கு.அழகிரிசாமியின் 'இருவர் கண்ட ஒரே கனவு'
💙தினம் ஒரு கதை 9/30💙
கனவு என்பது என்ன நினைவில் தொடர்ச்சியா அல்லது நிகழ்காலத்தின் போதாமையா? என்னும் கேள்வி இன்றும் கேட்கப்படுகின்றது. அதிலும் ஒரே கனவின் தொடர்ச்சியை விட்ட இடத்தில் இருந்து ஒருவனால் தினம் தினம் தொடர முடியுமா? அந்த சுழற்சியைத் தாண்டி அந்தக் கனவில் எல்லையை யாராவது அடைந்திருக்கிறார்களா என்ன?
அப்படி தொடரும் ஒருவன் உண்மையில் உறக்கத்தில்தான் இருக்கிறானா? ஒருவேளை ஆழ்மனம் ஏதோ நம்மிடம் சொல்ல வருகின்றதோ ?.
பாலோ கொய்லோ எழுதிய ‘ரசவாதி’யில் வரும் சண்டியாகோவிற்கு வந்த கனவின் பின்தொடரல்தானே அவனுக்கு கிடைக்கும் புதையல். ஆனால் அது அவன் காலுக்கு கீழேதானே இருந்திருக்கிறது. அதற்கு ஏன் அவன் அத்தனை தூரம் பயணம் சென்றான்.
கனவுகள் குறித்து சிகமண்ட் பிராய்ட் எழுதியதைப் போல; நிதர்சனமாய் இருப்பதின் மறைமுக குறியீடுகள்தான் கனவா? கனவை புரிந்து கொள்ள முயன்றால் அது நம் ஆழ்மனதின் தேவையைச் சொல்லிவிடுமா?
இம்மாதிரி பல கேள்விகளைத் தொடங்கி வைக்கும் ஒரு சிறுகதையாகத்தான் நான் கு.அழகிரிசாமியின் ‘இருவர் கண்ட ஒரே கனவு’ சிறுகதையைப் பார்க்கிறேன். இரு சிறுவர்களின் மனநிலையை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்திருப்பார் எழுத்தாளர்.
இன்றைய நம் உலகம் அறிவியலால் தொழில்நுட்பத்தால் உயர்ந்து கொண்டே போனாலும்; நம் முந்தைய தலைமுறையில் வாழ்வை வாசிக்கும் போது மனம் அவர்களுக்காக அழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் எல்லா சமயத்திலும் பசித்த வயிற்றுக்கு யாரோ ஒருவர் சோறுபோடத்தான் செய்கிறார் என்பதுதான் எத்துணை பெரிய ஆறுதல்.
மரணத்தைப் புரிந்து கொள்ளாத வயதில் அம்மாவின் மரணத்தை இரு பிள்ளைகளும் எதிர்க்கொள்கின்றார்கள். அம்மா இறந்த அந்த இரவிலேயே கனவில் வருகிறார். அதுவும் தன் இரு மகன்களின் கனவில். இரு பிள்ளைகளும் ஒரே மாதிரி அம்மாவைக கனவில் காண்கின்றார்கள். உண்மையில் அது கனவுதானா? பிள்ளைகளுக்கு பிரியாவிடை கொடுக்க வந்த அம்மாவின் ஆன்மாவா? என நமக்குள் ஒரு தேடலை இச்சிறுகதைக் கொடுக்கின்றது.
குழந்தைகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களின் உணர்வுகளைத் தெரிந்து கொள்ளவும், கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை வாசித்துவிடுங்கள். ‘இருவர் கண்ட ஒரே கனவில்’ இருந்தும் நீங்கள் தொடங்கலாம்.
#தினம்_ஒரு_கதை #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக