பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 16, 2015

பொசுக்பொசுக்கென பொங்கி தீர்த்த கதையெல்லாம் கரைசேருமா..?



    சில வாட்சப் குழுக்களில் இருக்கிறேன். அவ்வபோது சில கருத்துகள் , காணொளி காட்சிகள் எல்லாம் வந்தவண்ணமிருக்கும். சில தினங்களுக்கு முன், ஒரு காணொளி காட்சியை பகிர்ந்திருந்தார்கள். அக்காணொளியிலிருந்து ஏதோ ஒன்று மனதில் நெருடிக்கொண்டே இருந்தது.

அக்காட்சி;
பொது இடத்தில் சில நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள். அதில் ஒரு   
பெண் ஆங்கிலத்திலேயே உரையாடுகிறாள். சட்டென அவளுக்கு அறை விழுகிறது. அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறாள். பேருந்து நிலையத்தில் , முதியவருக்கு இளைஞன் ஆங்கிலத்தில் வழி சொல்லுகிறான். அவனுக்கும் அறை விழுகிறது. அவனும் ஸ்தம்பித்து நிற்கிறான். சாப்பாட்டு கடையில் சர்வரை ஒருவன் ஆங்கிலத்தில் திட்டுகின்றான். சட்டென அவனுக்கும் அறை விழுகிறது. அவனும் ஸ்தம்பித்து நிற்கிறான். கடைசில் மூன்று பேரையும் ஒரு சேர காட்டுகின்றார்கள். அவர்களில் ஒருவர் பின் ஒருவராக தமிழில் பேசி அழுகிறார்கள். நிறைவாக தமிழனோடு மட்டுமாவது தமிழ் பேசுவோம், தமிழ் வளர்ப்போம்  என எழுத்து வருகிறது. அத்துடன் அக்காணொளி முடிகிறது. 

   பாராட்டத்தக்க முயற்சிதான் . இயல்பாகவே இப்படியான காணொளிகளை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல. சரியான கதை, அதற்கான திரைக்கதை, நடிகர்கள், காட்சியமைப்பு, இசை என ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து செய்யவேண்டியுள்ளது.

   இக்காணொளியிலும் எல்லாம் மிகச்சரியாக இருக்கிறது என சொல்லாவிட்டாலும் சரியாக அமைந்திருக்கிறது என சொல்லலாம். ஆனால் அதில் சொல்லபட்டிருக்கும் கருதான் எனக்கு சில தினங்களாக நெருடலை கொடுத்துக் கொண்டிருந்தது.

   ’தாய்மொழி நம்ம தமிழ்மொழி’ என கூறி நம்மை உசுப்பிவிடும்; பின்னனியில் இருக்கும் அரசியலை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இதனை ஒரு போதையாக அடுத்துவர்களின் மனதிலும் மெல்ல மெல்ல செலுத்தி அவர்களை உணர்ச்சிவசப்பட வைத்து தமக்கான காரியங்களை சாதித்துக் கொண்டவர்கள், இன்னமும் சாதித்துக் கொள்கின்றவர்களை நாம் பார்த்துக் கொண்டும்தான் இருக்கிறோம். அது பெரிய வரலாறுன்னும் சொல்லலாம்.

   தமிழில் அறிவிப்பு பலகை வேணும் என்று கூட்டம் சேர்ப்போம். சாதித்தும் காட்டுவோம். அது மட்டுமல்லவே நாம் எதிர்நோக்கும் பிரச்சனை அல்ல அது மட்டுமல்லவே பிரச்சனைகளுக்கான தீர்வு. இல்லங்க தம்பி அங்கிருந்துதான் தொடங்கனும் என சொல்லி தலையாட்டிக்கொள்ளலாம். அப்படியெனில் இத்தனை வருடங்களாக இங்கு வாழ்கிறோமே. மூன்றாம் நான்காம் தலைமுறைகளாக இங்கே பிறந்திருக்கோமே. எங்கே தவறு? யாரால் தவறு என கைகாட்டி கொள்ளாமல், நாம் என்ன செய்தோம் என்ன செய்திருக்கலாம் என எப்போதாவது யோசித்திருகிறோமா? நம்முடைய அரசியல் நிலைபாடுதான் என்ன? மேற்கொண்டு இதனை குறித்து பேசப்போவதில்லை. 

காணொளியில் காட்டியிருக்கும் கரு குறித்து வருவோம்.

   திடீர் கவன ஈர்ப்புக்காகவே அத்தகைய கரு கையாலப்பட்டிருக்கிறது. நம் மொழியை நாம் நேசிக்கவும் பேசவும் எவ்வளவு உரிமை இருப்பதாக நினைக்கின்றோமோ அதே அளவு இம்மியும் குறையாமல் எதிரில் நின்று ஆங்கிலம் பேசுகின்றவர்களுக்கும் இருக்கிறது.

   நீ ஏன் ஆங்கிலம் பேசவில்லை என நம்மை அறைவதில் இருக்கும் அபத்தமே அவர்களை நம்மிடம் தமிழில் பேசு என அறைவதிலும் இருக்கத்தான் செய்கிறது.

   முதலில் நீ பேசு , பேச வேண்டும் என அறைந்தோ அடித்தோ துன்புறுத்த நாம் யார். சரி அப்படியே உணர்ச்சிவசப்பட்டு அறைந்துவிட்டொம் என வைத்துக் கொள்வோம். அறை வாங்கியவர் அழுதுக் கொண்டே ஐம்பது திருக்குறள்களை சொல் என  கேட்டுவிட்டார் என வைத்துக் கொள்வோம். நமது நிலமை என்ன?

   திருக்குறள் உலக பொதுமறை, உலக நீதி என பேசுகின்றோம். எத்தனை பேர் வீட்டில் அதனை வைத்திருக்கிறோம். திருக்குறள் இருக்க வேண்டியது பூஜையறையிலா அல்லது நாம் படிக்கும் அறையிலா?  எத்தனை முறை குறளை படித்திருக்கிறோம். குழந்தைகளுடன் சேர்ந்து குறள்களை மனனம் செய்திருக்கிறோமா. இல்லையே. 

   எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எப்படி மஞ்சளே இல்லாத நாட்டினர் அதற்கு உரிமை கொண்டாடுகின்றார்களோ அவ்வாறே என்றாவது ஒரு நாள் திருக்குறளுக்கும் உரிமை கொண்டாருவார்கள். ’பேட்டன் ரைட்ஸ்’ வாங்கி பின்னர் நமக்கே பாடம் எடுப்பார்கள். அப்போதும் அதற்கான போரட தயாராவோமே தவிர நடந்தவைக்கு நாமும்தானே பொறுப்பு என யோசிக்க மாட்டோம்.

   உங்களிடம் ஆங்கிலம் பேசுகின்றார் ஒருவர், அவருக்கும் தமிழ் தெரியும் என உங்களுக்கு தெரிகிறது. அந்த இடத்தில் ஆங்கிலத்தில் பேசுவது அவசியமற்றது. ஏன் அவரை அறையவேண்டும் என நினைக்கிறோம். அதற்கு மாற்றாக அவரிடம் தமிழிலேயே பேசலாம். தமிழில் இருக்கும் உச்சரிப்புகளை , மொழியின் அழகினை உரையாடி ஆச்சர்யப்பட வைக்கலாம். இடையிடையே பழமொழி குறள் செய்யுள் போன்ற எதையாவது இணைக்கலாம். அதற்கு வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் நாம் நமது தமிழறிவை வளர்த்திருக்க வேண்டும். அதற்கு கொஞ்சமேனும் உழைத்திருக்க வேண்டும். 

    ஆனால் ஆங்கிலம் பேசும் அவசியமற்ற வேளைகளில் நாம் தமிழில் பதில் சொல்லுவதால் நம்மை பார்க்கின்றவர்கள் கண்ணுக்கு நாம் ஆங்கிலம் தெரியாத பொது அறிவு அற்றவராக தெரிந்துவிடுவோமே என்ற பயம்தான் மூல காரணம். ஆங்கிலத்துக்கும் பொது அறிவிக்கும் சம்பந்தம் இல்லை என்பதை யார்  சுட்டிக்காட்டுவார்கள்.

   அடுத்த முறை எதிரில் இருப்பவர்களை அறைந்து தமிழ் பற்றை காட்டும் அராஜக செயலில் ஈடுபடாமல், அவர்களுக்கும் புரியவைக்க தமிழறிவை பகிர்வோம். அதற்கு கொஞ்சமேனும் உழைப்போம். முக்கியமாக வாசிப்போம்.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்