பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 17, 2013

நண்பர் பாண்டியனின் கேள்விகளுக்கு.....




நண்பர் பாண்டியனின் கேள்வி...

கடந்த சில நாட்களாக எழுத்தாளர் சங்க தலைவரின் மேடைப் பேச்சு தொடர்பான எதிர்ப்பலைகள் முகநூல் வட்டத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. அவரின் பேச்சுக்கு கண்டனக் குரல்கள் இளம் படைப்பாளர்களிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் உச்சமாக 21.7-ல் எழுத்தாளர் சங்கம் நடத்தும் சிறுகதை பரிசளிப்பு விழாவை புறக்கணிப்பது என்று ஒரு சில படைப்பாள நண்பர்கள் (நான் உட்பட) முடிவு செய்திருந்தோம். 

இவ்விவகாரம் தொட்டு மேற்கண்ட முடிவு செய்யப்பட்டாலும் என் மனதில் ஓயாது எழுந்து கொண்டிருக்கும் உறுத்தலை வெளிப்படையாக உங்கள் முன் வைக்கிறேன். முகநூலின் வழி வெளிப்பட்ட குழப்பத்திற்கு முகநூலில் வழியே தீர்வு காண்பது என்று முடிவு செய்து விட்டேன். மூடி மறைத்து பேச தேவை இல்லாததால் நேரடியாகவே விஷயத்தை அணுகுவது நல்லது. இதை மீள்பார்வை சிந்தனை என்றும் கொள்ளலாம்.
 
1.முதலாவதாக ராஜேந்திரனின் உரை மீதான ஆத்திரத்தை சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில் காட்டுவது சரியா? அவருக்கு பெண்ணிய சிந்தனை என்றால் என்ன என்கிற பொது ஞானம் இல்லாததற்கும் நாட்டில் பலரும் உழைத்து எழுதிய படைப்புகள் சிறப்பிக்கப்படுவதை மறுப்பதற்கும் என்ன தொடர்பு?
 
2. சிறுகதை நிகழ்வை நாம் புறக்கணிப்பதன் வழி எதை உணர்த்த உள்ளோம்? நாம் பெண்ணிய சார்பு சிந்தனையாளர்கள் என்பதையா? அல்லது ராஜேந்திரனின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றன என்பதையா?
 
3. சிறுகதை நூல் வெளியீட்டில் வெளியிடப்படப் போகும் படைப்புகள் நமது உழைப்பில் விளைந்தவை என்னும் பட்சத்தில் நாமே அதை புறக்கணிக்கலாமா?
 
4. நாமே மரியாதை தராத நமது படைப்புகளை வேறு யார் மரியாதை தரப்போகிறார்கள்?
 
5. தேர்வாகி இருக்கும் 19 கதைகளை தேர்வு செய்ததில் மரியாதைக்குறிய நடுவர் குழு ஒன்று செயல்பட்டிருக்கும் என்பது உண்மை. நாம் இந்த நிகழ்வை புறக்கணிப்பதன் வாயிலாக அந்த நேர்மையான நடுவர்குழுவையும் புறக்கணிபவர்களாகிறோம். இது சரியா?
 
6. ராஜேந்திரன் சிறப்பிக்கப்போகிறார் என்கிற நோக்கத்தோடு இக்கதைகள் எழுதப்பட்டவை அல்ல. அக்கதைகளின் வெற்றி வாசகர்களால் முடிவு செய்யப்பட்டது. அவற்றை படைத்தவர் என்கிற நிலையில் அதன் வெற்றியில் நாம் பங்கெடுப்பது எப்படி தவறாகும்.
 
7. ஒரு சமுதாய விரோதிக்கு தண்டனை கொடுக்கும் நோக்கோடு நாம் நமது குழந்தையின் கழுத்தில் கத்தி வைப்போமா?
நண்பர்களே, இவை என் மனதில் கிளர்ந்தெழுந்த வினாக்கள். ராஜேந்திரனின் பிழையான கருத்தை சுட்டிக்காட்டிய நாம் மறுப்புக் குரலும் கண்டனமும் தெரிவித்தது முழுக்கச் சரியான செயல். ஆனால் சிறுகதை நிகழ்வை புறக்கணித்தல் என்பது சரியா? உங்கள் கருத்துக்களை ஒழிவு மறைவின்றி கூறலாம்.



நண்பரின் கேள்வி பதில்; 






வெறுமனே கூட்டத்தோடு ஒருவராய் போய் அமர்ந்திருந்து நமது எண்ணத்தை வெளிப்படுத்துவதால் ஏற்படும் விளைவை விட..
நிராகரிப்பதின் வழி, அதிகமாக விளையை நாம் கொண்டு வரலாம்....

///ஒரு அரசியல் வாதியிடமிருந்து மேடையில் பரிசு வாங்குவதையே நான் வெறுத்தேன். இப்போதும் வெறுக்கிறேன். அது பற்றி உங்களிடமும் பேசியிருக்கிறேன். ஆனாலும் அந்த சிறுகதை தொகுப்பை பெறுவதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தேன்.//// Pandiyan Anbalagan நண்பரே உங்கள் எண்ணம் எனக்கும் இருந்தது... அதற்கு முன்பாக சிலவற்றை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.. சில ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தாளர் சங்கத்தில் எனக்கு கவிதை துறைக்காக இளம் கவிஞர் விருது கொடுத்தார்கள்.. அப்போது இருந்து சிந்தனையில் எனக்கு அது மிகப்பெரிய கௌரவமாக இருந்தது... எல்லோர் முன்னிலையிலும் மாலை போட்டு, பொன்னாடை போத்தி, சான்றிதழ் கொடுத்து உடன் 500 வெள்ளியையும் கொடுத்தார்கள்.... அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, கௌரவம், அதனை வார்த்தையில் சொல்ல முடியவில்லை....

அதனை முகநூலில் பதிவு செய்தேன்; வாழ்த்து கூறி வந்த செய்திகளின் பாலமுருகன் மட்டும் வாழ்த்துக்கு பதிலாக சூதாரித்துக் கொள், இனிதான் நீ எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்ற தோணியில் எழுதியிருந்தார். முதலில் அவர் மீது கோவம் வந்தாலும், பாலமுருகனின் வாசன் நான் என்ற முறையில் கொஞ்சம் சிந்திக்கவும் செய்தேன்.



அதன் பிறகு; நணபர் ஒருவர்  அந்த விருது குறித்த பின்னனியை  சொன்னார்; அந்த விருது நிகழ்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்த போது; என் பெயரை முன்மொழிந்திருக்கிறார் இவர்.. அங்கிருந்த பாதிக்கும் மேற்பட்டோருக்கு இப்படி ஒருவன் எழுதுகிறான் என்றே தெரிந்திருக்கவில்லை...அதன் பிறகு, வேறு யாரும் இல்லாததால் எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.... இதனை தெரிந்துக் கொண்ட நான் அன்றைய தினம், சேகரிந்து வைத்திருந்த எனது கவிதைகளை மீண்டும் வாசித்தேன்... எனக்கே திருப்தி இல்லாமல் இருந்தது..... (எழுதும் போது பெறுமை பட்ட கவிதைகள் அவை.... மீண்டும் வாசிக்க ஒன்றுமில்லாதது போல தோன்ற.. எனது தொடர் வாசிப்பும் ஒரு காரணம்....) கவிதைக்கு என கொடுக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. அவர்கள் யாரும் இவர்களோடு ஒத்துப்போகாததால் , தலைநகருக்கு புதிதாக  வந்திருந்த நான், வானொலியில் பணிசெய்யும் நான் தேவைப்பட்டிருக்கிறேன்.

உடனே ஆண்டு சந்தா எல்லாம்கூட கட்டினேன். சங்கத்தில் முக்கிய பொறுப்புக்கும் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டேன். வேலை காரணமாக சம்மதிக்கவில்லை..

அதன் பிறகுதான் தூரத்தில் இருந்து வாசித்துக் கொண்டிருந்த ம.நவீனின் நட்பு கிடைத்தது. வல்லினம் இணைய இதழும் (அதற்கு முன்பும் வல்லினம் குறித்து ஓரளவு அறிந்திருந்தேன்) அறிமுகமானது. எனது பாதையை, எனது சிந்தனையை, எனது வாசிப்பின் நோக்கத்தை வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.

அப்படி எந்த கோணம் மாறாமல் இருந்திதால்;

1. எனது சொந்த பண செலவின்றி அவ்வபோது தமிழகம் சென்றிருக்கலாம். (அழைப்பும் வந்தது)
2. தமிழ்சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்பாளனாய் நான் பரவலாக அழைக்கப்பட்டிருப்பேன்.
3. பத்திரிக்கையொன்றில் என்னையும் என் வானொலி பணியையும், என் எழுத்தையும் அவ்வபோது புகழ்ந்து சிலர் எழுதி எனக்கு விளம்பரம் தந்திருப்பார்கள்.
4. சங்கத்தில் முக்கிய பொருப்பில் இருந்திருப்பேன்.
5. தொடர்ந்து பல போட்டிகளில் நான் எழுதிய கதைகள் என் உறவினர் பெயரில் பரிசு வாங்கியிருக்கும்.


ஆனால் இப்போது மாற்றம் ஏற்படுத்திய கோணத்தில்; நான் சரியாக பயணிக்கிறேன் என்ற திருப்பி இருக்கிறது. மேற்சொன்ன 5 வசதிவாய்ப்புகளும் இந்த நேர்மையான திருப்தியைக் கொடுத்திருக்காது.

இதுவரையில் இதனை யாரிடமும் பகிர்ந்திருக்கவில்லை. இப்போது உங்களின் கேள்விகளுக்கு என்னா முடிந்த பதில்களை தர முயற்சிக்கிறேன், நண்பன் என்ற முறையில்;

/////1.முதலாவதாக ராஜேந்திரனின் உரை மீதான ஆத்திரத்தை சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில் காட்டுவது சரியா? அவருக்கு பெண்ணிய சிந்தனை என்றால் என்ன என்கிற பொது ஞானம் இல்லாததற்கும் நாட்டில் பலரும் உழைத்து எழுதிய படைப்புகள் சிறப்பிக்கப்படுவதை மறுப்பதற்கும் என்ன தொடர்பு?/////

பதில் 1. அவர் கூறியதை மறுபடியும் இங்கே நினைவுக்கூரலாம். “நான் தலைவராக வந்தப்பிறகு பெண்களின் எழுத்துகளுக்கு கண்டிப்பாக பரிசு கொடுக்கவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் கொண்டுவந்தேன்”.  அப்படியிருக்க புதிதாக எழுதிக் கொண்டிருக்கும் சிலருக்கு கட்டாயமாக பரிசு கொடுக்கவேண்டும் என்றும் கூட எழுதப்படாத சட்டம் இருந்து நம் கதையும் தேர்வு பெற்றிருக்கலாம்.

////2. சிறுகதை நிகழ்வை நாம் புறக்கணிப்பதன் வழி எதை உணர்த்த உள்ளோம்? நாம் பெண்ணிய சார்பு சிந்தனையாளர்கள் என்பதையா? அல்லது ராஜேந்திரனின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றன என்பதையா?////

பதில் 2. நாம் உணர்த்துவது ஒன்றுதான். நாங்கள் சிந்திக்கின்றோம். நேர்மையோடு இருக்கிறோம். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். உங்கள் ஏமாற்று வேலைகள் கேலிக்கூத்துகள் குறித்த பிரக்ஞை எங்களுக்கு இருக்கிறது.

////3. சிறுகதை நூல் வெளியீட்டில் வெளியிடப்படப் போகும் படைப்புகள் நமது உழைப்பில் விளைந்தவை என்னும் பட்சத்தில் நாமே அதை புறக்கணிக்கலாமா?/////

பதில் 3. போட்டிக்காக , பரிசு கிடைக்குமெ என்ற எண்ணத்தில் நாம் எதையும் எழுதியிருக்கவில்லை. (தினக்குரலில் வைத்திருந்த சிறுகதை போட்டிக்கு நம எழுதியது கூட பணம் கிடைக்குமே என்பதற்காக இல்லை, எழுதும் சிறுகதை பலரால் கவனிக்கப்படுகிறது. விமர்சிக்கப்படுகிறது என்ற எண்ணத்தில்தான்) நமது உழைப்புக்கே ஏற்ற ஊதியம் கிடைத்தே தீரும். நாம் உழைப்பை புறக்கணிக்கவில்லை. நமது கேள்வியினை முன்வைக்கிறோம்.
///4. நாமே மரியாதை தராத நமது படைப்புகளை வேறு யார் மரியாதை தரப்போகிறார்கள்?///

பதில் 4. படைப்பிற்கும் படைப்பாளிக்கும் உள்ள நேர்மையே போதும் அதற்கேற்ற மரியாதையை படைப்பிற்கு கொடுக்க. எழுதிய பிறகு எழுதியதை எத்தனை காலம் நாம் காத்துக் கொண்டிருக்க போகிறோம். நீங்களும் நானும் இல்லாத போதும் கூட, நமது படைப்புகளுக்கு கிடைக்ககூடிய அங்கிகாரம், மரியாதை கிடப்பதே நமது நேர்மைக்கான அடையாளம். (அதற்காக இல்லாமல் போகவேண்டிய அவசியமில்லை. போலிகளிடம் போகாமல் இருப்போம்.)
சோடை போனவர்களின் எழுத்துகளைவிட ரோசமானவர்கள் எழுத்து கண்டிப்பாக நிற்கும். பாரதி வாழ்ந்த காலத்தில் பரிசு வாங்கிய எந்தனை கவிஞர்கள் குறித்து நாம் பேசுகிறோம்.

///5. தேர்வாகி இருக்கும் 19 கதைகளை தேர்வு செய்ததில் மரியாதைக்குறிய நடுவர் குழு ஒன்று செயல்பட்டிருக்கும் என்பது உண்மை. நாம் இந்த நிகழ்வை புறக்கணிப்பதன் வாயிலாக அந்த நேர்மையான நடுவர்குழுவையும் புறக்கணிபவர்களாகிறோம். இது சரியா?///

பதில் 5. மீண்டும் முதல் கேள்விக்கான பதிலை படிக்கலாம். அப்படி கட்டாயத்தில் பெயரில் பெண்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறோம் என்று சொன்ன பிறகுமா, அந்த நடுவர் குழுவை நீங்கள் நம்புகிறீர்கள். நானும்தான் நம்புகிறேன், அந்த நடுவர் குழுவில் இருந்து ஒருவராவது மறுப்பு தெரிவிப்பார் என்று... இதனை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடிவரை அப்படி ஒரு அதிசயம் நிகழவில்லை.. நீங்கள் இதனை வாசிக்கும் போது அந்த அதிசயம் ஏற்பட்டிருந்தால் சொல்லுங்கள்.

////6. ராஜேந்திரன் சிறப்பிக்கப்போகிறார் என்கிற நோக்கத்தோடு இக்கதைகள் எழுதப்பட்டவை அல்ல. அக்கதைகளின் வெற்றி வாசகர்களால் முடிவு செய்யப்பட்டது. அவற்றை படைத்தவர் என்கிற நிலையில் அதன் வெற்றியில் நாம் பங்கெடுப்பது எப்படி தவறாகும்///

பதில் 6. படைத்தவர் என்ற முறையில் வெற்றி என்று நான் கருதுவது, இவர்கள் கொடுக்கும் நேர்மையற்ற மேடையோ, புகைப்படத் தேவைக்கு மாலையோ இல்லை என நினைக்கிறேன்./// அக்கதைகளின் வெற்றி வாசகர்களால் முடிவு செய்யப்பட்டது./// என நீங்களே சொல்லியுள்ளீர்கள்... ஆக நம் படைப்புகளால் பாதிப்பை எதிர்நோக்கிய வாசகனோடு உரையாடுவதுதான் படைப்பாளியின் வெற்றி என்று கருதுகிறேன்.


///7. ஒரு சமுதாய விரோதிக்கு தண்டனை கொடுக்கும் நோக்கோடு நாம் நமது குழந்தையின் கழுத்தில் கத்தி வைப்போமா?///

பதில் 7. எனது god father எனக்கு சொன்ன ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. “தயாஜி.. எல்லா நேரத்திலும் செண்டிமெண்டல் நமது உதவாது... நம்ம காலை வாரிவிட்டுடும்.....”. அந்த சமுதாய விரோதிக்கு தண்டனை கொடுப்பதற்கு என்ன காரணம் என்றால்; நம் குழந்தையின் உடலில் வைரஸ் கிருமியை ஊசியேற்றியதுதான் என்று வையுங்கள். இன்னும் சில நிமிடங்களில் குழந்தை துடிதுடித்து தாங்க முடியாத துயரப்பட்டு மரணமடையபோகிறது. அதோடு குழந்தையில் உடலில் இருக்கும் வைரஸ், குழந்தை இறந்த பிறகு அழிக்க முடியாததாகி பரவப்போகிறது. என்ன செய்வோ; சமூக விரோதிக்கு தண்டனை கொடுக்கும் முன்பாக, நம் குழந்தையை குணமாக்க முயல்வோம். முடிந்தவரை முயல்வோம். முடியாதென முடிவாக தெரிந்த பின்னர்... குழந்தை கழுத்தில் கத்தி என்ன , கருணை கொலைகூட அங்கே நடக்கலாம். நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் செயலிலும், தன் சுற்றத்தாரை, சொந்தங்களை, நண்பர்களை , குடும்பங்களை . மனைவி , பிள்ளைகளை இழந்தவர்கள் கதை நமக்கு தெரிந்தும் ஒரு குழந்தைக்காக இப்படி யோசிப்பது...?  இது சரியான தருணம். அந்த வைரஸ் கிருமிக்கு ஒரு முடிவு கட்டும் நேரம். இனியும் அது பரவக்கூடாது.


///ராஜேந்திரனின் பிழையான கருத்தை சுட்டிக்காட்டிய நாம் மறுப்புக் குரலும் கண்டனமும் தெரிவித்தது முழுக்கச் சரியான செயல். ஆனால் சிறுகதை நிகழ்வை புறக்கணித்தல் என்பது சரியா?////

கொதிப்பதை நிறுத்த எரிவதை எடுக்கத்தானே வேண்டும். எடுக்கவும் மாட்டோம், கொதிப்பதும் கூடாதென்றால் எப்படி.


இத்தனை நீளமாக இதனை எழுதுவதற்கு ; காரணம்.. நீங்கள் உரையாட தயாராக உள்ளீர்கள்.. மற்றவர் கருத்தினை நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள் என்பதனால்தான். மற்றபடி உங்கள் நண்பன் என்ற முறையிலும், உங்கள் வாசகன் என்ற முறையிலும், நேர்மையோடு என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன். மற்றபடு உங்கள் சிந்தனை உங்கள் தேர்வு உங்கள் முடிவு.
நன்றி.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்