பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

நவம்பர் 18, 2025

- குற்றமே தண்டனை -


இன்று
கவிதைகளை திருடுவது
அவ்வளவு பெரிய குற்றமில்லை
என்றாலும்

எது கவிதையென்று
தெரியாமல் திருடுகிறவர்களை
எப்படித்தான்
மன்னிப்பது

அவர்கள் எழுதிய
கவிதைகளை
அவர்களையே
காலை மூன்று முறை
மதியம் இரண்டு முறை
இரவில் நான்கு முறை 
என
சாப்பாட்டிற்கு முன்
வாசிக்கச் சொல்லலாம்...

நவம்பர் 17, 2025

துணையாய் வரும் சொற்கள்

துணையாய் வரும் சொற்கள் -

‘தனித்த சொற்கள்’ எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உலக இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 22 கட்டுரைகள் கொண்டது. 2023-ம் ஆண்டு வெளிவந்தப் புத்தகம். தேசாந்திரி பதிப்பகம் வெளியீடு செய்திருந்தார்கள்.

என்னுடைய தனிப்பட்ட வாசிப்பின் மாற்றங்களுக்கு மிகவும் முக்கியமானவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். தன்னை மட்டுமே தன் வாசகர்கள் வாசிக்க வேண்டும் என எழுதுகின்றவர்கள் ஒரு பக்கம். என்னை வாசிக்கின்றவர்கள் இன்னொன்றையும் வாசிக்கத் தவறக்கூடாது என நினைத்து எழுதுகிறவர்கள் இன்னொரு பக்கம். எஸ்.ராமகிருஷ்ணன் இரண்டாம் வகை எழுத்தாளர்களின் முதன்மையானவர் என சொல்லலாம்.

அவருடைய புத்தகங்களில் அவர் அறிமுகம் செய்திருக்கும் படைப்புகள் ஏராளம். தான் வாசித்ததை இன்னொரு வாசகனும் வாசிக்க வேண்டும்  என மிகுந்த சிரத்தையுடன் அவற்றை அறிமுகம் செய்திருப்பார். என்னுடைய பல நண்பர்களுக்கு அவரது புத்தகங்களை நான் பரிசாகக் கொடுப்பதற்கு அதுதான் முதன்மையான காரணம்.  வேற்று மொழியோ நம்மால் வாங்கி வாசிக்க முடியாத புத்தகமோ என எதுவாக இருந்தாலும் குறைந்தபட்சம் அதன் உள்ளடக்கத்தையும் அது ஏன் முக்கியமானது எனவும் நம்மால் இதன்வழி தெரிந்து கொள்ளமுடியும். தான் தெரிந்த கொண்ட குறைந்தபட்சத்தில் இருந்து தேங்கி நிற்பதும் அதனை அதிகப்படுத்துவதும் அவரவர் பாடு.

எஸ்.ராவின் ‘தனித்த சொற்கள்’ கட்டுரைத் தொகுப்பில்; ஆலன் பேடன், யுவான் ருல்ஃபோ, போஹுமில் ஹரபால், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெஸ்ஸே போன்ற உலக இலக்கியத்தில் முக்கியமாக கருதப்படும் படைப்பாளிகள் குறித்து எழுதியிருக்கின்றார்.  சமகால வாழ்வின் நெருக்கடிகளையும் அரசியல் சமூகப் பிரச்சனைகளையும் இலக்கியம் எப்படி பிரதிபலிக்கின்றது; அதன எவ்வாறு படைப்புகளாக மாற்றியுள்ளார்கள் என இந்தக் கட்டுரைகள் சொல்கின்றன.

‘கோமாலாவில் என்ன நடக்கிறது’ என்கிற கட்டுரையில்  மெக்சிகன் எழுத்தாளரான யுவான் ருல்ஃபோவின் ‘பெட்ரோ பராமோ’ என்னும் நாவல் குறித்த அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். நாவலை வாசிக்கும் முன் இந்தக் கட்டுரையை வாசிப்பது அந்நாவலை நமக்கு மேலும் நெருக்கமாக்கும்.

            ‘மார்க்வெஸின் கடைசி நாட்கள்’ கட்டுரையில் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மறைவிற்கு பின் அவரது அந்தக் கடைசி நாட்களைப் பற்றியும் தன் குடும்பம் எப்படி எதிர்கொண்டது எனவும் அவரது மகள் புத்தகம் எழுதியுள்ளதை சொல்கிறார். எவ்வளவோ எழுத்தாளர்கள் வருகிறார்கள் போகிறார்கள் ஒரு சிலர்தான் தன் உதிரத்தையும் தன்னைப்போல எழுத வைக்கிறார்கள் அல்லது தன்னைப் பற்றி எழுத வைக்கிறார்கள். ஒருவேளை அது அவரவர் பாக்கியமாக இருக்கலாம். இந்தக் கட்டுரையின் கடைசி பத்தியில் நம்மையும் ஒருகணம் கலங்க வைக்கின்றார். மார்க்வெஸின் மகள், அவரது அஸ்தியை விமானத்தில் கொண்டு செல்லும் போது அவரின் அருகில் ஒரு பெண் மார்க்வெஸ் எழுதிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலை வாசித்துக் கொண்டிருந்தாராம். எழுத்தாளனின் அஸ்தியும் அவன் எழுதிய படைப்பும் சந்தித்துக் கொள்ளும் இத்தருணத்தை எப்படி நாம் வகைப்படுத்துவது.

            இலக்கியம் மீது ஆர்வம் இருப்பவர்களுக்கு ‘சித்தார்த்தா’ நாவல் பரிட்சயம். ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தன் நாவலை நானும் நண்பர்களுக்கு பரிந்துரைத்துள்ளேன். ஆனால் ஹெர்மன் ஹெஸ்ஸே தனது இலக்கில்லாத நடைப்பயணங்களை குறித்து ஒரு புத்தகம் எழுதியிருப்பதை ‘அலைந்து திரிபவனின் உலகம்’ கட்டுரை மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அந்தப் புத்தகத்தில் ஹெஸ்ஸேவின் கோட்டோவியங்களும் கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றதாம். இந்தப் புத்தகத்தில் நடை பயணத்தை விரும்பும் ஜென் கவிஞர்களுக்கும் ஹெஸ்ஸேவுக்குமான பார்வை வித்தியாசங்களையும் தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கிறார் கட்டுரையாசிரியர்.

            ‘கதாப்பாத்திரங்களைத் தேடுகின்றார் டிக்கன்ஸ்’ கட்டுரையில் டிக்கன்ஸ் எழுத்துகள் குறித்து பேசுகின்றார். அவரே வெளியிட்ட அவரது நாவலின் சுவாரஸ்யமான பின்னணியைப் பதிவு செய்கின்றார்.

            இப்படி உலக இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் குறித்து அவர்களது படைப்புகள் குறித்தும் பல்வேறு தகவல்களையும் அறிமுகங்களையும் ‘தனித்த சொற்கள்’ என்னும் இந்தப் புத்தகத்தில் நாம் வாசிக்கலாம்.

            அடுத்த நாம் வாசிக்க வேண்டிய ஏதோ ஒரு படைப்பாளியையோ புத்தகத்தையோ இந்தப் புத்தகம் நமக்கு எடுத்துக் கொடுக்கின்றது. அதை நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.


நவம்பர் 16, 2025

- ஜாலி,கூலி,காலி -


- ஜாலி, கூலி, காலி -

கைப்பேசியில் தமிழ் தட்டச்சு வந்த காலகட்டத்தில், தனக்கு தெரிந்த பொன்மொழிகள் பழமொழிகள் சினிமா பாடல் வரிகளை  எழுதி அதற்கு கீழ் காலை வணக்கம் மதிய வணக்கம் இரவு வணக்கம் என எழுதி பகிர்வார்கள். 

பிறகு அதையே பூக்கள், இயற்கை காட்சிகள், அழகான பெண்களின்  பின்னணி கொண்ட ஓவியங்களிலும் புகைப்படங்களிலும் எழுதி படங்களாக பகிர்ந்தார்கள்.

இப்போது கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் அதே மாதிரி அல்லது அதையே கவிதைகள் என்று நம்பிக்கொண்டு புத்தகங்களாக அச்சடித்துக் கொள்கிறார்கள். 

அப்படியும் அவர்களின் கவிதைகளின் கீழ், 'காலை வணக்கம்', 'மதிய, 'இரவு வணக்கம்' என்பதை போட்டுக்கொள்ளும் தைரியம் இன்னும் வரவில்லை.  

அதுவரைக்குமாவது அவர்களைப் பாராட்டலாம். 

***********

எழுதினவன் ஜாலி
அச்சடிச்சவனுக்கு கூலி
வாசிக்கிறவன் காலி...!
காலை/மாலை/மதிய/இரவு
வணக்கம் நண்பர்களே.....

#தயாஜி

வழி தப்பிய பறவைகள்


தீபத்திற்காய்ச்
சுடருக்கு நன்றி சொல்வாய்.
தீபம் கையேந்தித்
திரை மறைவில் பொறை வடிவாய்
தாங்கி நிற்பான்,
நினைந்திரு...
- ரவீந்திரநாத தாகூர்.

வாசிப்பில் 'வழி தப்பிய பறவைகள்'.
நவீந்திரநாத தாகூர் குறுங்கவிதைகள்.
பட்டு எம்.பூபதி தமிழாக்கம் செய்திருக்கிறார். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள்.
1998-ல் வெளியீடு கண்ட முதல் பிரதி.

பல ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு பழைய புத்தகக்கடையில் வாங்கி வைத்ததாய் நினைவு. சில நாட்களாக புத்தக அலமாரியை சுத்தம் செய்யும் போது கண்ணில் பட்டது.

சில வீடுகள் மாறியும் பல அட்டைபெட்டிகளில் ஏறி இறங்கியும்  தப்பி பிழைத்து இன்னமும் எங்கள் வீட்டு புத்தக அலமாரியில் தனக்கென ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்திருந்தது.

இனியும் தாமதிக்கக் கூடாது என்று, உடனே வாசிக்க தொடங்கிவிட்டேன்.
வாசிக்க வாசிக்க தன்னுள் நம்மை ஈர்க்கின்றன கவிதைகள். சிலவற்றை மீண்டும் மீண்டும் வாசிக்கின்றேன்... 

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

நவம்பர் 15, 2025

- கடவுளும் கவிதைகளும் -


கடவுளை விடவும்
கவிதைகள் 
நம்பும்படி எழுகின்றன..

நீயும் நானும்
தனியல்ல எனும்
ஆதிநம்பிக்கையை
அவ்வளவு சீக்கிரத்தில்
கடவுளாலும் கொடுக்க முடிவதில்லை

கண்களை மூடி
நாம் பிரார்த்திப்பதைவிடவும்
இன்னொருவன் நமக்காக
பிரார்த்தித்திருக்கும் கவிதைகளை
வாசிப்பது

திறந்த கண்களுள் நுழைந்து
தீராத பக்கங்களை
உள்ளுக்குள் புரட்டும்
ஆண்டவனுக்கே வாய்க்காத
பேறு

கடவுளே
கொஞ்சம் பொறு

உன்னுடைய பக்தனுக்காக
நானும் ஒரு கவிதையை
எழுதிவிட்டு வருகிறேன்

அப்போதுதான்
அவனும் உன்னை
நேசிக்க ஆரம்பிப்பான்

அதற்கு முன் அவன்
தன்னையே நேசித்திருப்பான்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

அக்டோபர் 25, 2025

தீபாவளி 2025 - புத்தகங்கள்


தீபாவளி 2025 - புத்தகங்கள்

இது பொம்மியின் இரண்டு வயது தீபாவளி. பொம்மி, இல்லாள், நான் என மூவரும் வழக்கம் போல
தீபாவளிக்கும் என் பிறந்தகம் சென்றிருந்தோம்.

ஏறக்குறைய பத்தாண்டுகளாய் கோலாலும்பூரில் இருந்தாலும் நான்
பிறந்து வளர்ந்த கெடா, சுங்கைப்பட்டாணி எப்போதும் என் பசுமையான நினைவுகளில் இருக்கிறது. அதனால்தான் என்னவோ வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே செல்வதை விரும்ப மாட்டேன். காரணமே இல்லாமல் வீடு முழுக்க நடந்து கொண்டிருப்பேன்.

இத்தனைக்கும் அந்த வீட்டில் நான் சில ஆண்டிகளே இருந்தேன். அதற்கு முன் ஆறுமுகம்பிள்ளை தோட்டம் என்று அழைக்கப்படும் யு.பி தோட்டத்தில்தான் எனது 20 ஆண்டுகள் கடந்து சென்றன.
அந்த சமயத்திலேயே நான் எழுத தொடங்கியிருந்ததால், பத்திரிகைகளில் என் படைப்புகளில் வரும் என் பெயருக்கு பின்னால் யு.பி தோட்டம் என் இருக்கும்.

அங்கு நான் பார்த்த கதைகளும் என்னைப் பார்த்த கதைகளும் அதனை சுமந்திருந்த மனிதர்கள் ஏராளம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமும் அதற்கு இணையாக சூழ்ச்சியும் கொண்டது.
என்றாவது ஒரு நாள் நான் நாவல் எழுதினால் அவர்களில் சிலரேனும் வந்து சேர்வார்கள் என நம்புகிறேன். அந்த வடிவத்திலேயே அவர்களை என்னால் முழுமையாக சொல்ல முடியும்.

சில அரசியல் காரணங்களால் அந்த தோட்டத்தை காலி செய்ய வேண்டி வந்தது. அதன் பின்னரே இப்போது இருக்கும் 'ஆமான் ஜயா'விற்கு வந்தோம். அங்கிருந்து சில ஆண்டுகளிலேயே நான் கோலாலம்பூருக்கு வந்துவிட்டேன்.

அங்கு நான் சந்தித்தவற்றை என் நாவலின் இரண்டாம் பகுதியாக எழுதினால் நீங்கள் கட்டாயம் வாசித்துப் பாருங்கள். நினைத்துப்பார்க்கவே முடியாத என் கடந்த காலத்தை எழுதி பார்ப்பதற்கு எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை என்ன செய்ய.

பொம்மிக்கு இரண்டு வயது என்பதால் அவளால் வீடே கொண்டாட்டம் ஆனது. பாட்டி தாத்தாவுடன் நெருக்கமாகிவிட்டாள். பயமின்றி பட்டாசு சத்தங்களை இரசித்தாள். மத்தாப்புகளை கொழுத்தி விளையாடினாள்.

தீபாவளி முடிந்த இரண்டாம் நாள், எனக்கு மருத்துவமனை சந்திப்பு உள்ளதால் சீக்கிரமே கோலாலும்பூர் திரும்பிவிட்டோம்.

வரும்போது அப்பாவின் புத்தக அலமாரியில் இருந்து எனக்கு தேவையான சில புத்தகங்களை அவரிடம் கேட்டு எடுத்து வந்தேன்.

எனது சின்ன வயதில் அப்பாதான் எனக்கு எப்போதும் புத்தகங்கள் வாங்கி கொடுப்பார். புத்தகம் வாங்கவும் அழைத்துச் செல்வார். அவர் கொடுத்த பழக்கத்திலேயே எனக்கு புத்தகங்கள் பழக்கமாகின. இன்று நான் அவருக்கு அவ்வப்போது புத்தகங்கள் வாங்கி கொடுக்கிறேன்.

நாமே ஒரு புத்தகக்கடை நடத்தினாலும், அதிலிருந்து வெளியாகும் புத்தகங்களுக்கு கணக்கு காட்டவேண்டுமே. அதற்காகவே அப்பா பெயரில் பில் எழுதி நான் கட்டுவேன். எவ்வளவுதான் பணம் கட்டினாலும் எனது சின்ன வயதில் அப்பா வாங்கி கொடுத்த புத்தகங்களுக்கு ஈடாகாது. அன்றையக் குடும்ப சூழலில் புத்தகங்களுக்கு அப்பா செலவழித்த பணம் இன்றும் எனக்கு பிரமிப்பை கொடுக்கின்றன.

இம்முறை அப்பாவின் அலமாரியில் இருந்து அதிகம் மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களை எடுத்தேன். ஒவ்வொரு மாதமும் ஒரு மலேசிய புத்தகம் குறித்து கட்டுரை எழுதுவதற்கு உதவும். என்னைவிட அதிகம் வயதான புத்தகங்களில் சில இன்றும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றன.

இதில் சில புத்தகங்கள், அந்த வீட்டில் இருக்கும் போது அப்பா எனக்கு வாங்கி கொடுத்தவை.

அடுத்த என்ன வாசிப்போம், என்பதில் இருக்கும் மர்மம் எனக்கு விருப்பமானது. வாசித்ததும் அதனை எழுதுகிறேன்.

என் அப்பா எனக்கு சேர்த்து வைத்த சொத்துகளில் முதன்மையானது அவரின் புத்தகங்கள்தான், முடிந்தால் நம் பிள்ளைகளுக்கும் அப்படி கொஞ்சம் சொத்தை சேர்த்து வைப்போம். அதற்கு முன் புத்தகங்களும் சொத்துகள்தான் என கொண்டாடும் மனநிலையை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுப்போம்.


அக்டோபர் 12, 2025

- பத்து லட்சம் பட்டங்கள் -



வாசிப்பில், பத்து லட்சம் பட்டங்கள்.
(காசா குழந்தைகளின் வாக்குமூலங்களும் கவிதைகளும் 2023-2024)

புத்தகத்தைத் திறப்பதாக நினைத்தை பெருந்துயரத்தை திறந்துவிட்டேன்.
நாம் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதனை இப்புத்தகம் சில பக்களிலேயே நமக்கு அடையாளம் காட்டிவிடுகிறது.

வாசிக்க வாசிக்க குழந்தைகளின் விசும்பலும் அலறலும் கேட்க ஆரம்பித்துவிடுகிறது.
பிஞ்சுகளின் பெருந்துயரின் பேரிழப்பின் முன் நம் துயரமெல்லாம் தூசுகளாகி வெட்கி தலைகுனித்துவிடுகின்றன.

வாழ்க்கை என்றால் என்னவென்றே புரியாத வயதில் அவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்விகள் நம் மனதை உடைத்துவிடுகின்றன.

இதனை எழுதும்போதும் அந்தக் கண்ணீர் வழிந்தபடியேதான் இருக்கின்றன.

மஹ்முத் என்னும் 11 வயது குழந்தையொன்று இப்படி எழுதியிருக்கிறது.

'பயணஞ் செல்ல வேண்டும்.
பயணஞ் செய்து மருத்துவமனைக்குச் செல்ல
வேண்டும்.
செயற்கைக் கைகள் பொருத்துவதற்காக.
அப்பொழுதுதான் பந்துகளை ஏந்தி விளையாட முடியும்.
எழுத முடியும்.
சாப்பிட முடியும்.

பத்து வயது குழந்தையொன்று 'ஏன் அழுகின்றாய்?' என கேட்டதற்கு;

'என் உணவுத் தட்டினை எங்கோ தொலைத்துவிட்டேன்.
அதனால் எனக்கு உணவு கிடைக்கவில்லை.'

என்கிறது. போரில் இருந்து உயிரோடு தப்பித்து வந்தக் குழந்தைகளின் வயிறு முழுக்க பசியின் கோரத்தாண்டவம். தனக்கு ஏன் உணவு கிடைக்கவில்லை என்கிற கேள்விக்கே விடை தெரியாத குழந்தைகளை எப்படி நம்ம கடந்து வர முடியும்.

இப்படி புத்தகம் முழுக்க காசா குழந்தைகளின் வாக்குமூலங்களும் கவிதைகளும் இருக்கின்றன. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் மீதான நமது இயலாமையை இம்சிக்கிறது.

எதார்த்தம் புனைவுகளைவிட மோசமானவை என்பதில் மாற்றுக்கருத்தி இல்லை. இந்த எதார்த்தம் பலவித புனைவுகளை நம்முள் இருந்து தோண்டி எடுக்கின்றது. உயிரை அசைக்கும் அந்த வேலை என் காதுகளுக்கு அருகில் துப்பாக்கி சூடுகளையும் குண்டு வெடிப்புகளையும் குழந்தைகளின் அலறலையும் மீளுருவாக்கம் செய்கிறது.


ஆங்கிலத்தில் இருந்தும் அரபு மொழியில் இருந்தும் இந்தக் கவிதைகளை தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். விடியல் பதிப்பகம் வெளியீடு செய்திருக்கிறார்கள்.

இந்தப் புத்தக விற்பனையில் பெறப்படும் பணம், காசா குழைந்தைகளின் நிவாரண நிதிக்கு அளிக்கபடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அது என் கண்ணீரைக் கொஞ்சம் துடைத்தது. விடியல் பதிப்பகத்திற்கும் , தொகுப்பும் மொழியாக்கமும் செய்த லெய்லா பொகரிமிற்கும் படங்களையும் வடிவமைப்பையும் செய்த ஆசஃப் லுசானுக்கும் இவற்றை தமிழாக்கம் செய்த க.வி.இலக்கியாவிற்கும் என் அன்பு.

உலகில் துயருரும் குழந்தைகளுக்கு என் கண்ணீரும் பிரார்த்தனைகளும்....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்