பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 24, 2022

ஏழாம் உலகம் - வாசிப்பு அனுபவம்

ஏழாம் உலகம் வாசிப்பு அனுபவம்
ஜெ.மோவின் ஏழாம் உலகம் நாவலை வாங்கி ஏறக்குறைய பத்தாண்டுகள் இருக்கும். இதற்கிடையில் சில முறை வீடு மாற்றலாகி வந்துகோண்டிருந்ததால் ஏதோ ஒரு புத்தகப்பெட்டியில் அந்நாவல் சிக்கிக்கொண்டது.

 கையில் கிடைத்ததும் உடனே எடுத்து வாசிப்பு பட்டியலில் அடுக்கிவிட்டேன். ஆனால் ஏனோ அந்நாவல் வரிசையில் இருந்து விரைவிலேயே முன்னகர்ந்து என் வாசிப்பிற்கு வந்துவிட்டது. 

அன்று நாவலை வாசிக்க ஆரம்பித்த சமயம் என்னால் சில பக்கங்களுக்கு மேல் போக முடியவில்லை. அதன் மொழி எனக்கு சிக்கலாக இருந்தது. போதாததற்கு அந்த இளம் வயதில் முதல் பக்கத்திலே எல்லாம் புரிந்துவிட வேண்டும் என்ற பேராசையும் இருந்தது. ஆனால் அதன் பிறகு வாசிப்பு கொடுத்த அனுபவம் தைரியமாக இந்நாவலை இன்று வாசிக்க வைத்தது.  

இயக்குனர் பாலாவின் நான் கடவுள்; இந்நாவலைத் தழுவிதான் எடுக்கப்பட்டது என்பது தெரிந்த ஒன்றுதான். அதுவும் அப்போதைய வாசிப்பு தடைக்கு காரணமாக இருந்திருக்கலாம். அதான் கதை தெரிஞ்சிப்போச்சே எதற்கு புத்தகமாகவும் வாசிக்க வேண்டும் என்கிற சிறுபிள்ளைத்தனமான எண்ணத்தை வேறெப்படி சொல்ல. 

இன்று இந்த நாவலை வாசிக்கும் போதும் கூட சில பக்கங்களில் திரையில் பார்த்த முகங்களாகவும் அதே கதாப்பாத்திரங்களாகவும்தான் தெரிந்தன. ஆனால் தொடர்ந்து வாசிக்க வாசிக்க, மனதில் இருந்த நான் கடவுள் காணாமல் போய்; ஏழாம் உலகத்திற்குள் நுழைந்து விட்டேன். இந்நாவலை தவறவிட்டிருந்தால் எத்துணை பெரிய இழப்பாகியிருக்கும்.

நம்மால் சகிக்க முடியாத நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத போகிற போக்கில் நாம் விசும் சில்லறைகளை வாழ்வாதாரமாக அமைத்துக்கொள்ளும் பிச்சைக்காரர்களின் கதை; அவர்களின் வாழ்வு; அவர்களின் துயரம் இது. இயற்கையாக அல்லாமல் கல்நெஞ்சம் படைத்தவர்களால் கையுடைத்து காலுடைத்து கண்கள் குருடாக்கி பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டவர்களின் கதை.

வாசிப்பின் இடையில் என்னால் தொடர்ந்து வாசிக்க இயலவில்லை. கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. ஒரு வாசகனாக மட்டுமல்லாமல், நானும் ஒரு ஆளாக அவர்களுடன் இணைந்துவிட்டேன். 

மனிதர்களின் பல்வேறான முகங்களை நாவலின் போக்கில் ஆழமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். வாசிக்கையில் பிச்சைக்காரர்களுக்காக அழுவதா அல்லது அவர்களை வதைக்கும் மனிதமிருகங்களைச் சபிப்பதா என்கிற திண்டாட்டம் இருக்கவே செய்தது. 

தனக்கு லாபம் வருகிறது என்பதற்காக மனிதர்கள் எதற்கும் துணிவார்கள். தன் அதிகாரம் தன் தேவை பொருட்டு எல்லோரு மீதும் பாய்வார்கள் போன்ற மனித அவலங்களை மனம் கணக்கும்படி ஏழாம் உலகம் காட்டுகிறது.

உடல் சிதைந்த பிச்சைக்காரர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் நம்மையும் சிரிக்க வைக்கிறது. அவர்களால் சிரிக்க முடிகிறதே என வருந்தவும் வைக்கிறது. அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஆளுக்கொரு பதில் இருக்கவே செய்யும் என்ற தளத்தை மெல்ல மெல்ல நாவல் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இனியும் இந்த துயர வாழ்வை வாசிக்கத்தான் வேண்டுமா என எண்ணும் பொழுது நாவல் அதன் முடிவை நெருங்கிவிட்டது. 

இந்நாவல் குறித்து அதிகம் பேச வேண்டியுள்ளது. பலரும் எழுதியிருக்கிறார்கள். இனியும் எழுதப்போகிறார்கள். ஏனெனில் ஒரு மனிதனை சிதைத்து அதன் வழி பணம் பார்க்கும் இன்னொரு மனிதன் இருக்கின்றவரை இந்த நாவலில் ஆயுள் நீண்டுகொண்டிருக்கும்.

இன்னும் சொல்வதென்றால் நாவலில் முடிவில் முத்தம்மையின் அலறல் மனித மிருக கொடுரங்களின் உச்சம்….

1 comments:

சமுத்திர வேந்தன் சொன்னது…

"ஏனெனில் ஒரு மனிதனை சிதைத்து அதன் வழி பணம் பார்க்கும் இன்னொரு மனிதன் இருக்கின்றவரை இந்த நாவலில் ஆயுள் நீண்டுகொண்டிருக்கும்"...

இவ்வரிகளில் நாவலின் முழு அம்சத்தையும் கூறீவிட்டீர்கள் சகோ...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்