பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 14, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - பதிமூன்றாவது கட்டுரையை முன்வைத்து

 

பதிமூன்றாவது கட்டுரையை முன்வைத்து...

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *பதிமூன்றாவது கட்டுரையாக 'கி.ராஜநாராயணன் : கிராமியப் பன்மைத்தன்மையிலிருந்து சாராம்சததை தொகுக்கும் எழுத்துக்கலை' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    இந்த புத்தகத்தின் கடைசி கட்டுரை. நிறைவான கட்டுரையும் கூட. கி.ராஜநாராயணன் அவர்களை கரிசல் நிலத்தை எழுதியவர் என செல்வது வழக்கம். அவர் கரிசல் வட்டார மனிதர்களைப் பற்றியே அதிகமும் எழுதியுள்ளார்.
    இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து கிராம மக்களின் அன்றாட இயக்கம் எப்படிப்பட்டதாக இருந்தது என்று காண முனைவோருக்கு கி.ராவிப் எழுத்துகள் முதல் ஆவணமாக அமையும்.
    இவ்வரிகள் என்னை யோசிக்க வைத்தன. நம் நாட்டில் எழுதும் கதைகளில் பெரும்பாலான கதைகள் தோட்ட வாழ்க்கையை மையப்படுத்தியே இருக்கும். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இதையே எழுதப்பொகிறார்கள் என்கிற ஏளன பேச்சு பேசுகின்றவர்களும் உண்டு. நம் வாழ்க்கையை நாம் எழுதாமல் வேறு யார் எழுதுவார்கள் என கேட்பவர்களும் உண்டு.
    ஆனால், இன்னும் 50 ஆண்டுகள் கழித்து அக்கதைகள் நம் தோட்ட வாழ்வு பற்றிய ஆவணமாக அமையுமா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. என்ன சொல்கிறோம் என்பதைக் காட்டிலும் எவ்வளவு ஆழ்ந்து ஆழமாக சொல்கிறோமோ அதுதான் பின்னாளில் பேசப்படும் என்பதில் எனக்கு நம்பிககை உண்டு.
    கி.ரா தன் கதையுலகில் காட்டும் மனிதர்கள் பற்றிய கட்டுரையாளர் சிறப்பாகவே சொல்லியுள்ளார். பல கதைகள் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    அனுபவம் கதையாகும் போது அது எப்படி கலையாகிறது என்பதை இக்கட்டுரைவழி அறிய முடிகிறது. சொல்லப்போனால் வாசிக்க வாசிக்க முடிந்துவிடக் கூடாதே என்கிற ஆசையுடந்தான் கட்டுரையை வாசித்து முடித்தேன்.

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - பனிரெண்டாவது கட்டுரையை முன்வைத்து

 

பனிரெண்டாவது கட்டுரையை முன்வைத்து
    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *பனிரெண்டாவது கட்டுரையாக 'ஆ.மாதவனின் : பாதையற்ற பயணம்
என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    மற்ற கட்டுரைகளை வாசிக்கையில் இருந்த மனநிலை இக்கட்டுரையை வாசிக்கையில் இருக்கவில்லை. ஆ.மாதவனின் ஒரு படைப்பைக் கூட வாசிக்காத குற்றவுணர்ச்சியே மேலோங்கியது.
    நண்பர்களுடன் பேசும் சமயங்களில் ஆ.மாதவன் பற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால் ஏனோ சிரத்தை கொண்டி அவரது படைப்புகளை படிக்கவில்லை.
அப்படியான மனநிலை காரணமாக எத்தனை முக்கியமான படைப்புகளைத் தவறவிட்டுள்ளேன் என்பதை இக்கட்டுரை காட்டியது.
    ஆ.மாதவனின் கதைகளின் இருக்கும் விரிந்த பரப்புகள் பற்றி ஆசிரியர் கூறுகிறார். அதோடு 'எப்படி அடைத்தாலும் கூட்டைவிட்டுத் தப்பித்து விடுகிறது மனம். இச்சை தடுத்துவிட முடியாத மானிட இயல்பாக இருப்பதைக் காண்கிறார். நாற்புறம் நகரும் நண்டுக்கால் புரவியின் நடனங்கள்தான் காமம் என்பது ஆ.மாதவன் கண்ட விடை' என்கிறார் கட்டுரையாசிரியர்.
    'புதுமைப்பித்தனுக்கு அடுத்தப்படியாக புறஉலக மனிதர்களை அதிகம் எழுதியவர்களில் ஆ.மாதவனையும் சொல்லலாம்' என்கிறார்.
    மனித மனங்களையும் அதன் பலவீனங்களையும் படைப்புகளில் சொல்வதில் ஆ.மாதவன் தனியாக தெரிகின்றார்.
    அவரின் பல கதைகளைப் பற்றி நமக்கு சொல்வதின் வழி, தேடி வாசிக்கும் ஆர்வத்தை கொடுக்கின்றார் கட்டுரையாசிரியர்.

பிப்ரவரி 09, 2021

தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி - பதினொன்றாவது கட்டுரையை முன்வைத்து

(பதினொன்றாவது கட்டுரையை முன்வைத்து...)

தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர். 

*பதினொன்றாவது கட்டுரையாக 'அசோகமித்திரன் : பறிபோகும் நம்பிக்கையின் துயரக்காட்சிகள்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.* 

வாசிக்க வாசிக்க அசோகமித்திரன் என்னும் படைப்பாளி மீது பெரிய மரியாதையும் ஆர்வமும் ஏற்படுகின்றது. மற்ற படைப்பாளர்களில் இருந்து அசோகமித்திரன் எவ்வாறு தனித்து தெரிகின்றார், என்பதனை அதற்கான கதைகளோடு கட்டுரையாசிரியர் சொல்லியுள்ளார். 

'நாம் வண்டித் தடத்தின் வழியாக நடந்து சென்றால் அசோகமித்திரன் இரும்புப்பாதை வழியாக கடப்பார்' என்று சொல்வதின் வழி அசோகமித்திரனை புரிந்துக்கொள்ளும் வழியை எளிமையாக்குகிறார். ஆனால் அந்த எளிமையான அறிமுகம் ஆழ்கிணறு பொன்ற வாழ்வின் இன்னொரு பக்கத்தை அவரது கதைகளில் நமக்கு காட்டுவதையும் குறிப்பிடுகின்றார்.


பிரயாணம் சிறுகதை பலருக்கும் பல வகையான அனுபவத்தைக் கொடுக்கும். அவ்வாறே, கட்டுரையாசிரியர் தனது வாசிப்பு அனுபவத்தை முன் வைக்கின்றார். ஆங்காங்கே அசோகமித்திரனின் நாவல்கள் குறித்து கோடிட்டு காட்டுகின்றார்.

நாவலுக்கும் சிறுகதைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளையும் அதன் மாற்றங்களை சொல்லும் போது புதியவர்களுக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

எழுத்தாளரின் படைப்புகளை அதன் பலம் பலவீனம் கொண்டே எழுதியுள்ளார். ஆனாலும் பலமே அசோகமித்திரன் படைப்புகளில் ஓங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.

அவை வெறும் கதைகள் அல்ல, காலத்தை ஆவணப்படுத்தும் செயல்.  நாம் கடந்த வந்த காலங்களை, மனித  வாழ்வின் நெருக்கடிகளை இவரின் கதைகள் வழி கண்டுகொள்ளலாம் என்கிறார்.

சின்ன வருத்தம், எனக்கு மிகவும் பிடித்த புலிக்கலைஞன் பற்றி ஒன்றும் சொல்லாததுதான். ஆனால் வாசிக்கத் தவறிய பல சிறுகதைகளைத் தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி.

#தயாஜி

அறிந்தும் அறியாமலும்

குறுங்கதை 2021 - 2

- அறிந்தும் அறியாமலும் - 

"சொன்னதை  செய்.."

"இல்லங்க அது..."

"சொன்னதை மட்டும் செய். இங்க நீ புருஷனா இல்ல நான் புருஷனா...?"

ஏதும் பேச முடியாமல். சமையல் அறைக்குச் சென்றுவிட்டாள். ஆனாலும் அவருக்கு கோவம் குறையவில்லை. ஏதாவது செய்ய நினைத்தார். 

"ஏய்... இங்க வா... காபி ஆறிப்போச்சி.! எடுத்துட்டுப் போ... வேற காபி சுடச்சுட போட்டு கொண்டுவா..."

சில நிமிடங்களில் காபி வந்துவிட்டது. அவசரத்தில் எடுக்கவும் அவரது கையை சுட்டுவிட்டது.

"கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா.. குடிக்கற மாதிரியா கொடுக்கற.. கொதிக்க கொதிக்க கொடுத்திருக்க... எடுத்துட்டு போ கொஞ்சம் ஆறவச்சி கொண்டு வா...."

"நீங்கதான...." அவளால் முடிக்க முடியவில்லை. அவர் அதை விடுவதும் இல்லை.

"எக்ஸ்ராவா பேசாத... சொன்னதை மட்டும் செய்......"

அவள் மேற்கொண்டு எதையும் பேசவில்லை. காபியை எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குச் சென்றாள்.

அவரது கைபேசி பாடியது. முதலாளி அழைக்கிறார். உடனே எடுத்து பேசலானார். இவர் ஏதேதோ சொல்ல முயன்றும் முடியவில்லை. கேட்க மட்டுமே செய்தார். 

மனைவி காபியை கொண்டு வந்து மேஜையில் வைக்கிறார். பார்த்ததும் அவருக்குள் வேகம் வந்தது. மீண்டும் ஏதோ பேச முயன்றார். 

"நான் சொல்றதை நீங்க கேளுங்க சார்... நீங்க பாஸா நான் பாஸா.....?" என்றார் முதலாளி சத்தமாக.

அவர் அதை மனைவிக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார். மனைவியும் கேட்டும் கேட்காதது போல நடக்கலானார்.

#தயாஜி

பிப்ரவரி 08, 2021

குழந்தை கடத்தல்காரன்

குறுங்கதை 2021 - 1

- குழந்தை கடத்தல்காரன் - 

"அங்க பாருங்க சார்.. பிள்ளை எவ்வளவு அழகா இருக்கு... அப்பனை பாருங்களேன்..."

நிமிர்ந்தேன். அவர் சொல்வது உண்மைதான். சிரித்துக் கொண்டேன். மீண்டும் சாப்பிட ஆரம்பித்தேன். அவரும் விடவில்லை. மீண்டும் ஆரம்பித்தார். 

"எனக்கு என்னமோ டவுட்டாவே இருக்கு சார்...?"

இப்போது எனக்கு சுருக்கென்றது. 

"ஒரு வேளை பிள்ளையை கடத்திட்டு போறான் போல சார்...." என்றார்.

"பிள்ளை அழுகலையே சார்..!?" என்றேன்.

"அட என்ன சார்.. பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க. இப்படி கேட்கறீங்க.. இப்பலாம் ஒரு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தாலே பிள்ளைங்க கூட வந்திடும் சார்..."

"இப்ப என்ன சார் பண்றது.?"

"வாங்க சார் போய் விசாரிப்போம்..."

எழுந்தோம். நடக்கலானோம். எங்களை அந்த நபர் கவனித்துவிட்டார். நகர ஆரம்பித்தார். நாங்கள் ஓடிச்சென்று பிடித்துவிட்டோம். முதல் வேளையாக அந்த குழந்தையை பிடுங்கி புதிய நண்பரின் கொடுத்தேன். சலசலப்பு ஏற்பட ஆட்கள் கூடினர். 

வந்தவர்களிடம் நடந்ததைச் சொன்னேன். உதவிக்கு  நண்பரை தேடினேன். அவர் அங்கிருக்கவில்லை. அப்போ அவரிடம் கொடுத்த குழந்தை!!!!!

#தயாஜி

பிப்ரவரி 07, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - பத்தாவது கட்டுரையை முன்வைத்து

(பத்தாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *பத்தாவது கட்டுரையாக 'ஜெயகாந்தன் : மரபைச் செழுமையாக்கியவர்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    தமிழ்ச்சூழலில் ஜெயகாந்தனின் பெயர் பிரபலம். சொல்லப்போனால் அவரின் படைப்புகளை படிக்காதவர்களுக்குக் கூட ஜெயகாந்தன் பற்றிய விபரங்கள் தெரிந்திருக்கும். அதற்கான காரணத்தைக் கட்டுரையில் கோடிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர்.
    இக்கட்டுரைக்கு ஆரம்பிப்பதற்கு முன் ஆசிரியர் சிலவற்றை தெளிவுப்படுத்தியுள்ளார். தனது இளமை காலத்தில் ஜெயகாந்தனின் அத்தனைப் படைப்புகளையும் தேடித்தேடி வாசித்தது, அவை ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவற்றை பகிர்ந்துக் கொள்கிறார். ஆனால் நல்ல வேளையாக தன் வாசிப்பை விசாலப்படுத்தியதின் வழி ஒரு வட்டத்திற்குள் தான் சிக்கிக்கொள்ளாமல் இருந்ததாகச் சொல்கிறார். கட்டுரையில் அதற்கான காரணம் நமக்கு புலப்படுகிறது.
    என்னதான் தனக்கு விருப்பமான எழுத்தாளராக இருந்தாலும், விமர்சனம் என வரும்பொழுது எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது முக்கியமான கேள்வி. முகநூலில் தனக்கு லைக் போட்டவர் என்ற ஒரு காரணமாக போலியாக விமர்சனங்களை முன் வைப்பவர்களும், விமர்சித்துவிட்டார்கள் என்பதால் முகநூலில் ப்ளாக் செய்பவர்களுக்கும் அவரவர்களுக்கான இடத்தை இக்கட்டுரை காட்டிக்கொடுத்து விடுகிறது.
    'புதுமைப்பித்தன், மரபில் நின்று கலகம் செய்தார். ஜெயகாந்தன் வஞ்சிக்கப்பட்டவர்களின் சார்பாக நின்று மரபிற்குள் புதிய புரிதலை உண்டாக்கினார்.' என்கிறார் ஆசிரியர். கூடவே ஜெயகாந்தனின் பலவீனங்களையும் சொல்கிறார். யோசிக்கையில் இன்றளவும் அந்த பலவீனம் பல படைப்பாளிகளிடம் இருப்பதை உணர முடிகின்றது.
    'அவரது நடையில் இருக்கும் துல்லியம் கதைகளுக்கு எவ்வளவு பலத்தைக் தருகின்றனவோ அதே அளவு பாலகீனத்தையும் தருகின்றது' என சொல்லும் கட்டுரையாளரின் விளக்கம் நிச்சயம் கவனிக்கவேண்டிய ஒன்று.
    வழக்கம் போல் வாசிக்கவேண்டிய ஜே.கேவின் சிறுகதைகளையும் அதற்கான காரணத்தையும் சொல்கிறார். நிச்சயம் அக்கதைகளை தேடவைக்கும்.

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - ஒன்பதாவது கட்டுரையை முன்வைத்து


(ஒன்பதாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *ஒன்பதாவது கட்டுரையாக 'சுந்தர ராமசாமி : அதீதப்பிரக்ஞையில் நழுவும் கலை எழுச்சி' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    சுந்தர ராமசாமி கதைகளைப் பற்றி கூறும் போது, 'கதைகளை மிகமிக கவனமாகத்தான் உருவாக்கியிருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த கதைகளாக அமைந்துவிட வேண்டும் என்ற காதலுடன் தான் கதைகளை எழுதியிருக்கிறார்'
என்கின்றார்.
    ஆனால் சு.ராவின் படைப்புகளில் அவர் தவறவிட்ட பகுதிகளை ஒவ்வொன்றாக ஆழமாக அலசுகின்றார். ஒரு படைப்பாளயின் படைப்புகளை அணுகும் போது பொதுபுத்தி சார்ந்த பார்வை கொண்டிருக்காமல், தன் வாசிப்பின் அனுபவம் கற்றுக்கொடுத்த்திருக்கும் தெளிவில் இருந்து அணுகவேண்டிய அவசியத்தை இக்கட்டுரை வழி அறிய முடிகின்றது.
    சு.ரா அவர்கள் தனது கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள், கவிதைகள், சிறுகதைகள் போன்றவற்றில் வெவ்வேறான பரிணாமங்களை கொண்டிருப்பது வாசகர்களுக்கு புலப்படும் வண்ணம் கட்டுரை இருப்பது அதன் சிறப்புகளில் ஒன்று.
    சு.ராவின் படைப்புகள் மீது வைக்கப்படும் விமர்சனம் அவரின் நவீன இலக்கியத்தளத்திற்கான பங்களிப்பை கெடுக்காதவாறு கட்டுரையாசிரியர் எழுதுயுள்ளார்.
    படைப்பாளியின் படைப்புகள் மீது விமர்சனம் வைக்கும் அதே வேளையில் அவர் மீதான தேடலை புதியவர்களுக்கும் மீள் வாசிப்பாளர்களுக்கும் கொடுக்கும் வண்ணமே கட்டுரையை இயற்றியுள்ளார்.
    ஒரு பக்கம் பலவீனங்களை சொல்வதோடு இன்னொரு பக்கம் அப்படைப்பு எப்படி தனக்கான இடத்தை அடைகிறது என கோடிட்டு காட்டுகிறார் கட்டுரையாளர் சு.வேணுகோபால்.
    எழுதிய காலகட்டம் தொட்டு இன்றுவரை சர்ச்சையைக் கொடுக்கும் 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்கிற சு.ராவின் சிறுகதைப் பற்றிய தனது பார்வையை, அக்கதையை அணுகவேண்டிய இன்னொரு சாத்தியக்கூறுகளை முன் வைப்பதன் வழி இக்கட்டுரை படைப்பாளியின் படைப்புகள் மீதான அக்கறையை காட்டுகிறது.
    முந்தைய கட்டிரைகள் போல இக்கட்டுரையிலும் எழுத்தாளரின் முக்கியமான ஆக்கங்களை குறிப்புகளாக கொடுத்துள்ளார் ஆசிரியர்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்