பகடை
- பகடை -
வீட்டில் தேவை இருந்தது. அடகுக்கடைக்கு செல்ல வேண்டும். புது நகையை அடகு வைத்து அந்தப் பணத்தில் ஏற்கனவே அடகு வைத்த நகைக்கு வட்டி கட்ட வேண்டும். மீதமுள்ள பணத்தை வீட்டு தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தக் கணக்கு எனக்கு பிடிபடாது. ஆகவே இல்லாள் சொல்வதை அப்படியே செய்துவிடுவேன்.
திருப்ப வேண்டிய நகைக்கான 1% வட்டி பணத்தைக் கணக்கிட்டு ஒரு துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்தார். இப்போது புதிதாக அடகு வைக்க வேண்டிய நகையையும் எவ்வளவுக்கு வேண்டுமென கூட்டிக்கழித்து எழுதியிருந்தார்.
அடகு ரசீதில் மே மாத முதல் ஞாயிறுதான் இறுதி என தேதி குறிப்பிட்டிருந்தது. அதனை தவறவிட்டால் வட்டி 1.5% அல்லது 2% ஆக மாறிவிடும். ஆகவே சனிக்கிழமையே சென்றிட திட்டமிட்டேன். போதாக்குறைக்கு திங்கட்க்கிழமை பொதுவிடுமுறை.
காலை. அடகுக்கடையில் ஆட்கள் இல்லை. நேராக கவுண்டருக்குச் சென்று இல்லாள் கொடுத்த துண்டு காகிதத்தைக் காட்டி ஒரு நகையை வைக்கவும் இன்னொரு நகைக்கு மேலும் ஆறு மாதங்களுக்கான வட்டியைக் கட்டவும் செய்தேன்.
வேலை முடிந்து பணமும் கைக்கு வந்தது. நேராக காருக்கு வந்தேன். மனதில் ஏதோ சரியில்லாததாகத் தோன்றியது. கைக்கு வந்த பணத்தைக் கணக்கிட்டேன். அவர்கள் கொடுத்த ரசீதையும் பார்த்தேன். கணக்கு சரியாகத்தான் இருந்தது.
இல்லாள் கொடுத்த துண்டு காகிதத்தைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்ட தொகையைவிடவும் கையில் குறைவாகவே இருந்தது.
காரில் இருந்தபடியே இல்லாளை அழைத்து பேசினேன். ரசிதுகளை புலனத்தில் அனுப்பச் சொன்னார். அனுப்பினேன். சில நிமிடங்களில் என்ன கோளாறு என கண்டுபிடித்து விட்டார்.
1% வட்டிக்கு பதிலாக 1.5% வட்டிப்பணத்தை கணக்கிட்டு வாங்கியுள்ளார்கள். இத்தனைக்கும் அவர்களின் ரசீதில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே நான் வந்திருக்கிறேன். மீண்டும் அடகுக்கடைக்கு சென்றேன்.
விபரத்தைச் சொல்லி மீண்டும் அவர்களை கணக்கிடச் சொன்னேன். அவர்களும் கணக்கிட்டார்கள். என் கண் முன்னமே அவர்கள் 1.5% வட்டிப்பணத்தைக் கணக்கிட்டார்கள். மீண்டும் திகதியைச் சரி பார்க்க சொன்னேன். அவர்கள் தவறாக கணக்கிடுவதாக சொன்னேன்.
இல்லை என்றார்கள். ஞாயிறு கடைக்கு விடுமுறையாம் அதனால் சனிக்கிழமையை அவர்கள் இப்படித்தான் கணக்கிடுவார்களாம். அதாவது அவர்கள்தான் ஞாயிறு திகதியை எழுதினார்கள். நான் சனிக்கிழமையே கடைக்கு சென்றாலும், ஞாயிறு கடை விடுமுறை என்பதால் நான் தாமதமாக வந்ததாக காரணம் காட்டி 1.5% வட்டிப்பணத்தை கணக்கிட்டு வாங்கியுள்ளார்கள்.
இதுநாள்வரை இப்படி எனக்கு நடந்ததில்லை. நான் சனிக்கிழமையே வந்துவிட்டதாக சொன்னேன் ஆனால் அவர்கள் கணக்குப்படி ஞாயிறு பொதுவிடுமுறை என்பதால் சனிக்கிழமை வந்தாலும் நான் தாமதமாகத்தான் வந்திருக்கிறேனாம்.
எனக்கு கோவம் வந்துவிட்டது. எத்தனைப் பேரிடம்தான் நான் ஏமாறுவது. சத்தம் போட்டதும் கடையில் வேலை செய்பவர்கள் எல்லாம் எழுந்து அருகில் வந்து நின்றுவிட்டார்கள்.
நானே நூறு கிலோ இருப்பேன். அவர்களில் ஒவ்வொருவரும் என்னைவிட இருமடங்காக இருந்தார்கள். அங்கு அதுதான் சட்டம் அதுதான் நடைமுறை, தேவையென்றால் போலீஸிடம் போ என்றார்கள்.
கோவத்தை அடக்கிக்கொண்டு காருக்கு வந்துவிட்டேன். இல்லாளிடம் புலம்பினேன். இந்த அடகுக்க்கடையில் இப்படியான ஏமாற்று வேலைகள் நடப்பதை அவரும் கேள்விபட்டதாகச் சொன்னார். அங்கு அடகு வைத்த நகைகளை எப்படியாவது சீக்கிரம் மீட்டுவிட வேண்டும் என்றார்.
இரவு, காலையில் நடந்த சம்பவம் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்தபடி இருந்தது. இப்படி எத்தனைப்பேரை அவர்கள் இதுநாள் வரையில் ஏமாற்றியிருப்பார்கள். நான் ஏமாந்தும் என்னால் அவர்களுக்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியவில்லை.
வீட்டில் சமைக்க முடியவில்லை, இல்லாள் சாப்பாடு ஆடர் செய்திருந்தார். வரும் நேரம். வழக்கமாக இரண்டு மாடிகள் ஏறி வந்துதான் சாப்பாட்டைக் கொடுப்பார்கள். நாங்களும் கூடுதல் பணமோ அல்லது அவர்களுக்கு குளிர்பானமோ கொடுத்தனுப்புவோம். இம்முறை வந்தவர் படி ஏற முடியாது. எங்களை கீழே வந்து வாங்கிக்கொள்ள சொன்னார்.
காலையில் இருந்த கோவம். இப்போது இது. மேலும் என்னை கடுப்பாக்கியது. இன்னிக்கு ஒரு வழி செய்யலாம் என கீழே இறங்கினேன். அந்நபர் தாமதமாக வந்தார்.
வந்தவர், மோட்டரை நிறுத்திவிட்டு. சின்ன தடுமாற்றத்துடன் என்னருகில் வந்தார். அவருக்கு ஒரு கண் இல்லை. ஒரு கண்ணை வைத்துதான் மோட்டார் ஓட்டி சாப்பாடு டெலிவரி செய்கிறார். அவரைப்பார்த்ததும் மனம் கோவத்தில் இருந்து மாறியது.
வந்தவர் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டார். அதோடு பெரிய சைஸ் கொக்கோ கோலா பாட்டிலைக் கொடுத்தார். நாங்கள் அதனை ஆடர் செய்யவேயில்லை. நான் அதை சொன்னேன்.
எங்கள் ஆடரில் இருந்த ஒரு குவளை கொக்கோ கோலா வரும்போது தடுமாற்றத்தில் கவிழ்ந்துவிட்டதாம். அதற்கு பதிலாக பெரிய பாட்டிலை வாங்கிவருவதற்குதான் கொஞ்சம் தாமதமானதாக சொன்னார்.
நான் பரவாயில்லை என்று சொல்லி கொக்கோ கோலாவிற்கான் பணத்தைக் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்தார். ஏதேதோ பேசி, அவர் சட்டை பாக்கெட்டில் கூடுதல் பணம் வைத்துவிட்டு அவரை வழியனுப்பினேன்.
ஒரே நாளில் இரு வகை மனிதர்களைச் சந்தித்துள்ளேன். ஒருவர் நிறுவனத்தில் சட்டதிட்டங்களைப் பயன்படுத்தி தன்னிடம் வருபவர்களிடம் கொள்ளையடிக்கிறார். இன்னொருவர் உழைப்பை நம்புகிறார். தன்னால் இன்னொருவருக்கு இழப்பு இருக்கக்கூடாது என தன்னளவில் முயல்கிறார். இரண்டிலும் பணமே பகடைக்காயை உருட்டுகிறது.
நல்லதோ கெட்டதோ, அதற்கு இணையாக இன்னொன்று இருக்கவே செய்கிறதுதான் போல...
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
0 comments:
கருத்துரையிடுக