பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 12, 2015

LIKE-கிட துடிக்கும் விரல் நுனியின் அதிர்வு






    மின்தூக்கி இன்னும் கொஞ்ச நேரத்தில் திறந்துவிடும். அப்போதுதான்  பூனையை பார்த்தேன். இதற்கு முன், அங்கும் இங்கும் என தூரத்தில் எங்காவது பார்த்திருக்கிறேன். நல்ல அழகான பூனை. யார் வளர்கிறார்கள் என தெரியவில்லை. அதற்கு சட்டையெல்லாம் மாட்டியிருந்தார்கள். அதுவும் யாரையும் தொல்லை செய்ததாக கேள்விப்பட்டது இல்லை. என்ன நினைத்ததோ தெரியவில்லை, மின்தூக்கி திறந்ததும் அந்த பூனை என்னை முந்திக்கொண்டு உள்ளே நுழைந்து அமர்ந்துக் கொண்டது. எப்படி விரட்டுவதென்று தெரியவில்லை. வழக்கமாக பூனைகளை பூஸ்..பூஸ்எனதான் அழைத்து பழக்கம். ஆனால் அப்படியே இந்த பூனையை அழைத்துப்பார்த்தேன் வேலைக்கு ஆகவில்லை.

   பூனை எனக்கு பின்னால் எதையோ பார்த்து இரண்டு முறை கத்தியது. திரும்பிப்பார்த்தேன். அட மின் தூக்கி கதவு மூடி நேரமாகியும் செல்லவேண்டிய மாடிக்கான எண்களை அழுத்தவில்லை. சட்டென ஆறாம் எண்ணை எழுத்தினேன். எண்களை தட்டாததைதான் பூனை கத்தி காட்டிக்கொடுத்ததா அல்லது அது செல்லவேண்டியது இரண்டாம் மாடியா என யோசிக்கவும் ஆறாவது மாடியில் முன் தூக்கி நின்றது.

      எனக்கு முன்னே சென்றது பூனை. மறுபடியும் உள்ளே வந்து கத்த தொடங்கியது. இது என்ன வம்பாகிவிட்டதே என்ன செய்யலாம். சரி மீண்டும் கீழேயே அனுப்பிவிடலாம் என, மின் தூக்கியில் கிழே இறங்க எண்ணை அழுத்தி பூனையை வழியனுப்பினேன்

     அதன் பிறகு பல நேரங்களில் அந்த பூனையை பார்த்திருக்கிறேன். போவோர் வருவோரெல்லாம் அந்த பூனையை  ஏதேதோ பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அந்த பூனையும் எந்த பெயர் சொன்னாலும் ஒரு முறை அழைத்தவரை பார்த்து கத்தி மீண்டும் அதன் போக்குக்கு செல்ல தொடங்கியது.

     அப்போதுதான் அங்கிருந்த பாதுகாவலரிடம் பூனை குறித்து விசாரித்தேன், அந்த பூனை ஒன்பதாம் மாடி வீட்டு பூனையாம். எப்போது பார்த்தாலும் படியில் இறங்கி கீழே வந்து சுற்றிக்கொண்டிருக்குமாம். யாராவது மின் தூக்கியில் ஏறினால் கூடவே வந்திடுமாம். ஒன்பதாம் எண் தட்டிவிட்டால் பூனை மின் தூக்கி கதவு திறந்ததும், எட்டிப்பார்த்து உறுதி செய்து பிறகு அதன் வீட்டுக்கு செல்லுமாம். இல்லையெனில் அந்த மின்தூக்கியிலேயே அமர்ந்துக் கொள்ளுமாம். அடுத்து யாராவது வரும்வரை அப்படியே இருக்குமாம். பூனைக்கு எப்படியெல்லாம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் படியில் இறங்க தெரிந்த பூனைக்கு மீண்டும் படியேற தெரியவில்லையா பூனைக்கு கற்றுக்கொடுக்கவில்லையா என சிரிப்புதான் வந்தது.

        அந்த பூனையே மனதில் இருந்தது. இப்படி ஒரு பூனையை நாமும் வளர்க்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன்

      கார் பிரிக்பீல்ட் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. ஆர்.டி.எம் அங்காசாபூரியில் இருக்கும் மேம்பாலத்தில் ஏறினேன். வழக்கம் போல சாலையின் அந்த பகுதியில் எதையே செய்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களாக குழி வெட்டுவார்கள் பின் இவர்களாக மூடுவார்கள் என  திட்டிக்கொண்டே வந்தேன். இன்றும் நெரிசல். ஒவ்வொரு காரும் இன்னொரு காருக்கு மிக அருகிலேயே வந்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் அசந்தாலும் அடுத்தவன் காரை முத்தமிட வேண்டும். கார் பாலத்தில் உச்சியை அடைந்தது. வலது கண்ணாடியோரத்தில் ஒரு குட்டி பூனை அதிர்ச்சியில் அங்கும் இங்கும் பார்த்துக் கோண்டிருந்தது. குட்டி பூனை எப்படியோ இங்கு வந்துவிட்டது. மீண்டும் இறங்குவது அவ்வளவு எளிதல்ல. என்னால் காரை நிறுத்த முடியவில்லை

        கார் மெல்ல மெல்ல நகர்ந்து அந்த குட்டி பூனையை கடந்தது. ஒரு நொடி அந்த பூனையும் நானும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டோம். பிரிக்பீல்டை அடையும் வரை அந்த பூனையை எப்படியெல்லாம் காப்பாற்றியிருக்கலாம் என யோசித்துக் கொண்டே இருந்தேன் .

       காரின் இரண்டு சிக்னல் விளக்கை தட்டிவிட்டு, காரை நிறுத்தி , பூனையை காரில் எடுத்து வைத்து வேறு இடத்தில் விட்டிருக்கலாமோ என மனதின் ஓரத்தில் பூனை கத்தல் குரலாய் கேட்டது

   இப்படித்தான் தினமும் செய்ய முடியாததையெல்லாம் கற்பனைகளில் செய்து முடித்து திருப்தி அடைகிறோம். சின்னதாய் ஒரு துணிச்சல் போதும் கற்பனைக்கு முன்னமே செயலில் இறங்கியிருக்கலாம். ஆனால் நாம் தவறவிட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றுக்கும் கற்பனைகளை வடிக்காலாக பயன்படுத்தி பின்னர் ஒரு நாள் அந்த கற்பனைகள் எல்லாம் சேர்ந்து நம் நிஜங்களை இம்சிக்கும்.

  இனி எந்த பூனையை பார்த்தாலும், அது எங்கள் குடியிருப்பில் இருக்கும் சட்டை போட்டிருக்கும் பூனையாக இருந்தாலும் ,  நான் காப்பாற்ற தவறிய பூனையின் கண்களைத்தான் நினைவுப்படுத்தும்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்