பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 01, 2016

கதை வாசிப்பு 28- என்னமோ ஏதோ..?

கதை வாசிப்பு 28- என்னமோ ஏதோ..?


   ஆகஸ்ட் மாத மக்கள் ஓசையில் (2016), தேசிய தின சிறப்புச் சிறுகதையாக வந்துள்ள சிறுகதை 'என்னமோ, ஏதோ..?'.
சிப்பாங் எம்.ராஜசேகரன் எழுதியுள்ளார் . இவரின் எழுத்தை நாளிதழில் வாசிப்பது இதுதான் முதன் முறை . ஆனாலும் நம்பிக்கைக் கொடுத்துள்ளார் . சமீபத்தில் இப்படியான திரில்லர் கதையைப் நம் நாளிதழ்களில் வாசிக்கவில்லை. 


கதைச்சுருக்கம் 

   கோலாலம்பூர் பேரங்காடியில் மோட்டார் ஒன்று ஆபத்தைக் கொடுக்கும் விதமாக போகிறது. காவலர்களை அங்குள்ள சீசீடிவியை பார்க்கிறார்கள். பின்னோக்கி ஒவ்வொரு காட்சியாக பார்க்கும் அவர்களுக்கு அதிர்ச்சி கிடைக்கிறது . சந்தேகம் ஏற்பட மோட்டார் ஓட்டியை பின் தொடர்கிறார்கள். மோட்டார் அசுர வேகத்தில் தப்பித்துச் செல்கிறது .

   பேரங்காடியில் வெடிகுண்டு வைத்திருப்பது தெரிய வருகிறது. காவல்துறையினர் அவ்விடத்தில் இருந்து மக்களை அப்புறப்படுத்துகிறார்கள். அவ்விடம் பரபரப்பாகிறது .சமூக வலைத்தளங்களில் அம்மோட்டாரோட்டி குறித்து தகவல் அனுப்பப்படுகிறது . 

  அந்த மோட்டார் தப்பித்து, ஒற்றையடி பாதையில் சென்று நிற்கிறது . அங்கு ஒரு பெண் இவனுக்காக காத்திருக்கிறாள் . தன் காதலன் சில நாட்களாக தன்னிடம் பேசவில்லை என்பதால், தன்னை யாரோ கடத்திவிட்டார்கள் என குறுஞ்செய்தி அனுப்பியதாக சொல்லிச்சிரிக்கிறாள். அவன் அவளை அறைந்துவிடுகிறான். அவளுக்கு அவனது அறையும் அவனது பதட்டமும்  புதிதாக இருந்தது.

   மேலிடம் ஏற்கனவே அவனிடம் எச்சரிக்கை விட்டிருந்தது . உணர்ச்சிவசப்பட்டால் எடுத்த காரியம் முடிக்க முடியாதென. அங்கிருந்து அவன் விரைந்து செல்ல முயன்று விபத்துக்குள்ளாகி  மாட்டிக்கொள்கிறான்.

   காதலியும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறாள். வெளியூரில் இருந்து வந்த மாணவன் என மட்டுமே அவளுக்கு அவனைப்பற்றி தெரிந்துள்ளது. பணக்கார குடும்பம் என்பதால் அவள் விடுவிக்கப்படுகிறாள். காரில் செல்லும்போதும் இனி அவன் குறித்து பேசக்கூடாது என தந்தை கட்டளையிட்டுவிட்டார்.

  அவன் சுயநினைவு இன்றி பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருக்கிறான். அவனது தலைவன் அவனை கொள்வதற்காக ஏற்பாடுகளை செய்யச்சொல்லிவிட்டான். 

  சிகிச்சை அவனை சுயநினைவுக்கு அழைத்துவருகிறது. காவல் துறையினருக்கு புது நம்பிக்கை கிடைக்கிறது . நிறைவாக அந்த காலையில் பெரங்காடி பாதை திறக்கப்படுகிறது. நாட்டில் 59 தின சுதந்திரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


கதையைக்குறித்து 

  இக்கதையில் இருக்கும் பலவீனங்களை முதலில் பார்க்கலாம்.திரில்லர் கதைகளுக்கு பரபரப்பு மிக முக்கியம் . அந்த பரபரப்பு கொடுக்கும் சுவாரஷ்யம் மிக முக்கியம் . இக்கதையில்  பெரும்பாலான வாக்கியங்கள் நீளமாகவே உள்ளன.

  உதாரணமாக முதல் பத்தியைச் சொல்லலாம். தொடக்கமே பரபரப்பில் இருப்பது அவசியம். இதன் தொடக்கம் ஆறு வரிகளாக ஒரே வாக்கியத்தில் அமைந்திருக்கிறது . நீளத்தை உடைத்து மூன்று வாக்கியங்களாக ஆக்கியிருக்கலாம். இவ்வகை சிக்கல் கதையில் ஆங்காங்கே தென்பட்டு விறுவிறுப்பை தடை செய்கிறது.

   இக்கதையின் பலம் இக்கதையில் இருக்கும் வேகம். 59வது சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு முன் நாட்டின் அமைதியை கெடுக்கும் கூட்டம் குறித்து இக்கதை பேசுகிறது . பணக்கார குடும்பம் என்பதால் விசாரணையில் இருந்து தப்பிப்பது,  வெளியூரில் இருந்து வந்திருப்பவன் குறித்து எதுவும் தெரியாமல் காதல் வலையில் விழுவது போன்றவையை இக்கதை கவனப்படுத்துகிறது.

   இக்கதை என்னை கவர்ந்திருப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு. பொதுவானப்பார்வையில் காவல்துறையினரின் சாகசங்கள் குறித்து சொல்வதுபோல இருக்கிறது . ஆனால் அது அப்படியல்ல என்றே எண்ணுகிறேன்.

  அந்த மோட்டார் அசுர வேகத்தில் மற்றவருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சென்றதுதான் காவல் துறைக்கு சந்தேகத்தைக் கொடுத்தது . அதன் பிறகே சீசீடிவியை பார்த்தார்கள். பின்னர் அதனைப் பின்னோக்கிப் பார்த்து அவன் குண்டு வைத்தது கண்டுபிடிக்கப்படுகிறது . 

  அந்த மோட்டார்க்காரனுக்கு அவனது காதலி ஆபத்தில் இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியதுதான் அவனது அந்த பரபரப்புக்கும் வேகத்துக்கும் காரணம் . இல்லையெனில் எந்த பரபரப்பும் இன்றி சகஜமாக குண்டு வைந்துவிட்டு சாகவாசமாக வெளிவந்து அந்த குண்டை வெடிக்க வைத்திருப்பான் . 
நாட்டின் சுதந்திரம் உயிர்பலிகளைக் கொண்டிருக்கும். மறைமுகமாக இச்சிறுகதை எதை விமர்சிக்கிறது என வாசக மனம் கருத்தில் கொள்ளவேண்டும்.

நிறைவாக,

  எழுத்தாளர் தொடர்ந்து எழுதவேண்டும் . அவரிடம் இருந்து இன்னும் எதிர்ப்பார்க்கலாம்.

- தயாஜி-

Related Posts:

  • - வந்த வேலை - நான் முதலில் பயந்துவிட்டேன். எப்படி பயப்படாமல் இருக்க முடியும். இந்த இடத்தில் யார்தான் நிற்பார்கள். அதுவும் உச்சி நேர வெயிலில். "ஹையோ ரொம்… Read More
  • அதனால் என்ன...? கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. ரொம்பவும் அழகாக இருக்கும். பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. பார்த்துவிட்டால் மறப்பதற்கு வாய்ப்பே இல்லை.&nb… Read More
  • - துரோகி - "யாராவது என்னைக் கொல்லத்தான் போகிறார்கள்....""அதற்காக....""நீயே என்னைக் கொன்றுவிடு....""முட்டாளா நீ...... வாயை மூடு...""முட்டாள் அல்ல... வ… Read More
  • புத்தகவாசிப்பு_2022_9_வாசிப்பின் வழிகள்வாசிப்பின் வழிகள்தலைப்பு – வாசிப்பின் வழிகள்எழுத்து – ஜெயமோகன்வகை – கட்டுரைகள்வெளியீடு – விஷ்ணுபுரம் பதிப்பகம்நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கட… Read More
  • - விலை - "ஒரு பத்து வருஷம் இருக்குமா?" எனதான் அந்த உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருவரின் காபியும் முடிந்துவிட்டது. சாப்பிட்டத் தட்டில் மட்டு… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்