பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 01, 2016

கதை வாசிப்பு 27 - குளவி

 கதை வாசிப்பு 27 - குளவி

ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான்.  

   இன்னமும் பெண்களை அவளின் உடல் கொண்டு அறியும் ஆண்களின் மனப்போக்கையும் அதன் மூலம் பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் துன்பத்தையும் காட்டுகிறது.

கதை.

   அழைப்பு மணியோசையுடன் கதை தொடங்குகின்றது. கதவை திறக்க யாருமில்லாதது அதிர்ச்சியைக் கொடுக்கிறது. குழப்பத்தில் இருப்பவளின் காதில் குளவியின் ரீங்காரம் கேட்கிறது. பின்னர் வீட்டில் குளவி கூடை கண்டுபிடிக்கிறாள். அதனை சுத்தம் செய்ய சொல்கிறாள். குளவி கூடு கட்டினால் நல்லது என சொல்லும் வேலைக்காரியிடம் அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்கிறாள். 

    குளவி, மணல் , கூடு போன்ற விசித்திர கனவுகளால் இம்சைக்கு ஆளாகிறாள். கணவனிடம் சொல்கிறாள். கணவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மகன் பள்ளிக்கும் கணவன் அலுவலமும் செல்கிறார்கள்.

 மருத்துவ பரிசோதனைக்கு செல்கிறாள். சிகிச்சை தன்னை பாதியாக்கிவிட்டதை உணர்கிறாள். இனி அவள் பாதிப்பெண்தான் என்கிறாள்.

   இரவில் அவளது கழுத்தில் முத்தமிட்டு ரவிக்கையின் பித்தான்களை அவிழ்த்த கணவன் அரைபட்டவன் போல அவளிடமிருந்து விலகி அறையைவிட்டு வெளியேறுகிறான். அவள் மெதுவாக எழுந்து மேலாடையை விலக்கி கண்ணாடி முன் நிற்கிறாள். கரிய வெற்றிடம் தெரிய அவள் தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.

கதையைக்குறித்து,

 சட்டென இக்கதை எனக்கு பிடிகொடுக்கவில்லை. இருந்தும் ஏதோ ஒன்றைத் தவறவிடக்கூடாதென எனக்கு தோன்றியது. மீண்டும் கதையை ஒவ்வொரு வரியாக படிக்க அரம்பித்தேன். இப்போது கதையின் கடைசி வரை என் முகத்திலும் அரைந்தது.

   கதையை புரிந்துக்கொண்டேன். அவள், ஏதோ காரணத்தால் மார்பகங்கள் அகற்றப்பட்டுவிட்டாள். குளவி கூடை தன் மார்பின் படிமமாகத்தான் அவள் பார்க்கிறாள். அதுதான் அவளின் உளவியல் சிக்கலாக அமைந்துவிட்டிருக்கிறது. தன் உடலில் இருந்து அகற்றப்பட்டுவிட்ட மார்பகத்தால் தான் இனி பாதிப்பெண்தான் என அவளை நம்ப வைத்திருப்பது சமூக அவலங்களில் ஒன்றாகவே பார்க்கிறேன். 

  மார்பக புற்றுநோய்களின் விளைவாக மார்பகங்கள் அகற்றப்பட்ட பெண்கள் மேலாடையின்றி புகைப்படம் எடுத்து விழிப்புணர்வுக்காக பிரசுரிக்கும் இக்காலத்திலும் ஒரு பெண்ணை அவளில் உடல் மூலமே அவளை பெண்ணாக பாவிக்கும் அவல நிலையைத்தான் இக்கதை சொல்கிறது. குழந்தை பெற்ற பின்னரும் கூட அவளிடமிருந்து விலகிப்போகும் கணவன் தான் நம் சமூகத்தின்  உருவம். 
இதுதான் காரணம் என சொல்லியிருந்தால் கூட இக்கதை நம்மை இவ்வாறு யோசிக்க வைத்திருக்காது.

   சொல்லவந்த விசயத்தை சொல்லாமல் சுற்றியும் அமைந்துள்ள சிக்கலைச் சொல்லி வாசகனை அதன் மையத்தை நோக்கி அழைத்துச்செல்வதில் எழுத்தாளர் வெற்றிகண்டுள்ளார். 

 நல்ல கதையைப் படித்துவிட்டத் திருப்தியை வாசக மனம் உணர்கிறது.


-தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்