரின் வாசக கடிதம்
அவர் பிரபலமான எழுத்தாளர். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒவ்வொரு வாரமும் அவரது படைப்புகளில் ஏதாவது ஒன்று இதழ்களில் வெளிவந்துவிடும். அடுத்த வாரமே அவரின் படைப்பை குறித்த ஆழமான விமர்சனமும் வாசக கடிதங்களும் அதே இதழில் பிரசுரமாகும்.
அவர் எழுதும் முழு பக்க கதை என்றாலும், ஆள் காட்டி விரல் அளவு துணுக்கு என்றாலும் மறு இதழிலேயே பலர் அதனை பாராட்டி விமர்சனம் எழுதிவிடுவார்கள்.
அப்படியான தீவிர வாசகர்கள் இருப்பது ஒரு வகையில் சிக்கலையும் கொடுத்தது. சமயங்களில் பத்திரிகை ஆசிரியரே கூட இவரை அழைத்து அடுத்த இதழுக்கு ஏதாகிலும் படைப்பை அனுப்பும்படி கேட்டு இம்சிப்பார்.
இவரிடம் இருக்கும் ஒரே சிக்கல் இன்றளவும் கையெழுத்திலேயே எழுதி அனுப்புவார். வேறு வழி இல்லாத சமயங்களில் பத்திரிகைகளில் இருந்து யாராவது இவருக்கு 'போன்' செய்து இவர் சொல்லச்சொல்ல எழுதிக்கொண்டு பிரசுரத்திற்கு அனுப்புவார்கள். அந்த சமயங்களில் இவர் யாருக்கும் அதிக சிரமம் கொடுக்காது சில துணுக்குச் செய்திகளை மட்டும் கொடுப்பார். கட்டை விரல் அளவிற்கான அந்த துணுக்கு செய்திக்குக் கூட மறு வாரமே பல வாசக கடிதங்கள் வந்துவிடும்.
அந்த எழுத்தாளருக்குத்தான் அப்படியொரு சம்பவம் நடந்தது. ஒரு சிறு தவறு அவரை செய்வதறியாது திகைக்க வைத்துவிட்டது. அவரின் எழுத்து வாழ்வே இனி அவ்வளவுதான் என யாரோ சொல்ல ஆரம்பித்தார்கள்.
அவரின் கைகள் நடுங்கின. காலையில் தான் பத்திரிகைகளுக்கு அனுப்பிய படைப்புகளை ஒரு முறை மனதின் அசை போட்டார். பதட்டத்தில் அவை வேகமாக அசை போட்டுக் கொள்வதால் அவரால் நிதானிக்க முடியவில்லை.
ஒரு முறை மூச்சை நன்றாக இழுத்துவிட்டார். படபடப்பு குறையத் தொடங்கியது. நன்றாக நினைவுக்கூரலானார். ஆமாம் காலையில் மூன்று படைப்புகளை எழுதி மூன்று பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அதில் ஏதோ ஒன்றில், படைப்பிற்கு அடுத்த வாரம் வர வேண்டிய வாசக கடிதத்தையும் இணைத்து அனுப்பி விட்டார். அதனை அடுத்த வாரம்தான் அனுப்ப வேண்டும்.
பல பெயர்களில் இவருக்கே இவரே எழுதியிருந்த வாசக கடிதங்களில் ஒரு கடிதம் காணாமல் போனதில் இருந்து அவரால் வேறெதையும் யோசிக்க முடியவில்லை.
ஒரு பிரபலமான எழுத்தாளன் எதற்கெல்லாம் பதட்டப்பட வேண்டியுள்ளது..
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக