அப்பா...
"நான் மர்லின் மன்றோவை கூட்டிட்டு வருவேன். என் கூட காபி குடிக்க கூப்டுவேன்..." என்று கூறியவர் சிரிக்கலானார். நீ என் இனமடா என சொல்லத்தோன்றியது. ஆனால் கையில் ஒலிவாங்கியுடன் ஒலி/ஒளிப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன்.
நமக்கு வேலைதான் முக்கியம். இன்னொருவரைக் கேட்டேன். 'சொல்லுங்க.. உங்களுக்கு ஒரு சக்தி இருந்து; ஒருத்தரை உங்க முன்னுக்கு வர வைக்கனும்னா யாரை வர வைப்பீங்க.. என்ன கேட்பீங்க...?
"நான் என் அம்மாவை என் முன்னுக்கு வர வைப்பேன்'' என்றார். அந்தப்பெண் அப்படிச் சொன்னதும் அவர் அம்மா இப்போது உயிருடன் இல்லாதது புரிந்தது. அம்மாவைப் பற்றி யார் பேசி அழுதாலும் நமக்கும் அழுகை வந்துவிடுகிறது. எப்படியாவது அடுத்தக் கேள்வியில் அவரை அழ வைத்து விட்டால், யூடியூப்பில் எங்கள் வீடியோவைப் பார்ப்பவர்களும் கண் கலங்குவார்கள். லைக்குகளும் அள்ளும்.
"கண்ணை மூடிக்கோங்க...நீங்க கூப்டதும் உங்க அம்மா உங்க முன் வந்துட்டாங்கன்னு வச்சிக்குங்க. இப்ப அம்மாகிட்ட என்ன கேட்பீங்க....?"
கொஞ்சமும் யோசிக்காமல், "ஏன்மா என்னையத் தனியா விட்டுட்டுப் போன.... என்னையும் உன்கூடவே கூட்டிட்டு போக வேண்டியதுதான.... நீ அப்பாகிட்ட என்னைய தனியா விட்டுட்டுப் போய்ட்ட.... நீ போனப்பறம் அப்பா....அப்பா......... "
அவரால் அதற்கு பிறகு பேச முடியவில்லை. நாங்கள் இருப்பதையெல்லாம் மறந்து அழத்தொடங்கிவிட்டார். அவரின் கைகள் நடுங்க ஆரம்பித்தன....
0 comments:
கருத்துரையிடுக